Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » என் நோக்கில் ஏன் சிந்திக்கவில்லை?
 
பக்தி கதைகள்
என் நோக்கில் ஏன் சிந்திக்கவில்லை?


ராமன், சீதை, லட்சுமணனை தன் படகில் ஏற்றிக்கொண்டு கங்கையை அப்போது குகன் கடந்த வேகத்தைவிட இப்போது பரதன் முதலானவரை அழைத்துச் செல்லும் வேகம் வெகுவாக அதிகரித்திருந்தது. ‘ஸ்வதிகம்‘ என்ற பெயருடைய தன் படகில் அவன் லாவகமாகத் துடுப்பு போடும் வேகம் பிரமிக்க வைத்தது.
அயோத்தி ராஜனான ராமன் ஆரண்ய ராஜனாகி விட்டானே என்ற வருத்தத்தை அப்போது அவன் மனம் கொண்டிருந்ததால், அந்தப் பயணத்தில் அதிக வேகம் இல்லை. ஆனால் இப்போது, அந்த ராமனை அயோத்திக்கு அழைத்துச் சென்று சிம்மாசனத்தில் அமர்த்த வேண்டும் என்ற தீர்மானத்தில் பரதன் வந்திருப்பதால், அது நிறைவேற வேண்டுமே என்ற ஆவலில், உருவான படுவேகம்!
குகனும் அவன் குழுவினரும் பரதனையும், அவனைச் சார்ந்தவர்களையும் கங்கையின் மறுகரைக்கு சடுதியில் கொண்டு சேர்த்தார்கள்.
கங்கைக்கரை நகரமான பிரயாகைக்கு வந்த பரதக் குழுவினரை அன்போடு வரவேற்றார் பரத்வாஜர். குறிப்பாக பரதனைப் பார்த்து வெகுவாகத் திகைத்தார். ‘‘அயோத்தி இளவலாக ராஜ பீதாம்பரத்துடன் வரவேண்டிய நீ இப்படி மரவுரி ஆடையில் வந்திருக்கிறாயே, பரதா?’’ என்று நெகிழ்ச்சியுடன் கேட்டார்.
‘‘தங்களது பேச்சு என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்குகிறது, முனிபுங்கவரே’’ என்று புகார் தெரிவிக்கும் தொனியில் சொன்னான் பரதன். ‘‘யாகங்கள் பல புரிந்து புண்ணியம் தேடியிருக்கும் தாங்களும் ஒரு சாதாரண மனிதராக என்னை எடை போட்டது எனக்கு வருத்தத்தையே அளிக்கிறது. மூத்தவன் இருக்க இளையவன் அரியணை ஏறும் அநாகரிகம் நம் பாரம்பரியத்திலேயே கிடையாதே! நான் மட்டும் எப்படி அதற்கு விதி விலக்காவேன்? ஏதோ என் தாயார் கேட்டுவிட்டார் என்பதற்காக, அதற்கு என் தந்தையாரும் சம்மதித்து விட்டார் என்பதற்காக நானும் உடன்படுவேன் என்று நீங்களும் எப்படி எதிர்பார்க்கலாம்?’’ என்று தன் கோபத்தை அடக்கிக் கொண்டு, மிகவும் வேதனையுடன் கேட்டான் பரதன்.
உடனே அவ்வாறு பேசியதற்காக மன்னிப்பு கோரும் பாவனையாக அவனை நெருங்கி அவன் தோளை மெல்லத் தட்டிக் கொடுத்தார்.  ‘‘உத்தம புத்திரனப்பா நீ, உன்னை எவ்வளவு பாராட்டினாலும் தகும்,‘‘ என்று பிரமித்துச் சொன்னார்.
வந்திருந்த அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. ஆனால் பரதன் மட்டும் சமைக்கப்படாத காய், கனி, கிழங்குகளை மட்டுமே எடுத்துக் கொண்டான். விரைவாகச் சென்று ராமனைக் கண்டு, சமாதானப்படுத்தி அயோத்திக்கு அழைத்துச் சென்றுவிடும் அவசரத்தில் இருந்தான் அவன்.
பிறகு பரத்வாஜர் விளக்கிச் சொன்ன வழியில் பரதனும் மற்றவர்களும் பயணித்து சித்ரகூடத்தை அடைந்தார்கள்.
வெகு தொலைவில் பெரும்படை ஒன்று தம் இருப்பிடம் நோக்கி வருவதைக் கண்ட லட்சுமணன், உடனே அது பரதன் தலைமையில் வரும் படைதான் என்பதை ஊகித்தான். பெருங்கோபம் கொண்டான். தன் வில், அம்புகள் முதலான ஆயுதங்களை சேகரித்தான். அங்கும் இங்குமாக குதித்தான், ஆர்ப்பரித்தான்.
லட்சுமணனுடைய இந்தக் கோலத்தைக் கண்டு கேலியாக வியந்தான் ராமன். ‘‘லட்சுமணா, என்னாயிற்று உனக்கு? ஏன் இந்தப் பதட்டம்?‘‘ என்று கேட்டான்.
‘‘அண்ணலே, அதோ பரதன் வருகிறான். அயோத்தி படை முழுவதையும் திரட்டி வருகிறான். தவவாழ்க்கை மேற்கொண்டிருக்கும் தங்களைக் கொல்வதற்காகவே வருகிறான். பதினான்கு ஆண்டுகள் கழித்துத் தாங்கள் அயோத்திக்குத் திரும்பிவிட்டால் எங்கே தன் அரச பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என அச்சமுற்று, தங்களைத் தாக்கி அழிக்க வருகிறான்’’ மேல்மூச்சு, கீழ் மூச்சு வாங்க ஆத்திரத்துடன் பேசினான் லட்சுமணன்.
‘‘தவறு லட்சுமணா’’ ராமன் அவனை அமைதிப்படுத்தினான். ‘‘எனக்குத் தீங்கு இழைக்கப்பட்டதாகிய உணர்வு உன் மனதில் நிரந்தரமாகத் தங்கிவிட்டது. ஆகவே உனக்கு எல்லாமே எதிர்மறையாகத் தோன்றுகிறது. இதுவே யாராவது அன்னியராக இருந்தால் உன்னுடைய பய சந்தேகத்துக்கு ஓர் அர்த்தம் இருக்கும். ஆனால் நீ யாரை சந்தேகப்படுகிறாய்? உன்னுடைய இன்னொரு அண்ணனை! இத்தனை வருடம் கூடவே பழகி வந்த அண்ணனை! அதாவது நீ என் மீது கொண்ட அளவு கடந்த பாசத்தால், என் மீது உனக்குதான் பரிபூரண அக்கறை இருக்க வேண்டும் என்ற உன் சுயநலத்தால், நீ அனாவசியமாக நல்லவர்களை சந்தேகிக்கிறாய். சற்று பொறு. அமைதியாக இரு. உன் எண்ணம் எத்தனை குதர்க்கமானது, நியாயமற்றது என்பது உனக்கே புரியும்’’
ஆனால் லட்சுமணன் சுலபத்தில் அமைதியடையவில்லை. ஆரம்பத்திலேயே கைகேயி மீதும், பரதன் மீதும் தவறான அபிப்ராயத்தை அவன் உருவாக்கிக் கொண்டுவிட்டான் என்பதால் அவனால் தன்னைச் சற்றும் மாற்றிக் கொள்ள இயலவில்லை.
ஆனால் பரதனைப் பார்த்த உடனேயே அந்தக் கசடு முழுவதுமாகக் கழுவப்பட்டு அவன் மனம் துாய்மையாகிவிட்டது. ஆமாம், ராமனையும், தன்னையும் போலவே பரதனும் மரவுரி அணிந்திருந்தான்; அவன் கண்கள் நீர் பெருக்கிக் கொண்டிருந்தன. தலைக்கு மேல் கூப்பிய கரங்களை அவன் கீழே இறக்கவே இல்லை.
லட்சுமணனை ‘இப்போது என்ன சொல்கிறாய்?’ என்று கேட்பதுபோல பார்த்தான் ராமன். அந்தப் பார்வையின் அர்த்தம் உணர்ந்து வெட்கப்பட்டான் லட்சுமணன்.
ராமனைப் பார்த்துவிட்ட மகிழ்ச்சியில் பரதன் ஓடோடி வந்து அவன் பாதங்களில் வீழ்ந்தான். அப்பாதங்களைத் தன் கரங்களால் பற்றிக்கொண்டு விம்மினான். ராமன் குனிந்து தன் தம்பியைத் தொட்டு மெல்ல நிமிர்த்தினான். இருவர் கண்களும் பாசத்தைப் பரிமாறிக் கொண்டன.
‘‘ஐயனே’’ பரதன் நாத்தழுதழுக்க சொன்னான். ‘‘என்ன கொடுமை செய்துவிட்டேன், ஐயனே! தங்கள் தேஜஸ் என்ன, கம்பீரம் என்ன, அணிகலன்களுக்கே அழகு செய்யும் தங்கள் பேரழகு என்ன… இப்படி முற்றிலும் வேறான தோற்ற மாறுதலைக் கொண்டுவிட்டீர்களே! என் தாயார் கேட்டார் என்பதற்காக, அதை நம் தந்தையார் ஆமோதித்தார் என்பதற்காக கொடுமையான அந்த  உத்தரவுகளைத் தாங்கள் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டிருக்கத்தான் வேண்டுமா?’’
ராமன் அவனுடைய தோளைத் தட்டி ஆசுவாசப்படுத்த முயன்றான்.
ஆனாலும் பரதன் சமாதானமடையவில்லை. ‘‘அந்தப் பெரியவர்கள் ஏற்பாட்டிற்கு நான் சம்மதிப்பேன் என்று தாங்களும் தப்பு கணக்குப் போட்டுவிட்டீர்களே அண்ணா! எப்போது இதுபோன்ற, சம்பிரதாயத்துக்குப் புறம்பான சிந்தனை அவர்களுக்குத் தோன்றியதோ அப்போதே அவர்கள் பெரியவர்கள் என்ற தகுதியிலிருந்து தரம் தாழ்ந்து கீழோராகி விட்டார்களே அண்ணா. ஆனால் அவர்களையும் தாங்கள் அனுசரித்துப் போய்விட்டீர்கள்! அதேசமயம், என் மனவோட்டத்தில், தாங்கள்கூட சிந்திக்க முயற்சிக்கவில்லையே’’
உடனிருந்த அனைவரது கண்களிலிருந்தும் நீர் கசிந்தது.
‘‘என் தாயாருக்குத் தன் வரங்கள் நிறைவேற்றப்பட வேண்டும், தந்தையாருக்குத் தன் வாக்குறுதி காப்பாற்றப்பட வேண்டும், தங்களுக்கோ பெரியவர்கள் சொல்லுக்கு அப்படியே அடிபணியவேண்டும். ஆனால், என்னை சிந்தித்துப் பார்த்தீர்களா? உங்கள் மூவருக்குமே நான் இதற்கு உடன்படுவேனா என்ற சந்தேகமே எழவில்லை என்பது என் துர்ப்பாக்கியம்தான். என்னை இத்தனை கேவலமாகக் கருதியிருக்கிறீர்களே என்று நான் கோபப்படுவதா, வேதனைப்படுவதா அல்லது என்னையே நான் நொந்துக் கொள்வதா…?’’
குமுறிக் குமுறி அழும் பரதனை அப்போதைக்கு உணர்வு மாற்ற நினைத்த ராமன், தாயார் மூவருக்கும் தன் நமஸ்கரித்த வணக்கத்தைத் தெரிவித்தான். சீதையும், லட்சுமணனும் அதேபோலப் பணிந்தார்கள். தன் தாயார்களை சந்தேகத்தோடு பார்த்தான் ராமன். அவர்களுடைய கோலம்….
‘‘தம்பி பரதா, நம் தந்தையார் நலமாக இருக்கிறாரா?’’ என்று மிகுந்த தயக்கத்துடன் கேட்டான்.
‘‘ஆம் அண்ணா, அவர் அமரர் லோகத்தில் நலமாக இருக்கிறார்’’ என்று சற்றே கேலி கோபத்துடன் சொன்னான்.
‘‘என்ன? தந்தையார் அமரராகிவிட்டாரா? ஐயோ நான் அச்சமயம் உடனிருக்காத பாவியாகிவிட்டேனே’’ என்று கதறினான் ராமன்.
‘‘தன் மரணத்துக்குத் தானே வழி வகுத்துக் கொண்டவர் அவர். ஆமாம், தங்களை கானகத்திற்கு அனுப்பிவிட்டு அவரால் உயிர் வாழத்தான் முடியுமா?’’
நெஞ்சில் பொங்கிய துக்கம் கண்ணீராகப் பெருக்கெடுத்தது  ராமனுக்கு. சீதையும் அதிர்ச்சியால் தாக்குண்டாள்.  பதினான்கு ஆண்டுகள் கழித்து அவரை சந்திக்கப் போகிறோம் என்று ஆவலுடன் காத்திருந்தாள் அவள். என்ன ஏமாற்றம்! ஆனாலும் உடனே, கானகத்தில் வாழும் காலத்தில் அவருக்கு வருடம் தப்பாமல் நீத்தார் கடன் செலுத்த, கணவருக்கு நினைவூட்ட வேண்டும் என்று ஒரு நல்ல மருமகளாக மனசுக்குள் குறித்துக் கொண்டாள்.
தந்தை மறைவு குறித்து லட்சுமணனுக்கும் வருத்தம் இருந்தாலும், கூடவே குரூரமாக சந்தோஷமும் பட்டுக் கொண்டான். ஆமாம், ராமனை இந்நிலைக்கு ஆளாக்கியவர்தானே அவர்!
இனியும் தாமதிக்கலாகாது என்று உணர்ந்த பரதன் ராமனிடம் பேச ஆரம்பித்தான்.
(தொடரும்)


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar