Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அன்பென்னும் மருந்துக்கடை
 
பக்தி கதைகள்
அன்பென்னும் மருந்துக்கடை


“பருப்பு வடை சூடா இருக்கு சாமி வாங்கிக்கங்க’’
கண்டாங்கி சேலையில் கருப்பாக, திருத்தமாக இருந்தவள் கேட்டாள்.  நான் வைகைப்பாலத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தேன். பசித்தது.
“வடை எவ்வளவும்மா?”
“நான் படைக்கும் உணவிற்கு உன்னால் விலை கொடுக்க முடியாது’’
பச்சைப்புடவைக்காரியை விழுந்து வணங்கினேன்.
அலைபேசி ஒலித்தது.
“ஒரு மாறுதலுக்காக பிரச்னை வரும் முன்பே நான் வந்துவிட்டேன். எடுத்துப் பேசு.”
பேசியது மருத்துவர் நாதன்.
“என்னமோ மனசே சரியில்லன்னா.  எனக்குத் திருச்சியிலிருந்து ஒரு பிரச்னை வரப்போகுது. எப்படி சமாளிக்கப்போறேன்னு தெரியல.
வாசுன்னு என் சொந்தக்காரப் பையன் வரான். அவன் மனைவிக்கு ஆறுமாசமா இருமல்.  மூச்சு வாங்கறது நிக்க மாட்டேங்குது. எல்லா டெஸ்ட்டும் எடுத்துப் பாத்துட்டாங்க..”
“இதுல உங்க பிரச்னை என்ன“
“ஆளு அவ்வளவா சரியில்லண்ணா. வாக்குச் சுத்தம் கெடையாது.  எச்சக் கையால காக்கா ஓட்டமாட்டான்.  சண்டை போடுவான்.  அப்பா அம்மா ரொம்ப பயந்து போயிருக்காங்க”
வடைக்காரியின் புன்னகைக்கு இந்த உலகையே கொடுக்கலாம். அவள் என் தலையை லேசாகத் தொட்டாள். அவள் சொல்ல நினைத்ததை என்னைச் சொல்ல வைத்தாள்.
“மனசப் போட்டு அலட்டிக்காதீங்க டாக்டர். உதவி கேட்டு வரவங்கள வேண்டாம்னு சொல்லாதீங்க. உங்களால முடிஞ்ச உதவிய செய்யுங்க. அதுக்கும் மேல கேட்டா முடியாதுன்னு சொல்லிருங்க. ஆனா அந்த ஆளு மேல அன்பு குறையாம பாத்துக்கங்க. யாரு கண்டா, உங்க அன்பு அந்த ஆள மாத்தலாமே!”
நான்கைந்து வடைகள் உள்ளே போனவுடன் பசி ஆறியது.
“நாதனுக்கு ஏதாவது பிரச்னை வரப்போகிறதா?”
“நாதனை ஒரு பெரிய மருந்துக் கடையாகப் படைத்திருக்கிறேன்.  அங்கே சர்வரோக நிவாரணியான அன்பை சரக்காக வைத்திருக்கிறேன்.  அதில் கொஞ்சம் எடுத்து அந்த வாசுவைச் சீர்படுத்தலாமே என்று பார்க்கிறேன்”
“என்ன நடக்கப்போகிறது”
“அங்கே பார்.”
அன்று இரவு பதினொரு மணிக்கு நாதன் வீட்டின் முன் ஒரு வாடகை கார் நின்றது. அதிலிருந்து வாசுவும் அவன் மனைவி சுமதியும் இறங்கினார்கள். சுமதி தொடர்ந்து இருமிக்கொண்டே இருந்தாள். அவளால் சரியாகக் கூட நடக்கமுடியவில்லை.
நாதனே வந்து கதவைத் திறந்தார். நாதனின் மனைவி சுமதியைக் கைத்தாங்கலாகப் பிடித்து உள்ளே அழைத்துப் போனாள்.
அன்று இரவு முழுவதும் துாங்காமல் இருமிக்கொண்டிருந்தாள் வாசுவின் மனைவி. நள்ளிரவு வரை நாதனின் கைகளைப் பற்றியபடி வாசு கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தான்.
மறுநாள் காலை மருத்துவமனைக்குப் போகும்போது வாசு, சுமதியை அழைத்துக்கொண்டு போனார் நாதன். சுமதிக்கு ராஜவைத்தியம் நடந்தது. பல விதமான பரிசோதனைகளைச் செய்தார்கள். கடைசியில் அவளுக்கு வந்திருப்பது காச நோய் எனக் கண்டுபிடித்தார்கள். ஒரு நாள் மருத்துவமனையில் தங்கிவிட்டு மறுநாள் நாதன் வீட்டுக்குப் போனார்கள்.
மருத்துவமனைச் செலவு இரண்டு லட்சம் வந்தது.
நாதனிடம் கெஞ்சினான் வாசு.
“எங்கிட்ட இப்போ சத்தியமா அவ்வளவு காசு இல்ல. ஒரு இடத்துலருந்து வர வேண்டியதிருக்கு. எப்படியும் ரெண்டு நாள்ல பணம் வந்திரும். வந்தவுடன உங்க கணக்குக்கு அனுப்பி வச்சிடறேன்.”
நாதனுக்குத் தயக்கமாக இருந்தது. இரண்டு லட்சத்தைத் துாக்கிக்கொடுக்கும் அளவிற்கு அவர் பெரிய செல்வந்தர் இல்லை. ஆனால் வாசுவின் கண்களில் இருந்த கண்ணீரைப் பார்த்ததும் அவரது மனம் இளகியது.
வாசு கொடுக்கவேண்டிய பணத்திற்கு நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார்.  வாசு மனைவியுடன் ஊருக்குக் கிள்ம்பிக்கொண்டிருந்தான். சுமதி இன்னும் இருமிக்கொண்டுதான் இருந்தாள்.
நாதனின் தாயார் நடந்ததைக் கேட்டுவிட்டு விரக்தியாகச் சொன்னார். “வாசுகிட்டருந்து பணம் வரும்னு எனக்குத் தோணல”
காட்சி மாறியது. கோவையில் இருந்து கிளம்பிய அந்த வாடகை கார் திருச்சியை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. சுமதி பின் இருக்கையில் படுத்துக்கொண்டிருந்தாள். இருமல் நிற்கவில்லை. வாசு முன் இருக்கையில் அமர்ந்திருந்தான். நாதன் செய்த பெரிய உதவியை நினைத்துப் பார்த்தான். கண்கள் நிறைந்துவிட்டன.
தற்செயலாக கார் ஓட்டுனரைப் பார்த்தான். அவர் கண்கள் சிவந்திருந்தன. கண்ணில் இருந்து கண்ணீர் பெருகி கொண்டிருந்தது. ஓட்டுனரின் கைகள் லேசாக நடுங்கின. அந்த மனிதர் பெரிய துக்கச் சுமையில் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டான் வாசு.
“வண்டிய ஓரமா நிறுத்துங்க”
வண்டி நின்றவுடன் ஓட்டுனரின் தோளில் கை வைத்தபடி மென்மையாகப் பேசினான்.
“உங்களுக்கு ஏதோ பெரிய பிரச்னை போலருக்கே!  என்னை உங்க சகோதரனா நெனச்சி என்னன்னு சொல்லுங்க. என்னால என்ன செய்ய முடியும்னு பார்க்கறேன்”
ஓட்டுனர் அழுதுவிட்டார்.
“நாளைக்கு பண்டிகை சார். எனக்கு ரெண்டு பெண் குழந்தைங்க. பண்டிகைக்கு நாங்க புதுத் துணி எடுக்காட்டியும் குழந்தைங்களுக்கு எப்படியும் எடுத்துக் கொடுத்திருவேன் சார். இந்த தரம் முடியாது போலிருக்கு. வண்டி சரியா ஓடல. ஒரு ஆள்கிட்ட பணம் கேட்டிருந்தேன். அவர் கடைசி நேரத்துல முடியாதுன்னு சொல்லிட்டாரு. பாவம் சார், என் பொண்ணுங்க! அப்பா புதுதுணியோட வருவாருன்னு ராத்திரி துாங்காமக் காத்துக்கிட்டிக்குங்க. இல்லேன்னு தெரிஞ்சா ஏமாந்து போயிருங்க. அத நெனச்சா எனக்கு நெஞ்சு பதைபதைக்குது”
வாசு சில நொடிகள் யோசித்தான். சற்று விலகிப்போய் தன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்த்தான். கார் வாடகை போக நாலாயிரத்தி ஐநுாறு இருந்தது. ஓட்டுனரிடம் உற்சாகமாகப் பேசினான்.
“அடுத்த பெரிய ஊர் என்ன வரப்போகுது?”
“பல்லடம்.”
“பல்லடத்துல ஒரு பெரிய துணிக்கடை வாசல்ல நிறுத்துங்க”
“சார்…”
“நான் சொன்னதச் செய்யுங்க”
பல்லடத்தில் கார் நின்றது. வாசுவும் கூடவே சென்று ஓட்டுனரின் இரண்டு மகள்களுக்கும் புத்தாடை எடுத்துக்கொடுத்தான் ஓட்டுனருக்கு ஒரு வேஷ்டி, அவர் மனைவிக்கு ஒரு புடவையும் எடுத்துக் கொடுத்தான். நாலாயிரத்துக்குள் முடிந்தது.
கடையை விட்டு வெளியே வந்ததும் அந்த ஓட்டுனர் நடுத்தெரு என்றும் பார்க்காமல் வாசுவில் கால்களில் விழுந்தார்.
“உங்க குடும்பமும் பரம்பரையும் நுாறு வருஷத்துக்கு நல்லா இருக்கணும் சார்’’
திருச்சி செல்லும் வரை அழுது கொண்டேதான் வண்டி ஓட்டினார். மறுநாள் தங்கள் குடும்பமே வாசு வாங்கிக்கொடுத்த புதுத் துணிகளை உடுத்திக்கொண்டிருந்த படத்தை வாசுவிற்கு அனுப்பினார்.
அன்று மதியம் சாப்பிட்டுவிட்டு அசதியாக இருக்கிறது என சுமதி துாங்கினாள். அவள் கண் விழித்தபோது இருமல் முற்றிலுமாக நின்று போயிருந்தது.
மறுநாள் வாசுவிற்கு பணம் தரவேண்டியவர் மொத்தப் பணத்தையும் தந்துவிட்டார். வாசு மருத்துவமனைக்குத் தரவேண்டிய இரண்டு லட்சத்தையும் நாதனுக்கு அனுப்பினான்.
“இப்படியெல்லாம் கூட நடக்குமா தாயே!”
“ஏன் நடக்காது? நாதன் என்ற மருந்துக்கடையில் அன்பு என்ற சரவரோக நிவாரணி இருந்தது. வாசு அதைப் பெற்றான். அந்த தாக்கத்தில் அவனால் ஓட்டுனரின் துன்பத்தை உணர முடிந்தது. கையில் இருந்த பணத்தையெல்லாம் அவருக்காகச் செலவு செய்தான். அந்த அன்பு அவன் மனைவியின் நோயையும் அவனுடைய பணக்கஷ்டத்தையும் போக்கிவிட்டது. எந்த வகையான துன்பமாக இருந்தாலும் அன்பு அதைக் குணமாக்கிவிடும். நீ ஏனப்பா அழுகிறாய்? உனக்கு என்ன வேண்டும் சொல், கொடுத்துவிட்டுப் போகிறேன்’’
நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
“உனக்கு நாதனைப் போல் மருந்துக்கடை நடத்தி அன்பென்னும் சர்வரோக நிவாரணியை அனைவருக்கும் கொடுக்கவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டதோ”
“இல்லை தாயே! நாதன் நடத்தும் மருந்துக்கடையில் நான் எடுபிடி வேலை செய்யவேண்டும். நாதன், வாசு போன்றவர்கள் வீட்டில் வேலைக்காரனாக இருக்கவேண்டும். அந்த வரத்தைக் கொடுங்கள் போதும்.”
கலகலவென சிரித்துவிட்டுக் காற்றோடு கலந்தாள் என்னைக் கொத்தடிமையாகக் கொண்டவள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar