Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மகாபாரதம் படி! ராமாயணம் படி!
 
பக்தி கதைகள்
மகாபாரதம் படி! ராமாயணம் படி!


கவிஞர் கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ என்னும் நுாலில் இருந்து ஒரு பகுதி இடம் பெற்றுள்ளது.

லௌகிக வாழ்க்கையின் சகல பகுதிகளையும் உள்ளடக்கி ஒரு பெருங்கதை எழுதக் கூடிய சக்தி இன்று எந்த எழுத்தாளருக்காவது உண்டா?
நாகரிகம் வளர்ந்துவிட்ட நிலையில், ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் இடையே உள்ள துாரம் குறைந்து விட்ட நிலையில், பல நாட்டுக் கதைகளையும் படிக்கிற வாய்ப்பு அதிகப்பட்ட நிலையில், நம் மூதாதையர்களை விட நாம் அறிஞர்கள் என்று கருதுகிற நிலையில், சகல விதமான குணாதிசயங்களைக் கொண்ட பல பாத்திரங்களை உருவாக்கி ஒரே கதையாக எழுதுகிற சக்தி யாருக்காவது உண்டா? எனக்குத் தெரிந்தவரை இல்லை!
நம்முடைய இதிகாசங்களை வெறும் கற்பனைக் கதைகள் என்றே வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் கற்பனைக்கு ஈடு கொடுக்க உலகத்தில் இன்னும் ஓர் எழுத்தாளன் பிறக்கவில்லை!
பெருங்கதைகளும் அவற்றுக்குள் உபகதைகளுமாக எழுதப்பட்ட நமது இதிகாசங்களின் பாத்திரப் படைப்புதான் எவ்வளவு அற்புதம்! அவை கூறும் வாழ்க்கைத் தத்துவங்கள்தான் எத்தனை?
நம்பிக்கை, அவநம்பிக்கை, ஆணவம், மீட்சி, காதல், கற்பு, ராஜதந்திரம், குறுக்கு வழி, நட்பு, அன்பு, பணிவு, பாசம், கடமை இப்படி வாழ்க்கையில் எத்தனை கூறுகள் உண்டோ அத்தனையையும் நமது இதிகாசங்கள் காட்டுகின்றன.
மகாபாரதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
பொறுமைக்கு தருமன். துடிதுடிப்புக்கு பீமன். ஆண்மைக்கும் வீரத்திற்கும் அர்ஜுனன். மூத்தோர் வழியில் முறை தொடர நகுலன்- சகாதேவன். பஞ்ச பூதங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்ட சக்தி மிக்க ஆன்மாவாக பாஞ்சாலி. உள்ளதெல்லாம் கொடுத்து, கொடுப்பதற்கு இல்லையே என்று கலங்கும் வள்ளலாக கர்ணன். நேர்மையான ராஜதந்திரத்திற்கு எடுத்துக்காட்டாக கண்ணன். குறுக்குவழி ராஜதந்திரத்திற்கு ஒரே உதாரணமாக சகுனி! தீய குணங்களின் மொத்த வடிவமாக கவுரவர்கள்! தாய்ப்பாசத்திற்கு ஒரு குந்தி. நேர்மையான கடமையாளனாக விதுரன்.
பாத்திரங்களின் சிருஷ்டியிலேயே சம்பவங்கள் கருக்கொண்டு விட்டன. இந்தப் பாத்திரங்களின் குணங்களை மட்டும் சொல்லி விட்டால் கதை என்ன என்பது தற்குறிக்கும் புரியும்.
இந்த கதை வெறும் ஆணவத்தின் அழிவை, தருமத்தின் வெற்றியை மட்டும் குறிப்பதல்ல; லௌகீக வாழ்க்கையிலும் ஒவ்வொருவருக்கும் பயன்படக் கூடிய படிப்பினை இருக்கிறது. கதையின் இறுதிக் களமான குருக்ஷேத்திரத்தில் கதையின் மொத்த வடிவத்திற்கும் தீர்ப்பு வழங்கப்படுகிறது. அதுவரை சொல்லி வந்த நியாயங்கள் தொகுத்து வழங்கப்படுகின்றன. பகவத் கீதை, மகாபாரதக் கதையின் சுருக்கமாகி விடுகிறது. அரசியல், சமுதாய நீதிக்கு அதுவே கைவிளக்காகி விடுகிறது. கண்ணனை நீ கடவுளாகக் கருத வேண்டாம். கடவுள், அவதாரம் எடுப்பார் என்பதையே நம்ப வேண்டாம். பரந்தாமன், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டவன் என்றே எண்ணிப் பார். கீதையை, தேவநீதியாக நீ ஏற்றுக் கொள்ளவில்லையென்றால், மனித நீதியாக உன் கண் முன்னால் தெரியும். கண்ணன் வெறும் கற்பனைதான் என்றால், கற்பனா சிருஷ்டிகளில் எல்லாம் அற்புத சிருஷ்டி, கண்ணனின் சிருஷ்டி.
ஊழ்வினை பற்றித் தெரிய வேண்டுமா? பாரதம் படி. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமா? பாரதம் படி.
ஒன்றை நினைத்தால் வேறொன்று விளையுமா? பாரதம் காட்டும். செஞ்சோற்றுக் கடனா? நன்றியறிதலா? - பாரதம் காட்டும். பெற்ற மகனை, தன் மகன் என்று சொல்ல முடியாத பாசக் கொடுமையா? - குந்தியைப் பார்.
ரத்த பாசத்தால் உன் உள்ளம் துடிக்கிறதா? சொந்தச் சகோதரர்களை எதிர்த்துப் போராட வேண்டி வருகிறதா? அப்போது உனக்கு என்ன செய்வதென்று தோன்றவில்லையா? - கீதையைப் படி.
ஏழைக்கும் பணக்காரனுக்கும் நட்பு இருக்க முடியுமா? - கண்ணன் கதைக்கு உபகதையான குசேலன் கதையைப் படி.
விஞ்ஞானம் வளராத காலத்தில், போர்த் துறையில் எத்தனை வகையான ராஜதந்திரங்கள் இருந்தன. அத்தனையும் ஒட்டுமொத்தமாக அறிந்து கொள்ள மகாபாரதம் படி.
ஒரு பாத்திரத்திற்கு ஒரு குண விசேஷம் என்றால், அதை கதையின் இறுதி வரையில் கொண்டு செலுத்திய கற்பனைச் சிறப்பை அளவிட வார்த்தைகளே இல்லை.
ராம காதைக்கு வா!
காதல் என்றால் என்ன என்பதைக் காட்டக் கூடிய இலக்கியம் அதற்குமேல் ஒன்றில்லை. சகோதரப் பாசம் ராமனுக்கும், லட்சுமணனுக்கும், பரதனுக்குமிடையே முழு வடிவில் சதிராடுகிறது.
குகனைப் போல் ஒரு நண்பன் கிடைத்தால், நான் இருந்த இடத்தில் இருந்தபடியே கோட்டைகளைப் பிடிப்பேன். அனுமானைப் போன்ற ஓர் ஊழியன் கிடைத்தால் அகிலத்தையே விலைக்கு வாங்குவேன்.
சீதையைப் போன்ற ஒரு தேவதை கிடைத்தால் கம்பனோடு போட்டி போடுவேன். விபீஷணனைப் போன்ற ஒரு நியாயவான் கிடைத்தால் இன்றைய ஜனநாயகத்திற்கு நான் மரியாதை செலுத்துவேன். பாரதத்து கர்ணனைப் போல் இதிலே செஞ்சோற்றுக் கடன் கழிக்கும் கும்பகர்ணன், நன்றி கெட்ட உறவுகளுக்கு ஒரு சவால்!
கோசலையைப் போல் ஒரு தாயும், தசரதனைப் போல் ஒரு தந்தையும் யாருக்கும் அமைந்து விட்டால், கொடிய வறுமைகூட தோன்றாது! இவ்வளவு நல்லவர்களைக் கொண்ட ராம காதையை இரண்டே தீயவர்கள் நடத்திச் செல்கிறார்கள்.
முதல் பகுதியைத் தள்ளி விடுகிறாள் மந்தரை. இரண்டாவது பகுதியை ஏற்று நடத்துகிறான் ராவணன்.
ஆயிரம் நல்லவர்களுக்கு அவதியைத் தர, இரண்டு மூன்று தீயவர்கள் போதுமென்கிறது ராம காதை.
மந்தரையும், சூர்ப்பணகையும், ராவணனும்தாம் ராமனுக்கு தெய்வ வடிவம் தருகிறார்கள்.
நிழலின் அருமை வெயிலிலே நின்று அறியப்படுகிறது.
கதைகளைப் பொய் என்று சொல்லலாம். அந்தக் கற்பனையின் சிறப்பை வியக்காமலிருக்க முடியாது!
சொல்லப் போனால்..அத்தகைய கற்பனை, உலகத்தில் இந்தப் பல்லாயிரம் ஆண்டுகளில் வேறு எவனுக்கும் கிடையாது!

நன்றி : கண்ணதாசன் பதிப்பகம்


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar