Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பாராளட்டும் பாதுகைகள்!
 
பக்தி கதைகள்
பாராளட்டும் பாதுகைகள்!


தம் நோக்கம் நிறைவேற முடியாதபடி, அந்தச் சூழ்நிலை தங்கள் மனதைக் கலைத்துவிடக் கூடாதே என்று கவலைப்பட்டான் சத்ருக்னன்.
லட்சுமணன் ராமனுடனேயே ஐக்கியமாகி விட்டதுபோல, இவனும் பரதனுடன் ஒன்றிவிட்டவன். பரதனின் சிந்தனையே இவனுடைய சிந்தனை, அவனுடைய சொல்லே இவனுடைய சொல், அவனுடைய எந்தவகை செயலுக்கும் துணை போவதே இவனுடைய லட்சியம்.
சத்ருக்னன் என்றால் எல்லாவகையான உட்பகைகளும் கெட வாழ்பவன் என்று அர்த்தம். ‘இவன் நித்ய சத்ருக்னன். பிறவி எடுத்தது முதல் உடனிருந்தே மனித மனதைத் தீய வழிகளில் செலுத்த வைக்கும் புலன்களைக் கட்டுப்படுத்தியவன். ஆகவே இவன் உட்பகையையும், பின்னாளில் லவணாசுரன் முதலான அரக்கர்களை அழிக்கவிருப்பவன் என்பதால் புறப்பகையையும் வென்றவன்# என்று சத்ருக்னனைன் சிறப்பிக்கப்படுகிறான்.
தன் அண்ணன் பரதன் மீது அத்தனை பாசம் அவனுக்கு ‘எமையாள் வரதன்’ என்றே அவனைப் போற்றித் துதிப்பான் சத்ருக்னன். பால்ய வயது முதல் பரதனுடன் ஒன்றிப்போய்விட்ட இவன், அந்தப் பண்பாலேயே, தாய் மாமனான உதாஜித்தின் அழைப்பின் பேரில் கேகய நாட்டிற்குச் சென்ற பரதனைப் பின் தொடர்ந்தவன். பரதன் மீது கொண்ட பாசத்தால்தான், ராமன் காடேகக் காரணமான மந்தரையைத் தாக்கவும் துணிந்தான் அவன். அதுமட்டுமல்ல, பரதனுக்கு மறுக்கப்பட்ட தந்தையாரின் ஈமச்சடங்குகளை, நிர்ப்பந்தம் காரணமாகத் தான் மேற்கொண்டதில் மிகுந்த மன வருத்தமும் கொண்டவன்.
அதேபோல ராமனை அயோத்திக்கு அழைத்துவர பாதன் ஏற்பாடுகளை மேற்கொண்டபோது அவை ஒவ்வொன்றுக்கும் உறுதுணையாக இருந்தான். பரதன் கூறியபடி, முரசறைந்து அச்செய்தியை மக்களுக்குத் தெரிவிக்கச் செய்தான். பரதனைப் போலவே தானும் மரவுரி தரித்துக் கொண்டான். உணர்வில் இன்னொரு பரதனாகவே மாறி அவனுடன் கானகம் சென்றான்.
இப்போது ராமனை மனம் மாறச் செய்ய, பரதனுக்கு இவன் உதவியாக வேண்டும். ஆகவே பரதனின் கண்ணசைவு அனுமதியுடன் ராமனிடம் பேசினான்: ‘‘அண்ணா, அயோத்தியில் இயற்கையே பிறழ்ந்து போயிருக்கிறது. மக்களெல்லாம் நடைப்பிணங்களாக காட்சியளிக்கிறார்கள். எங்குமே மகிழ்ச்சி இல்லை, மலர்ச்சி இல்லை. ஏனென்றால் தாங்கள் அங்கே இல்லை. இனியும் தாமதிக்காமல் தாங்கள் எங்களுடன் புறப்பட்டு வாருங்கள். அயோத்தியில் மீண்டும் வசந்தம் துளிர்க்கட்டும்’’
ராமன் அவனைப் புன்முறுவலுடன் பார்த்தான். அந்தப் பார்வையே சத்ருக்னனின் வேண்டுகோளை அவன் மென்மையாக மறுப்பதைத் தெரிவித்தது.
பரதன் இரு கைகளையும் தலை மீது துாக்கி ராமனை வணங்கினான். ‘‘ஐயனே, என் வாயிலிருந்து புறப்படும் வார்த்தைகள், இதோ, இங்கே உங்கள் முன் கூடியிருக்கிறார்களே நம் தாயார்கள், குலகுரு, அமைச்சர்கள், படை வீரர்கள், பாமர மக்கள் ஆகிய அனைவரது ஒருமித்த சிந்தனையின் ஒலிவடிவம்தான். இவர்களுக்காகவாவது தாங்கள் மனம் திரும்புங்கள்’’
ராமன் அந்த பலவந்தத்தை விரும்பவில்லை. ‘‘வலிந்து, மீண்டும் மீண்டும் வற்புறுத்தும் போதெல்லாம், கூடவே நம் தந்தையாரையும் மறைமுகமாக நிந்திக்கிறாய் என்பதை நீ உணர்கிறாயா, பரதா? நான் நாடு திரும்புவதால், அவரை அவமானப்படுத்தும் குரூர சந்தோஷத்தை நீ அடைய விரும்புகிறாயா?  அது தகுமா? நம் தந்தையாரின் ஆணையை உவப்புடன் ஏற்றிருக்கும் நானே எந்த பாதிப்பையும் உணராதபோது, நீ ஏன் அனாவசியமாக அங்கலாய்க்கிறாய்? என் தம்பி என்ற தகுதியிலிருந்து நீ வழுவுகிறாய் பரதா. காட்டிற்குச் செல்லுமாறு எனக்கு ஆணையிட்டதை நான் எப்படி ஏற்றேனோ அதேபோல அரியணை உனக்கு என்ற ஆணையையும் நீ ஏற்கத்தான் வேண்டும்…‘‘ ராமன் சற்றே அழுத்தமாகச் சொன்னான்.
‘‘நீங்கள் என் கண்ணோட்டத்திலிருந்து நோக்க மறுக்கிறீர்கள் அண்ணா. மூத்தவன் இருக்க இளையவன் பதவி மோகம் கொண்டு அரியாசனத்தை ஆக்கிரமித்தான் என்ற பழிச்சொல் என்னை வந்தடைய உங்களுக்கு சம்மதமா?‘‘
‘‘அப்படி ஒரு பழிச்சொல் உனக்கு வரவே வராது. ஏனென்றால் இவை பேரரசரின் ஆணைகள். அதை நாம் இருவருமே நிறைவேற்றக் கடமைப்பட்டவர்கள். இதோ, எனக்கான கடமையை நான் நிறைவேற்றிவிட்டேன், ஆனால், நீதான் மறுக்கிறாய்…’’
‘‘அரசப் பொறுப்பு என்பது என்னோடு நிற்கக் கூடியதா அண்ணா? நான் நம் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் பதில் சொல்ல வேண்டியவனாகிறேனே. சம்பிரதாயம், பாரம்பரியத்தை மீறி நீ எப்படி ஆட்சி புரியலாம் என்று கேட்பவர்களுக்கு என்னிடம் விடை எங்கே? இது பேரரசரான என் தந்தையின் ஆணை என்று நான் அவர்களை அடக்க முயல்வேனானால் அது சுமுகமான அரசாட்சிக்கு வழிவகுக்குமா? ஒரே ஒரு குடிமகனும்கூட மனம் கோணாதபடி என்னால் ஆட்சி செலுத்த இயலுமா? நிச்சயம் முடியாது’’
‘‘வேகமாக ஓடும் காலம் ஒரு சிறந்த மருந்தாக அமையும் பரதா. நாளடைவில் மறதியால் மக்கள் மனம் அமைதியடைந்து விடுவார்கள். இதற்காகத்தான் பதினான்கு நீண்ட ஆண்டுகள் கால அவகாசம் இருக்கிறதே’’
சோகமாக சிரித்தான் பரதன். ‘‘என்னை சமாதானப்படுத்த முயற்சிக்கிறீர்கள் அண்ணா. சரி, அரசு என்னுடையது என்கிறீர்கள் இல்லையா? அதனால் சொல்கிறேன், இதோ அந்த ஆட்சி பீடத்தை நான் உங்களுக்குத் தருகிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள்’’
‘‘இப்போதும் நீ நம் தந்தையை அவமதிக்கிறாய். அவர் ஆணையை அலட்சியப்படுத்துகிறாய். இது முறையல்ல. நீ இப்போதே உன்னுடன் வந்தவர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு அயோத்திக்குத் திரும்பு. அங்கே நல்லாட்சி புரிந்து என் தம்பி என்று அனைவரும் பாராட்டும் வகையில் என் பெயரையும் காப்பாற்று’’
‘‘என்னை யார் பாராட்டுவர்’’ விரக்தியுடன் கேட்டான் பரதன். ‘‘முதலில் மக்கள் என்னை அரசனாக ஏற்றுக் கொள்வார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? நிச்சயம் மாட்டார்கள். உங்களை வஞ்சித்தவன் என்ற ரீதியில் என்னிடம் விரோதம்தான் பாராட்டுவார்கள். ஆகவே நீங்கள் அயோத்தி வரமாட்டீர்கள் என்றால், நான் உங்களுடன் இந்த ஆரண்யத்திலேயே வசிக்கவாவது அனுமதி கொடுங்கள்’’
‘‘தந்தையை அவமதிக்கும் உன் செயலுக்கு என்னையும் கூட்டு சேரச் சொல்கிறாய், அப்படித்தானே’’
பரதன் பரிதாபமாக சத்ருக்னனைப் பார்த்தான். அண்ணன் அசைய மாட்டான் என்பதை அந்தப் பார்வையில் உணர்த்தினான். ஆனால் அதற்காகத் தான் உடனே அரச பதவியை ஏற்கவும் விரும்பவில்லை என்று தெரிவித்தான்.
சத்ருக்னனும் என்ன செய்வது என புரியாமல் திகைத்தான்.
‘‘சரி’’ பரதன் இறுதியாகச் சொன்னான். ‘‘பதினான்கு ஆண்டுகள் முடிந்த அடுத்த நாளே தாங்கள் அயோத்திக்குத் திரும்பிவிட வேண்டும். இதற்கு உத்தரவாதம் அளித்தீர்கள் என்றால் தங்கள் ஆணைக்குக் கட்டுப்படுகிறேன். அவ்வாறு ஒருநாள் தாமதமானாலும் தீக்குள் புகுவேன்’’
ராமன் அவனுடைய தோளைத் தொட்டு  பாசத்துடன் கண்களில் நீர் பளபளக்கச் சொன்னான்: ‘‘கவலைப்படாதே பரதா, உன்னை அந்தளவுக்கு  துன்புறுத்த மாட்டேன். நான் வாக்கை தவற மாட்டேன்’’ என்றான்.
அதுகேட்டு சமாதானம் ஆனான் பரதன். ஆனாலும் ராமன் இருக்க வேண்டிய சிம்மாசனத்தில் தான் அமர்வது என்பது இப்போதே நெருப்பினுள் புகுவது போன்றதுதான் என்று உணர்ந்தான். சரி, ராமன் வராவிட்டால் என்ன, அவனுடைய அம்சம் ஏதாவது ஒன்றைப் பெற்றுக் கொண்டுபோய், அதை சிம்மாசனத்தில் அமர்த்தி, மானசீகமாக ராமனை நினைத்தபடி அரசாட்சி மேற்கொள்ளலாம் என்று நினைத்தான்.
அதைச் சொல்லி, ராமனிடமிருந்து எதைப் பெறுவது என்பதில் கொஞ்சம் தயங்கினான். ராமன் கைபட்ட அம்பு, தினசரி சம்பிரதாயங்களை நிறைவேற்ற அவன் பயன்படுத்திய தர்ப்பை, மரவுரி, அவனது மோதிர விரலை அலங்கரிக்கும் கணையாழி…
பரதனின் மனவோட்டத்தைப் படித்த சத்ருக்னன், அவனிடம், ஜாடையால் ராமபிரானின் பாதங்களைக் காட்டினான். பாதுகைகள்! இதைவிடப் பொருத்தமான ஒரு ராம அம்சம் வேறென்ன இருக்க முடியும்?
‘‘அண்ணா, என்னை அரசாள உத்தரவிட்டு விட்டீர்களே தவிர, இன்னும் என் மனம் அதற்கு உடன்பட மறுக்கிறது. அந்த சிம்மாசனத்தில் நீங்கள் அமராவிட்டாலும், தங்கள் பாதுகைகள் வீற்றிருக்கட்டும். அவற்றிடமிருந்து வழிகாட்டுதல்களையும், தீர்ப்புகளையும், நற்செய்திகளையும் நான் பெற்று அயோத்தி மக்கள் உய்வடையச் செய்கிறேன்…’’
ராமன் அவனை ஆச்சரியமாகப் பார்த்தான். தன் கொள்கையிலிருந்து விலக விரும்பாத அவனுடைய பிடிவாதத்தை ரசித்தான். உடனே இந்த வேண்டுகோளை ராமன் புன்சிரிப்புடன் ஏற்றுக்கொண்டான்.  ‘‘அப்படியே ஆகட்டும் பரதா..’’ என நெகிழ்ச்சியுடன் சொன்னான்.
இதை கவனித்த கைகேயியின் மனம் குதுாகலித்தது. கோசலையையும், சுமித்திரையையும் அர்த்தமுடன் பார்த்தாள். அவர்களும் கிரகங்களின் பாதிப்பு இந்தப் பாதுகைகளை ஒன்றும் செய்யாது என்ற உண்மையில் பூரண ஆறுதல் அடைந்தார்கள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar