Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அரக்கர் அழிவு ஆரம்பம்
 
பக்தி கதைகள்
அரக்கர் அழிவு ஆரம்பம்

பஞ்சவடி வாழ்க்கை அஞ்சத்தக்கதாக இருக்கும் என்று சீதை எதிர்பார்க்கவேயில்லை. இத்தனைக்கும் இரண்டாண்டுகள் இங்கே வசித்தாகிவிட்டது. ஆனால், திருஷ்டி பட்டதுபோல சூர்ப்பணகையின் வரவு எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிடும் போலிருக்கிறதே! அந்த அழகுத் தோற்றத்துக்கு உள்ளேதான் எத்தனை விகாரமான மனம்! ஆயிரம்தான் அழகு வேஷம் பூண்டாலும் அரக்க குணம் அகலுமா என்ன?
ஏற்கெனவே தன்னிடம் விஷமம் செய்த விராதன் வதம் செய்யப்பட்டான் என்றாலும், அதுவும் ராமனால் கிடைத்த சாபவிமோசனமே என்பதால் சீதை அந்த அரக்கத்தனத்தை மறந்துவிட்டாள். ஆனால் இப்போது தன் கணவரைத் தன்னிடமிருந்து பிரிக்க சூர்ப்பணகை முயற்சிக்கிறாள் என்றால் அதை அவ்வளவு சுலபமாக விட்டுக் கொடுத்துவிட முடியுமா?  மைத்துனர் அவளுடைய மூக்கு, காதுகளை அறுத்து அலங்கோலப்படுத்தி தண்டனை அளித்ததை விட, மாய்த்தே இருக்கலாமோ? ஏனென்றால் அந்த தண்டனைத் தன்னைத் திருத்திக் கொள்ளதான் என்று அவள் கருதினாளானால் அது பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஆனால் இந்த சம்பவம் மோகத்தின் வேகத்தால் உருவானது. அரக்க இனம் என்பதால் அந்த வேகம் பெரும்புயலாக மாறிவிடக் கூடாதே என்று அவள் கவலைப்பட ஆரம்பித்தாள்.
அவளுடைய கவலை நிஜமாகுமோ என்று பயப்பட வைக்கும் வகையில் அடுத்தடுத்து சம்பவங்கள் நிகழ்ந்தன. ஆமாம், தன் சகோதரன் கரனின் காலில் போய் விழுந்தாள் சூர்ப்பணகை. தன்னை ஒரு மானிடன் அவமானப்படுத்திவிட்ட வேதனையை கதறலாகச் சொன்னாள். அரக்கருக்கு நிகரில்லை என்று இறுமாந்திருந்த கரன், உடனே கொதித்தெழுந்தான். தன் படைகளை பஞ்சவடி நோக்கி ஏவினான்.
கொக்கரித்தபடி சீறி வந்த அரக்கர் கூட்டத்தால் பஞ்சவடியே பஞ்சாய்ப் பறந்துவிடுமோ என்ற அச்சம் எழுந்தது. அப்பகுதி வாழ் மக்களும், முனிவர்களும், தாய் இறக்கைக்குள் தஞ்சமடையும் கோழிக் குஞ்சுகள் போல ராமனின் பர்ணசாலை முன் உடல் நடுங்க வந்து நின்றார்கள்.
அது நிச்சயமாக சூர்ப்பணகையின் தூண்டுதலால்தான் இருக்கும் என்பதை நிச்சயித்த ராமன், சீதைக்குக் காவலாக லட்சுமணனை நிறுத்திவிட்டு, தான் தனியனாக அந்த அரக்கர் படைமுன் போய் நின்றான். அவனைப் பார்த்து எள்ளி நகையாடிய அவர்கள் வாய் மூடுமுன்னரே அனைவரையும், சரசரவென தொடுத்த அம்புகளால் வீழ்த்தி சாய்த்தான் ராமன். என்ன அதிசயம், ராமன் கணையை எடுத்ததுதான் தெரியும், அடுத்த கணமே அரக்கர்கள் உயிர் இற்று வீழ்ந்தனரே!
விவரம் கேள்விப்பட்ட கரனும், சூர்ப்பணகையும் கடுங்கோபம் கொண்டார்கள். ராமனைத் தானே அழித்து தங்கையின் கண்ணீரைத் துடைப்பதாக சபதம் மேற்கொண்ட அவன் தனக்கு முன்னால் தன்னுடைய பெரும் படையையும், தளபதிகளையும் போர் புரிய அனுப்பினான். பின்னே நின்று நடப்பவனவற்றை கவனித்தான்.
இப்போது லட்சுமணன் தனக்குப் போரிட வாய்ப்பளிக்கும்படி கேட்க, ராமன் அவனை அமைதிப்படுத்தி, மீண்டும் சீதைக்குக் காவலாக்கி, தான் முன் சென்றான். சுற்றிலும் கருமேகக் கூட்டமாய் அரக்கர்கள் ஆரவாரித்தபடி தாக்க, ராமன் மின்னலாய் நடுவே நின்று அவர்களை தீய்த்துக் கொண்டிருந்தான்.
பர்ணசாலையின் சாளர மூங்கில் கம்புகளைப் பற்றியபடி தொலைவில் நிகழும் அந்தப் போர்க் காட்சியை சீதை நடுங்கும் உடலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். மனம் பதைபதைத்தது. இத்தனை அரக்கர்களை தனியொருவனாகத் துண்டாடுகிறானே தன் கணவன்! ராமனின் போராவேசத்தைக் கண்டு அவள் பிரமித்தாள். பூவாளியிலிருந்து மேல் நோக்கிப் புறப்பட்டு அப்படியே பெருங்குடையாகக் கவிழும் ஆயிரக்கணக்கான அம்புகள் தைக்க, அரக்கர்கள் மரண கோஷம் எழுப்பி வீழ்ந்து கொண்டிருந்தார்கள். எப்படி இத்தனை பிரமாண்ட ரூபனாக ராமன் உருவெடுத்தான்! எப்படி இத்தனை லாவகமாக, மின்னலை விட வேகமாக, சுழல் காற்றின் ஆவேசத்தோடு போரிடுகிறான்!
அந்தக் காட்சியைப் பார்க்கப் பார்க்க அவள் கண்களில் நீர் பெருகியது. அவன் மீது ஏற்கெனவே இருந்த நம்பிக்கை மேலும் வலுப்பெற்றது. அவனுக்கு ஒன்றும் ஆகாது என்றும், அவன் அரக்கர்கள் அனைவரையும் ஆகாதவர்களாக ஆக்கி விடுவான் என்ற உறுதி அவளுக்கு உள்ளூர இருந்தாலும், ஒரு மென்மையான மனைவியாக, அவன் உடல் நோக போரிடுவது கண்டு, நெஞ்சம் கசிந்து விம்மினாள். அனைவரையும் அழித்தொழித்து பர்ணசாலைக்கு மீளும் அவனுடைய புஜங்களும், முதுகும், கைகளும், கால்களும் நொந்து போயிருக்கும்.  இளையவனை மூலிகைப் பச்சிலைகள் கொண்டு வரச்சொல்லி அவற்றை அனலில் வாட்டி ராமனின் உடலில் ஒத்தி, ராமனுடைய வலியைப் போக்க வேண்டும், மூலிகைத் தைலத்தை காயங்களில் தடவி ஆற்ற வேண்டும் என்றும் தீர்மானித்துக் கொண்டாள். அவன் வேதனையை இவளால்  தாங்க இயலாததால் கண்களிலிருந்து கண்ணீர்  அருவியாகப் பெருகிற்று.
பர்ணசாலைக்கு வெளியே நின்றிருந்த லட்சுமணனும் அந்தப் போர்க் காட்சியைக் கண்டான். அவன் உடல் தினவெடுத்தது. அண்ணனுக்கு உதவத் துடித்தது. எக்கணமும் அண்ணன் அழைக்கக் கூடும் என்று எதிர்பார்த்து வில்லையும், அம்பையும் மிக உறுதியாகப் பற்றியிருந்தான் அவன். அப்படியே ராமன் அழைக்கும் பட்சத்தில் இங்கிருந்தவாறே அம்புகளை சரமாரியாக எய்து பகைவர்களை அழித்தபடியே செல்ல வேண்டும் என்றும் தனக்குள் போர் திட்டம் தயார் செய்து கொண்டான்.
ஆனால் ராமனோ வெகு அநாயசமாக ஒரு அரக்க உயிரும் மிஞ்சிவிடாதபடி போக்கிவிட்டு வெற்றி வீரனாக பர்ணசாலைக்குத் திரும்பினான். ஓடோடிப் போய் அவன் கால்களில் லட்சுமணன் விழ, சீதை பறந்தோடி வந்து அவனைத் தழுவிக் கொண்டாள்.
ஆனால், போர்க்களமாக மாறிவிட்ட அந்தப் பகுதிக்குப் கொலைப்பசி ஆறவில்லை. அடுத்தடுத்து அரக்கர் படைத் தளபதிகளும், திரிசிரா, தூடணன் என்று தலைவர்களும் மாய, இறுதியாக வந்த கரன் அகங்காரத்துடன் பிளிறினான். இவன் தனியே கவனிக்கப்பட வேண்டியவன் என்று கருதிய ராமன், அகத்தியர் தனக்களித்த விஷ்ணு தனுசை எடுத்து நாணேற்றி கரனை நோக்கி அம்பெய்தான். அடுத்த கணம் கரன் பெருங்குரலெடுத்து வீழ்ந்து மாய்ந்தான்.
பஞ்சவடி முனிவர்களும், அப்பகுதி மக்களும் ஓடோடி வந்து ராமனைப்  போற்றித் தொழுதார்கள். ஆயிரக்கணக்கில் அரக்கர்களும், பத்துக் கணக்கில் அவர்களின் தலைவர்களும் அழிந்தொழிந்தது கண்டு, இனி எந்த காலத்திலும் அவர்களின் பிரச்னை இன்றி, நிம்மதியாக வேள்விகள் இயற்றலாம் என்று மன ஆறுதல் அடைந்தார்கள்.
‘‘போதும், இந்த ஆரண்ய வாழ்க்கை, வாருங்கள், இப்போதே அயோத்தி சென்றுவிடலாம்,‘‘ என்று சீதை விம்மலுடன் ராமனிடம் கெஞ்சினாள்.
அவளை ஆதூரத்துடன் பார்த்தான் ராமன். ‘‘அயோத்தி சென்றால் அந்த நாட்டு மக்களை மட்டும் நான் பாதுகாத்தால் போதும், இப்போது கானகம் வந்ததால், பார், எத்தனை அப்பாவி மக்களுக்கு நான் கேடயமாக இருக்க முடிகிறது! இன்னும் ஒரு வருடம்தானே, இதோ ஓடிவிடும். ஒருவேளை இந்த போர்ச் செயல்கள் எல்லாம் நான் அயோத்தி திரும்பிய பிறகு பகை கொண்ட அயல்நாட்டு எதிரிகளை எதிர்கொள்வதற்கான ஒத்திகையோ…!‘‘ என்று சிரித்தபடி கேட்டான்.
‘‘உங்களைப் பற்றி அறியாத அரக்கர்கள் வேண்டுமானால் உங்கள் மீது பகை பாராட்டலாம், அண்ணா. ஆனால் அயோத்தியைச் சூழ்ந்துள்ள நாடுகளில் உங்கள் மீதான மதிப்பு ஏகோபித்து வளர்ந்திருக்கிறது என்ற உண்மையை நான் அறிவேன்,‘‘ லட்சுமணன் பாசம் மேலிட, கண்களில் நீர் பளபளக்கச் சொன்னான். ‘‘எப்படி தர்மம் சார்ந்தவர்கள் மீது உங்களால் அன்பும், நட்பும் செலுத்த முடிகிறதோ, அதேபோல பிற அனைவரும் தங்கள் மீது பாசமும், மரியாதையும் கொண்டிருக்கிறார்கள்.‘‘
தம்பியை நெருக்கமாக அணைத்துக் கொண்டான் ராமன். ‘‘எனக்கு வேறு என்ன பேறு வேண்டும்? இத்தனை உறுதுணையாகத் திகழும் உன் போன்ற தம்பி உள்ளவரை எனக்குதான் என்ன குறை!‘‘
ஆனால் சூர்ப்பணகை அதிர்ந்து, திகைத்துதான் போனாள். இப்படி ஒரு பராக்கிரமமா? தன் அண்ணன்மார்களின் படை வீரர்களில் நாலைந்து பேரின் வலிமையைக்கூட ராமனால் தாக்கு பிடிக்க முடியாது என்று குறைத்து மதிப்பிட்டிருந்த அவள், பிரமித்துதான் போனாள். ஆக, இவனைக் கணவனாக அடைவது என்பது தனக்குக் கிட்டும் பெரும் பாக்கியம் என்ற எண்ணத்தை மேலும் வலுப்படுத்திக் கொண்டாள்.
அதற்குத் தடையாக இருக்கும் சீதையை இவனிடமிருந்து பிரிக்க வேண்டும். அப்படிச் செய்யக்கூடிய ஒருவன் தன் மூத்த அண்ணன், ராவணன். அவனை சீதை மீது மோகம் கொள்ளச் செய்துவிட்டால், அவன் சீதையைக் கவர, பிறகு வெகு எளிதாகத் தான் ராமனைஅடைந்து விடலாம்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar