Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பணமும் புகழும்
 
பக்தி கதைகள்
பணமும் புகழும்

நான் இருந்தது ராஜேந்திரனின் அறை. ஆண்டு ஒன்றுக்கு பத்தாயிரம் கோடி விற்றுவரவு செய்யும் தொழில் நிறுவனங்களின் தலைவர் அவர்.  அவருடைய வருடாந்தர லாபமே இரண்டாயிரம் கோடி. இந்தப் பரபரப்பான காலை நேரத்தில் என்னை ஏன் இஙகே இழுத்தடித்தார்கள் என்றுதான் புரியவில்லை.
“வாங்க சார்.”
அவரை வணங்கினேன்.
“எனக்கு சுத்தி வளைச்சிப் பேசத் தெரியாது. நேர விஷயத்துக்கு வந்துடறேன். நாங்க ஒரு தொலைக்காட்சி சேனல் ஆரம்பிக்கப்போறோம். பச்சைப்புடவைக்காரியப்பத்தின உங்க எழுத்த உலகறியச் செய்யறதுதான் அதோட ஒரே நோக்கம். உங்களுக்கு மாசம் எட்டு லட்ச ரூபாய் சம்பளம். போக வர பென்ஸ் காரு. இது போக வேற என்ன வேணும்னாலும் கேளுங்க, கொடுக்கறேன்.”
“நான் என்ன வேலை செய்யணும். …”
“பச்சைப்புடவைக்காரியப் பத்திப் பேசுங்க, எழுதுங்க. அதையெல்லாம் நாங்க சினிமாவா எடுப்போம். தொலைக்காட்சி தொடரா எடுப்போம். ஒவ்வொரு நாடாப் போய் அவளுடைய அருமை பெருமைகளப் பேசுங்க. அத ஒளிபரப்புவோம். நீங்க உலகப் புகழ் பெறணும் ஐயா. பட்டிதொட்டியெல்லாம் உங்க பேர் பரவணும்.”
“நான் ஏற்கனவே பச்சைப்புடவைக்காரியப்பத்திப் பேசிக்கிட்டிருக்கேன் எழுதிக்க்கிட்டிருக்கேன்…”
“அத யாரு நிறுத்தச் சொன்னா? நீங்க ஏற்கனவே செய்யறதத் தொடர்ந்து செஞ்சிக்கிட்டேயிருங்க. நீங்க ஆபீசுக்கு வரணுங்கற அவசியம் இல்ல. வீட்டுலருந்தே வேல பாக்கலாம். உங்களுக்கு இரண்டு உதவியாளர்கள் இருப்பாங்க. எல்லா அதிகாரிகளும் உங்களுக்குக் கீழதான் வேல பாப்பாங்க.  அவங்கள்ல யாரை வேணும்னாலும் வீட்டுக்குக் கூப்பிடலாம். இஷ்டப்பட்ட நேரம் ஆபீசுக்கு வரலாம். நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களோட மீட்டிங் போடலாம். பெரிய ஸ்டுடியோ கட்டிருக்கோம். அங்கதான் படப்பிடிப்ப நடத்தப்போறோம்.   நீங்கதான் இயக்குனர், நடிகர், நடிகைகளத் தேர்வு செய்யப்போறீங்க..”
நான் வாயடைத்துப் போயிருந்தேன்.
“இந்தாங்க அஞ்சு வருஷத்துக்கான காண்ட்ராக்ட்.  இதுல கையெழுத்துப் போட்டவுடன பத்து லட்ச ரூபாய்க்குச் செக் கொத்திடறேன்.  அது என்னுடைய அன்பளிப்பு. காண்ட்ராக்ட்ல  இல்லாத ஒரு விஷயத்தயும் சொல்லிடறேன். இந்தத் தொலைக்காட்சி நிறுவனத்துல வர லாபத்துல கால் பங்கு பச்சைப்புடவைக்காரிக்குச் சொந்தம். அத உங்க இஷ்டப்பட்ட தர்ம காரியங்களுக்கு செலவு செய்யலாம். எல்லாம் நல்லபடியா நடந்தா உங்க மூலமா நடக்கப்போற தர்ம காரியங்களே சில, பல கோடிகள் இருக்கும்.உங்களால பச்சைப்புடவைக்காரி புகழ் உலகமெல்லாம் பரவப்போகுது. என்ன சொல்றீங்க?”
திகைத்துப்போனேன்.
“ரெண்டு நாள் அவகாசம் கொடுங்க.”
“இதில் யோசிக்க என்ன இருக்கு?”
“பச்சைப்புடவைக்காரியின் உத்தரவை வாங்கிக்கிட்டு.. .”
அவளுடைய உத்தரவை வாங்க வேண்டும் என்றுதான் கோவிலுக்குக் கிளம்பினேன். இது அவளுடைய வேலை, அவள் கொடுத்த வேலை – இதற்கு எதற்கு அவள் உத்தரவு? அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு வரவேண்டியதுதான்.
மனதை அழுத்தும் தணிக்கை வேலைகளுக்கிடையே அபூர்வமாகக் கிடைக்கும் சில மணி நேரங்களில் அவள் புகழைப் பாடிக்கொண்டிருந்த எனக்கு அவள் புகழைப்பாடுவதே முழுநேர வேலையாகப் போகிறது. வாழ்க்கைக்காக பணம் சம்பாதித்தாக வேண்டும் என்ற நிலை போய் என் காட்டில் பணமழையே பொழியப்போகிறது.
சுவாமி சன்னிதியில் தரிசனம் முடித்துவிட்டுத் வெளியேறியபோது பிராகாரத்தில் சற்றுத் தளி நின்றிருந்த ஒருத்தி என்னை அழைத்தாள்.
“வெளியே போக என்ன வழி?”
வழி சொல்லத் தொடங்கியவனை இடைமறித்தாள்.
“நான் எப்படியப்பா வெளியே போக முடியும்? எனக்கு வெளியே என்று ஒன்றுமே இல்லையே!”
அவளை விழுந்து வணங்கினேன்.
“கோடீஸ்வர வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துவிட்டாய்! உலகப் புகழ் பெறப்போகிறாய். வாழ்த்துக்கள்.”
“அதில் ஏதாவது பிரச்சினைகள்.. “
“அந்த அளவு பணத்தையும் புகழையும் நிர்வகிக்கும் திறமை  உனக்கு இருக்கிறதா என்ன?”
“பணத்தையும் புகழையும் கொடுக்கும் நீங்கள் அதை நிர்வகிக்கும் திறமையைக் கொடுக்க மாட்டீர்களா என்ன?  உங்கள் சன்னிதில் பிரசாதமாகக் குங்குமம் கொடுத்தார்கள்.  கூடவே அதைத் தாங்கும் காகிதத்தையும் கொடுத்தார்களே? அதேபோல் பிரசாதமாகப் பணத்தையும் புகழையும்  கொடுக்கும் நீங்கள் அதை ஆளும் சக்தியை கொடுக்கமட்டீர்களா என்ன?”
“நிச்சயம் கொடுப்பேன். ஆனால் பிரச்சினை அது இல்லை.. நீ...”
சுற்றி முற்றிப் பார்த்தேன். சுவாமி சன்னிதி பெரிய பிரகாரத்தில் இருந்தோம். நேரமாகிவிட்டதால் அந்தப் பக்கம் ஆள் நடமாட்டமேயில்லை.  ஆழமான அமைதி இருந்தது.
“உனக்கு ஒரு சின்ன தேர்வு வைக்கிறேன். என் முன்னால் நின்றபடி கண்களை மூடிக்கொள். ஒரு நிமிடம் நீ என்னையே நினைத்துக்கொண்டிருக்கவேண்டும். “
“கரும்பு தின்னக் கூலியாக் கேட்பார்கள்?  இதோ தொடங்குகிறேன்.”
இந்த மனிதப் புழுவிற்காக தன் இறைவி வேலையையெல்லாம் விட்டுவிட்டு வந்த அந்த் இனியவளை நினைக்காமல் இருப்பதுதான் கஷ்டம். நினைப்பதுதான் எவ்வளவு சுகம்!
உச்சந்தலையில் தொடு உணர்வு ஏற்பட கண்களைத் திறந்தேன்.
“அதற்குள் ஒரு நிமிடமாகிவிட்டதா, தாயே?”
“ஒன்றரை மணி நேரம் ஆகிவிட்டது. நான் உன்னை எழுப்பாவிட்டால் நீ சமாதி நிலையை அடைந்திருப்பாய்.”
“ஆக நீங்கள் வைத்த தேர்வில் வெற்றி  பெற்றுவிட்டேன் என்று சொல்லுங்கள்.”
“ஆமாம். முதல் கட்டத்தில் தேறிவிட்டாய். இப்போது இரண்டாவது கட்டத்  தேர்வு.”
“காத்திருக்கிறேன், தாயே!”
“இந்த முறை நீ கண்களை மூடிக்கொண்டபின் இந்திரலோகத்தில் தேவேந்திரனின் சபையில் இருப்பாய். அங்கே இருந்தபடி ஒருநிமிடம் என்னையே நினைத்துக்கொண்டிருக்கவேண்டும்.”
கண்களை மூடியவுடன் ஓரு பெரிய அரங்கில் இருந்தேன். என்னைச் சுற்றி தேவலோகக் கன்னிகள் போல் இருந்தவர்கள் அரைகுறை ஆடைகளில் நடனமாடிக்கொண்டிருந்தார்கள்.  நல்ல  உணவின் வாசனை மூக்கைத் துளைத்தது. பெண்கள் சூடியிருந்த மலர்களின் வாசனை என்னை இம்சை செய்தது.
‘கணக்குப் பார்க்காமல் என்னிடம் கருணை காட்டும் அந்தக் கனகவல்லியை.. .  ‘
நடனமாடிக்கொண்டிருந்த ஒரு பெண் மிக அருகில் வந்து என் கன்னத்தைத் தட்டிவிட்டுப் போனாள்.
“அல்லலப்டுவோர் நெஞ்சமெல்லாம்.. “ பராசக்தியே சொல்லிக்கொடுத்த மந்திரத்தை சொல்ல யத்தனித்தேன். என்னை முடிக்கவிடவில்லை. தேவலோகப் பெண் ஒருத்தி என் வாயில் எதையோ ஊட்டிவிட்டாள். ஓஹோ இதைத்தான் அமிர்தம் என்கிறார்களா? அதன் சுவையில் ஆழ்ந்து போய்விட்டேன். அன்னையை மறந்தே போனேன்.
எத்தனை காலம் அந்த மயக்க நிலையில் இருந்தேனோ தெரியாது. முகத்தில் சில்லென்று தண்ணீர் விழுந்தது. திடுக்கிட்டு விழித்தேன்.
முன்னால் அண்டசராசரங்களையே ஆட்டுவிக்கும் அழகி அனாயாசமாக நின்றிருந்தாள்.
“இந்த முறை எவ்வளவு நேரம் தியானித்தேன், தாயே?”
“தேவலோகத்தின் இன்பங்களில் இரண்டு மணிநேரம் திளைத்துக்கொண்டிருந்த நீ என்னை ஐந்து நொடிகள்கூட தியானிக்கவில்லை.”
வெட்கித் தலைகுனிந்தேன்.
“நீ இப்போது வாழும் வாழ்க்கை முதலில் செய்த தியானம்.  அமைதியான பிரகாரத்தில்புலனின்பங்கள் உன்னைத் திசைதிருப்பாத இடத்தில் என் முன்னிலையில்என்னை தியானம் செய்தாய். உன்னால் மனமொருமித்து தியானிக்க முடிந்தது. அந்த அளவு பணமும் புகழும் வந்தபின் தியானிப்பது தேவலோக சுகங்களுக்கு நடுவில் என்னை நினைக்க முயற்சி செய்வதைப்போல். சில நொடிகள்கூட உன்னால் என்னை நினைக்து தியானம் செய்ய முடியாது. பின் எப்படி என்னப் பற்றிப் பேசுவாய், எழுதுவாய்?”
  வேரறுந்த மரம் போல் அவள் கால்களில் விழுந்தேன்.
“தாயே எனக்கு செல்வம், புகழ், சுகங்கள், இன்பங்கள் எதுவும் வேண்டாம். எனக்கு நீங்கள்தான்வேண்டும். என் மனம் எப்போதும் அன்பால்  நிறைந்திருக்கவேண்டும். அதாவது நீங்கள் என் மனதில் வாசம் செய்ய வேண்டும்.”
“மனிதர்களிடம் அன்பு காட்டுவதை ஒரு தவமாகச் செய்து வா.அந்தத் தவத்தின் பயனாக நானே உன்னிடம் மலர்வேன்.”
அன்னையின் கால்களில் விழுந்தேன். நிமிர்ந்தபோது அவள்அங்கு இல்லை.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar