Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சபரி அன்னை
 
பக்தி கதைகள்
சபரி அன்னை


மணிகண்டனுடன் புலிக்கூட்டம் புறப்பட்டது.
வரும் வழியில் பம்பை நதி குறுக்கிட்டது. அந்த நதியில் மணிகண்டன் நீராடி மகிழ்ந்தான். பிறகு அங்கிருந்து புறப்பட்டு பந்தளம் வரும் வழியில் ஒரு ஆஸ்ரமம் தென்பட்டது. அங்கே மதங்க முனிவர் தன் சீடர்களுடன் தங்கியிருந்தார். அவரது சிஷ்யைகளில் ஒரு மூதாட்டியும் உண்டு. மணிகண்டன் அந்த ஆஸ்ரமத்தைக் கடந்த போது அவள், அவனை தன் ஞான திருஷ்டியால் அடையாளம் தெரிந்து கொண்டாள்.
அவளுக்கு முற்பிறப்பில் நடந்தது நினைவுக்கு வந்தது.
“இவன் அவனல்லவா! அவனது ஜாடை இவனுக்கும் இருக்கிறது. அவன் வில்லும் அம்பும் ஏந்தி வந்தது போல. இவனும் வில்லேந்தி வருகிறான். அவன் நடந்தே வந்தான். இவன் புலிமேல் அமர்ந்திருக்கிறான்.
அவள் தன்னையும் அறியாமல்,“ராமா...” என கத்தினாள்.
ஆம்.. முற்பிறப்பிலும் இந்த மூதாட்டி இங்கு தான் இருந்தாள். அவளது பெயர் சபரி. ‘சபரி’ என்றால் ‘விடாமுயற்சி’, ‘பொறுமை’ என்று இரு பொருள் உண்டு. ஆம்..கடவுளை நேரில் காண்பது என்பது அரிதிலும் அரிது. கடும் முயற்சி, தவம், சோதனைகளைச் சகித்துக் கொள்ளும் பொறுமை மிக்கவர்களுக்கே இது கிடைக்கும். மலைவாழ் பெண்மணியான சபரிக்கு, ராமபிரான் மீது அளவற்ற பக்தி உண்டு. இதற்காக மதங்க மகரிஷியின் ஆஸ்ரமத்துக்கு வந்து, அவரிடம் ஆன்மிக தத்துவங்களைப் படித்தாள். “ராமபிரானை நேரில் தரிசிக்க வேண்டும். அதற்கு வழி காட்டுங்கள்” என்று முனிவரிடம் கேட்டாள்.
அதற்கு அவர்,“நீ ராமபிரானை தரிசிக்க வேண்டுமானால், மிகுந்த பொறுமை காத்து வா! அவரைத் தவிர வேறு எதையும் உன் நினைவில் நிறுத்தாதே. ‘ராம...ராம..ராம...’ என சொல்லிக் கொண்டே இரு. நீ நிச்சயம் ராமனைக் காண்பாய்” என்றார்.
சபரியும் பல கோடி முறை ராம நாமம் சொல்லி விட்டாள். முனிவர் சொன்னபடி ராமனைத் தவிர வேறு எதுவுமே அவளது நினைவில் இல்லை. பசி, துாக்கம் மறந்தாள். ஆனால் ராமன் வந்தபாடில்லை. இதனிடையே மதங்க முனிவர் திடீரென மயங்கி சாய்ந்தார். அவரது சீடர்கள் மயக்கம் தெளிவித்தனர். அவர் சீடர்களிடம் தன் இறுதிக்காலம் வந்து விட்டதை தெரிவித்தார். சபரி ஓடி வந்து, முனிவர் முன் கண்ணீர் சிந்தினாள்.
“மகளே! நீ எதற்காக அழுகிறாய்? என் உயிர் போய் விடுமே என்றா! அப்படியென்றால், இங்கிருக்கும் எல்லாருக்கும் உயிர் கூட்டை விட்டு பிரியும். ஒருவர் மாற்றி ஒருவர், இன்னொருவரின் இழப்புக்காக அழுதே காலத்தைப் போக்க வேண்டியது தான். மரணத்துக்காக யாரும் அழக் கூடாது. வரும் என தெரிந்த ஒன்றுக்காக, யாராவது அழலாமா? நீ அழுகையை விடு. உன் லட்சியம் ராமனைத் தரிசிக்க வேண்டும் என்பதே! அதற்கான தவத்தில் ஈடுபடு. நிச்சயமாக ராமனைக் காண்பாய்” என்று சொல்லி உயிர் விட்டார்.
மதங்க முனிவரின் அறிவுரை, சபரிக்கு தைரியத்தைக் கொடுத்தது. மீண்டும் ராம நாமம் சொல்ல ஆரம்பித்து விட்டாள். அத்துடன் என்றாவது ஒருநாள் அவன் வருவான், அவனுக்கு ஏதாவது சாப்பிட கொடுத்தாக வேண்டுமென நினைத்து இலந்தைப் பழங்களைப் பறித்து வைத்தாள். இது காயுமே தவிர கெடாது. ருசியும் மாறாது. இந்த பழத்தில் புளிப்பும் உண்டு, இனிப்பும் உண்டு. இனிப்பு அதிகமுள்ள பழங்களை சபரி தேர்ந்தெடுத்துப் பறித்தாள். அதோடு விட்டாளா! அதைக் கடித்துப் பார்த்து இனிக்கிறதா என சோதித்தாள்.
எச்சில் பட்ட கனியாயிற்றே! ராமனுக்கு இதைக் கொடுக்கலாமா! என்ற சிந்தனை அவளுக்கு இல்லை. புளிப்பாக இருந்து ராமன் முகம் சுளித்து விடக் கூடாதே என்பதில் கவனமாக இருந்தாள். இங்கே எச்சிலை விட, பக்தி தான் மிஞ்சி நின்றது. எதிர்பார்த்தபடியே ராமனும் வந்து விட்டான். சபரி அவனைக் கண்குளிர தரிசித்தாள். எச்சில் கனிகளை அவனுக்கு அளித்தாள். அவன் மகிழ்ச்சியாக சாப்பிட்டான். இருப்பினும் கனிகளை எச்சில் ஆக்கியதற்காக அவள் கண்ணீர் மல்க மன்னிப்பு கோரினாள்.
ராமன் அவளிடம்,“தாயே! ஒருவருக்கு என்ன கொடுக்கிறோம் என்பதை விட, அதை எப்படி கொடுக்கிறோம் என்பதே முக்கியம். நீ என் மீது அளவற்ற அன்பு கொண்டு இந்தக் கனிகளைத் தந்தாய். இந்த அன்பையே நான் விரும்புகிறேன். அன்பே தெய்வம்” என அவளுக்கு ஆறுதல் சொன்னான்.
“நான் மீண்டும் உன்னை சந்திக்கும் பாக்கியம் பெறுவேனா!” என ராமனிடம் கேட்ட போது,“நிச்சயமாக! கலியுகத்தில் நான் மீண்டும் மணிகண்டன் என்ற பெயரில் மனிதனாக பூமிக்கு வருவேன். உன்னைக் கண்டு ஆசி பெறுவேன்” என்றான்.
 “ஓ! அன்று ராமனாக வந்தவன் தான், மீண்டும் மணிகண்டனாக வருகிறான். அன்றே அவன் சொன்னான். ‘புலி மீதேறி எவன் ஒருவன் வருகிறானோ, அவனால் எனக்கு பிறப்பற்ற நிலை கிடைக்கும்’ என்று. ‘அந்த முக்தியை வேண்டி தானே நான் தவம் செய்கிறேன். இதோ! புலி வாகனன் வந்து விட்டான். எனக்கு நிச்சயம் முக்தியளிப்பான்’ என்று மனதிற்குள் மகிழ்ந்த சபரி அவனை நோக்கி ஓடினாள்.
மணிகண்டன் புலியை விட்டு இறங்கினான். சபரித்தாய் அவனை கண்குளிர தரிசித்தாள். அவனிடம் தன் முற்பிறப்பையும், மணிகண்டன் யார் என்பதையும் நினைவுபடுத்தினாள். எல்லாம் அறிந்த அந்த பரம்பொருள், ஏதும் அறியாதது போல், அவள் சொன்னதைக் கேட்டான்.
“அம்மா! உனக்கு முக்தியளிக்க இப்போதைக்கு என்னால் இயலாது. யார் ஒருவர் கடவுளுக்கு உருவம் கொடுத்து வழிபடுகின்றனரோ, அவர்களுக்கு முக்தி கிடைப்பது சிரமம். நீ ராமனுக்கு ஒரு வடிவத்தைக் கொடுத்து வழிபட்டாய். இதையும் தாண்டிய பக்குவநிலை உனக்கு வர வேண்டும். உருவத்தைக் கூட துறந்து கடவுளை வணங்கும் பக்குவம் வர வேண்டும். அதன்பின் நீ முக்தியடைவாய். இருப்பினும், என்னைக் காண இத்தனை ஆர்வம் கொண்டிருந்த உனக்கு, நிச்சயம் வரங்கள் தந்தாக வேண்டும். நீ இரண்டு வரங்கள் கேட்கலாம். நீ கேட்டதை நான் தருவேன்” என்றான்.
“அப்பா! உன்னைக் கண்ட பின் எனக்கு என்ன வேண்டும்? ஏதுமே தேவையில்லை” என்ற சபரியை இடைமறித்த மணிகண்டன்,“அப்படி சொல்லாதே! உனக்கு ஏதும் கொடுக்காமல் நான் இங்கிருந்து செல்லமாட்டேன்,” என்றான்.
மனம் மகிழ்ந்த சபரி,“என் லட்சியம் முக்தி என்னும் பிறப்பற்ற நிலையே! பிறக்காதவனுக்கு இன்பமும் இல்லை, துன்பமும் இல்லை. நீ சொன்னபடி முக்தி பெறும் தகுதி எனக்கில்லை. அதனால் உருவமற்ற முறையில், உன்னை வணங்கி முக்தி பெறும் வழியை நீயே காட்டு” என்றாள் சபரி.
மணிகண்டன் அவளது புத்திசாலித்தனமான பேச்சை ரசித்தான்.
“அம்மா! நான் யார் என்பதை நீ அறிவாய். மகிஷியை அழிக்க, சிவவிஷ்ணு புத்திரனாய் பிறந்தவன். அதற்காக, பூமியில் மனிதனாய் பிறந்து, இங்கிருப்பவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது எனக்கு இடப்பட்ட கட்டளை. அதன்படி நான் பந்தள ராஜா வீட்டில் அவரது வளர்ப்பு மகனாக இருக்கிறேன். என் தாயின் தலைவலி போக்க புலிப்பால் கொண்டு வரச் சென்றேன். சென்ற இடத்தில் நான் நிகழ்த்திய லீலையை சொல்கிறேன். அதைக் கேட்டால் பிறப்பற்ற நிலையைப் பெறுவதற்கான வழி திறந்து விடும்” என்றான்.
சபரிக்கு மட்டுமல்ல! மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் முக்தி பெறுவதற்கான இந்த எளிய வழியைத் தெரிந்து கொள்ள வேண்டும். அது என்ன?”


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar