Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ருக்மிணி ஆகிய நான்...
 
பக்தி கதைகள்
ருக்மிணி ஆகிய நான்...

ராதை, சத்தியபாமா, கோபிகைகள் என்று பல பெண்கள்  ஸ்ரீகிருஷ்ணர் மீது பேரன்பு வைத்திருக்கலாம். அவர்களைத் தனக்கு உகந்தவர்களாக கிருஷ்ணரும் கருதியிருக்கலாம். ஆனால் கிருஷ்ணரின் மனைவி என்பதோடு துவாரகையின் பட்டத்தரசி என்ற அந்தஸ்து எனக்கு மட்டும்தான்.  கிருஷ்ணரின் பிற காதலிகளை நான் என் சகோதரிகளாகவே எண்ணினேன். ஸ்ரீகிருஷ்ணர் அனைவருக்கும் உரியவர்தானே?
விதர்ப்ப நாட்டு மன்னன் பீஷ்மகனுக்கு ஐந்து மகன்கள். ஒரே மகள். அவள்தான் நான்.  நான் வளர்ந்து திருமண வயதை அடைந்தேன்.  அப்போதுதான் யாதவ குலத்தின் மன்னரான கிருஷ்ணரின் புகழ் என் காதுகளை எட்டியது.  அப்பப்பா, அவரது வீர தீர பராக்கிரமங்களை பற்றி விரிவாக அறிந்த என் மனம் அவரை நாடியது.  என்னுடைய தந்தைக்கும் என்னை கிருஷ்ணருக்கு மணமுடிக்கும் யோசனை இருந்தது தெரியவந்ததும் மகிழ்ந்தேன்.
ஆனால் என் மூத்த சகோதரனான ருக்மன் வேறு எண்ணம் கொண்டிருந்தார்.  சேதி நாட்டு மன்னன் சிசுபாலனுக்கு என்னை மணமுடிக்க வேண்டும் என தீர்மானித்தார்.  சிசுபாலன் தீய எண்ணம் கொண்டவன் என்பதும் கிருஷ்ணரை எதிரியாகவே கருதினான் என்பதும் எனக்கு தெரியவந்தது.  
என் குடும்பத்தினரின் விருப்பங்களையும் மீறி ருக்மன் செயல்படத் தொடங்கினார்.  சிசுபாலனை மணமுடிக்க ஏற்பாடு செய்தார்.
இந்த மாயகிருஷ்ணன் எப்படியாவது வந்து என்னை திருமணம் செய்யக் கூடாதா என மனம் துடித்தது.  ஒருவேளை அவர் மீது நான் பிரியம் கொண்டது அவருக்கு தெரியாமல் போனதா?  எப்படி இருந்தாலும் அந்தப் பிறவியில் கிருஷ்ணர் மட்டுமே என் கணவன் என முடிவு செய்தேன்.  அவருக்கு ஒரு பிராமணர் மூலம் ஓலை ஒன்றை அனுப்பினேன். என் மனம் கிருஷ்ணரை வரித்து விட்டதையும், உடனடியாக அவர் விதர்ப்ப தேசத்துக்கு வந்து என்னைத் திருமணம் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டேன்.  இந்த முயற்சியில் ருக்மன் மற்றும் சிசுபாலனின் படைகளை எதிர்கொள்ள வேண்டி வரலாம் என்பதையும் தெரிவித்தேன்.  எனக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவாகத்தின் முதல் பகுதியாக நான் என் தோழிகளோடு அம்மன் கோவிலுக்குச் சென்று பூஜை செய்ய வேண்டும்.  அந்த சமயத்தில் என்னை கிருஷ்ணன் கவர்ந்து செல்லலாம் என்றும் அப்படி நடக்காவிட்டால் நான் உயிர் துறப்பேன் என்றும் கூட அந்த கடிதத்தில் எழுதினேன்.
நாடு விழாக்கோலம் பூண்டிருந்தது.  ஆனால் என் மனதில் சூறாவளி அடித்துக் கொண்டிருந்தது.  பிள்ளை வீட்டார் எனப்படும் சிசுபாலனும் அவனது ஆட்களும் வந்து சேர்ந்து விட்டனர்.
நான் என் தோழிகளுடன் அம்மன் கோயிலுக்குப் புறப்பட்டேன்.  கூட ஒரு படைப் பிரிவும் என்னோடு வந்தது.  எனது பாதுகாப்புக்காம். உண்மையில் அது கிருஷ்ணனை நான் சேர தடைக்கல் அல்லவா?
பூஜையில் அம்மனை மனம் உருகி வழிபட்டேன்.  என் மனதுக்குப் பிடித்த மணாளனே வாய்க்க வேண்டும் என வேண்டிக்கொண்டேன்.  என் ஓலை கிடைத்ததும் இந்நேரம் கிருஷ்ணர் வந்திருக்க வேண்டுமே.  என் விருப்பத்தை அவர் மதிக்கவில்லையா?
இதயம் படபடக்க கோயிலை விட்டு வெளியேறினேன்.  அங்கே புன்னகையுடன் கிருஷ்ணர் நின்றிருந்தார்.  அங்கிருந்த படைகளை சிதறடித்து என்னை;j தன்னுடன் துவாரகைக்கு அழைத்துச் சென்றார்.  அங்கே எனது விவாகம் நடைபெற்றது.
என் அண்ணன் ருக்மன் இதுகுறித்து கோபம் கொண்டான்.  சிசுபாலனுடன் சேர்ந்து கொண்டு என்னையும் கிருஷ்ணரையும்  நிந்தித்தான்.  
காலம் கடந்தது.  பாரதப் போர் உருவாகும் நிலை தோன்றியது.  ஒருவழியாக எங்களுடன் சமாதனம் செய்து கொள்ளலாம் என எண்ணினார் என் அண்ணன்.  அர்ஜுனனை அணுகி, தனது சேனையை பாண்டவர்களுக்கு சாதகமாகப் போரில் இறக்குவதாகக் கூறினார்.  கிருஷ்ணரைத் தொடர்ந்து நிந்தித்து வந்த என் அண்ணனை அர்ஜுனன் மன்னிக்கத் தயாரில்லை. எனவே அந்த உதவியை ஏற்க மறுத்தார்.  கடும் கோபம் அடைந்த அண்ணன், மன்னன் துரியோதனனை அணுகி அவன் தரப்புக்கு தன் படையை அனுப்பும் யோசனையை முன்வைத்தார். முதலில் அவர் பாண்டவர்களை அணுகியதால் துரியோதனனும் கோபம்கொண்டு அவரது படையை ஏற்க மறுத்தார். போர் களத்திற்கு வராத, போரில் பங்கேற்காத முக்கியமான இருவர் யார் என்றால் கிருஷ்ணரின் அண்ணன் பலராமரும், எனது அண்ணன் ருக்மனும்தான்.  
கிருஷ்ணரிடம் எனக்குள்ள பக்தியை உணர்த்தும் வகையில் ஒரு சம்பவம் நடந்தேறியது.   
என்ன காரணத்தினாலோ தானும் கிருஷ்ணரின் மனைவி என்பதில் சத்யபாமா  அகந்தை அதிகம் கொண்டாள்.  கிருஷ்ணர் என்னைவிட தன்னிடம்தான் அதிகப் பிரியம் வைத்திருக்கிறார் என இறுமாந்திருந்தாள்.
அதை உடைக்கும் வகையில் சில சம்பவங்கள் நடந்தேறின.  கூர்மாவதாரத்தில் பாற்கடலைக் கடைந்த போது பாரிஜாத மரம் வெளிப்பட்டது.  இந்திரன் அதைத் தன் நந்தவனத்தில் நட்டு வளர்த்தான். தேவலோகத்துக்கு சென்றிருந்த நாரதர் அங்கிருந்து ஒரு பாரிஜாத மலரை எடுத்துவந்து கிருஷ்ணரிடம் கொடுத்தார்.  அதை கிருஷ்ணர் என்னிடம் கொடுப்பதைப் பார்த்துவிட்டு உடனடியாக சத்தியபாமாவிடம் சென்று இதைக் கூறினார் நாரதர்.  அவர் எண்ணியது நடந்தது.  கிருஷ்ணரிடம் சத்யபாமா கோபம் கொண்டாள்.  அவளை சமாதானப்படுத்த தேவலோகத்திலிருந்து பாரிஜாத மரத்தையே கொண்டுவந்து அவளது அரண்மனைத் தோட்டத்தில் நட்டு வைத்தார்.  ஆனால் அந்த மரம் என் அரண்மனைப் பகுதிக்குள் தன் கிளைகளை வளைத்து பூக்களை உதிர்க்க தொடங்கியது.
இதனால் கோபம் கொண்ட சத்யபாமா.  நாரதரை அணுகி கிருஷ்ணரை முழுவதுமாக தன் பக்கம் ஈர்க்க என்ன செய்யலாம் எனக் கேட்டாள்.  புன்னகைத்த நாரதர் கிருஷ்ணரைப் பணயமாக வைத்து என்னுடன் ஒரு விளையாட்டில் ஈடுபடு.  அந்த விளையாட்டில் தோற்றுவிடு.  அப்போது கிருஷ்ணர் என் அடிமையாகிவிடுவார்.  அவர் எடைக்குச் சமமான தங்கத்தை கொடுத்து என்னிடமிருந்து அவரை வாங்கிக் கொள்.  அப்போது அவர் உன் சொத்து ஆகிவிடுவார்.  நீ சொல்வதை அவர் கேட்டாக வேண்டும் என்றார்.  இதை ஏற்ற சத்யபாமா விளையாட்டில் தோற்று கிருஷ்ணனை நாரதரிடம் ஒப்படைத்தாள்.
பின்னர் துலாபாரம் கொண்டுவரப்பட்டது.  ஒரு தட்டில் கிருஷ்ணர் அமர்ந்தார்.  இன்னொரு தட்டில் மேலும் மேலும் தங்கத்தை வைத்தாள் சத்யபாமா.  அவளை அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில் கிருஷ்ணர் இருந்த தட்டு கொஞ்சம் கூட மேல் எழும்பவில்லை.  உடனே நாரதர் இனி கிருஷ்ணர் என் அடிமைதான்.  நான் அவரை என்னுடன் அழைத்துச் செல்கிறேன் என்று குறும்புடன் கூற சத்யபாமா துடித்துப் போனாள்.  அவள் அகந்தை நீங்கியது.  என்னிடம் வந்து கண்ணீர் விட்டாள்.
    நான் கிருஷ்ணரை வலம் வந்து நமஸ்கரித்தேன். பக்தியுடன் மற்றொரு தட்டின் மீது ஒரு துளசி இலையை வைத்தேன்.  அந்தத் தட்டு கீழே இறங்கி இரு தட்டுகளும் சமமாயின.  சத்யபாமா உண்மையை உணர்ந்தாள்.  கிருஷ்ணர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார்.
    எனக்கும் கிருஷ்ணருக்கும் ஒன்பது மகன்கள் பிறந்தனர்.  அவர்களில் முக்கியமானவன் பிரத்யும்னன். ஒரே மகள் சாருமதி.  பிரத்யும்னன் பிறந்த பத்தே நாட்களில் அந்த குழந்தையைக் கடத்திச் சென்றான் சம்பரன் என்ற அசுரன்.  காரணம் கிருஷ்ணர் மீது அவன் கொண்டிருந்த பகை.  குழந்தையை அவன் கடலில் போட,  அவனை  ஒரு பெரிய மீன்  விழுங்கியது.  கிருஷ்ணர் அந்த மீனைக் கண்டுபிடித்து அதை வெட்டி உள்ளிருந்த என் மகனை வெளிக் கொண்டுவந்தார். அவன் வளர்ந்த பின்பு உண்மையை அறிந்து சம்பரனைக் கொன்றான்.  பிரத்யும்னன் மன்மதனின் அம்சம். ரதி தேவியின் அம்சமான மாயாவதி என்பவளை அவன் திருமணம் செய்தான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar