Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கூண்டில் அடைபட்டவள்
 
பக்தி கதைகள்
கூண்டில் அடைபட்டவள்

சிறப்புச் சீட்டு வாங்கியும் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. திடீரென ஒரு உயரமான பெண் வரிசையில் எனக்கு முன்னால் புகுந்தாள். நான் கத்தினேன்: “நீங்கபாட்டுக்கு நடுவுல புகுந்துக்கறீங்க?” “என்னைப் பார்க்கத்தானே வரிசையில் நிற்கிறாய்? பின் ஏன் இந்தக் கோபம்?” வேரறுந்த மரம்போல காலில் விழுந்தேன். “உன்னைப் பார்க்க ஒரு தாயும் மகளும் வருவார்கள். உனக்குச் சரியில்லை என்று பட்டாலும் மகளை தாயின் சொற்படி நடக்க வைக்கவேண்டும்” மறுநாள் நண்பரிடமிருந்து அழைப்பு. “காசுக்காக படிச்ச பொண்ண என்ன வேணும்னாலும் செய்யச் சொல்றதா? அநியாயம் செய்யற அந்தம்மாவ உங்கிட்ட அனுப்பி வைக்கறேன். புத்தி சொல்லுப்பா.” “பொண்ணையும் கூட்டிக்கிட்டு வரச் சொல்லுங்க.” அன்று மாலை என் அறைக்குள் தாயும் பெண்ணுமாக நுழைந்தவர்களைப் பார்த்து அதிர்ந்தேன். இருவருமே அழகிகள்தான். மகளோ பேரழகி. “நான் பவானி. இது நிஷா என்னோட ஒரே பொண்ணு. கணவர் இறந்துட்டாரு. சொத்த வித்துத்தான்யா இந்தப் பொண்ண இஞ்ஜினியரிங் படிக்க வைச்சேன். நாலு வருஷமாச்சு. வேலை கெடைக்கல. இப்போ முப்பதாயிரம் சம்பளத்துல வீட்டுக்குப் பக்கத்துலேயே நல்ல வேலை கெடைச்சிருக்கு. போகமாட்டேன்னு அடம் பிடிக்கறாங்கய்யா” நிஷா சீறினாள்: “யாராவது இஞ்ஜினியரிங் படிச்ச பொண்ண ஆயா வேலைக்கு அனுப்புவாங்களா?” “முடியாம இருக்கற எழுபது வயசு பெரியவரப் பாத்துக்கணும். மூணு வேளை சாப்பாடு போட்டு முப்பதாயிரம் கொடுக்கறாங்க. அந்தக் காசுல எனக்கு ஒத்த பைசாகூட வேண்டாங்கய்யா. நாலஞ்சி வருஷம் அந்தப் பணத்தச் சேத்து இவளுக்கு ஒரு கல்யாணத்தப் பண்ணி வச்சிருவேன்யா” பேரழகியான இந்தப் பொறியாளரை அந்த வேலைக்கா அனுப்புவார்கள்? ஆனால் பச்சைப்புடவைக்காரி உத்தரவை எப்படி மீற முடியும்? நிஷாவுடன் தனியாகப் பேசவேண்டும் என்று சொன்னேன். பவானி வெளியேறினாள். நிஷா அழுதாள். “கல்யாணம் காட்சி எல்லாம் வேண்டாம், சார். ஆயா வேலை பாக்க முடியாது” முன்னால் படத்தில் இருந்த பச்சைப்புடவைக்காரி என்னைப் பார்த்து “ஆகட்டும்” என்று சொன்னதுபோல் இருந்தது. “நிஷா... என்னை நம்பறியா?” “நீங்க சொன்னா அந்தப் பச்சைப்புடவைக்காரியே சொன்னமாதிரி சார்” “பல்லக் கடிச்சிக்கிட்டு ஒத்துக்கம்மா” “சுதந்திரமாப் பாடித் திரிய வேண்டிய வானம்பாடிய இப்படி கூண்டுக்குள்ள அடைக்கறீங்களே நியாயமா” “சில சமயம் கூண்டுக்குள்ள இருக்கறது நமக்குப் பாதுகாப்பா இருக்கும். முட்டையிலிருந்து வந்த புழு கொஞ்ச நாள் கூண்டுக்குள்ள இருந்து அப்புறம்தானே பட்டாம்பூச்சியா வெளிய வரது? கூண்டுல இருக்கும்போதுதானே அதுக்கு சிறகு முளைக்குது?” “வெறுப்பா இருக்கு, சார். இருந்தாலும் உங்களுக்காக செய்யறேன். என் வாழ்க்கைக்கு நீங்கதான் பொறுப்பு’ நான்கு மாதங்கள்ஓடிவிட்டன. நிஷாவின் நிலைமை எப்படி இருக்கிறது என்று அறிய ஆர்வமாக இருந்தது. பவானியிடமிருந்து விலாசம் வாங்கிக்கொண்டு போனேன். பெரிய வீடு. செழிப்பான இடம்போல் இருக்கிறது. இல்லாவிட்டால் முப்பதாயிரம் ரூபாய் செலவழித்து நர்ஸ் வைத்துக் கொள்வார்களா? நிஷாவின் உறவினர் என்று சொன்னதும் என்னை ஒரு ஆள் உள்ளே அழைத்துக்கொண்டு போனான், ஒரு முதியவர் படுக்கையில் அமர்ந்தபடி இருமிக்கொண்டிருந்தார். நிஷா அருகில் நின்றபடி அவர் நெஞ்சை நீவி விட்டுக்கொண்டிருந்தாள். நிஷா என்னைப் பார்த்துச் சிரித்தாள். நிஷாவிற்கு உதவி செய்ய இன்னொரு நடுத்தர வயதுப் பெண் இருந்தாள். என்றாலும் இஞ்ஜினியரிங் படித்த ஒரு இளம்பெண் நாளெல்லாம் நோயாளியுடன் ஒரு வீட்டில் அடைந்து கிடப்பது கொடுமைதான். பச்சைப்புடவைக்காரி என்ன கணக்கு போட்டிருக்கிறாள் என்று யாருக்குத் தெரியும்? சில நிமிடம் கழித்து நிஷா என்னோடு வெளியே வந்தாள். “உன்ன எப்படிம்மா நடத்தறாங்க? பாதுகாப்பா இருக்கேல்ல?” “ஒரு பிரச்னையுமில்ல, சார். பெரியவர் என்னை தன் மகள் மாதிரிப் பாத்துக்கறாரு. என் பிறந்த நாளுக்கு புதுத் துணி எடுத்துக் கொடுத்தாரு. நல்லா சாப்பாடு போடறாங்க. சம்பளத்த பேங்க்ல என் பேர்ல போட்டு வச்சிருக்கேன். சனிக்கிழமை மத்தியானம் காரைக் கொடுத்துடறாங்க. அதுல கடைத்தெருவுக்குப் போறேன். அப்படியே அம்மா, பிரண்ட்ஸ் எல்லாம் பாத்துட்டு வந்துடறேன். நல்லா இருக்கேன் சார். என்ன வற்புறுத்தி சம்மதிக்க வச்ச உங்களுக்கு கடன்பட்டிருக்கேன்” அவள் ஆயிரம் சொன்னாலும் என் மனம் ஆறவில்லை. அவள் தலையில் கை வைத்து ஆசி வழங்கிவிட்டுக் கிளம்பினேன். நிஷா பாதுகாப்பான கூண்டில் இருக்கிறாள் என்பது உண்மைதான். வாழ்க்கையின் யதார்த்தங்களைப் புரிந்துகொண்டு பக்குவமாகிவிட்டாள் என்பதும் உண்மைதான். அவளுக்கு எப்போது சிறகுகள் முளைக்கும்? எப்போது அவள் சுதந்திரப் பறவையாக வானில் பறக்கப் போகிறாள்? பச்சைப்புடவைக்காரி ஏன் இந்த வழியைக் காட்டினாள்? மனம் நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தது. ஒரு வாரம் திட உணவைத் தவிர்த்து நிஷாவிற்காக நோன்பிருந்தேன். வெள்ளிக்கிழமை சொக்கநாதர் கோயிலுக்குச் நடந்து சென்றுகொண்டிருந்தேன். “அவிச்ச பனங்கிழங்கு சூடா இருக்கு, சாமி. வாங்கிக்கங்க” “இல்லம்மா. நான் திட உணவு சாப்பிடாம விரதம் இருக்கேன்” “அதை முடித்து வைக்கத்தான் நான் வந்திருக்கிறேன்” பச்சைப்புடவைக்காரியை அடையாளம் கண்டு வணங்கினேன். “நிஷாவிற்கு என்னாகும் என்று தானே கலங்குகிறாய்?” நான் தலைகுனிந்தேன். “நிஷாவின் வருங்காலம் எப்படி இருக்கும் எனக் காட்டுகிறேன்” நிஷா வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. பெரியவரை நன்றாகக் கவனித்துக்கொண்டிருந்தாள். நடுவில் இரண்டு முறை ஊதியம் உயர்ந்துவிட்டது. திடீரென ஒரு நாள் பெரியவர் இறந்துவிட்டார். நிஷாவின் வேலை போய்விட்டது. ஒரு வகையில் நிஷாவிற்குக் விடுதலை கிடைத்துவிட்டது. என்றாலும் இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் பெரியவர் உயிருடன் இருந்திருந்தால் கணிசமானப் பணம் சேர்ந்திருக்குமே! அப்படியும் இல்லாமல் இப்படியும் இல்லாமல் ஆகிவிட்டதே! நிஷா பழையபடி வேலை தேடத் தொடங்கினாள். ஒரு நாள் மாலை அவர்கள் வீட்டிற்கு ஒரு கார் வந்தது. காரிலிருந்து ஒரு நடுத்தர வயதுக்காரர் இறங்கினார். “இங்க நிஷாங்கறது...’’ “நான்தான்...” “என் பெயர் ராஜபாண்டியன். நான் ஒரு வக்கீல். நேத்துத்தான் பெரியவர் எழுதின உயிலை படிச்சேன் இறந்து போன பெரியவர் தன்னுடைய வீட்டையும் பேங்க்ல இருக்கற அம்பது லட்ச ரூபாய் பணத்தையும், லாக்கர்ல இருக்கற நுாறு பவுன் நகையையும் உங்க பேர்ல எழுதி வச்சிருக்காரும்மா” தாய்க்கும் மகளுக்கும் பேச்சே வரவில்லை. எனக்கு அழுகையே வந்துவிட்டது. முன்னால் நின்றவளின் காலில் விழுந்து வணங்கினேன். “என்ன தாயே நடந்தது” “நிஷா பேரழகி. அறிவாளி. அதனால் அழகில்லாதவர்களையும் அவள் அளவுக்கு அறிவில்லாதவர்களையும் அநியாயத்துக்குக் கேலி செய்து கொண்டிருந்தாள். அவளால் காயப்பட்டவர்கள் கொடுத்த சாபம்தான் அவளைத் துன்பக்குழியில் தள்ளியது. அதிலிருந்து மீள அவள் மனதில் அன்பு வேண்டும். அதனால்தான் அவளுக்கு வேலை கிடைக்காமல் செய்து உன் மூலம் ஒரு நோயாளியைப் பார்த்துக் கொள்ளும் வேலையைக் கொடுத்தேன். முதலில் அவள் இந்த வேலையை வெறுத்தாள். அந்த நோயாளி இவள் மீது காட்டிய அன்பு இவள் மனதை மாற்றி விட்டது. அவள் மனதிலும் அன்பு சுரக்கத் தொடங்கியது. அந்த அன்பின் வெள்ளத்தில் அந்த நோயாளிக்கும் நற்கதி கிடைத்தது. நிஷாவிற்கும் செல்வம் கிடைத்து விட்டது” “நிஷாவை வாழ வைப்பது என தீர்மானித்துவிட்டீர்கள். அதற்கு ஏன் தாயே இப்படி சுற்றி வளைத்து என்னிடமே கம்பி கட்டுகிறீர்கள்?” “நான் வாழ வைக்கவில்லையப்பா. அவள் மனதில் இருந்த அன்புதான் அவளை வாழ வைத்தது” “அன்பு என்றால் என்ன? பச்சைப்புடவைக்காரி என்றால் என்ன?” அன்னை பெரிதாகச் சிரித்தாள். நான் அழுது கொண்டிருந்தேன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar