Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மகாபாரத மாந்தர்கள்
 
பக்தி கதைகள்
மகாபாரத மாந்தர்கள்


கண்ணனாகிய நான் ..
நான் சிறையில் பிறந்தவன்.  பிறந்தவுடன் புன்னகைத்தேன்.  என் பெற்றோர் கண்ணீர் விட்டனர்.
அதாவது எல்லாமே தலைகீழாக நடந்தது.  உங்கள் நியதிப்படி பிறந்த குழந்தை அழ வேண்டும்.  பெற்றோர் ஆனந்தத்தில் புன்னகைக்க வேண்டும்.  ஆனால் இதுவே ஒரு விதத்தில் மாயைதான்.  ஒரு ஆத்மா உடலுக்குள் செலுத்தப்படுவது என்பது பிறப்பு.  உண்மையில் அதுதான் துயரத்துக்கு உட்பட்டது.  அந்த ஆத்மா உடலிலிருந்து விடுபடுவதை இறப்பு என்கிறீர்கள்.  உண்மையில் அதுதான் அந்த ஆத்மாவுக்கு ஆனந்தம்.
பிறந்தவுடன் நான் புன்னகைக்க ஒரு காரணம் இருந்தது.  தீயவர்களை அழிக்கத்தான் திருமாலின் அம்சமான நான் பிறந்தேன்.  எனவேதான் அந்தப் புன்னகை.  பெற்றோரின் அழுகைக்குக் காரணம் இன்னும் சற்று நேரத்தில் நான் கொலை செய்யப்பட்டு விடுவேன் என்கிற கவலை!
விருஷ்ணி ராஜ்ஜியத்தை ஆண்ட உக்கிரசேனரின் மகன் கம்சன்.  (இந்த ராஜ்ஜியத்தின் தலைநகர் மதுரா).  கம்சனின் தாய் பத்மாவதி.  அவனது தங்கை தேவகி.  தேவகிக்கும் வசுதேவர் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமண ஊர்வலத்தின்போது மணமக்கள் இருந்த தேரை ஓட்டியவன் கம்சன்.  தேவகியின் சகோதரன்.  அப்போது வானில் ஓர் ஒலி கேட்டது.  கம்சா, தேவகிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தை உன்னைக் கொல்வான் என்றது. சகோதர பாசத்தை உயிர் பயம் வென்றது.  தன் தங்கையைக் கொல்ல வாளை எடுத்தான் கம்சன்.  வசுதேவர் தடுத்தார். ‘என் மனைவியைக் கொல்லாதே.  அவளுக்குப் பிறக்கும் எல்லா குழந்தைகளையும் உன்னிடம் அளித்து விடுகிறேன்.  நீ எதை வேண்டுமானாலும் செய்து கொள் என்றார்.  ஏற்றுக் கொண்டான் கம்சன்.  வசுதேவரையும் தேவகியையும் ஒரு சிறையில் அடைத்தான்.   ஒவ்வொரு குழந்தையாகப் பிறக்கப் பிறக்க அந்தக் குழந்தையைக் கொன்று கொண்டே வந்தான் கம்சன்.
வசுதேவரையும் தேவகியையும் கம்சன் தனித்தனி சிறையில் அடைத்திருக்கலாம்.  தங்கள் குழந்தைகள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுவதைக் கண்ட வசுதேவரும் தேவகியும் தங்களுக்கு மேலும் குழந்தை பிறக்காமல் பார்த்துக் கொண்டிருக்கலாம். ஆக மேலோட்டமாகப் பார்த்தால் இந்த மூவரும் செய்தது  முட்டாள்தனம் என்று தோன்றலாம்.   ஆனால் உரிய நேரத்தில் நான் பிறக்க வேண்டும், என்னால் இந்த பூவுலகிற்கு மிக அதிக நன்மைகள் நடக்க வேண்டும் என்ற தீர்மானம் காரணமாக மாயை அவர்கள் கண்களை மறைத்திருந்தது.
எட்டாவது குழந்தையாக ஆவணி மாதத்தில் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் நான் பிறந்தேன்.  ‘கோகுலத்தில் வசிக்கும் யாதவ குலத்தினரான நந்தகோபர்-யசோதை தம்பதியிடம் இந்தக் குழந்தையை ஒப்படைத்து விடு’ என்றது வானிலிருந்து வந்தது கட்டளை.  வசுதேவரைக் கட்டியிருந்த சங்கிலிகள் அறுந்து விழுந்தன.  சிறைக் கதவு திறந்து கொண்டது.  சிறைக்காவலர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர்.  ஒரு கூடையில் என்னை வைத்து தன் தலையில் வைத்துக் கொண்டபடி வசுதேவர் கோகுலம் நோக்கிக் கிளம்பினார்.  வழியில் யமுனை ஆறு குறுக்கிட்டது.  அதில் வெள்ளம் கரைபுரண்டது.  வசுதேவர் செல்லச் செல்ல யமுனை இரண்டாகப் பிரிந்து அவருக்கு வழிவிட்டது.  
அதே நேரம் நந்தகோபரின் வீட்டில் யசோதைக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தது.  அது தெய்வாம்சம் பொருந்திய யோகமாயாவின் வடிவம். என்னை நந்தகோபரின் வீட்டில் வைத்துவிட்டு இந்தப் பெண் குழந்தையை தன்னுடன் எடுத்து வந்தார் வசுதேவர்.  சங்கிலிகள் தானாக பூட்டிக் கொண்டன. சிறைக் கதவுகள் சாத்திக் கொண்டன.  குழந்தை அழுதது.  கம்சன் சிறைச்சாலைக்கு விரைந்தான்.  அந்தக் குழந்தையை மேலே துாக்கிப்போட்ட கம்சன் அது விழும் இடத்துக்கு நேராகத் தன் கூரிய வாளை நிற்க வைத்தான்.  ஆனால் அந்தக் குழந்தை வாளின் மீது விழுவதற்கு மாறாக ஆகாயத்தை நோக்கி உயர்ந்தது.  அப்படிப் போகும் போது ‘முட்டாள் கம்சா... நான் தேவகியின் குழந்தை அல்ல.  உன்னை கொல்லப் பிறந்த தேவகியின் எட்டாவது குழந்தை கோகுலத்தில் வளர்கிறான்’ என்று கூறிவிட்டு மறைந்தது.
கோகுலத்தில் யசோதையின் செல்லக் குழந்தையாக வளர்ந்தேன்.  பின்னர் கோகுலத்தில் வாழ்ந்த ஆயர்களோடு பிருந்தாவனத்துக்கு அனைவரும் இடம்பெயர்ந்தோம்.  என் குழல் ஓசையில் அனைவரும் மயங்கினார்கள்.  கடவுளின் அவதாரம் என்றாலும் மாடு மேய்த்தேன். யாதவ சிறுவர்களுடன் விளையாடினேன்.  கோபியர்களின் வீடுகளில் வெண்ணெய் திருடி குறும்புத்தனம் செய்தேன்.  
    அதே சமயம் என் இருப்பிடத்தை அறிந்துகொண்ட கம்சன் அரக்கர்களை ஒருவர் பின் ஒருவராக நான் இருக்கும் இடத்திற்கு அனுப்பி என்னை கொலை செய்ய முயற்சித்தான். குழந்தையாய் இருந்த எனக்கு பால் கொடுப்பது போல் போக்கு காட்டியபடி வந்தாள் அரக்கி பூதகி.  சகடாசுரன் சக்கர வடிவில் வந்து சேர்ந்தான். த்ருனவர்த்தன் என்பவன் புயல் வடிவில் வந்தான்.  வட்சாசுரன் கன்றுக்குட்டியின் வடிவில் வந்தான். பகாசுரன் பறவையின் வடிவில் அணுகினான்.  அகாசுரன் ஒரு பெரும் பாம்பின் வடிவில் வந்து சேர்ந்தான்.  கழுதை வடிவம் எடுத்து வந்தான் தேனுகாசுரன்.  என்னைக் கொல்ல முயற்சித்த இவர்கள் ஒவ்வொருவரையும் வதம் செய்தேன்.  
என் தந்தை வசுதேவருக்கு அக்ரூரர் என்பவர் தம்பி முறை வேண்டும்.  தர்ம நெறி மாறாதவர்.  அவரை அனுப்பி என்னையும் பலராமனையும் மதுராவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தான் கம்சன். வில்லை வழிபடும் ஒரு விழாவிற்கான அழைப்பு என்று  கூறப்பட்டது.  வஞ்சகப் பின்னணியைப் புரிந்து கொண்டேன்.
நானும் பலராமனும் மதுராவின் வீதிகளில் நடந்தபோது கம்சனின் திட்டப்படி மதம் கொண்ட யானை ஒன்று எங்கள் மீது ஏவி விடப்பட்டது.  ஆனால் என் கரம் பட்டதும் அது சமாதானமாகி ஒரு குழந்தையைப் போல என்னை வணங்கியது.  இதைக்கண்ட மதுராவின் மக்கள் எங்கள் மீது பேரன்பு கொண்டனர்.
மதுராவில் மிகவும் பிரபல இரண்டு மல்யுத்த வீரர்கள் சாணுாரன் மற்றும் முஷ்டிகன். அவர்களோடு என்னையும் பலராமரையும் மோதவிட்டு எங்களை அழிக்க முடிவு செய்தான் மாமன் கம்சன்.
சாணுாரன் என்னையும், முஷ்டிகன் பலராமரையும் மல்யுத்த சண்டைக்கு அழைத்தனர்.  இதைப் பார்த்த மக்கள்   பாலகர்களோடு இவ்வளவு பலம் வாய்ந்த வீரர்கள் மோதுவதா  என்று அதிர்ச்சியுடன் தடுக்க நினைத்தனர். என்றாலும் நாங்கள் அந்த போட்டி அழைப்பை ஏற்றுக்கொண்டோம்.  முஷ்டிகனை பலராமன்  கொல்ல, நான் சாணுாரனைக் கொன்றேன்.
நிலைமை விபரீதமாவதைக் கண்ட கம்சன் தானே என்னுடன் மோத முன்வந்தான். அவனை எளிதில் வென்றேன்.  சங்கு கொண்டு ஊதினேன். கம்சன் இறந்ததை அனைவரும் புரிந்து கொண்டனர்.  அவன் கொடுங்கோலனாக விளங்கியதால் அவன் இறந்ததில் மக்களுக்கு ஆனந்தம்தான்.  என் பெற்றோர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

பாண்டவர்களையும் யாதவர்களையும் இணைக்கும் பாலமாக நான் செயல்பட்டதற்கு  வலுவான காரணங்கள் இருந்தன.  அவற்றையும் பார்ப்போம்.

ண்ணனின் இளவயது லீலைகள் கோகுலத்திலும், பிருந்தாவனத்திலும் நடைபெற்றன. என்றாலும் பிறந்த இடம் என்பதற்கு தனி மகிமை உண்டு அல்லவா?  மதுரா -  கண்ணன் பிறந்த இந்த ஊரின்  பெயரை உச்சரிக்கும்போதே கிருஷ்ண பக்தர்களின் நாவினிக்கும். உத்தரப்பிரதேசத்தில் உள்ளது மதுரா. டில்லியிலிருந்து 145 கி.மீ., துாரத்தில் உள்ளது. பிருந்தாவனத்தில் இருந்து 11 கி.மீ.,  
    மதுராவில் எங்கே கீழே விழுந்து வணங்கினாலும் எதிரில் ஒரு கிருஷ்ணர் கோயில் காட்சி தரும்.
கேஷவ் தேவ் கோயில் கண்ணன் பிறந்த (அதாவது கம்சன் தன் சகோதரி தேவகியையும், அவள் கணவன் வசுதேவரையும் அடைத்து வைத்த) சிறைக்கு மேலே கட்டப்பட்டதாகும். ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பு வஜ்ரநாபர் என்பவர் இங்கு மிக பிரம்மாண்டமான ஆலயத்தை எழுப்பி இருந்தாராம். (வஜ்ரநாபர் என்பவர் கண்ணனின் பேரன்).  அதைப் பற்றி மிகச் சிறப்பான வர்ணனைகள் கிடைக்கின்றன. சைதன்ய மகா பிரபு கூட இங்கு வந்து வழிபட்டிருக்கிறார். கி.மு. 400ல் இரண்டாம் சந்திரகுப்தர் இந்த கோயிலை மேலும் பொலிவானதாக ஆக்கினார்.  ஆனால் கஜினியின்  படையெடுப்பில் இடிக்கப்பட்டது.
    மதுராவின் மற்றொரு முக்கிய பகுதியான துவாரகேஷ் கோயில் அமைதியாகக் காட்சி தருகிறது. வல்லபாச்சார்யா எனும் பக்திப் பரம்பரையில் வந்தவர்களால் நிர்வகிக்கப்படுகிறது இந்தக் கோயில். மதுராவில் கிழக்குப் பகுதியிலுள்ள இது யமுனை நதிக்கு அருகில் உள்ளது.
    கிருஷ்ண ஜன்மாஷ்டமி மதுராவில்  பிரபலம். கண்ணன் பிறந்த தினமான கிருஷ்ண ஜயந்தி அன்று ஜூலனோத்ஸவ் கொண்டாடப்படும். அதாவது மதுராவிலுள்ள மக்கள் தங்கள் வீடுகளில் சின்னச் சின்ன ஊஞ்சல்களை கட்டி வைத்து சந்தோஷப்படுவார்கள்.
    அப்போது மதுராவில் சேரும் மக்கள் கூட்டத்தையும் பார்க்க வேண்டுமே!  அவர்கள்  முகமெல்லாம் மகிழ்ச்சி. எங்கெங்கும் கண்ணனின் புகழ்பாடும் பாடல்கள் பஜனை வடிவில் ஒலித்துக் கொண்டிருக்கும். தெருவில் செல்பவர்களில் கூடப் பலரும் நடனமாடிக் கொண்டு செல்வார்கள்.
    கண்ணன் சலவைக் கற்களில் வெண்மையாகத்தான் காட்சியளிக்கிறான். கிரீடமும், மயிலிறகும் தனி அழகை அளிக்கின்றன.அருகில் ராதை. உடைகள் செல்வச் சிறப்புடன் காட்சியளிக்கின்றன.
    தீபாவளியன்று நீ எவ்வளவு கிருஷ்ணர் கோயில்ககளுக்குச் சென்றாய்?  நான் இதுவரை 12 கோயில்களுக்குச் சென்றேன் என்பது போல் அங்கு பேசிக் கொள்வார்கள். யமுனா ஸ்னானம் ஆச்சா? என்பதை விதவிதமாகக் கேட்பார்கள். கண்ணனின் லீலைகள் யமுனை நதிக்கரையில்தானே நடந்தேறின.  நகரெங்கும் கண்ணனின் அருளாசி. மனம் கவர் கள்வன் மாயப் புன்னகை பூத்துக் கொண்டிருக்கிறான்.    
           


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar