Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ராம அற்புதம்!
 
பக்தி கதைகள்
ராம அற்புதம்!


ராமன், சீதை,லட்சுமணன் மூவருக்குமே வன அனுபவம் முற்றிலும் புதுமையானதாக இருந்தது. பசுமை, துாய்மை, புத்தொளி, தென்றல், நறுமணம், இதமான வெயில், குளுமையான நிலவு என்று கானகத்தில் இயற்கை பரிபூரணமாகக் கோலோச்சி கொண்டிருந்தது. கொஞ்சம்கூட செயற்கை சாயம் பூசப்படாத புத்தம் புது சூழ்நிலை…
புதியதோர் அனுபவத்துக்குத் தன்னை உட்படுத்திய தாயார் கைகேயிக்கு, ராமன் மனசுக்குள் நன்றி சொல்லிக் கொண்டான். அயோத்தியிலேயே வாழ்நாளைக் கழித்திருந்தால் இப்படி ஓர் இயற்கை அனுபவம் கிட்டியிருக்குமா? ஏதேனும் காரண, காரியமாக கானகத்திற்கு வரவேண்டய சந்தர்ப்பம் ஒன்றிரண்டு வாய்த்திருக்கலாம், அவ்வளவுதான். புலவர்கள் தாம் அனுபவித்த இயற்கை வியப்புகளைக் கவிதைகளாகப் புனைந்து பாடுவதைக் கேட்கலாம், வன விலங்குகளாகவும், மரம், செடி, கொடிகளாகவும் தங்களை ஒப்பனை செய்து கொண்டு கலை அரங்கில் இயற்கையை நாடகமாக நடித்துக் காட்டும் கலைஞர்களைக் கண்டு மகிழலாம். ஆனால் நேரடி அனுபவம் என்பதுதான் எவ்வளவு அபூர்வமானது, ஆனந்தமானது, ஆத்மார்த்தமானது!
லட்சுமணனும் இயற்கையின் வசீகரத்தால் ஈர்க்கப்பட்டது உண்மைதான். ஆனால் அவனுடைய மனதிலிருந்து தமையனார் வஞ்சிக்கப்பட்ட வேதனை,  கொஞ்சமும் விலகாததால், அவனுக்கு இயற்கை மீது பெரிதாக ஈர்ப்பு இல்லை. அதைவிட முற்றிலும் புதிதான அந்தச் சூழலில் தமையனாரையும், அண்ணியாரையும் பாதுகாக்க வேண்டிய மகத்தான பொறுப்பும் அவனுக்கு இருந்ததால், புதுச் சூழலை ரசித்து அனுபவிக்கும் மனோநிலையிலும் அவன் இல்லை.
ஆனால் சீதை மிகவும் சந்தோஷப்பட்டாள்.  மிதிலையில் நந்தவனத்தில் சகோதரிகளுடன் விளையாடிய இனிய நாட்கள், மணமகளாக அயோத்தியில் அரண்மனைப் பூங்காக்களில் மயில்கள், கிளிகள், நாகணவாய்ப் பறவைகள் என்று பொழுதைப் பயனுள்ளனவாக்கிய அம்சங்கள் என்று அவள் அனுபவித்திருந்தாலும், இந்தக் கானகத்தின் பிரமாண்டத்திற்கு அவை ஈடாகாதே!
நிமிர்ந்து பார்த்தால் கழுத்து வலியெடுக்க வைக்கும் நெடிதுயர்ந்த மரங்கள், தரையெங்கும் பேரெழில் ஓவியமாகத் தோன்றும் பழுத்து உதிர்ந்த இலைகளும், உறுதியிழந்து முறிந்து விழுந்த மரக்கிளைகளும், சுள்ளிகளும்…
ஆனால் புதிய மனித அறிமுகம்தான் இல்லை. கானக எல்லையில் இருக்கக்கூடிய கிராமங்களில் வசிக்கலாம். ஆனால் அங்கே போக முடியுமா? போகலாமா? அன்னை கைகேயி ஆணைப்படி பதினான்கு ஆண்டுகள் காட்டில்தானே வாழ்ந்தாக வேண்டும்!
ஆனால் அவர்கள் ஏமாற்றமடைய வேண்டாத வகையில், ‘நீங்கள் போய் பிறரை சந்திக்க ஏன் துன்பப்பட வேண்டும்? இதோ... நாங்களே உங்களைக் காண வருகிறோம்’ என்பது போல ஆங்காங்கே குடில் அமைத்து தவ வாழ்வில் ஈடுபட்ட முனிவர்கள் வந்து அவர்களை சந்திக்கதான் செய்தார்கள்.
காட்டினுள் சிற்றாறுகளும், சிறு அருவிகளும், ஆங்காங்கே தடாகங்களும், ஊற்றுகளும், மலைப்பகுதியில் சுனைகளும் நிறைந்திருந்தன. அவற்றையெல்லாம் கண்டு களித்த அவர்கள், மிகப் பெரிய நீர் ஆதாரமான, அகன்று ஓடும் கங்கை நதிக்கரைக்கு வந்தார்கள். இங்குதான் அவர்கள் முனிவர்கள் பலரை தரிசித்தார்கள்.
அவ்வாறு முனிவர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே ராமனின் கண்கள் பிரகாசமடைவதை சீதை கவனித்தாள். பெருந்தவம் இயற்றி, தெய்வீகம் நிரம்பப் பெற்ற மகான்கள் என்ற அளவில் மட்டுமல்லாது, வயது வித்தியாசம் பாராது அவர்கள் அனைவரையும் தன் ஆசானாக பாவித்த ராமனின் பக்குவமான மனதை புரிந்து கொண்டாள்.
முனிவர்களுக்கோ தவப்பயனாக அந்த ஆதிமூலக் கடவுளே தங்களுக்கு தரிசனம் நல்க, விண்ணிலிருந்து இறங்கி வந்திருப்பதாக உணர்ந்தனர்.  அவர்களும் பரவசம் ஒளிரும் கண்களால் ராமன், சீதை, லட்சுமணனை வணங்கி வரவேற்றனர்.
‘‘தாடகையை வதைத்தீர்களாமே! சுபாகுவை வீழ்த்தினீர்களாமே, மாரீசனை கடலாழத்தில் அமிழ்த்தினீர்களாமே, முனி பத்தினி அகலிகைக்கு சாப விமோசனம் அளித்தீர்களாமே, எளிதாக சிவதனுசை வளைத்தீர்களாமே, பரசுராமரை கர்வ பங்கம் செய்தீர்களாமே….‘‘ என்றெல்லாம், ஏற்கனவே ராமனின் பராக்கிரமம் தமக்குத் தெரியும் என்பதை அவனிடமே கேள்வியாகக் கேட்டு அறிவித்தார்கள். ராமன் புன்னகைத்தான்.
முனிவர்களுடைய உபசாரங்களை ஏற்றுக் கொண்ட ராமன், அவர்களை வணங்கி மகிழ்ந்தான். சற்று நேரம் கழித்து கங்கையில் நீராட சீதை, லட்சுமணனுடன் ஆற்றில் இறங்கினான். தன்னில் நீராடுபவர்களின் பாவங்களையெல்லாம் தன்னுள் கரைத்துக் கொண்டு அவர்களைப் புனிதப்படுத்தும் கங்கை, இப்போது நெகிழ்ந்து புரண்டாள். ஆமாம், தான் அதுவரை தாங்கியிருந்த பாவங்களெல்லாம் ராமன் பாதம் பட்ட உடனேயே அப்படியே ஆவியாகிப் போய்விட்ட புத்துணர்வை அடைந்தாள் கங்கை.
அதே பகுதியில் வாழ்ந்திருந்த குகன் என்ற படகோட்டித் தலைவன் ராமர் வந்திருக்கிறார் என்றறிந்து, அவரை தரிசிக்க ஆவலுற்றான். ஏற்கனவே ராமரைப் பற்றி உயர்வாகக் கேள்விப்பட்டிருந்தான் அவன். கங்கை ஆற்றின் இரு கரைகளிலுமிருந்தும் பயணிகளை அவனும், அவனது குழுவினரும் தத்தமது படகுகளில் அழைத்துச் செல்லும் போதெல்லாம் அவர்கள் பெரும்பாலும் ராமரைப் பற்றிப் பேசுவார்கள். அவனுடைய நிறைவான குணங்களை  விவரிப்பார்கள். அவனைத் தாங்கள் தரிசித்த அனுபவங்களை சுவைபட விளக்குவார்கள். இவற்றையெல்லாம் கேட்டுக் கேட்டு தனக்குள் ஒரு சிம்மாசனம் அமைத்து அதில் ராமரை அமர வைத்து துதித்து வந்தான் குகன்.
அவனுக்கு இப்போது ராமர் தன் பகுதிக்கு வந்ததை அறிந்ததும் தரிசிப்பதற்காக பரிவாரங்களுடன் முனிவர் குடிலை நோக்கி வந்தான்.
ராமனைப் பார்த்ததும் அப்படியே கண்கலங்கினான் குகன். ‘‘ஐயனே, என்ன கோலம் இது! ராஜாராமனாக பட்டுப் பீதாம்பர ஆடைகளுக்கும், வைர வைடூரிய ஆபரணங்களுக்கும் அழகு சேர்க்கும் பேரழகனாக அல்லவோ நான் கேள்விப்பட்ட வர்ணனைப்படி தங்களை என் மனத்திரையில் ஓவியமாகத் தீட்டியிருந்தேன்! ஆனால் இப்படி மரவுரி தரித்து எளியவராக காட்சியளிக்கக் காரணம் என்ன?’’ என்று கேட்டுக் குமுறினான்.
ராமன் புன்னகைத்தபடி லட்சுமணனைப் பார்க்க்க, அவன், ராமனும், தாங்களும் காட்டிற்கு வந்ததன் காரணங்களை குகனுக்கு விளக்கினான்.
அதுகேட்டு வெகுண்டான் குகன். ‘‘என்ன கொடுமை இது! ஒரு தம்பி இப்படி உங்களுக்கு சேவகம் செய்ய இன்னொரு தம்பியால் எப்படி துரோகம் இழைக்க முடிந்தது? கவலைப்படாதீர்கள் என் ஐயனே. தாங்கள் இனி எங்கும் அலைய வேண்டாம், வனவாசம் புரிய வேண்டாம். என்னுடனேயே என் நகரத்திற்கு வந்துத் தங்கிக் கொள்ளுங்கள். பதினான்கு ஆண்டுகளுக்கு எங்கள் தலைவராக உங்களை ஏற்று  அடிபணிந்து வாழ்கிறோம்’’  என்று உணர்வு மேலிட சொன்னான்.
அதைக் கேட்டு சிரித்தான் ராமன். ‘‘என் அன்புக்குரியவனே, உன் பாசம் என்னை நெகிழ்விக்கிறது. ஆனால் எனக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை, வசதிகளை முற்றிலும் துறந்து புண்ணியத் தலங்களுக்குச் சென்று, பல்வேறு தீர்த்தங்களில் நீராடி, முனிவர்களின் ஆசி பெற்று, காலகெடு முடிந்ததும் அயோத்தி திரும்ப வேண்டும் என்பதுதான். ஆகவே உன் அன்பையும், உபசரிப்பையும் ஏற்க இயலாதவனாக இருக்கிறேன்’’  என்று கனிவுடன் பதிலளித்தான்.
‘‘எல்லாம் நன்மைக்கே’’ பளிச்சென்று சொன்னான் குகன். ‘‘அன்னையார் கைகேயி எங்களைப் பொறுத்தவரை நன்மையே செய்திருக்கிறார். ஆமாம், எங்கள் இருப்பிடத்திற்கு அனுப்பி வைத்து, நாங்கள் உள்ளம் குளிர உங்களை தரிசித்து, உபசரிக்க வைத்திருக்கிறாரே! இல்லாவிட்டால் இந்த பாக்கியம் எங்களுக்கு எப்போதுதான் கிட்டும்?‘‘ கண்களிலிருந்து நீர் தாரை, தாரையாகப் பெருக, நெகிழ்ந்து உருகினான் அவன்.
‘அட!’ வியந்தாள் சீதை. ‘ராமனைப் பார்க்கும் யாரும் உடனேயே அவனுடைய குணத்தை அடையும் அற்புதம்தான் எத்தனை ஆச்சரியமானது’
மெல்ல சிரித்த ராமன், குகனிடம் ‘‘நீ எனக்கு  செய்யக்கூடிய ஓர் உதவி இருக்கிறது,‘‘ என்றான்.
அப்படியே அவன் காலடியில் மண்டியிட்ட குகன், ‘‘சொல்லுங்கள். நிறைவேற்றித் தருகிறேன்’’ என்று தழுதழுத்தக் குரலில் சொன்னான்.
‘‘நாளைக் காலையில் நாங்கள் மூவரும் கங்கையின் மறுகரைக்குச் செல்ல வேண்டும். உன் படகில் எங்களைக் கொண்டு சேர்ப்பாயா?’’
‘‘தெய்வமே, இதென்ன கோரிக்கை? ஆணையிடுங்கள், இக்கணமே நிறைவேற்ற சித்தமாக இருக்கிறேன்’’ என்று கைகூப்பி வணங்கினான் குகன்.
சொன்னதுபோலவே மறுநாள் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட படகு ஒன்றினை கங்கைக்கரையில் கொண்டு வந்து நிறுத்தினான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar