Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மறக்க முடியாத நாள்
 
பக்தி கதைகள்
மறக்க முடியாத நாள்

மந்திரி தான் நடுக்கத்துடன் பேச ஆரம்பித்தான்.
“மகாராஜா! ராணியார் மீது எந்தத் தவறும் இல்லை. மணிகண்டனுக்கு அரண்மனையில் முக்கியத்துவம் அதிகரித்ததால் என் மதிப்பு குறைந்து விடும் என நினைத்து, ராணியின் மனதை கலைத்தேன். இளவரசர் ராஜராஜனுக்கு முடிசூட்டாவிட்டால் உங்கள் நிலை பரிதாபமாகி விடும் என்று கோள் மூட்டினேன். இதற்காக மணிகண்டனை காட்டுக்கு அனுப்ப முடிவெடுத்தோம். ராணி தலைவலி வந்தது போல நடித்தார். அரண்மனை வைத்தியர்களை என் கைப்பாவையாக்கி, புலிப்பால் கொண்டு வரும் திட்டத்தை வகுத்தோம். மணிகண்டன் மடிவான் என்று நினைத்தே நான் இவ்வாறு செய்தேன். ஆனால் இளவரசர் இத்தனை புலிகளுடன் வருவார் என யாருக்கு தெரியும். நடக்காததை நடக்க வைத்த இவர் உயர்ந்தவர். இந்த கொடிய திட்டத்தை வகுத்த என்னைக் கொன்று விடுங்கள்” என்று கதறினான்.
ராஜசேகரன் தன் மனைவியையும் சுடும் கண்களால் பார்த்தார்.
மணிகண்டன்தான் அவரை அமைதிப்படுத்தினான்.
“அப்பா! தாய் மீதும் மந்திரி மீதும் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஏனெனில் எது நடக்க வேண்டுமோ, அதுவே நடந்தது. இனியும் எது நடக்க வேண்டுமோ, அதுவும் நடந்தே தீரும். புலிப்பால் திட்டத்தால் மட்டுமல்ல. என் விதிப்படியும், நான் உங்களைப் பிரியும் நேரம் வந்து விட்டது. என் வரலாற்றைக் கேளுங்கள்” என்றவர், சிவவிஷ்ணுவுக்கு தான் பிறந்தது முதல் மகிஷியை அழித்தது, 12 ஆண்டுகள் மட்டும் மனித வாழ்வு நடத்த சிவவிஷ்ணு அனுமதித்தது ஆகிய எல்லா விபரங்களையும் விளக்கமாகச் சொன்னார். தாங்கள் குழந்தை பாக்கியமின்றி இருந்து, சிவவிஷ்ணுவை வேண்டினீர்கள். உங்கள் வேண்டுதலை ஏற்ற சிவவிஷ்ணு என்னை உங்கள் கண்ணில் படும்படி செய்தனர். அத்துடன் ராஜராஜனையும் உங்களுக்கு பிள்ளையாகத் தந்தனர். இப்போதே நான் கிளம்புகிறேன். என்னை வழியனுப்பி வையுங்கள்” என்றான்.
ராஜசேகரன் அசந்து விட்டார். மகாராணியோ மணிகண்டனின் கையைப் பிடித்து,“உனக்கு துரோகம் செய்த என் முகத்தில் விழிக்கக்கூடாது என புறப்பட்டு விட்டாயா மணிகண்டா!” என்று கதறினாள்.
“தாயே! தங்கள் மீது எனக்கு வருத்தமும் இல்லை. அவரவருக்கு பிரம்மாவால் விதிக்கப்படும் கர்மங்களையே இங்கு வந்து செய்கிறோம். இந்த வரலாற்றை அறிபவர்கள் இதுபோல் நாமும் நடக்கக்கூடாது என்று திருந்தி வாழ்வதற்கே இதுபோன்ற செயல்கள் நடக்கின்றன. நீங்கள் கலங்க வேண்டாம். நாம் புதிய வரலாறைப் படைக்க உருவாக்கப்பட்டோம். அதில் என் பங்கு முடிந்து விட்டது. என் வரலாறு உள்ள வரைக்கும், உங்கள் வரலாறும் உலக மக்களால் பேசப்படும்” என்று சொல்லி விட்டு, தந்தையிடம் விடை பெற நின்றான்.
ராஜசேகரன் கண்ணீர் வடித்தார்.
“மகனே! உன்னைப் பிரிய என்னால் முடியாது. நீ இங்கேயே தங்கு” என்று கதறினார். பந்தள மக்கள் இந்த தகவலை அறிந்து அங்கு கூடினர். அவர்களின் கண்களிலும் கண்ணீர் பம்பை நதி போல் பெருகியது. சிலர் மனதில், ‘கடவுள் எப்படி மனிதனாக பூமிக்கு வர முடியும். தன்னை தெய்வ அவதாரம் எனச் சொல்லும் மணிகண்டன் அதை அனைவரும் அறியும் வண்ணம், நிரூபித்து விட்டு செல்லலாமே!’ என்ற எண்ணம் ஓடியது. எல்லாம் அறிந்த மணிகண்ட பிரபு, அவர்களின் எண்ணத்தை அறியாமலா இருப்பார்.
அவர்களுக்கு உடனேயே மணிகண்டன் பதிலளித்தார். தன்னுடன் வந்த புலிக்கூட்டத்தை மணிகண்டன் ஏறிட்டுப் பார்த்தார். என்ன அதிசயம்! மணிகண்டன் அமர்ந்து வந்த புலி, தேவராஜன் இந்திரனாக மாறியது. பந்தளராஜா அவனை வணங்கினார். மற்ற புலிகள் தேவர்களாக மாறி சுயவடிவம் பெற்றன.
“ஆகா! மணிகண்டனால் தேவதரிசனம் பெற்று, இதுவரை செய்த பாவங்கள் நீங்கப் பெற்றோம்” என்று ஒருவொருக்கொருவர் பேசிக் கொண்டனர்.
இதன் பின்னர், பந்தளராஜாவால் அவன் புறப்படுவதை தடுக்க முடியவில்லை. இருந்தாலும் பெற்ற பிள்ளையை விட மேலான பாசம் கொண்டிருந்த அவர் மகனிடம்,“தெய்வக்குழந்தையே! உன்னை இனி என்று காண்பேன். நீ எங்கே தங்குவாய். அதை என்னிடம் சொல்லு! எவ்வளவு சிரமம் வந்தாலும் அதையெல்லாம் கடந்து வந்து உன்னைக் காண்பேன்” என்றார்.
“தந்தையே! நான் காட்டிலிருந்து திரும்பி வரும் வழியில் சபரி என்ற மூதாட்டியை சந்தித்தேன். அவள் எனது பக்தை. அவள் பெயரால் விளங்கும் சபரிமலையில் நான் தியானநிலையில் இருப்பேன். அங்கு வந்து என்னை சந்திக்கலாம். நீங்கள் எனக்கு அங்கு ஒரு கோயில் கட்டுங்கள். அங்கே என்னை மணக்க விரும்பிய லீலாவதிக்கும் சன்னதி அமைய வேண்டும்” என்றான் மணிகண்டன்.
“அப்படியே செய்கிறேன்” என்று வாக்களித்த பந்தளராஜா, “மணிகண்டா! நீ தெய்வப்பிறவியே என்றாலும் கூட, உனக்கு தீங்கிழைத்த ராணி லட்சுமிக்கும், மந்திரிக்கும் தண்டனை தர வேண்டும். அதை நீயே கொடுத்து விடு” என்றார்.
“அப்பா! இவர்கள் தண்டனைக்குரியவர்கள் அல்ல என்று ஏற்கனவே சொல்லி விட்டேன். ராமாயணத்தில் கூனியும், பாரதத்தில் சகுனியும் இல்லாமல் இருந்திருந்தால் ராம கிருஷ்ணர்களின் மகிமையை உலகம் அறிந்திருக்காது. அவர்கள் மூலம் தெய்வங்கள் எவ்வளவு சக்தி மிக்கவை என்பதே உலகோருக்கு காட்டப்படுகிறது. எனது பூலோக வருகைக்கு முன்னதாக, இவர்களும் அதே போல் பிரம்மாவால் இங்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் தங்கள் கடமையைச் செய்து, என் சக்தியை உலகோர் அறிய காரணமாயினர். எனவே இவர்களை மன்னித்து விடுங்கள்” என்றார்.
பந்தளராஜாவும் அமைதியானார்.
பிறகு தம்பி ராஜராஜனை அருகில் அழைத்தார். அவன் அழுது வீங்கிய கண்களுடன் வந்து நின்றான்.
“அண்ணா! என்னைப் பிரிய உனக்கு எப்படி மனம் வந்தது. இளமையில் நாம் விளையாடிய விளையாட்டுகளை மறந்து விட்டாயா? குளத்துப்புழைக்கு சென்று நாம் விளையாடி மகிழ்ந்த நாட்களை எப்படி மறப்பேன்! என்னையும் உன்னோடு அழைத்துச் செல்” என்றான் கண்ணீர் மல்க.
“தம்பி! பெற்றவர்களைக் காப்பது பிள்ளைகள் கடமை. தாய், தந்தையை இறுதி வரைக் காப்பதற்கென்றே ஆண் பிள்ளைகள் படைக்கப்படுகிறார்கள். நம் பெற்றோரைக் காக்க நீ தானே இருக்கிறாய். அது மட்டுமா! இங்கே நிற்கும் மக்களை யார் காப்பது? ஆண்டில் ஒருமுறை நீ என்னைக் காண சபரிமலைக்கு வா. அப்போது நாம் பேசி மகிழ்வோம்” என ஆறுதல் சொன்னான்.
அத்துடன் கிரீடத்தை எடுத்து வந்து அவனது தலையில் சூட்டி, “இனி நீயே பந்தளராஜா. நம் தாயின் ஆசையை நிறைவேற்றி விட்டேன்” என்றான். ராணி லட்சுமி மணிகண்டனை ஆரத்தழுவிக் கொண்டாள்.
இன்னா செய்தாருக்கு இனியவை செய்யும் போது தான் அவர்கள் வெட்கிப் போகிறார்கள். அப்போது ராணியின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என சொல்லத் தேவையில்லை. நமக்கு இதுபோன்ற நல்ல கருத்துக்களை படிப்பிக்கவே புராணக்கதைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மணிகண்டனின் விருப்பப்படி சபரிமலையில் மகாராஜா கோயில் கட்டினார்.
மணிகண்டனின் புராண வரலாற்றை தெரிந்து கொண்டோம். கேரள நாட்டுப்புற பாடல்களில், வேறு விதமாக மணிகண்டனின் வரலாறு சொல்லப்படுகிறது. அதில் ஐயப்பன் என்ற பெயர் பிரபலமாக விளங்குகிறது. ஐயப்பனின் வரலாற்றை படிக்க தயாராவோமா!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar