Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மனைவியை மயக்கிய சாமியார்
 
பக்தி கதைகள்
மனைவியை மயக்கிய சாமியார்


முன்னால் அமர்ந்திருந்த ரவி வருமானவரித் துறை அதிகாரி. 55 வயதிருக்கும். ஆரம்ப காலத்தில் நிறைய லஞ்சம் வாங்கிக் கொண்டிருந்தார் என்று தெரியும். பின் திடீரென ஒரு நாள் திருந்திவிட்டார். இப்போது அவர் நேர்மையின் மறுவடிவமாகத் திகழ்கிறார் என்று கேள்வி.மகளுக்குத் திருமணமாகிவிட்டது. மகன் அமெரிக்காவில் படித்துக்கொண்டிருக்கிறான்.
“என் மனைவிய ஒரு சாமியார் மயக்கிட்டாரு, சார். ஆன்மிக வழிலதானே போறான்னுவிட்டுட்டேன். விபரீதமாயிருச்சி.  புடவை வாங்கணும் நகை வாங்கணும்னு எங்கிட்ட பத்தாயிரம் இருபதாயிரம்னு அப்பப்ப கேப்பா. நானும் கொடுப்பேன். எல்லாப் பணத்தையும் அந்த சாமியார்கிட்ட கொடுத்திருக்கா. யாகம் பண்றேன், ஹோமம் பண்றேன், பரிகாரம் பண்றேன்னு லட்ச லட்சமாக் கறந்துட்டான் அந்த அயோக்கியன். எனக்குத் தெரிஞ்சி அவகிட்ட 200 பவுன் நகை இருந்துச்சி. இப்போ 20 பவுன்கூட இல்ல.
“பணமும் நகையும் போனாப் போகுது, சார். பித்துப் பிடிச்சவ மாதிரி இருக்கா. தெரிஞ்சவங்க, தெரியாதவங்கன்னு வித்தியாசம் பாக்காம அந்தச் சாமியாருக்காகப் பிரச்சாரம் பண்ணிக்கிட்டு இருக்கா சார். அவளப் பத்தி நிறையப் புகார் வந்துருச்சி. அவமானத்துல தற்கொலை பண்ணிக்கலாமான்னு கூடத் தோணுது.”
“உங்க மனைவி எப்படி.. நான் என்ன சொல்றேன்னா…”
“அவ நெருப்பு, சார். தப்புத்தண்டா எதுவும் நடக்கல. கடவுள் பக்தி அதிகம். அந்தச் சாமியார்தான் கடவுள்னு நெனச்சி ஏமாந்துக்கிட்டிருக்கா. இவ ஏமாந்ததோடு இல்லாம இன்னும் நிறையப் பேர அந்தச் சாமியார்கிட்ட சேத்துவிட்டிருக்கா. இதெல்லாம் எதுல போய் முடியும்னே தெரியல, சார்’’
எனக்கு என்ன பேசுவதென தெரியவில்லை. முன்னால் இருந்த பச்சைப்புடவைக்காரியின் படத்தையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.
“உங்களுக்கு ஜாதகம் பாக்கத் தெரியுமா?”
தன் பையில் இருந்து ஒரு கற்றைக் காகிதங்களை மேஜையில் வைத்தார் ரவி.
அறைக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.
“உங்களுக்கு ஏதோ தபால் வந்திருக்காம். கையெழுத்துப் போடணுமாம்”
வெளியே ஓடினேன். அலுவலக வாசலில் நின்றிருந்த தபால்காரியைப் பார்த்தவுடன் அவள் யாரென தெரிந்து விட்டது.  அவள் கால்களைத் தொட்டு வணங்கினேன்.
“புலம்புகிறானோ?”
“ஆம், தாயே. எப்படி ஆறுதல் சொல்வதென்று…’’
“நான் சொல்கிறேன். காதைக் கொண்டு வா”
அன்னை சொன்னதைக் கேட்டு அதிர்ந்தேன்.
“ஆறுதல் தேடி வந்தவரை இப்படியா அச்சுறுத்துவது”
“அதிர்ச்சி வைத்தியம். உனக்குச் சொன்னால் புரியாது. நான் சொன்னதைச் செய்”
கையில் ஏதோ தபாலைத் திணித்துவிட்டு அன்னை மறைந்தாள்.
உள்ளே போனேன்.
“ரவி சார், ஜாதகம் பாப்பீங்களான்னு கேட்டீங்கல்ல? எனக்கு கிரகங்களப் பத்தித் தெரியாது. ஆனா அந்தக் கிரகங்களக் கட்டி மேய்க்கறவதான் என் எஜமானி.  நீங்க இன்னும் அதிகமான கஷ்டங்களச் சந்திக்கணும்னுதான் தோணுது”
“ஐயையோ என்ன சொல்றீங்க”
“பதறாதீங்க. இன்னும் கொஞ்சம் இருட்டினப்பறம் ஒட்டுமொத்தமா முழுசா விடிஞ்சிரும்”
“பரிகாரம்’’
“மனசுல அன்பு குறையாமப் பாத்துக்கங்க. எந்தச் சமயத்துலயும் நம்பிக்கை இழக்காதீங்க. உங்க மனைவிய வெறுக்காதீங்க”
“போங்க, சார். ஏதாவது நல்லது செய்வீங்கன்னு பாத்தா...’’
விட்டேத்தியாகச் பேசிவிட்டு ரவி கிளம்பிவிட்டார். அன்று முதல் ரவிக்காகவும் அவர் மனைவிக்காகவும் பிரார்த்தனை செய்யத் தொடங்கினேன்.
ஒரு மாதம் கழித்து ஒருநாள் கோயிலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன். அலைபேசி ஒலித்தது.
“ரவிசாருக்குத் திடீர்னு ஹார்ட் அட்டாக். ஆஸ்பத்திரில சேத்திருக்காங்க. நாளைக்கு பைபாஸ் பண்ணப் போறாங்களாம். உங்ககிட்டச் சொல்லச் சொன்னாரு”
இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மருத்துவமனைக்கு ஓடினேன். கண்ணில் தென்பட்ட மருத்துவரிடம் ரவியைப் பற்றிய விவரங்களைச் சொல்லி விசாரித்தேன்.
“இப்போ பாக்க முடியாது”
“இன்கம் டாக்ஸ் சீப் கமிஷனரை விட்டு உங்க ஆஸ்பத்திரி எம்டிகிட்ட சொல்லச் சொல்லட்டுமா?”
“என்னையே மிரட்டுகிறாயா’’
கதறியபடி அவள் காலில் விழுந்தேன்.
“கவலைப்படாதே. ஒரு பிரச்னை இன்னொரு பிரச்னையைத் தீர்த்துவிட்டது”
“புரியவில்லையே”
“அவனுடைய பிரச்னையே அவன் மனைவிதான். ஒரு சாமியாரின் வார்த்தைகளில் மயங்கிக்கிடக்கிறாள் என்பதுதான் ரவியின் கவலை. ரவிக்கு இப்படி ஆயிற்று என தெரிந்தவுடன் அவள் கதறியபடி இங்கே வருவாள். ரவி ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் சொல்வார்கள். அவள் அந்தச் சாமியாரைத் தொடர்பு கொள்வாள். கணவரைக் காப்பாற்று என்று கெஞ்சுவாள். “அவன் விதி முடிந்துவிட்டது. அவன் சாவான். நிரந்தரமாக இங்கே வந்துவிடு”  என்று அந்த வஞ்சகன் சொல்வான். அவனது நோக்கத்தைப் புரிந்துகொள்வாள். பின் என்னிடம் மாங்கல்யப் பிச்சை கேட்பாள். அவள் கேட்டதையும் கொடுப்பேன். கூடவே மன உறுதியையும் கொடுப்பேன். அதன்பின் சாமியாரைத் தேடிப் போக மாட்டாள். தன் கணவனுக்கு உறுதுணையாக இருப்பாள்”
“முதலில் ஏன் அவள் புத்திகெட்டு சாமியாரிடம் போனாள்?”
“மகளுக்குத் திருமணமாகி விட்டது. மகன் எங்கேயோ இருக்கிறான். அவளுக்கு வாழ்வில் பிடிப்பு இல்லாமல் போய்விட்டது. ரவியும் அவளுடன் அதிக நேரம் பேசுவதில்லை. அந்தச் சமயத்தில் சாமியார் யாகம் செய், ஹோமம் செய், முக்தி அடைவாய் என ஆசை வார்த்தை கூறி மயக்கிவிட்டான்.  உலகில் எப்போதும் போலிக்குத்தான் கவர்ச்சி அதிகம்”
“அதனால்…”
“அவளுக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்ய வேண்டியதாயிற்று. ரவியின் கர்மக்கணக்கில் கொஞ்சம் துன்பப்படவேண்டும் என்றிருந்தது. இரண்டையும் சேர்த்து முடிச்சுப் போட்டு ரவிக்கு இதய நோயைக் கொடுத்து அவன் மனைவியை மீட்டு விட்டேன். இனிமேல் எந்தப் பிரச்னையும் இல்லாமல்  இருவரும் நீண்ட காலம் வாழ்வர்”
“எல்லாம் சரிதான் தாயே. ஆனால் ரவியின் மனைவி சாமியாரிடம் ஏமாந்தது பல லட்சங்கள் இருக்குமே! ரவி ஒரு நேர்மையான அதிகாரி. அவருக்குப் போய் இவ்வளவு பெரிய நஷ்டம்...’’
“ஆரம்ப காலத்தில் ரவியிடம் இந்தளவுக்கு நேர்மையில்லை. தவறான வழியில் சம்பாதித்த பணத்தைத்தான் அந்தச் சாமியார் பறித்துக் கொண்டான்.  ரவிக்குப் பதவி உயர்வு கிடைக்கும். பணி நிறைவிற்குப் பின் நிம்மதியாக வாழ்வான்”
“அந்தச் சாமியார்...’’
“அவன் கணக்கு வேறு. அதை எப்படி முடிக்க வேண்டும் என எனக்குத் தெரியும். அதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது”
அன்னை குரலை உயர்த்தினாள். நான் கலங்கினேன். பின் மென்மையாக என்னிடம் கேட்டாள்.
“அவன் கிடக்கிறான். உனக்கு என்ன வேண்டும் என சொல், ரவி போன்றவர்கள் பிரச்னையுடன் வந்தால் உன் மனதிலேயே தீர்வு புலப்படும் சக்தியைத் தரட்டுமா? நீ உலகப்புகழ் பெற்று விடுவாய்”
“வேண்டாம், தாயே. அந்தச் சக்தி இருந்தால்  எனக்கு அகம்பாவம் தலைக்கேறி நானும் ஒருநாள் அந்தச் சாமியாரைப் போல் ஆகிவிடுவேன். அதுபோக இப்போது போல் உங்களை அடிக்கடி பார்க்கும் பேறும் கிடைக்காமல் போய்விடும். ஆனால் அதற்குப் பதிலாக வேறு ஒரு சக்தியைத் தருவீர்களா”
“என்ன சக்தியப்பா?”
“எனக்கு இந்த பராசக்தியே வேண்டும் தாயே. உங்கள் சக்திகள் எதுவும் எனக்கு வேண்டாம். நீங்கள்தான் எனக்கு வேண்டும். வானும் கடலும் உள்ள வரையிலும் அதற்குப் பிறகும் என்றும் உங்கள் கொத்தடிமையாக இருக்கும் வரம் வேண்டும் தாயே”
“ஆசையைப் பார். அதற்கு நீ நிறைய தவம் செய்ய வேண்டும்”
“உங்கள் அருளால் முயற்சிக்கிறேன். உங்களிடம் உங்களைத் தவிர வேறு எதையும் வேண்டாத மனதையாவது அருளுங்கள் தாயே”
கலகலவென சிரித்துவிட்டு மறைந்தாள் கனகவல்லி. மருத்துவமனை வளாகத்தில் தனியாக அழுது கொண்டிருந்தேன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar