Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » புன்னகைதான் பேரழகு
 
பக்தி கதைகள்
புன்னகைதான் பேரழகு


ராமனின் பாதங்களில் தன் தலை வைத்துப் பணிந்தான் பரதன். பிறகு ராமனின் பாதுகைகளை எடுத்துத் தன் தலைமீது வைத்துக் கொண்டான். அவற்றிற்கு வலிக்கக் கூடாதே என்பதாக தன் கரங்களின் மெல்லிய வருடலாகப் பிடித்துக் கொண்டான். ராமனிடமிருந்து விடை பெற்றான்.
பரதனும் மற்றவர்களும் திரும்பிச் செல்வதைக் கண்களில் பாசம் துளிர்க்கப் பார்த்தான் ராமன். சீதைக்கு ஒரு கவலை – ராமன் பாதுகையைக் கொடுத்துவிட்டானே, இனி அவன் இந்தக் காட்டில் கல்லிலும், முள்ளிலும் எவ்வாறு நடந்து செல்வான்? லட்சுமணனோ வேறு வகையாகத் தீர்மானித்துக் கொண்டான் – ராமன் செல்லும் பாதையில் இடர்ப்படுத்தும் கல், முள் மற்றும் பிற தடைகளை அகற்றியபடி, தான் முன்னே செல்வது என்று தீர்மானித்துக் கொண்டான்.
மூவரும் தம் நடைப் பயணத்தைத் தொடர்ந்தார்கள். சற்று தொலைவில் ஓர் ஆசிரமம் தென்படுவதைக் கண்டனர். அந்தச் சூழலைப் பார்த்ததுமே சீதை பரவசம் கொண்டாள். அத்தனை அமைதி, வேள்விப் புகையின் மணம், காதுகளையும், மனதையும் நிறைவித்த பறவைகளின் சங்கீதம், எல்லாவற்றிற்கும் மேலாக தான் என்னவோ தன் பிறந்த வீட்டிற்கே வந்துவிட்ட சந்தோஷம்…
அவளுடைய அந்த உணர்வுகளுக்கு அர்த்தம் இருந்தது. ஆம், அது அத்திரி முனிவரின் ஆசிரமம். இவர்களைப் பார்த்ததும், முனிவரின் மனைவி அனுசூயா இரு கரங்களையும் சீதையை நோக்கி நீட்டி வரவேற்றாள். அவள் உருவில் தன் தாய் சுனைனாவைக் கண்டாள் சீதை. உடனே ஓடிப்போய் அவளுடைய கரங்களில் பாசச் சிக்குண்டாள். ராமனும் லட்சுமணனும் முனிவரின் பாதம் தொட்டு வணங்கினர்.
ஏற்கனவே அவர்களைப் பற்றி நன்கு அறிந்திருந்த அத்திரி முனிவரும், அனுசூயா தேவியும் அவர்களைத் தங்கள் குழந்தைகள் போலவே பாவித்தனர்.  ராஜ போகத்துடன் வாழ்ந்த தன் மகள், இப்படி மரவுரி அணிந்து, மிகச் சாதாரணமான தோற்றத்தில் வந்து நிற்பதைக் கண்டால் ஒரு தாயின் மனம் எத்தனை வேதனைப்படுமோ அப்படி உணர்ந்தாள் அனுசூயை.
நடந்த விஷயங்களைப் பற்றிப் பேசி மனதை கசப்பாக்கிக் கொள்ள விரும்பாமல் முனிவர் அவர்களிடம் வேள்வி, யாகம்,  தத்துவம் என்று பலவாறாகப் பேசி, விளக்கி அவர்கள் மனதுக்கு இதமாக ஒத்தடம் கொடுத்தார். அனுசூயையும் சீதைக்குத் தலைவாரி, பின்னலிட்டு, பூச்சூட்டி, தன் ஆபரணங்களை அணிவித்து, அவளுடைய பேரழகைக் கண்டு தன் கரங்களால் அவள் முகம் வழித்துத் தன் நெற்றிப் பொட்டுகளில் வைத்து நெட்டி முறித்து திருஷ்டி கழித்தாள்.
அவர்களுடைய உபசரணைகளால் பெரிதும் மகிழ்ந்த மூவரும், அன்றிரவு அவர்களுடன் தங்கி, மறுநாள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். சீதை, அனுசூயைத் தனக்கு அணிவித்த நகைகளை கழற்ற முனைந்தபோது, உடனே தடுத்தாள் அனுசூயை. ‘‘தன் மகளுக்கு ஒரு தாய் அளிக்கும் சீதனம் இவை. உனக்குதான், கழற்றாதே’’ என்று பேரன்புடன் கூறி அவர்களை வழியனுப்பி வைத்தாள். சீதையின் கடைக் கண்களில் நீர் துளிர்த்து, வழிந்து, கன்னங்களில் உருண்டோடியது.
கானக வாழ்க்கை இத்தனை சந்தோஷமாக இருக்கும் என்று சீதை உண்மையிலேயே எதிர்பார்க்கவில்லைதான். இந்த அனுபவம் அபூர்வமானது, ஆனந்தமானது என்ற நிறைவு அவள் மனதில் பொங்கியது. தன் கணவனை மெல்ல நோக்கினாள். அது, ‘இந்த நகைகளில் நான் அழகாக இருக்கிறேனா?’ என்று கேட்பது போலிருந்தது.
‘இந்த நகைகளைவிட உன் புன்னகைதான் பேரழகு. இந்த ஆபரணங்கள் உன்னை அணிந்து, தாம் மேலும் அழகு பூண்டவையாக ஆகியிருக்கின்றன’ என்று ராமனும் பார்வையாலேயே பதில் சொன்னான். சீதை வெட்கத்தால் முகம் சிவந்தாள்.
ஆனால் அந்த மகிழ்ச்சிக்கும் சோதனை வந்தது.
அம்மூவரும் தண்டகாரண்யம் என்ற பகுதிக்கு வந்தார்கள். அப்போது நிலத்திலும் கருமேகம் தோன்றுமோ என்று வியக்க வைக்குமளவுக்கு ஒரு பிரமாண்ட அசுரன் அவர்கள் முன் தோன்றினான். விராதன் என்ற பெயர் கொண்ட அவன் விகாரமாக சிரித்தபடி சீதையைப் பற்றினான், நீண்ட காலடி எடுத்து விரைந்தான்.
திடீரென ஏற்பட்ட இந்த அசம்பாவிதத்தால் அதிர்ந்து போனார்கள் சகோதரர்கள். உடனே அரக்கனை விரட்டினார்கள். பலவாறாகப் போக்குக் காட்டிய அவன் ஒரு கட்டத்தில் சீதையை கீழே விட்டுவிட்டு ராம, லட்சுமணரை இரு கரங்களால் பற்றிக் கொண்டான். அதைக் கண்டு சீதை பதறி, கதறினாள். தொடர்ந்து ஓடி வந்தாள்.
‘‘தம்பி, இவன் அழிக்கப்பட வேண்டியவன்’’  என்ற ராமன், உடனே தன் உடைவாளை உருவி அரக்கனின் வலது புஜத்தை வெட்டி சாய்த்தான். அதே பாணியில் லட்சுமணனும் இடது புஜத்தை வீழ்த்தினான்.
தடுமாறி கீழே விழுந்தான் விராதன். பலவாறாக வெட்டுண்டும் அவன் உயிர் பிரியாமலிருப்பதைக் கண்ட ராமன், ‘‘தம்பி, இவனை இப்படியே பூமிக்குள் புதைத்து விட்டால் இவன் மடிவது உறுதி’’ என்று யோசனை தெரிவித்தான். உடனே லட்சுமணன் பெரியதொரு பள்ளத்தைத் தோண்ட, தன் காலால் விராதனை எத்தி அந்தப் பள்ளத்துக்குள் தள்ளினான் ராமன். பரபரவென்று லட்சுமணன் மண்ணைத் தள்ளி பள்ளத்தை மூடியபோது, ஓர் ஒளியாக அதிலிருந்து எழுந்தான் அரக்கன்.
‘‘கந்தர்வனான நான், இந்திர சபையில் ஆடலழகி ரம்பையை மோகித்ததால், அரக்கனாகித் துன்புறுமாறு என்னை சபித்து விட்டான் குபேரன். அவனே, ராம பாதத்தால் உனக்கு விமோசனம் கிட்டும் என்றும் அருளினான். அந்த வகையில் எனக்கு மீண்டும் கந்தர்வ பதவி அளித்த தங்களுக்கு, குறிப்பாகத் தங்கள் பாதங்களுக்கு என் வந்தனங்கள்’’ என்று பணிவாய் வணங்கிக் கூறிவிட்டு, விண்ணேகினான்.
சீதை பிரமித்துப் போனாள். ராமனின் கால் துாசால் கல்லாயிருந்த அகலிகை பெண்ணாக மாறிய சம்பவத்தை அவள் கேள்விப்பட்டிருந்தாள். இப்போது ஓர் அரக்கனே மீண்டு கந்தர்வனாகிய அதிசயம் கண்டாள். ‘பரதன், ராமனின் பாதுகைகளைப் பெற்றுச் சென்றதும் நன்மைக்குதானோ, இந்த அரக்கன் சாப விமோசனம் பெறுவதற்காகத்தானோ’  என்று எண்ணி வியந்தாள்.
அதே சமயம், கானகத்தில் சாதுவான முனிவர்கள்,  ஐந்தறிவு மிருகங்கள், பறவைகள், ஊர்வன மட்டுமல்ல, அரக்கர்களும் அவ்வப்போது தோன்றுவார்கள் என்ற உண்மையையும் உணர்ந்தாள். அவள் தேகம் லேசாக பயத்தால் நடுங்கியது.
அருகிலிருந்த ராமன் அவளது மனதை அறிந்து அன்புடன் அணைத்துக் கொண்டான். ‘பயப்படாதே, ஆனால் எதற்கும் தயாராக இரு’  என்று அறிவுறுத்துவது போல இருந்தது அந்த அரவணைப்பு!
விராதன் வீழ்ந்தான் என்ற செய்தி கேட்டு தண்டகவன முனிவர்களும் ஏனைய குடியோரும் பெருந்திரளாக ஓடோடி வந்து ராமனைப் போற்றி வணங்கினர். தங்களது குடில்களுக்கு அவர்கள் விருந்தினர்களாக வர வேண்டும் என்றும் அம்மூவரும் அங்கேயே தங்கியிருக்க வேண்டும் என்றும் கோரினார்கள். மூவரும் அவர்களுடைய உபசரணைகளை ஏற்றுக் கொண்டனர்.
அவர்களிடத்தில் ராமன், ‘‘தங்கள் கோரிக்கை என்ன, நான் தங்களுக்காகச் செய்ய வேண்டிய பணிகள், நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் உள்ளனவா’’ என்று அன்புடன் கேட்டான்.
‘‘நிச்சயம் இருக்கிறது. முக்கியமாக விராதன் போன்ற பல அரக்கர்கள் அவ்வப்போது திடீரென தோன்றி எங்களைத் துன்புறுத்துகிறார்கள். அவர்களை வதைத்து எங்களுக்கு நற்கதி அருள வேண்டும்’’ என்று பரிதாபமாகக் கேட்டுக் கொண்டார்கள்.
‘‘கட்டாயமாகச் செய்கிறேன்’’ என்று உறுதியுடன் சொன்னான் ராமன். இவ்வாறு உறுதியளித்த அவன் தற்செயலாக சீதை பக்கம் திரும்பினான்,
சீதையோ, ‘‘பல தீர்த்தங்களில் நீராடி, முனிசிரேஷ்டர்களை தரிசித்து நாடு திரும்பும்படிதான்  தங்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதை விடுத்து இப்படி அரக்கர்களை அழிப்பேன் என்று முனிவர்களுக்காக சபதம் மேற்கொள்கிறீர்களே, இது முறையா’ என்று கேட்டாள்.  
‘‘சீதா, உன்னைக் கரம் பிடித்தபோது உன்னை எந்நாளும் கைவிட மாட்டேன் என்று உறுதியளித்தேன். என்னுடன் வரவேண்டிய அவசியமில்லாவிட்டாலும் எனக்காக உடன் வந்திருக்கும் லட்சுமணனையும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். அதே சமயம், தர்ம நிபந்தனையாக கைவிடவோ, விட்டுக் கொடுக்கவோ வேண்டிய சந்தர்ப்பம் வந்தால் நான் அவ்வாறு செய்யத் தயங்கவும் மாட்டேன். ஆனால் என்னைச் சரணடைந்திருக்கும் இந்த முனிவர்களுக்கு நான் கொடுத்திருக்கும் வாக்கை மட்டும் எந்நாளும் மீறவே மாட்டேன்’’ என்று உறுதியாகச் சொன்னான்.
சட்டென முகம் மலர்ந்தாள் சீதை. ‘ஒரு வில், ஒரு இல் என்று வாழும் என் தெய்வம் ஒரு சொல் என்பதிலும் உறுதியாக இருக்கிறதே! இந்த பதிலை எதிர்பார்த்துதானே நான் அந்தக் கேள்வி கேட்டேன்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டு மகிழ்ந்தாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar