Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சுபத்திரை ஆகிய நான்..
 
பக்தி கதைகள்
சுபத்திரை ஆகிய நான்..

- ஜி.எஸ்.எஸ்.

பலராமர், கண்ணன் ஆகிய இருவரையும் சகோதரர்களாகப் பெற்ற பாக்கியவதி நான். வசுதேவருக்கும் தேவகிக்கும் பிறந்தவர் கண்ணன்.  வசுதேவருக்கும் ரோகிணி தேவி என்ற அவரது மற்றொரு மனைவிக்கும் பிறந்தவர்கள் பலராமரும் நானும்.
கண்ணன் தன் மாமன் கம்சனைக் கொன்ற பிறகு சிறையில் இருந்து என் தந்தையை மீட்டார். அதற்குப் பிறகு பிறந்தவள் நான். எனவே என் சகோதரர்களை விட நான் மிக இளையவள். எனவே அவர்களுக்கு மிகவும் செல்லம்.
ஓர் இளவரசியாக நான் செல்வாக்குடன் வளர்ந்தேன். நான் பிறப்பதற்கு முன் என் குடும்பம் அனுபவித்த கஷ்டங்கள் எதையும் நான் பார்த்ததில்லை.
இந்த நிலையில்தான் அர்ஜுனரின் பராக்கிரமங்களைப் பற்றி நான் கேள்விப்பட்டேன்.  வியந்தேன். ஒருமுறை அர்ஜுனர் குறித்து நான் யோசித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த கண்ணன் அவன் உனக்கு ஏற்றவன்தான் என்று குறும்புப்புன்னகையுடன் கூறிவிட்டுச் சென்றார்.  சொல்லப்போனால் அர்ஜுனரை மணக்க வேண்டும் என்ற எண்ணத்தை எனக்கு விதைத்ததே கண்ணன்தான் என்று கூற வேண்டும்.  அர்ஜுனர் எனக்கு உறவினர்தான்.  பாண்டவர்களின் அன்னை குந்திதேவி எனது தந்தையான வசுதேவருக்கு தங்கை முறை.
ஒருமுறை தன் சகோதரர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறியதால் தனக்குத்தானே ஒரு தண்டனையை விதித்துக் கொண்டார் அர்ஜுனர்.  அது அவர்களை விட்டு ஒரு வருடம் பிரிந்து இருப்பது என்பதுதான்.  அப்படிப் பிரிந்து இருந்தபோது பல இடங்களுக்குச் சென்றார்.  இடையில் அண்ணன் கண்ணனும் அவருடன் சேர்ந்து கொண்டார்.  
துவாரகையில் என்னைக் கண்ட அர்ஜுனர் என் மீது மையல் கொண்டார்.  ஒரு துறவியின் வேடமிட்டு அரண்மனைக்கு அருகே உள்ள ஆலமரத்தின் கீழ் அமர்ந்துகொண்டு கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் ஆழ்ந்ததைப் போல இருந்தார்.  அவர் மனதில் அப்போது இருந்தது என் உருவம்தான் என்பது எனக்கு அப்போது தெரியாது.
அரண்மனையில் சயனம் செய்துகொண்டிருந்த கண்ணன் முகத்தில் இதுகுறித்து அறிந்ததும் ஒரு புன்னகை தோன்றியது. அதற்கான காரணத்தை சத்யபாமா அவரிடம் வினவினாள்.  என் மனம் அர்ஜுனர் பால் சென்றதையும், அர்ஜுனர் என்னை அடைய வேண்டும் என்று துரத்திக்கொண்டு வந்திருப்பதையும் குறிப்பிட்டார் கண்ணன். அர்ஜுனரை நான் மணந்து கொண்டால் என் மண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று கருதினார் கண்ணன்.  தவிர அர்ஜுனர் அவரிடம் நெருங்கிய தோழராகவே  பழகுபவர் அல்லவா?
அர்ஜுனர் இருக்கும் இடத்தை அடைந்தார் கண்ணன்.  துறவி வேடத்தில் இருந்துகொண்டு என் தங்கையை  நினைத்துக் கொண்டிருக்கிறாயே என்று கண்ணன் கேலி செய்ய, அர்ஜுனர் வெட்கப்பட்டார்.  என்னை அவருக்கு திருமணம் செய்து கொடுப்பதாக வாக்களித்தார் கண்ணன்.
ஆனால் இதனால் புதிய சிக்கல்கள் முளைத்தன. என்னை துரியோதனனுக்கு திருமணம் செய்து வைப்பதாக என் அண்ணன் பலராமன் வாக்குக் கொடுத்து விட்டார்.  இதில் என் சம்மதத்தை அவர் கேட்கவில்லை.
திருமண நாள் நெருங்கி விட்டது.  க்ஷத்ரிய முறைப்படி என்னை அர்ஜுனர் கவர்ந்து செல்லலாம் என்று கூறினார் கண்ணன்.  ஏனென்றால் தன் அண்ணன் பலராமனின் மனதை மாற்றுவது இயலாத காரியம் என்று அவருக்குப் பட்டது.
கண்ணனின் ஆலோசனையின்படி அர்ஜுனரும் நானும் ஒரு தேரில் அங்கிருந்து கிளம்பினோம்.  பின்னால் வந்த யாதவ சேனையை கண்ணன் தடுத்து நிறுத்தினார். எங்களுக்கு இன்னொரு ஆலோசனையையும் கண்ணன் கூறியிருந்தார்.  தேரை நான் ஓட்ட, அர்ஜுனர் பின்னால் அமர்ந்து இருக்க வேண்டும் என்பதுதான் அது.  அவர் இப்படிக் கூற ஏதோ காரணம் இருக்க வேண்டும் என்று தோன்றியது.  அதன்படியே தேரை இந்திரப்பிரஸ்தத்தை நோக்கி மிக வேகமாக ஓட்டிச் சென்றேன்.
துவாரகையில் அண்ணன் பலராமன் மிகவும் கொதித்துப் போயிருந்தார்.  தன் தங்கையைக் கவர்ந்து சென்ற அர்ஜுனரைப்  பழி வாங்காமல் விடமாட்டேன் என்று கூறிக் கொண்டிருந்தார்.  ஆனால் கண்ணனோ அர்ஜுனன் நம் தங்கையைக் கவர்ந்து செல்லவில்லை.  அவளாகவே விரும்பித்தான் அர்ஜுனனுடன் சென்றாள்.  இது நமது வழக்கப்படி ஏற்கத்தக்கது தானே என்றார்.  ஏதுமறியாத தங்கள் தங்கையை அர்ஜுனன்தான் கவர்ந்து சென்றான் என்று பலராமன் மீண்டும் கூற, ரதத்தை ஓட்டியது நான்தான் என்பதைக் கூறி எனவே என் முழு சம்மதத்துடன் தான் அர்ஜுனர் என்னை அழைத்துச் சென்றார் என்று அழுத்தமாகக் கூறினார் கண்ணன். யாதவப் படையினரும் ரதத்தை ஓட்டியது நான்தான் என்பதற்கு சாட்சி கூறினார்கள்.  பிறகு பலராமர் சமாதானம் அடைந்தார்.
இந்திரப்பிரஸ்தத்தை அடையும்வரை தைரியமாக இருந்த எனக்கு அந்த நகரம் நெருங்க நெருங்க மனதில் கவலையும் பயமும் பெருகின. அர்ஜுனர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதும் திரவுபதி இந்திரப்பிரஸ்த அரண்மனையில்தான் வசிக்கிறார் என்பதும் எனக்குத் தெரிந்ததுதான்.
அரண்மனை வாசலை அடைந்ததும் அங்கு குந்தி தேவியும் பிற பாண்டவர்களும் காத்திருந்தனர். அவர்கள் எங்களை அன்புடன் வரவேற்றனர். ஆனால் திரவுபதி தேவி வாசலுக்கு வரவில்லை.  அவரது உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.  ஒரு பணியாளைப் போல வேடமிட்டு நான் திரவுபதி தேவியை அடைந்து நமஸ்கரித்தேன்.  அக்கா, நான் உங்கள் பணிப்பெண்ணாகவே சேவகம் செய்கிறேன்.  உங்கள் இடத்தைக் கவர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு சிறிதும் இல்லை என்றேன். திரவுதியின் மனம் குளிர்ந்தது.  தவிர நான் கண்ணனின் தங்கை என்பதும் எனக்கு அப்போது சாதகமாக அமைந்தது.  அதற்குப் பின் என்னைத் தன் சகோதரியாகவே நடத்தினார்.
அர்ஜுனருக்கும் எனக்கும் பிறந்தவன்தான் அபிமன்யு.  மகாபாரதப் போரில் வீர மரணம் அடைந்தவன்.  என் மகன் வழிப் பேரனான பரீட்சித்துதான் நாளடைவில் பாரத தேசத்தை ஆண்டவன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar