Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நடிகையின் தவிப்பு
 
பக்தி கதைகள்
நடிகையின் தவிப்பு


இன்னும் சில நிமிடங்கள் விமானம் சென்னையில் தரையிறங்கப் போவதாக அறிவிப்பு வந்தது. நண்பரின் வற்புறுத்தலால்தான் இந்தத் திடீர் சென்னை பயணத்தை மேற்கொண்டேன்.
ஒரு பிரபல நடிகை தற்கொலை செய்ய முயன்றாளாம். எப்படியோ போராடி அவளைக் காப்பாற்றி விட்டார்கள். நடிகை மிகவும் துவண்டு போய் இருக்கிறாள். அவளைச் சேர்ந்தவர்கள் அவளை அம்போ என்று விட்டுவிட்டார்கள். மீண்டும் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்வாளோ என்று பயப்படுவதாகச் சொன்னார்கள்..
அது சரி இதில் நான் எங்கே வந்தேன்?
“பச்சைப்புடவைக்காரியப் பத்தி நீங்க எழுதறத படிச்சிருக்காங்களாம். உங்களை பாத்தா ஆறுதல் கிடைக்குமேன்னு...”
திடீரென்று தாகம் எடுத்தது. தரையிறங்கும் நேரம் என்பதால் விமானப் பணிப்பெண் யாருமில்லை. என் முன்னால் ஒரு தண்ணீர்க் கோப்பை நீண்டது.  மிதமான சூட்டில் வெந்நீர். எனக்குத் தண்ணீர் வேண்டுமென எப்படி தெரியும்?
“மகனின் தேவை தாய்க்குத் தெரியாதா என்ன?”
“நான் எப்படி நடிகைக்கு…’’
“ மனதை அன்பால் நிரப்பிக் கொண்டு நடிகையின் கையைப் பற்றிக்கொள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்..”
நண்பரும் மருத்துவரும் எனக்காக மருத்துவமனை வாசலிலேயே காத்திருந்தார்கள். காவல் கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்தன. ஒரு காவல் துறை அதிகாரி என்னைப் பற்றி விசாரித்துத் தெரிந்துகொண்ட பிறகுதான் என்னை உள்ளே போகவிட்டார்.
கவர்ச்சிப் புயலாகத் தமிழகத்தை கலக்கிய நடிகை பச்சை நிற ஆஸ்பத்திரி கவுனில் கிழிந்த நாராகப் படுக்கையில் கிடந்தாள். முதத்தில் அப்படியொரு சோகம். இவளது அழகெல்லாம் எங்கே போயிற்று?
நடிகையின் கட்டிலுக்கு மேலே இருந்த பெரிய படத்திலிருந்தபடி பச்சைப்புடவைக்காரி என்னைப் பார்த்து புன்னகைப்பது போல் தோன்றியது.
நான் யாரென்று தெரிந்தவுடன் ‘மீனாட்சி’ என்று அலறினாள் நடிகை. நண்பரும் மருத்துவரும் வெளியேறி விட்டார்கள். நடிகையின் கட்டிலுக்கு அருகில் அமர்ந்தபடி அவளுடைய கையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டேன்.
“எல்லாம் முடிஞ்சி போச்சு சார். எனக்கு ஈமச்சடங்கு செய்ய வேண்டியதுதான் பாக்கி. என்னோட சொத்து, அழகு, கவர்ச்சி, என்னோட மார்க்கெட், என்னுடைய இமேஜ், எல்லாம் தேஞ்சி தரமட்டமாயிருச்சி.”
என்ன ஆயிற்று?
“பத்து வருஷமா ராத்திரி பகல் பாக்காம நடிச்சேன். ஒரு நடிகையா இருக்க செய்யவேண்டியது எல்லாம் செஞ்சேன். அம்பது கோடிக்குச் சொத்து சேர்த்தேன் சார். எங்கம்மாவும் என் காதலனும் சதி செஞ்சி மொத்தச் சொத்தையும் பறிச்சிக்கிட்டாங்க.”
அப்புறம் எப்படி வாழ்வது?
“நான் குடியிருக்கற வீடு, பேங்க்ல அம்பது லட்ச ரூபாய் பணம், நுாறு பவுன் நகை, ஒரு காரு. இதுதான் மிச்சம்.”
அதை வைத்துக்கொண்டே ராஜ வாழ்க்கை வாழலாமே!
“வாழலாம். ஆனா எனக்கு ப்ரெஸ்ட் கேன்சர். ரெண்டு மார்பகத்தையும் எடுக்கப் போறாங்க. இனிமே நடிக்கவும் முடியாது. கல்யாணமும் நடக்காது.
"எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கணும் சார்? எனக்குப் போட்டியா இருக்கற ஷீலா, ஸ்ரத்தா எல்லாரும் கல்லுக்குண்டு மாதிரி நல்லா இருக்கும்போது எனக்கு மட்டும் ஏன் கேன்சர் வரணும்? என் சொத்து மட்டும் ஏன் பறி போகணும்?”
"பெரிய நடிகையாகணுங்கற ஆசையால ஆயிரக்கணக்கான பொம்பளைங்க சென்னைக்கு வராங்க. முக்காவாசிப் பேரு உலகத்தோட மிகப் பழமையான தொழில்ல விழுந்துடறாங்க. கால்வாசிப்பேரு ஏதோ சின்ன வேஷத்துல நடிச்சி வயித்தக் கழுவிக்கிட்டு இருக்காங்க. லட்சத்துல ஒருத்தி, கோடில ஒருத்தி தான் உங்கள மாதிரி முன்னணி நடிகையாகிக்  கோடிக் கணக்குல சம்பாதிக்கறாங்க. நீங்க பெரிய நடிகையானவுடன ‘எல்லாரும் கஷ்டப்படும்போது நான் மட்டும் எப்படி பெரிய நடிகையானேன்னு என்னிக்காவது பச்சைப்புடவைக்காரிகிட்ட கேட்டிருக்கீங்களா?”
“சொத்தும் போய், மார்பகங்களும் போய்.. முப்பது வயசுல இதெல்லாம் நடக்கறது கொடுமையான தண்டனை, சார்.”
"இத ஏன் தண்டனையாப் பாக்கறீங்க? நீங்கவீட்டுல பொம்மைகள வச்சி வெளையாடிக்கிட்டு இருந்தீங்க. உங்களுக்குப் பள்ளிக்கூடம் போகவேண்டிய வயசானவுடன உங்கம்மா அந்தப் பொம்மைகளப் பிடுங்கிவச்சிட்டு உங்களப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிச்சிட்டாங்க. என்ன ஏம்மா இப்படித் தண்டிக்கறீங்கன்னு அம்மாவக் கேப்பீங்களா? பொம்மையோட வெளையாடற வயசு முடிஞ்சிருச்சி. இது பள்ளிக்கூடம் போகவேண்டிய வயசு
"எவ்வளவு நாளைக்குத்தான் நடிகையாகவே இருக்கப் போறீங்க? எவ்வளவு நாளைக்குத்தான் கவர்ச்சிய மூலதனமா வச்சித் தொழில் பண்ணப் போறீங்க? அர்த்தமுள்ள மனித உறவுகளத் தேடிக்கிட்டு பண்பா, பக்குவமா எப்போ வாழப்போறீங்க?”
“வாழணும்னு நெனச்சாலும் கையில காசு இல்லையே.”
“உங்க வீட்ட வாடகைக்கு விட்டா மாசம் ரெண்டு, மூணு லட்ச ரூபாய் வரும். முப்பதாயிரம் ரூபாய் வாடகையில ஒரு சாதாரண ப்ளாட்டுக்குப் போயிருங்க. கெட்ட பழக்கங்கள், கெட்ட சகாவாசம் எல்லாத்தையும் விட்ருங்க.”
“துணையில்லாத தனிமரமாயிட்டேனே!”
“இதுவரைக்கும் அம்மா துணை, காதலன் துணை, தயாரிப்பாளர் துணை,, பைனான்சியர் துணைன்னு தப்பான துணையத் தேடிக் கிட்டிருந்தீங்க. பச்சைப்புடவைக்காரியே துணைன்னு இப்போவாவது புரிஞ்சிக்கங்க. துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் அந்த மீனாட்சிதாம்மா. அவளே உங்களுக்கு ஒரு அர்த்தமுள்ள உறவையும் நல்ல வாழ்க்கையும் கொடுப்பாம்மா. என்ன நம்புங்க”
“மார்க்கெட் இல்லாத ஒரு நடிகைக்கு, புத்து நோய்க்குத் தன் மார்பகங்கள பலி கொடுத்த ஒரு ஒரு சாதாரணப் பொண்ண யார் சார் கல்யாணம் செஞ்சிப்பாங்க?”
“சரியான சமயத்துல சரியான ஆளைப் பச்சைப்புடவைக்காரி அனுப்பி வைப்பாம்மா. குழந்தைகூடப் பெத்துக்கலாம். டாக்டர்கிட்ட அதப் பத்திக் கேளுங்க.
ஒரு நர்ஸ் வேகமாக அறைக்குள் நுழைந்தாள்
“பெரிய டாக்டர் வரப் போறாரு. கெளம்புங்க.”
நடிகையின் தலையில் கைவைத்து ஆசி வழங்கிவிட்டு அவளிடமிருந்து விடைபெற்றேன்.
அறைக்கு வெளியே ஆளரவமே இல்லை. அந்த நர்ஸ் சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்தாள்.
“பெரிய டாக்டர் வரப்போறாருன்னு சொன்னீங்க?”
“என்னைவிட பெரிய மருத்துவரை உனக்குக் தெரியுமா? நான் மகா மருத்துவச்சியடா.”
அன்னையை விழுந்து வணங்கினேன்.
“அவளுக்கு வேண்டிய ஆறுதலைக் கொடுத்து நம்பிக்கை ஊட்டிவிட்டாய். இனிமேல் தற்கொலைக்கு முயற்சி செய்ய மாட்டாள். நல்லபடியாக வாழ்ந்து உரிய நேரத்தில் என்னிடம் ஒன்றி விடுவாள் உனக்கு என்ன வேண்டுமோ கேள். கொடுத்துவிட்டுப் போகிறேன்.”
“உணர்ச்சி வேகத்தில் நடிகையிடம் உரிய துணை நிச்சயம் கிடைக்கும் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டேன், தாயே! அர்த்தமுள்ள உறவுக்காக ஏங்கும் அவள் முகம் தான் என்னை அப்படிப் பேச வைத்துவிட்டது. ஒருவேளை அவளுக்குத் துணை கிடைக்காமல் போய்விட்டால்...’’
அன்னை சிரித்தாள்.
“கவலையே படாதே. அவளைத் தங்கத் தட்டில் வைத்து தாங்கும் ஒரு அற்புதமான கணவன் கிடைக்கப் போகிறான். இவள் துணை நடிகையாக இருந்தபோது மாறன் என்ற கவிஞன் இவள் மீது காதல் கொண்டான். இவளும் சம்மதித்தாள். திருமணம் நடக்க ஒரு மாதம் இருக்கும்போது இருவரின் வாழ்க்கையும் தலைகீழாக மாறிவிட்டது. இவள் பெரிய நடிகையாகி கோடிக்கணக்கில் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டாள். அவன் திரையுலகத்தை விட்டு வெளியேறி எளிமையாக வாழ்கிறான். இவள் மேல் கொண்ட காதலை அவன் இன்னும் மறக்கவில்லை. அவன் இவளைத் தேடி வருவான்.. நடிகைக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்கும். அவளை நான் பார்த்துக்கொள்கிறேன். உனக்கு என்ன வேண்டுமோ கேள்.”
“அந்த நடிகையைப் பத்து மாதம் சுமந்து பெற்ற தாயே கைவிட்டு விட்டாள். காதலன் என்ற போர்வையில் வந்த மிருகமும் துரோகம் செய்து விட்டது. ஆனால் நீங்கள் அவளைக் காப்பாற்றி விட்டீர்கள். அவளுக்கு வேண்டிய வழிகாட்டுதலை என் மூலம் தந்து,  ஒரு அர்த்தமுள்ள துணையும் தந்து வாழ வைத்து விட்டீர்கள். பால் நினைந்துாட்டும் தாயினும் சாலப்பரிந்து அன்பு காட்ட நீங்கள் இருக்கும் போது எனக்கு வேறு எதுவும் வேண்டாம், தாயே” கலகலவென சிரித்தபடி காற்றில் கரைந்தாள் கனகாம்பிகை.  


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar