Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஐந்தாவது சகோதரன்
 
பக்தி கதைகள்
ஐந்தாவது சகோதரன்


குகன் பெருமகிழ்ச்சி அடைந்தான். அவன் நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்தது. எப்பேர்பட்ட பாக்கியம் தனக்குக் கிடைத்தது! எந்த ஸ்ரீராமனை தரிசிக்க வேண்டும் மனதுக்குள் ஏங்கிக் கிடந்தானோ அந்த ராமன், தானே வந்து தரிசனம் கொடுத்த பேறுதான் எத்தனை பெருமையாக இருந்தது!
தரிசனம் தந்தது மட்டுமா, கொஞ்சமும் வித்தியாசம் பாராமல் நெருங்கிப் பழகிய பண்பு அவனை மெய் சிலிர்க்க வைத்தது. ஒரு மகாராஜன், பிறரிடம் எட்டியிருந்தே பழக வேண்டிய உயர் பிறவி, எத்தனை எளிமையாக, நற்பண்பாளனாக, மனதுக்கு நெருக்கமானவனாக, அப்படி நெருங்கியவனைக் கொஞ்சமும் விலக்க முடியாதவனாக, நிரந்தர விருப்பத்துக்குரியவனாக, மாறாத அன்பு செய்விக்க முற்றிலும் தகுதியானவனாக….. சந்தோஷ நெடுமூச்செறிந்தான் குகன். வேறென்ன வேண்டும்! இந்த ஜன்மம் கடைத்தேற வேறென்ன வேண்டும்!
கங்கையின் இக்கரைக்கும் அக்கரைக்கும் பயணிகளை அழைத்துச் செல்லும் குகன், அவர்கள் பாடும் ராமன் புகழைக் கேட்டுத் திளைத்திருந்தவன். தாம் நேரடியாக ராமனை தரிசித்ததாகவும், அவனுடன் பேசியதாகவும், பழகியதாகவும் சொன்ன சம்பவங்களை அப்படியே அதிசயித்தபடி கேட்டுக் கொண்டிருந்தவன் அவன். அவர்களுடைய விவரிப்பில் கற்பனை கொஞ்சம் கூடுதலாகவே இருந்தாலும், அதுவும் சுவாரஸ்யமாக இருந்ததால், அவனால், அவர்கள் சொல்வதைக் கேட்டு மகிழாமல் இருக்க முடியவில்லை. ராமனை நேரே கண்ட அவர்களுடைய பாதங்களைத் தொட்டு வணங்கவும் செய்தான் அவன். அத்தகைய மானசீக பக்தனுக்கு இப்போது நேரடி தரிசனம்!
‘கங்கையின் அக்கரைக்குக் கொண்டு சேர்க்க இயலுமா?’ என்று ராமன் கேட்டதில்தான் எத்தனை  பணிவு! அவன் காலால் இட்ட பணியைத் தலையால் நிறைவேற்றி வைக்கத் தயாராக இருக்கும் சாதாரணத் தொண்டனான என்னிடமே கோரிக்கையா! அடடா…! அதுதான் ராம குணம்!
வாழ்வியல் பெருங்கடலிலிருந்து பிறரைக் ‘கரை’ சேர்க்கும் பரம்பொருள், தன்னையே கரை சேர்க்கச் சொல்லிக் கேட்டுக் கொண்ட பாங்கை உணர்ந்து, உள்ளம் குழைந்து கண்ணீர் பெருக்கினான் குகன்.
படகில் தான் முதலில் ஏறிக்கொண்டு, பிறகு தன் கரம் நீட்டி, சீதையின் கரம் பற்றி மென்மையாக அவளைப் படகுக்குள் அமர்த்திய அதே உதவிப் பாங்கை ராமன் எல்லோரிடமும் காட்டுவதுதான் அதிசயம்.  அவ்வாறு ராமன் தன் கையைப் பிடித்ததில் சீதை முகம் சிவக்க நாணமுற்றாள் என்றாலும், தன் கணவன் தனக்கு உதவிக் கரம் நீட்டிய அந்தப் பண்பில் பெருமிதமும் கொண்டாள்.
கங்கையின் அக்கரையை அடையும் வரை, படகைச் சுற்றி சுழித்து ஓடும் ஆற்றின் தன்மையை ராமன் சீதைக்கும், லட்சுமணனுக்கும் காட்டி விளக்கியதும், அதைக் கேட்டு அவர்கள் இருவரும் பரவசப்பட்டதும் குகனை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
கங்கைக்கும்தான் எத்தனை ஆனந்தம்! தன்மீது வீசப்பட்ட துடுப்பில் ஒட்டிக்கொண்டு, அப்படியே மேலெழும் அந்தத் துடுப்பிலிருந்து சரிந்து வழிந்து நீர்த் திவலைகளாக ராமன் மீது சொரிந்து, அவனுக்கு அபிஷேகம் செய்து பெரிதும் மகிழ்ந்து கொண்டிருந்தாள் கங்கை!
ராமனின் வனவாசம் நிர்ப்பந்தமாக அவன் மீது திணிக்கப்பட்டது என்பதை லட்சுமணனின் கூற்றிலிருந்து தெரிந்து கொண்டான் குகன். முந்தின நாள் தான் ராமனை தரிசித்தபோது, அவன் அவ்வாறு கானகம் வந்ததற்கான காரணத்தை லட்சுமணன்தான் எத்தனை கோபத்துடன் விவரித்தான்! அந்தக் கோபம் அப்படியே குகனையும் தொற்றிக் கொண்டு விட்டது.
அவனும் சாதாரண மனிதரைப்போல உணர்வுகளால் அலைக்கழிக்கப்படுபவன்தான். கோபம், சந்தோஷம், வெறுப்பு, விருப்பு என்ற பலவாறான உணர்வுகளால் ஆட்கொள்ளப்படுபவன்தான். அதனால் லட்சுமணனின் குற்றச்சாட்டுகளை அந்த உணர்வு கோணத்திலேயே அணுகினான் அவன். தன் நேசத்துக்கும், பக்திக்கும் உரிய ஸ்ரீராமன், அவனுடைய சிறிய தாயார் மற்றும் அவளுடைய மகன் பரதனின் சுயநலத்துக்காக இத்தகைய பெருந்துன்பத்தை அடைய வேண்டியிருக்கிறதே என்று வருந்தினான். தனக்கு ராமன் நேரடி தரிசனம் அளித்தது ஒருவகையில் சந்தோஷம்தான் என்றாலும், தன் ஆதர்ஷ புருஷன் இப்படி வஞ்சிக்கப்பட்டதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனாலேயே இவனும் கைகேயி மற்றும் பரதன் மீது விரோதம் கொண்டான். அவர்களை பாபிகள் என்று மனசுக்குள் ஏசினான்.
அதுமட்டுமல்ல, கிடைத்தற்கரிய பாக்கியமாக, ‘உன்னோடு ஐவரானோம்’ என்று சொல்லி, தன்னையும் ராமன் தன் சகோதரனாக ஏற்றுக் கொண்ட பேற்றினை எண்ணி எண்ணி மகிழ்ந்தான். ஆகவே ராமனுக்குத் தம்பியாகிவிட்ட பிறகு, அண்ணனின் துயரத்துக்குக் காரணமானவர்கள் மீது இவன் கோபம் கொள்வதும் இயற்கைதானே!
அதுமட்டுமா, முந்தைய நாள், ராமனை தரிசிக்க வந்தபோது பக்தியின் அடையாளமாகத் தான் சமர்ப்பித்த தேனையும், மீனையும்தான் எத்தனை நாசுக்கான வார்த்தைகள் பேசி ஏற்றுக் கொண்டான் ராமன்.  ‘‘நீ மிகுந்த அன்போடு கொண்டு வந்தவை எதுவானாலும் எனக்கு ஏற்புடையதே. தேனும், மீனுமே என்றாலும், உன் அன்பின் வலிமையால் அவற்றை நான் உண்டதாகவே மகிழ்கிறேன்’’ என்று அவன் பெருந்தன்மையுடன் கூறியதை நினைத்துப் பார்த்தான். வெகுளியாக, கள்ளங்கபடமற்றவனாக, இன்னாருக்கு இன்னது அளிக்கலாம், இன்னது அளித்தலாகாது என்ற பாகுபாடு தெரியாத பாச அறியாமையால், தான் கொண்டு வந்த உணவுப் பொருட்கள் எத்தகையதாக இருந்தாலும் அவற்றை ஏற்றுக் கொண்டதாகச் சொன்ன ராமனின் அந்த உயர் குணத்துக்கு ஈடு ஏது!
நினைக்க நினைக்க உள்ளம் இனித்தது குகனுக்கு. கங்கையின் மறுகரையில் ராமனை, பிற இருவருடன் இறக்கி விட்ட பிறகு, ‘உன் இந்த சேவைக்கு நான் என்ன கைம்மாறு செய்வேனோ?’’ என்று ராமன் கேட்க, அப்படியே அவன் கால்களில் வீழ்ந்தான் குகன். ‘‘தங்களுக்குக் குற்றேவல் புரியும் கடையன் நான். எனக்கு நீங்கள் செய்ய வேண்டிய கைம்மாறு என்று ஏதேனும் இருக்க முடியுமா? அப்படியே செய்வதானால் நான் என்றென்றும் தங்களுடனேயே நிரந்தரமாகத் தங்கிவிட அருள் செய்தால் போதும்’’ என்றான் நா தழுதழுக்க.
அவனுடைய தோளைத் தொட்டு ஆறுதல் படுத்தினான் ராமன். ‘‘இதோ, என் இளவல் லட்சுமணன் இருக்கிறான். வனவாச காலம் முடிய மட்டும் எனக்கு உறுதுணையாக இருக்கவென்றே என்னுடன் புறப்பட்டு வந்திருக்கிறான். இவனிருக்க வேறு பாதுகாப்பு எனக்கு எதற்கு?’’ என்று கேட்டபோது குகனின் முகம் லேசாக வாடியது.
தொடர்ந்து, ‘‘சித்திரகூடத்திற்குப் போகும் வழி என்ன என்பதை எனக்குத் தெரிவிப்பாயாக’’ என்று ராமன் கேட்டபோது, இதுதான் வாய்ப்பு என்ற சந்தோஷத்தில், ‘‘இதற்காகத்தான் சொல்கிறேன், சித்திரகூடத்திற்குப் போகும் வழியையும் அதிலிருந்து பிரியும் பல கிளை வழிகளையும் நான் துல்லியமாக அறிவேன். எந்தத் துன்பமுமில்லாமல், எந்த சிரமமும் அடையாமல் நான் தங்களை அழைத்துச் செல்கிறேன், இதற்காவது அனுமதி தாருங்கள்’’ என்று கேட்டான்.
ராமன் மெல்லச் சிரித்தான். ‘‘நான் உன்னை மறுக்கவில்லை. ஒதுக்கவும் இல்லை. உனக்குரிய கடமையினை உணர்த்தவே அவ்வாறு சொன்னேன். ஆமாம், நீ உன் குழுவினருக்குத் தலைவன். அவர்களை நன்னெறிப்படுத்தி, அவர்களுடைய வாழ்க்கையைச் செழுமைபடுத்த வேண்டிய பொறுப்பில் இருக்கிறாய். என்னுடன் வந்தாயானால் அந்தக் கடமையிலிருந்து தவற வேண்டியிருக்கும். ஆகவே எனக்கு வழி மட்டும் சொல், போதும். இதோ லட்சுமணனும் அதைச் சரியாகக் கேட்டுக் கொள்ள எங்கள் பயணத்தில் எந்த பிரச்னையும் இருக்காது, நீ வருத்தப்படாதே…’’ என்று அன்புடன் சொன்னான்.
அதோடு, ‘‘இதேபோலதான் என் தம்பி பரதன் அயோத்தியில் மக்களை நேர்ப்படுத்தி ஆட்சி செய்து கொண்டிருக்கிறான். நீயும் என் தம்பிதான், அல்லவா? ஆகவே நீயும் அவனைப் போல உன் குடிமக்களைப் பேணிக் காத்து வா’’
ராமனின் சொற்களால் குகன் சமாதானமடைந்தாலும், தன்னை பரதனுடன் ஒப்பிட்டதை ஏற்க இயலாதவனாக இருந்தான். ராமனுக்கு துரோகம் செய்தவன் எப்படி அவனுக்கு நல்ல தம்பியாகத் திகழ முடியும்?
இதையெல்லாம் சிந்தித்தபடி படகுத் துறையில் வீற்றிருந்த குகன் வெகு தொலைவில் பெரிய புழுதிப் படலம் உருவாகித் தன் இருப்பிடம் நோக்கி வருவதைக் கண்டான். அதற்குள் அவனுடைய பணியாளன் ஒருவன் ஓடோடி வந்து, ‘‘ஐயனே, ராமனின் தம்பி பரதன், பெரும்படை திரட்டிக் கொண்டு வருகிறானாம்’’ என்று தகவல் தெரிவித்தான்.
பளிச்சென்று கோபம் கொப்பளித்தது குகனுக்கு. அண்ணனைக் காட்டுக்கு விரட்டியது மட்டுமல்லாமல், பதினான்கு ஆண்டுகள் கழித்து வந்து அரசு உரிமை கோரிவிடுவானோ என்ற பயத்தில் இங்கு வந்து அவனைக் கொல்லவும் துணிந்து விட்டானே என்று நினைத்து பரதன் மீது கடுங்கோபம் கொண்டான்.
உடனே இவனை எதிர்த்துப் போரிட்டு விரட்டி விட்டாலோ அல்லது அழித்தாலோதான் நம் ராமன் பாதுகாப்பாக இருப்பார் என்று கருதிக் கொண்டு தன் படைகளைத் திரட்ட ஆரம்பித்தான்.
(தொடரும்)  


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar