Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பலராமனாகிய நான்...
 
பக்தி கதைகள்
பலராமனாகிய நான்...


ஜி.எஸ்.எஸ்.

தசாவதாரங்களில் என்னையும் ஒருவனாகக் கருதுகிறார்கள். இது என் பேறு.  நான் ஆதிசேஷனின் அம்சம்.  ராமாயணத்தில் லட்சுமணனாக, ராமபிரானின் தம்பியாக, விளங்கினேன்.  கிருஷ்ணாவதாரத்தில் கண்ணனின் அண்ணனாகும் பாக்கியம்  பெற்றேன்.
காசியப முனிவருக்கும் அவர் மனைவி கத்ருவுக்கும் நாக வடிவில் ஆதிசேஷனாகப் பிறந்தவன் நான். பிரம்மன் குறித்து கடும்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று திருமால் என் மீது சயனித்திருக்கும் பாக்கியத்தையும் பெற்றேன்.
துவாபரயுகத்தில் வசுதேவருக்கும் அவரது மனைவி ரோகிணிக்கும் பலராமனாகப் பிறந்தேன். கலப்பை எனது ஆயுதம்.  என்னை நீலாம்பரன் என்றும் கூறுவார்கள்.
சிறுவயதில் கண்ணனும் நானும் மாடு மேய்க்கும் பணியை விரும்பிச் செய்தோம். மாடுகளுடன் இருப்பது என்றால் எங்களுக்கு அவ்வளவு இஷ்டம்.
உடல் வலிமையில் நான் ஒரு யானைக் கூட்டத்துக்கு நிகரானவன்.  கண்ணன் குழந்தையாக இருந்தபோது அவனைக் கொல்வதற்காக பல அரக்கர்களை அடுத்தடுத்து அனுப்பினார் மாமன் கம்சன். அந்த அரக்கர்களை கண்ணன் மட்டுமல்ல நானும் கொன்றதுண்டு. குறிப்பாக தேனுகாசுரன், பிரலம்பாசுரன் ஆகியோரை நான் கொன்றேன்.
தேனுகாசுரன் வரும்போது ஒரு கூட்டத்தையும் கூடவே அழைத்து வந்தான்.  அனைவரும் கழுதை வடிவில் வந்திருந்தனர்.  நாங்கள் தங்கியிருந்த பகுதியைச் சுற்றியிருந்த வனங்களை அவர்கள் அழித்தனர்.  கோவர்த்தன மலைக்கு வடக்குப் புறம் இருந்தது இந்த வனம். ஒரு முறை கண்ணனும் நானும் வேறு சில இடைச் சிறுவர்களும் இந்த வனத்துக்குள் திரிந்த போது அங்கிருந்த பனம்பழங்களின் வாசனை எங்களை ஈர்த்தது. பனைமரங்களை நான் உலுக்க பழங்கள் கீழே விழுந்தன.  அவற்றை கண்ணன் சேகரித்தான்.   
அப்போது அங்கு வந்த தேனுகாசுரன் என்னை நோக்கிப் பாய்ந்தான்.  கழுதை வடிவத்தில் இருந்த அவன் தன் பின்னங் கால்களால் என்னை எட்டி உதைத்தான். கோபமடைந்த நான் அவனது கால்களை என் கைகளில் பிடித்தபடி அவனைச் சுழற்றி அங்கிருந்த ஒரு மரத்தின் மீது எறிந்தேன். அதில் பட்டு கீழே விழுந்த அவன் உடல் பல துண்டுகள் ஆனது.  பின்னர் தேனுகாசுரனின் கூட வந்திருந்த அரக்கர்களையும் அழித்தேன். அதற்குப் பிறகு அந்த வனத்தில் இடையர்களால் பயமின்றித் திரிய முடிந்தது.
பிரலம்பன் என்ற அசுரன் ஒரு சிறுவனைப் போல வடிவம் எடுத்துக் கொண்டு வந்தான். கானகத்தில் கண்ணனும் நானும் விளையாடிக் கொண்டிருந்த போது எங்கள் குழுவில் சேர்ந்து கொண்டான். அனைவருமாக ஒரு விளையாட்டை விளையாடத் தொடங்கினோம்.  அப்போது ‘யார் இந்த விளையாட்டில் தோற்கிறார்களோ அவர்கள் பிறரை ஒவ்வொருவராக முதுகில் சுமந்து கொண்டு செல்ல வேண்டும்’ என்று கூறினான் பிரலம்பன். இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  ஏனென்றால் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்பதில் உறுதியாக இருந்தேன். அந்த அரக்கன் அவன் திட்டமிட்டபடி தோற்றான்.  என்னைத் தன் தோளில் வைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினான்.  போகப்போக தன் உருவத்தை அதிகமாக்கிக் கொண்டே போனான்.  அவன் முதுகில் தொங்கிக் கொண்டே போன நான் இந்த சதியை அறிந்து திகைத்தேன்.  அப்போது கண்ணன் அந்த அரக்கனை எச்சரித்தான்.  என்னை உடனே கீழே இறக்கச் சொன்னான்.  அதற்கு மறுத்த அந்த அரக்கன் ஆணவமாகச் சிரித்தான்.  அவன் முதுகில் இருந்த நான் அவன் மண்டையை உடைத்தேன்.  இதன் காரணமாக அவன் இறந்தான்.
கண்ணனும் நானும் சாந்தீபனி என்ற முனிவரிடம் கல்வி பயில அனுப்பப்பட்டோம்.  அவரது இருப்பிடத்திலிருந்து கொண்டு பாடங்களை கற்றுக் கொண்டோம்.  ஒரு முறை கற்றுக் கொடுத்தாலே திறம்பட அவற்றைத் தெரிந்துகொள்ளும் மாணவர்கள் என்று குருவிடம் பெயர் வாங்கினோம்.  அங்கேதான் குசேலன் என்றும் அழைக்கப்படும் சுதாமன் எங்களுக்கு நண்பனான்.  கல்வி கற்று முடிந்ததும் குருதட்சணையாக என்ன வேண்டும் என்று கேட்டோம்.  அதற்கு அவர் தன் மகனை மீட்டுத் தர வேண்டும் என்று கூறினார்.  அப்போது அவர் அருகிலுள்ள கடலில் நீராடியபோது தன் மகன் மறைந்து விட்டான் என்று கூறினர்.  நானும் கண்ணனும் அந்தக் கடலில் மூழ்கி சாந்தீபனி குருவின் மகனைத் தேடினோம்.  அப்போதுதான் சங்காசுரன் என்ற அரக்கன் மீன் வடிவில் வந்து குருவின் மகனை விழுங்கியிருப்பது தெரிந்தது.  போரிட்டு அந்த மீனைக் கொன்று அவன் வயிற்றிலிருந்த குருவின் மகனை மீட்டு வந்து குருதட்சணையாக அளித்தோம்.
கம்சனின் முக்கிய தளபதியாக விளங்கியவன் கால வக்கிரன்.  கம்சன் அவனைப் பெரிதும் புகழ்வது வழக்கம்.  கம்சனைப் போலவே குரூர புத்தி படைத்தவன் கால வக்கிரன்.  கம்சனைக் கண்ணன் வதைத்தான்.  காலவக்ரனை நான் என் கைகளால் கொன்றேன்.
என் தம்பி கண்ணனுக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்தவன் சம்பா.  அவன் துரியோதனன் மகள் லட்ச்மணாவைக் களவாடி மணம் புரிந்தான்.  அப்போது கவுரவர்கள் அவனைக் கைது செய்தனர்.  எனவே யாதவர்கள் கவுரவர்களின் மீது போர் தொடுக்கத் தயாரானார்கள்.  நான் அவர்களைத் தடுத்து விட்டு ஹஸ்தினாபுரத்திற்கு சென்றேன்.  நான் வருவதைக் கேள்விப்பட்ட பீஷ்மர், துரியோதனன், கர்ணன் ஆகியோர் நகர எல்லையில் என்னை சந்தித்தனர். சம்பாவை விடுவிக்க வேண்டும் என்று நான் கூறியதை அவர்கள் ஏற்கவில்லை.  யாதவர்களை மிகவும் பழித்துக் கூறினார்கள். கோபம் கொண்ட நான் என் கலப்பையை அஸ்தினாபுரத்தின் எல்லைக்குள் அழுத்தி வைத்தேன்.  இந்தப் பெரும் விசை காரணமாக அந்த நகரமே வெடித்து உட்செல்லும் என்ற நிலை ஏற்பட்டது.  கவுரவர்கள் கலங்கிப் போனார்கள்.  சம்பாவையும் அவன் மனைவியையும் என்னோடு அனுப்பி வைத்தார்கள்.
கதைப் பயிற்சியில் என்னை நிகரற்றவன் என்பார்கள்.  பீமனுக்கும், துரியோதனனுக்கும் நான்தான் கதைப் பயிற்சி அளித்தேன்.
மாணவர்களான இவர்கள் இருவருமே மகாபாரதப் போரின்போது நான் தங்கள் பக்கம் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.  மறுத்துவிட்டேன். பீமன் துரியோதனின் தொடையைத் தாக்கி அவனைக் கொன்ற போது அதை என்னால் ஏற்க முடியவில்லை.  இது யுத்த தர்மத்திற்கு எதிரானது என்று கருதினேன்.  கோபம் கொண்டேன்.  ஆனால் கண்ணன் ஒரு கேள்வியைக் கேட்டான். ‘சூதாட்டத்தில் பாண்டவர்கள் தோற்றபோது துரியோதனன் தன் தொடையில் வந்து உட்காருமாறு திரவுபதியை ஆணையிட்டானே, அது எந்த தர்மத்தில் சேரும்?’.  கண்ணனின் இந்தக் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. பீமன் துரியோதனனின் தொடையைத் தாக்கியதில் தவறில்லை என்று உணர்ந்தேன்.
    என் வாழ்வில் பகிர்ந்து கொள்ள வேறு பல தகவல்களும் உண்டு.  அவற்றைத் தொடர்ந்து கூறுவேன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar