Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஜனகரின் தீர்ப்பு
 
பக்தி கதைகள்
ஜனகரின் தீர்ப்பு

பரதன் மிகுந்த அக்கறையுடனும், பாசத்துடனும் பேசினான். ‘‘அண்ணா, போதும் உங்களுடைய கானக வாழ்க்கை! உடனே புறப்படுங்கள். அரியணையை அலங்கரித்து எங்களுக்கும் அயோத்தி மக்களுக்கும் ராம ராஜ்யம் அருளுங்கள்’’
அதை ஏற்றுக் கொள்ளாத பாவனையாக மெல்ல சிரித்தான் ராமன். ‘‘நீ மிகுந்த உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருக்கிறாய், பரதா. சிந்திக்காமல் சொற்களை வெளியிடுகிறாய். என்னுடைய மனோபாவம் புரிந்தவன்தானே நீ’’ தான் நிர்ப்பந்திக்கப்படுவதை விரும்பாமல் கொஞ்சம் அழுத்தமாகவே பேசினான் ராமன்.
ஆனால் பரதனோ அவ்வளவு சுலபத்தில் விட்டுக் கொடுப்பவனாக இல்லை. மிகுந்த மனக்குறையுடன் முறையிட்டான். ‘‘அரசுரிமை கொடுக்கப்பட்டும் அதை நான் ஏற்கவில்லை. அவ்வாறு உத்தரவிட்ட தந்தையோ இப்போது நம்முடன் இல்லை. ஆகவே அந்த ஆணைக்கு இப்போது மதிப்பு இல்லை. நான் மட்டுமல்ல, இங்குள்ள எல்லோருமே, நம் தாயார்கள் உட்பட, அப்படித்தான் கருதுகிறோம். ஆகவே தாங்கள் நல்ல முடிவெடுக்க வேண்டும்’’ என்று மிகுந்த ஆர்வத்துடன் ராமனை நோக்கிக் கூறினான் பரதன். ‘அப்படியானால் சரி... இதோ வருகிறேன்’ என்று சொல்லி தன்னுடன் ராமன் புறப்பட்டு வந்துவிடுவான் என்று பெரிதும் எதிர்பார்த்தான் அவன்.
அவனுடைய தோளை தட்டிக் கொடுத் தான் ராமன். ‘‘உன்னுடைய பாசம் உன் விவேகத்தையும் விஞ்சுகிறது பரதா. ஆனால் நான் தந்தையாரின் ஆணையைப் பெரிதும் மதிக்கிறேன்’’
‘‘ஆனால் தந்தையார் அந்த ஆணையையும் நேரடியாகப் பிறப்பிக்கவில்லையே! தன்னுடைய சதிக்கு அவரைப் பகடைக் காயாகப் என் தாயார்தானே பயன்படுத்திக் கொண்டார்?  என் தாயார் மீதான கோபத்தில், அவருக்கு இறுதிக் கடன்களை நான் செய்யக் கூடாது என்றும் தந்தையார் ஆணையிட்டிருக்கிறார் என்றால், என்னை எந்தளவுக்கு அவர்  வெறுத்திருக்கிறார் என்பதும் புரியும். தன் இறுதிக் காலத்திலும் இப்படி என்னை வெறுத்த அவர் அமர்ந்த அந்த அரியாசனத்தில் நான் அமர்வது முறையாகுமா? அவருடைய ஆசிதான் எனக்குக் கிடைக்குமா? ஆகவே, என்றென்றும் அவருடைய அபிமானத்துக்குப் பாத்திரமான தாங்கள்தான் அவருக்கு ஒரே நேரடி வாரிசாக அயோத்தியை ஆள வேண்டும்’’ என்று கெஞ்சினான் பரதன்.
பரதன் விடமாட்டான், மேலும் தன்னை வற்புறுத்துவான் என்பதைப் புரிந்து கொண்ட ராமன், அந்தச் சூழ்நிலையில் இறுக்கத்தை தளர்த்த விரும்பினான். சீதை அந்தக் கூட்டத்தாரிடையே யாரையோ தன் கண்களால் தேடினாள். அதை கவனித்துவிட்ட ராமன், மெல்ல புன்னகைத்தபடி, ‘‘என்ன சீதா, உன்னுடைய  உறவினரெல்லாம் வந்து விட்டார்களே, என் உறவினர் வரவில்லையே என்று யோசிக்கிறாயா’’ என்று கேட்டான்.
உடனிருந்தவர்கள் அவன் சொன்னதைக் கேட்டு குழப்பமடைந்தனர். ராமன் புன்னகைத்தபடி, ‘‘ஆமாம், தன் உறவினர்களான மைத்துனர் பரதன், மாமியார்கள் எல்லோரும் வந்திருக்கிறார்களே, என்னுடைய உறவினரான என் மாமனார் ஜனகர், மாமியார் வரவில்லையே என்று பார்க்கிறாள், இல்லையா சீதா?’’ என்று நயமாகக் கேட்டான்.
அனைவரும் அந்தச் சூழ்நிலையிலும் அவனுடைய சாதுர்ய நகைச்சுவையை ரசிக்கத்தான் செய்தார்கள்.
உண்மைதான். காட்டுக்குப் போகச் சொல்லி தசரதன் ஆணையிட்டதாக, சின்ன மாமியார் கைகேயி தெரிவித்தாள். ராமனும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டு கானகம் செல்லத் தயாரானான். அப்போது தானும் உடன் செல்ல அனுமதி வாங்கி, இதோ, இளவல் லட்சுமணனும் கூட வர, சீதை கானக வாழ்க்கையைத் துவக்கியாகிவிட்டது.
ஆனாலும் அவள் மனசுக்குள் சிறு ஆதங்கம் பூக்கத்தான் செய்தது. புகுந்த வீட்டில் தனக்கு ஏற்படக் கூடிய சில கஷ்டங்களை ஒரு பெண் யாரிடம் போய் முறையிடுவாள்? தன் பெற்றோரிடம்தானே? அந்த வகையில் தன் தந்தையார் ஜனகரிடம் போய், தான் ராமனுடன் கானகம் போகப் போவதை சீதை சொல்லியிருந்தாளானால், அதை அவர் எப்படி எதிர்கொண்டிருந்திருப்பார்? தன் மகள் கானகத்தில் படக்கூடிய துன்பங்களை அவரால் சகித்துக் கொள்ள முடியுமா, போக வேண்டாம் என்று தடுத்தால் அதை ராமன் மீறவா போகிறான், மாமனார் என்பவர் தந்தைக்கு சமமான மரியாதைக் குரியவர், அவர் சொன்னால் கேட்டுக் கொள்ள மாட்டானா என்றெல்லாம் சிந்தித்தாள் அவள்.
அப்போது அது நடக்கவில்லை என்பதால், ராமன் அயோத்தி திரும்ப வேண்டும் என்று பிறருடன் சேர்ந்து வற்புறுத்த அவரும் வந்திருப்பாரோ என்ற ஏக்கத்தில்தான் அப்படி அவள் ஆவலுடன் பார்த்தாள்.
அவளுக்கும், ராமனுக்கும், ஏன் அனைவருக்கும் பதில் சொல்லும் வகையாக முன்னே வந்தார் அமைச்சர் சுமந்திரன்.
‘‘அயோத்தியில் நடந்த விஷயங்களை இப்போது நான் சொல்கிறேன்’’ என்று ஆரம்பித்தார் அவர்.
கேகய நாட்டிலிருந்து திரும்பிய பரதன் நடந்த விஷயங்களைக் கேள்விப்பட்டு வெகுண்டான். ராமன், சீதை, லட்சுமணனுடன் காட்டிற்குப் போய்விட்டதையும், தந்தையார் தசரதன் இறந்து விட்டதையும் அறிந்த அவன் கோபம் மிகக் கொண்டான். ராமன் போன்ற ஒரு பிள்ளையைக் காட்டிற்கு அனுப்ப தந்தைக்கு எப்படி மனசு வந்தது என்று எல்லோரிடமும் கேட்டுக் கேட்டு வெதும்பினான். அதற்குக் காரணம் தன் தாய்தான் என்பதை அறிந்து அவளைத் துாற்றினான். அவள் எதிர்பார்ப்பதுபோல தான் அரியணை ஏறப்போவதில்லை என்று தீர்மானமாகச் சொன்னான். அதுமட்டுமல்ல தானே கானகம் போய் ராமனிடம் பேசி அவனை அழைத்து வந்து விடுவதாக சூளுரைத்தான்.
அவனுடைய கோபம் நியாயமானதுதான் என்றாலும், காலம் கடந்துவிட்டபடியால் அந்த கோபத்துக்கு மதிப்பு இல்லாமல் போய்விட்டது. மாற்று வழியாக வேறு திட்டங்களை யோசிப்பதுதான் இப்போதைக்கு சரி என்று நாங்கள் சிந்தித்தோம். தன் பக்கத்துக்கு ஆதரவு சேர்த்துக் கொள்ள பரதன் தன் எண்ண ஓட்டத்திற்கு அனுகூலமானவர்களை நாடி உதவி கோரலாம்.
சம்பந்தி என்ற முறையில் தசரதன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க ஜனகர் வருவார். அப்போது அவரிடம் பேசி பரதனை சமாதானப்படுத்தச் சொல்லலாம் என்று நாங்கள் நினைத்தோம்.
தந்தையாரின் நல்லெண்ணத்திற்கு உரியவனாக தான் இல்லை என்ற உண்மையே பரதனைப் பெரிதும் கலங்கடித்திருந்தது. ஆகவே தசரதனைப் போலவே பிறர் எல்லோர் மனதிலும் எந்த தவறான எண்ணமும் உருவாவதற்கு முன்னால் தான் போய் ராமனை அழைத்து வந்துவிடுவதுதான் சரி என்று அவனுக்குத் தோன்றியிருக்கிறது. இந்த எண்ணத்தை வலுப்படுத்தக் கூடியவர் தன்னுடைய மாமனாரான ஜனகர்தான் என்று உறுதியாக நம்பினான் பரதன்.
எந்த சூழ்நிலையிலும் தன்னிலை தளராத ஜனகர் அயோத்திக்கு வந்தார். தசரதனுக்கு சத்ருக்னன் இறுதிச் சடங்குகளைச் செய்தது, அவனுக்கு மூத்தவனாக இருந்தும் தனக்கு அந்தப் பொறுப்பு மறுக்கப்பட்ட சோகத்தில் பரதன் சிலையாக அமர்ந்திருந்தது எல்லாவற்றையும் அவர் கவனித்தார். பரதனுக்கு ஆறுதல் சொன்னார். ‘எதுவுமே இழப்பல்ல; ஏனென்றால் எதுவுமே நிரந்தரமல்ல’ என்று அறிவுறுத்தினார்.
தான் கானகத்திற்குப் போவதாகவும், ராமனிடம் இறைஞ்சப் போவதாகவும் அவரிடம் சொன்ன பரதன், அவரையும் தன்னுடன் வருமாறு அழைத்தான். கானகத்தில் தன் மகள் படும் துன்பத்தை முன்னிருத்தி அவர் கோரிக்கை விடுத்தாரானால் அதை ராமனால் செவி மடுக்காமல் இருக்க முடியுமா?
ஆனால் ஜனகர் அவனுடைய வேண்டுகோளை மென்மையாக நிராகரித்தார். ‘‘ஒரு மன்னனின் ஆணை நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்று. அவர் உத்தரவிட்டு விட்டாரானால் அது யாருடைய மறுபரிசீலனைக்கும் உரியதல்ல. அதனால் பாதிக்கப்பட்டவருக்கு மேல் முறையீட்டுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை. மன்னன் என்பது இருக்கட்டும், ஒரு தந்தை என்ற முறையில் அவர் உத்தரவை நிறைவேற்றுவது  பிள்ளைகளின் கடமை. அப்படி உத்தரவிட்டவர் இறந்து விட்டார் என்பதற்காக அந்த உத்தரவும் இறந்துவிட்டதாக ஆகிவிடாது. சாசனம் சாவதில்லை. ஒருமுறை பிரகடனப்படுத்தப்பட்டு விட்டால் அது முழுமையாக நிறைவேற்றப்படும்வரை அந்த சாசனத்துக்கு உயிர் உண்டு. அந்த வகையில் ராமனுக்கு இடப்பட்ட உத்தரவை அவன் முழுமையாக  நிறைவேற்றுவதே சரியானது. அதோடு, ராமனின் மனோவலிமையை அவன் சிவதனுசை முறித்த நாளிலிருந்தே நான் அறிவேன். ஆகவே உங்களுடன் வந்து அவனுக்கு தர்மசங்கடத்தை உண்டாக்க நான் விரும்பவில்லை’’ என்று உறுதியாகச் சொன்னார். ஆகவேதான் அவர் எங்களுடன் இப்போது இல்லை.
சுமந்திரனது நீண்ட விளக்கம் சீதையை நெடுமூச்செறிய வைத்தது.
ஆனாலும் பாச ஏக்கம் தீராத அவளை ராமன் தன் குளிர்ந்த பார்வையால் நோக்க, அவள் சமாதானமானாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar