Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சகாதேவனாகிய நான்...
 
பக்தி கதைகள்
சகாதேவனாகிய நான்...


பாண்டவர்களில் நான் கடைக்குட்டி.  மகாபாரதத்தில் நான் அரிதாகவே குறிப்பிடப்படுகிறேன் என்றாலும் எனக்கு அதில் எந்த வருத்தமும் இல்லை. பொறுமை என் கூடப்பிறந்த குணம்.  எதற்கும் உணர்ச்சிவசப்படும் பீமன் அண்ணா என்னை இதற்காகக் கிண்டல் செய்ததும் உண்டு.
நானும் நகுலனும் இரட்டையர்கள். அஸ்வினி தேவர்களின் அருளால் பிறந்தவர்கள்.  மன்னர் பாண்டுவையும் மாத்ரி தேவியையும் பெற்றோராக அடைந்தவர்கள்.  
என்னை அசுரகுரு சுக்ராச்சாரியாரின் அம்சம் என்றும் கூறுவர்.  குந்திதேவி என்னைப் பெற்ற அன்னை அல்ல.  என்றாலும் பாண்டவர்களில் நான் என்றால் அவருக்குத் தனி அன்பு.  துரியோதனன் அண்ணா கூட என்னிடம் வெறுப்பு காட்டியதில்லை.
வாள் பயிற்சியில் சிறந்தவன் நான்.  துரோணாச்சாரியார், கிருபாச்சாரியார் ஆகியோர் எனக்கு ஆயுதப் பயிற்சி அளித்தனர். தேவ குருவான பிரகஸ்பதியிடமிருந்து நீதி சாஸ்திரம் கற்றேன். எங்கள் மூத்த அண்ணன் யுதிஷ்டிரர் ராஜ சூய யாகம் செய்தார்.  இந்திரப்பிரஸ்தத்தின் சக்ரவர்த்தியாக அவர் முடிசூட்டிக் கொண்ட பின் பாரத கண்டத்தில் உள்ள பல பகுதிகளை அவர் தம்பிகளாகிய நாங்கள் வெற்றி கொண்டு இந்திரப்பிரஸ்தத்தோடு இணைத்தோம்.  
குறிப்பாக நாட்டின் தென் பகுதிக்கு நான் அனுப்பப்பட்டேன். பொதுவாக தெற்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வாள் வீச்சில் சிறந்து விளங்கினர்.  நானும் வாள் பயிற்சியில் சிறந்தவன் என்பதால்  தென்பகுதிக்கு அனுப்பினர். அவர்கள் எதிர்பார்ப்பு பொய்யாகவில்லை. மகிஷ்மதி, பாண்டிய நாடு, விதர்பம், நிஷாதம் போன்ற பல பகுதிகளை யுதிஷ்டிரரின்  தலைமையை ஏற்க வைத்தேன். பின்னர் பாரதப் போரில் வஞ்சக சகுனியைக் கொன்றது  நான்தான்.
பாண்டவர்களையும் மணந்ததால் திரவுபதி  எனக்கும் மனைவியானாள். அவள் மூலமாக எனக்குப் பிறந்தவன் ஸ்ருதசேனன். மாத்ர தேசத்து இளவரசி விஜயா சுயம்வரத்தில் எனக்கு மாலையிட நாங்கள் மணம் புரிந்து கொண்டோம்.  எங்களுக்குப் பிறந்தவன் சுஹொத்ரன்.
பகடை விளையாட்டில் என்னைப் பணயம் வைக்கும்போது அண்ணன் யுதிஷ்டிரர்.‘‘சகுனி, இதோ என் தம்பி சகாதேவன்.  சிறப்பாக நீதிபரிபாலனம் செய்பவன். பெரும் ஞானி’’ என அறிமுகப்படுத்தினார்.  பின்னர் திரவுபதியை பணயம் வைத்ததால் பெரும் கோபம் அடைந்த பீமன் என்னை நோக்கி  ‘சகாதேவா, எரியும் நெருப்பை எடுத்து வா.  அண்ணனின் கையைப் பொசுக்க வேண்டும்’ என கோபத்தில் கூறினார். நான் அமைதி காத்தேன்.
பாண்டவர்களாகிய நாங்கள் 12 ஆண்டுகள் வனவாசமும் ஓராண்டு அஞ்ஞாத வாசமும் இருக்க நேரிட்டது.  அப்போது மன்னர் விராடனின் அரண்மனையில்  பசுக்களைப் பராமரிக்கும் பணியில் சேர்ந்தேன்.  தந்திரி பாலன் என்ற பெயரில் மாறுவேடத்தில் அதை மேற்கொண்டேன்.
நான் ஒரு சார்பு நிலையை எடுக்காதவன் என்றும் ஞானி என்றும் கண்ணன் கூறுவார். ஜோதிடக் கலையில் நான் மிக வல்லவன். போர் நடப்பதற்கு சில வாரம் இருக்கும் போது கவுரவர்கள் வெற்றி பெறும் வகையில் போர் தொடங்க நல்ல நாள் குறித்து தர வேண்டுமென்று துரியோதனனை அனுப்பி வைத்தார் சகுனி. எதிர்த்தரப்பில் இருந்தாலும் நான் நியாயம் தவற மாட்டேன் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. ‘சகாதேவா, போர் தொடங்க நல்ல நாளைக் குறித்துக் கொடு.  நாங்கள் வெற்றி பெற்றதும் உன்னையும் நகுலனையும் மன்னர்கள் ஆக்குவோம்’ என்றான் துரியோதனன்.  இந்த பிரித்தாளும் சூழ்ச்சிக்கு நான் உடன்படவில்லை. எனினும் கவுரவர்கள் தரப்புக்கு வலு சேர்க்கும் ஒரு நாளை குறித்துக் கொடுத்தேன்.  மார்கழி அமாவாசையன்று களபலி கொடுத்து விட்டு போரைத் துவக்க வேண்டும் என நாள் குறித்தேன்.  துரியோதனன் மகிழ்வுடன் சென்று விட்டான்.
கவுரவர்களுக்கு ஏற்ற நாளை குறித்துக் கொடுத்ததை அறிந்த கண்ணன் வேறொரு திட்டத்தில் ஈடுபட்டார். அமாவாசைக்கு ஒரு நாள் முன்னதாக தன் முன்னோருக்குத் தர்ப்பணம் செய்தார்.  இதைக் கண்ட அந்தணர்கள் குழப்பமடைந்தனர்.  தாங்கள்தான் சரியாக நாளைக் கணக்கிடவில்லை என எண்ணினர். எனவே அனைவரும் அதே நாளில் தர்ப்பணம் செய்தனர்.  சூரியனும் சந்திரனும் கூட திகைத்தனர்.  அவர்கள் கண்ணனிடம் சென்று ‘நாளை தானே அமாவாசை?  இன்று எதற்கு தர்ப்பணம் செய்கிறீர்கள்?’ எனக் கேட்டனர்.  கண்ணன் புன்னகையுடன் ‘அமாவாசை என்பது சூரியன், சந்திரன் இணையும் போது தோன்றுகிறது. இருவரும் இப்போது இணைந்து வந்து இருக்கிறீர்கள். எனவே இன்றே அமாவாசை’ என்றார். இதனால் குழப்பமடைந்த கவுரவர்கள் நான் குறித்த நாளுக்கு மாற்றாக வேறொரு நாளில் போரைத் தொடங்கினர்.
கண்ணனின் பரமபக்தன் நான். ஒருமுறை என்னிடம் கண்ணன்,  போரை நிறுத்த வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டார். ‘பாண்டவர்களும் துரியோதனனும் காட்டுக்குச் சென்று விட வேண்டும். கர்ணனை மன்னனாக வேண்டும்.  உங்களைக் கட்டி போட வேண்டும்’ என்றேன்.  கண்ணன் புன்னகையுடன் ‘மீதியெல்லாம் இருக்கட்டும், என்னைக் கட்டிப் போடுவது சாத்தியமா?’ என்று கேட்டார்.
நான் கண்களை மூடிக்கொண்டு தியானித்தேன்.  தியானத்தின் போது கண்ணனை சிறு குழந்தையாக உருவகப்படுத்தி அவனைக் கட்டிக் கொண்டேன்.  கண்ணனால் அந்த அன்புப் பிடியிலிருந்து அவரால் வெளியேற முடியவில்லை.  பின்பு அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவரை விடுவித்தேன்.  அவர் எனக்கு ஞானப் பார்வையை அருளினார்.  இதன் மூலம் பாரதப்போரில் ஒவ்வொரு நாளும் என்ன நிகழும் என்பது எனக்கு முன்னதாகவே தெரிந்திருந்தது.  ஆனால் எனக்கு தெரிந்ததை வெளிப்படுத்தக் கூடாது என்பது கண்ணனின் கட்டளையாக இருந்தது.
...............


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar