Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அணைத்துக் காத்த அன்பு
 
பக்தி கதைகள்
அணைத்துக் காத்த அன்பு


“நான் சுமதி. என் கணவர் குமார் ஒரு இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர். பெரிய கார்ப்பரேட் ஆஸ்பத்திரில வேலை பாக்கறாரு. போன வாரம் நான் சென்னையில ஒரு மகானைச் சந்திச்சேன்.  ‘உன் புருஷனுக்கு இன்னும் ரெண்டு மாசம்தாம்மா ஆயுசு இருக்குன்னு’  குண்டத் தூக்கிப் போட்டாருங்க’’
உடைந்துபோய் அழத் தொடங்கிய சுமதிக்கு 45 வயதிருக்கும். கசங்கிய ஆடைகள். கலங்கிய கண்கள்.
“மகான் சொன்னதை உங்க கணவர்கிட்ட சொல்லிட்டீங்களா?”
“அந்த அதிர்ச்சிய அவராலத் தாங்கமுடியுமான்னு தெரியல. இப்போதான் அவருக்கு நல்ல பேரு, புகழ், சம்பாத்தியம் எல்லாம் வந்திருக்கு. அந்த ஆஸ்பத்திரியோட தலைவராகலாம்னு கூடப் பேசிக்கறாங்க. அவர்கூட வேல பாக்கற டாக்டர் ராஜேஷுக்கும் அவருக்கும்தான் போட்டி. இந்த சமயத்துல ஏதாவது ஆச்சின்னா’’
“குழந்தைங்க?”
“ஒரே பையன். மெடிக்கல் மூணாவது வருஷம் படிச்சிக்கிட்டு இருக்கான். ஏதாவது நல்ல வார்த்தை சொல்லுங்கய்யா”
“விதி முடிஞ்சி போச்சின்னா நாம என்னம்மா செய்ய முடியும்?”
“இப்படி விட்டேத்தியாப் பேசினா என்னால தாங்க முடியாதுய்யா”
விரக்தியாகச் சிரித்தபடி முன்னால் இருந்த பச்சைப்புடவைக்காரியின் படத்தைப் பார்த்தேன். அவளுடைய புன்னகையில் நம்பிக்கையின் ஒளி தெரிந்தது.
“எவ்வளவு காசு வேணும்னாலும் கொடுக்கத் தயாரா இருக்கேங்கய்யா”
“இது பணத்தால செய்யற பரிகாரம் இல்லம்மா. மனசால செய்யவேண்டிய பரிகாரம்’’
“எதுவா இருந்தாலும் சொல்லுங்கய்யா. நிச்சயமா செஞ்சிடறேன்”
“மனசுல அன்பு குறையும்போதுதான் நமக்குக் கஷ்டம் வருதுன்னு பச்சைப்புடவைக்காரி படிச்சிப் படிச்சிச் சொல்லியிருக்கா. அன்பு அதிகமானா கஷ்டம் தன்னப்போலக் குறைஞ்சிரும்ணும் சொல்லியிருக்கா. இத மனசுல நல்லா வாங்கிக்கங்க. சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது அன்ப அதிகமா காமிங்க. உங்க கணவர் உயிருக்கு வரப்போற ஆபத்து விலகிப் போக நிறைய வாய்ப்பிருக்கு”
“அப்பக்கூட உறுதியாச் சொல்லாம விட்டேத்தியாப் பேசறீங்களேய்யா? அதான் பயமா இருக்கு”
“உறுதியாப் பேசறதும் உத்தரவாதம் கொடுக்கறதும் உமா மகேஸ்வரியால மட்டும்தாம்மா முடியும். நம்மால செய்ய முடிஞ்சதெல்லாம் பிரார்த்தனை மட்டும்தான்”
“என்னன்னு பிரார்த்தனை பண்றது?”
“அல்லல்படுவோர் நெஞ்சமெல்லாம் அன்பால் என்றும் நிறையட்டும்” னு பிரார்த்தனை பண்ணுங்க. எல்லாத்தயும் பச்சைப்புடவைக்காரிகிட்ட விட்ருங்க’’
அன்று மாலையில் பூட்டியிருந்த சொக்கநாதர் கோயிலின் கம்பிகளின் வழியே பச்சைப்புடவைக்காரியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது முதுகில் சுளீர் என அடி விழுந்தது. திடுக்கிட்டுத் திரும்பினேன்.
“தள்ளி நில்லுய்யா. மத்தவங்க பாக்க வேண்டாம்?”
என்னை அடித்த பெண்ணைப் பாதாதி கேசம் பார்த்தேன். உயர்ந்த உருவம். அழகான முகம். திருத்தமான கருப்பு. கண்களில் அதீதக் கருணை. கூடவே கொஞ்சம் குறும்பு. அவள் காலில் விழுந்தேன்.
“உங்களைப் பார்க்காமல் கண்கள் பூத்துப்போய்விட்டன தாயே”
“அந்த மருத்துவரின் மனைவிக்காக நீ சிந்திய கண்ணீர்தான் என்னை வரவழைத்தது”
“தாயே’’
“அந்த மகான் சொன்னது உண்மைதான்”
“ஐயையோ”
“அன்பைக் கூட்டினால் துன்பம் போய்விடும் என்று சரியான வழியைக் காட்டிவிட்டாயே! இனி அவர்கள் பாடு’’
அன்னை மறைந்துவிட்டாள்.
அன்றிலிருந்து தினமும் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு மாலை சொக்கநாதர் கோவிலுக்கு நடைப்பயணமாக வந்து  பச்சைப்புடவைக்காரியைப் பார்த்து கண்ணீர் சிந்திகொண்டிருந்தேன்.
நான்காம் நாள். கோயில் வாசலில் இருந்த பூக்காரி என்னைப் பார்த்து சிரித்தாள்.
“முதலில் இதைச் சாப்பிடு. எல்லாம் நல்ல செய்திதான்”
அவளை இனம் கண்டு வணங்கினேன். அவளே கொடுத்த பிரசாதத்தை பவ்யமாக வாங்கி வாயில் போட்டுகொண்டேன். சுக்கு வெல்லம் சுத்த அமிர்தமாக இனித்தது.
“அங்கே நடப்பதைப் பார்”
அன்று காலை சுமதி நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தாள். அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண் இன்னும் வரவில்லை. கோபத்தோடு அவளை அலைபேசியில் அழைத்தாள் சுமதி. போனை எடுத்ததும் அலறினாள் அந்தப் பெண்.“முதலுக்கே மோசம் வந்திருச்சிங்கம்மா. வீட்டுக்காரர் நெஞ்சு வலின்னு சொன்னாரு. அஜீரணம்னு நெனச்சி பக்கத்துல இருக்கற  ஆஸ்பத்திரிக்குக் கூட்டியாந்தேன். ஹார்ட் அட்டாக் வந்திருச்சாம். உடனே எதாவது பண்ணனுமாம். இங்க சரியான டாக்டர் இல்லங்கம்மா. பிரைவேட் ஆஸ்பத்திரிக்குப் போனா லட்சக்கணக்குல கேப்பாங்களேம்மா? ஒண்ணும் செய்யாட்டி இன்னும் ஒரு மணிநேரத்துல எல்லாம் முடிஞ்சிருங்கறாங்கம்மா.”
திடீரென சுமதிக்கு ஒரு உத்வேகம் வந்தது.
“நான் ஏற்பாடு செய்யறேன், லட்சுமி”
உடனே தன் கணவருக்குப் போன் செய்தாள் சுமதி. அடுத்த சில நிமிடங்களில் லட்சுமியின் கணவனைத் தன் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்தார் சுமதியின் கணவர்.
அவரே சிகிச்சையும் செய்தார். லட்சுமியின் கணவன் பிழைத்துக்கொண்டான்.
சுமதியை அழைத்தார் குமார்.
“எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருச்சி. எனக்கு எந்த சார்ஜும் வேண்டாம்னு சொல்லிட்டேன். ஆஸ்பத்திரிக்குக் கட்ட வேண்டிய பணம், இசிஜி, மருந்து, லேப் எல்லாம் ஒன்றரை லட்சம் வருது. எப்படிக் கட்டப்போறாங்க?”
“அடுத்த வாரம் வர என் பிறந்த நாளுக்கு அஞ்சு பவுன் சங்கிலி வாங்கித்தரேன்னு சொன்னீங்கல்ல?”
“ஆமா. அதுக்கு என்ன இப்போ?”
“எங்கிட்ட நகை நட்டு நிறைய இருக்குங்க. எனக்கு சங்கிலி வேண்டாங்க. அதுக்குப் பதிலா அந்தாளோட ஆஸ்பத்திரி செலவ நாம ஏத்துக்கலாமே!”
 “உன் நல்ல மனசுக்கு ஒரு குறையும் வராதுடி.”
அன்று இரவு, குமார் வீட்டில் உணவருந்திக்கொண்டிருந்த போது திடீரென நெஞ்சில் ஒரு சுருக் வலி. அது அதிகமாகிக் கொண்டே போனது. சுமதி அலறினாள். உடனே ஆம்புலன்சை வரவழைத்தாள். குமாருக்கு மாரடைப்பு வந்தது என்பதை உறுதி செய்தார்கள். இதயத்தில் வால்வுகளை மாற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அது ஒரு சிக்கலான அறுவை சிகிச்சை. அதைச் செய்யும் பொறுப்பு அதே மருத்துவமனையில் இருக்கும் இன்னொரு இதய நோய் நிபுணரான ராஜேஷிடம் விடப்பட்டது.
“ஏங்க ராஜேஷ் ஒழுங்காப் பண்ணுவாரா? உங்களோட தலைவர் பதவிக்குப் போட்டி போடறவராச்சே”
“தொழில் வேற. நட்பு வேற. ராஜேஷ் நல்லவன். வால்வ் ரீப்லேஸ்மெண்ட் சர்ஜரில கில்லாடி”
சுமதியின் உறுத்தல் போகவில்லை.
அறுவை சிகிச்சை முடிந்து தையல் போட்டுவிட்டு ராஜேஷ் சென்றதும் நர்ஸ் சாரதா கீழே விழுந்திருந்த தையல் நுாலைப் பார்த்து திடுக்கிட்டாள்.  
அதை எடுத்துக்கொண்டு மருத்துவமனையின் தலைவரிடம் ஓடினாள்.
“வால்வ் மாற்ற அறுவை சிகிச்சைக்கு ரத்தத்துல கரைஞ்சிபோர சூச்சர்ஸ் போடக்கூடாதுல்ல? டாக்டர் ராஜேஷ் அதத்தான் போட்டிருக்காரு. இப்போ எல்லாம் சரியா இருக்கும். இன்னும் பத்து நாள்ள தையல் நுால்  கரைஞ்சி போச்சின்னா பேஷண்ட்டுக்கு ஹார்ட் அட்டாக் வரும். அதுல பிழைக்கறது கஷ்டம் இல்லையா, டாக்டர்?”
“என்னம்மா சொல்ற?”
“டாக்டர் ராஜேஷ் போட்ட தையல் நுால் இதோ”
அதைப் பார்த்ததும் துறைத்தலைவர் திடுக்கிட்டார். குமார் மீண்டும் தியேட்டருக்குள் கொண்டு செல்லப்பட்டார். ஏற்கனவே போட்டப்பட்ட தையலைப் பிரித்து வேறு நல்ல தையல் போட்டார்கள். குமாருக்கு இனிமேல் ஆபத்து இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.
அதன்பின் ராஜேஷை அழைத்து விசாரித்தார் தலைவர். ராஜேஷ் ராஜினாமா செய்தார். குமார் குணமடைந்ததும் மருத்துவமனையின் தலைவராக்கப்பட்டார்.
“அவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன்.உனக்கு என்னப்பா வேண்டும்?“
“இன்பம், துன்பம் எது வந்தாலும் அன்புநிலை மாறாத மனம் வேண்டும் தாயே!”
“அன்பு இருந்தால் துன்பம் எப்படி வரும்?”
“சரியாகச் சொன்னீர்கள். அன்பு என்றால் நீங்கள்தானே! நீங்கள் இருக்கும்போது துன்பம் எப்படி வரும்?”
அன்னை சிரித்தபடி மறைந்தாள்.
.............


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar