Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மூக்கில் விரல் வைத்த ஐயப்பன்
 
பக்தி கதைகள்
மூக்கில் விரல் வைத்த ஐயப்பன்


சரணம் என்ற சொல்லுக்கு ‘இரண்டறக் கலத்தல்’ என்றும், ‘ஐயப்பனிடம் சரணடைகிறேன்’என பொருள். ‘ஐயப்பா! உன் நற்குணங்கள் அனைத்தும் எனக்கும் வர வேண்டும்’ என்று அவனை மன்றாடிக் கேட்பதன் குறியீடே சரணம். அவன் பெறாத தாய்க்காக கூட புலிப்பால் கொண்டு வந்தான். இன்று நம்மில் எத்தனை பேர் பெற்றவர்களை சரியாகக் கவனிக்கிறோம். அவர்களது அடிப்படை தேவைகளை நிறைவேற்றுகிறோம்...வெறுமனே சரணம் என கோஷம் போட்டால் போதாது. அதன் காரணத்தை உணர்ந்து சொல்ல வேண்டும். சரணம் என்ற சொல் எப்படி பிறந்தது தெரியுமா?
ஐயப்பனின் வளர்ப்பு தந்தை ராஜசேகரன், பந்தள ராஜாவாக இருந்தார். ஐயப்பன் 12 வயது வரை அவரிடம் வளர்ந்து, விடைபெறும் சமயம் வந்தது. ராஜா அழுதார். அவரைத் தேற்றிய மணிகண்டன்,“தந்தையே! மரணத்துக்கு வயது இல்லை. நான் தெய்வப்பிறவியாயினும், மனிதனாகப் பிறந்து விட்டேன். மனிதராய் பிறந்தவர் மாள்வது நிச்சயம். அதுபற்றி கவலை கொள்ளாதீர்கள். அதேநேரம், நான் உங்கள் ஆட்சிக்குட்பட்ட சபரிமலையில் குடியிருக்க விரும்புகிறேன். எனக்கு ஒரு கோயில் எழுப்புங்கள். இந்தப் பணியில் தங்களுக்கு தடங்கல் ஏற்படலாம். அதைத் தகர்க்க, உங்கள் உடலில் யாரும் அறியாவண்ணம் சுரிகை என்னும் இந்த ஆயுதத்தை பொருத்துகிறேன். அது தடையைத் தகர்க்கும்” என்று சொல்லி மறைந்தார்.
ராஜசேகர மன்னனும் பணியைத் துவங்கினார். தேவலோக அரசன் இந்திரன் இதைக் கேள்விப்பட்டு, பூலோகத்தில் இப்படி ஒரு கோயில் எழுமானால், தேவலோகத்தை அனைவரும் மறந்து விடுவர். அதன் சிறப்பு குறைந்து விடும் எனக்கருதி, பூலோகம் வந்து பணியை நிறுத்தும்படி சொன்னான். ராஜசேகரன் பணிவுடன் அதை மறுத்து விட்டார். கோபமடைந்த இந்திரன் தன வஜ்ராயுதத்தை அவர் மீது ஏவ, மன்னர் கைகளை தலைக்கு மேலே துாக்கி, “சுவாமியே சரணம் ஐயப்பா” என்று அந்த ஐயப்பனிடமே சரண் அடைந்தார்.
அவர் கையை உயர்த்தும் போது, அவரது சுண்டுவிரல் சுரிகை மீது பட, அது நெருப்பை உமிழ்ந்தபடி, வஜ்ராயுதத்தை நோக்கி பாய்ந்தது. வஜ்ராயுதம் அழிந்தது. தொடர்ந்து சுரிகை இந்திரனை விரட்ட, அவன் மும்மூர்த்திகளை சரணடைந்தான். அவர்கள் தங்களால் ஏதும் செய்ய இயலாது என கைவிரித்ததும், ஐயப்பனையே சரணடைந்து “சுவாமியே சரணம் ஐயப்பா” எனக் கூவினான்.
 ஐயப்பன் அவனிடம்,“அந்த ஆயுதம் இப்போது என் கட்டுப்பாட்டில் இல்லை. அதை நான் பந்தள மன்னருக்கு தானம் செய்து விட்டேன். அவரையே அணுகுங்கள்” என சொல்லி விட்டார். இந்திரனும் பந்தள மன்னரை சரணடைய, ஆயுதத்தை ராஜா திரும்பப் பெற்றார். பின்னர் தேவலோக சிற்பி மயனை வரவழைத்த இந்திரன் கோயில் கட்டும் பணியில் உதவும்படி உத்தரவிட்டான்.
ஆக முதன் முதலில் சரண கோஷம் இட்டவன் இந்திரன் தான். அவனைத் தொடர்ந்தே இன்று எல்லா பக்தர்களும் சரண கோஷம் எழுப்புகின்றனர்.
எல்லாம் வல்ல ஐயப்பனுக்கு எல்லாம் தெரியும். ஆனால், ஒன்றே ஒன்றுக்கு மட்டும் அவருக்கும் விடை தெரியவில்லை. நமக்கும் இன்று வரை விடை தெரியவில்லை. காஞ்சி மஹாபெரியவர் இந்த புதிர் பற்றி அழகாக ஒருமுறை பேசினார்.
அப்போது பதினாறாம் நுாற்றாண்டு. நடராஜப்பெருமான் திருநடனமிடும் சிதம்பரத்தில், 1554ல் அவதரித்தவர் அப்பைய தீட்சிதர் என்ற மகான். மிகப்பெரிய அறிஞர். அவர் காலத்திலேயே வாழ்ந்த மற்றொரு அறிஞர் தாதாசாரியார். இருவரும் அன்றைய மன்னருக்கு நெருக்கமானவர்கள். மன்னருக்கு ஏதாவது சந்தேகம் எனில், இவர்கள் மூலமாக கேட்டு தெரிந்து கொள்வார். அந்த மன்னர் விஜயநகர ராமராயர், வேலுார் சின்னபொம்ம நாயக்கர் அல்லது தஞ்சாவூர் வீர நரசிம்ஹ பூபாலர் ஆகிய மூவரில் யாரோ ஒருவர். அவர்கள் கோயில் ஒன்றுக்கு சென்றனர். அங்கே ஒரு அதிசய ஐயப்பன் சிலை இருந்தது. ஐயப்பன் என்றால் குத்துக்காலிட்டு அமர்ந்திருப்பர். கைகள் கால்கள் மீது கம்பீரமாக இருக்கும். இங்கே ஒரு வலது கை ஆட்காட்டி விரலை மூக்கின் மேல் வைத்திருந்தார். நமக்கு ஏதாவது சிந்தனை வந்தால், கை விரல் தானாக மூக்கிற்கு சென்று விடும். அதுபோல் ஐயப்பனுக்கு என்ன சிந்தனை?
மன்னர் கோயிலில் இருந்த அர்ச்சகரை அழைத்தார். “இதென்ன அதிசயம்! இதற்கு காரணம் தெரியுமா?” என்றார்.
“மகாராஜா! காரணத்தை நான் அறியமாட்டேன். ஆனால் ஒன்று மட்டும் தெரியும். யார் ஒருவர் ஐயப்பன் இப்படி இருப்பதற்குரிய காரணத்தை சரியாகக் கண்டுபிடித்து சொல்கிறாரோ, அப்போது  கைவிரலை எடுத்து விடுவார் என்று இதை வடித்த சிற்பி சொல்லிச் சென்றதாக, கேள்விப்பட்டுள்ளேன். அந்த சிற்பியின் கனவில் இதே வடிவில் ஐயப்பன் தோன்றினாராம். அதை சிற்பி வடித்து விட்டார்” என்றார்.
மன்னர் தாதாசாரியார் பக்கம் திரும்பினார்.
“அறிஞர் பெருமகனே! தாங்கள் அறியாதது ஏதுமில்லை. காரணம் உங்களுக்கு புரிகிறதா?” என்றார். தாதாசாரியார் மிகுந்த நம்பிக்கையுடன் ஒரு ஸ்லோகத்தை சொன்னார். அதன் பொருள் இதுதான்.
மக்களுக்கு துன்பமிழைக்கும் பூதங்களை அடக்கியாளும் பரமசிவன், அவற்றில் ஒரு பகுதியை கணபதியிடம் ஒப்படைத்து கணநாதன் என்ற சிறப்பு பெயரைக் கொடுத்துள்ளார். இன்னொரு பகுதியை என்னிடம் (ஐயப்பன்) கொடுத்து, பூதநாதன் என்று பெயரிட்டுள்ளார். ஐயப்பன் விஷ்ணுவுக்கு பிள்ளை என்பதால் பிரம்மாவுக்கு சமமான தெய்வ அந்தஸ்து பெற்றவர். ஆனால் அவரைச்  சுற்றி பூதங்களை பரப்பி, அவற்றைக் காவல் காக்கும் பணியில் பரமசிவன் ஈடுபடுத்த காரணம் என்ன என்று யோசிக்கிறார் போலும் என்று தாதாசாரியார் சொன்னார்.
இந்த விளக்கத்தை சாஸ்தா ஏற்கவில்லை. மூக்கில் இருந்து விரலை எடுக்கவில்லை.
“சரி...அப்பைய தீட்சிதரே! உங்களுக்கு ஏதாவது தோன்றுகிறதா? சொல்லுங்கள்...” என்றார் மன்னர்.
அப்போது தீட்சிதர் ஒரு ஸ்லோகம் மூலமாக விளக்கம் தந்தார்.
“எனக்கு தந்தை சிவன். அவரது துணைவியரான பார்வதியும், கங்கையும் என்னைப் பெறாவிட்டாலும், தந்தையின் துணைவியர் என்ற முறையில் எனக்கு தாய் ஆகிறார்கள். என்னைப் பெற்றவளோ விஷ்ணுவாகிய மோகினி. அப்பாவின் மனைவி அம்மா... அண்ணனின் மனைவி அண்ணி... தம்பியின் மனைவி மைத்துனி...இப்படி உலகத்தில் உறவுமுறை உண்டு. ஆனால் என் அம்மாவின் மனைவியான லட்சுமியை நான் எப்படி அழைப்பது?” என்று சிந்திக்கிறார் சாஸ்தா” என்று விளக்கம் அளிக்கவும், மூக்கில் இருந்த விரலை எடுத்து வழக்கமான நிலைக்கு வந்து விட்டது சிலை.
இன்று வரை அந்தக் கேள்விக்கு ஐயப்ப சுவாமிக்கும் விடை கிடைக்கவில்லை. நமக்கும் விடை கிடைக்கவில்லை. எனினும், தனது சுவையான வரலாறைப் படிக்க வாய்ப்பளித்த அந்தப் பெருமானுக்கும் காலமெல்லாம் கடமைப்பட்டிருப்போம்.
சுவாமியே சரணம் ஐயப்பா


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar