Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அன்பு குறைந்தால் ஆபத்து
 
பக்தி கதைகள்
அன்பு குறைந்தால் ஆபத்து


என் அறைக்குள் நுழைந்தவளைப் பார்த்துத் திடுக்கிட்டேன். நாற்பது வயது இருக்கும். வெள்ளைச் சேலை. நெற்றியில் திருநீறு. என்னைப் பார்த்து கைகூப்பும்போதே கண்கள் கலங்கிவிட்டன.
“நான் பார்கவி”
“உங்கள் கணவர்...’’
“இறந்துட்டாரு. இல்லய்யா, அவரச் சாகடிச்சிட்டாங்க.  தன்னுடைய அண்ணன அப்பாவா, தெய்வமா நெனச்சாரு.  அவரு. சொல்றத எல்லாம் நம்பினாரு. நீட்டின இடத்துல கையெழுத்துப்போட்டாரு.  பலன் – எல்லாச் சொத்தையும் பிடுங்கிக்கிட்டு துரத்திவிட்டுட்டாரு. ஒத்தப் பொண்ணுக்குக் கல்யாணம் பேசி முடிச்சோம்..காசு இல்லாததால கல்யாணம் நின்னு போச்சி. அதுகூட என் புருஷனுக்குப் பெரிசாத் தெரியலய்யா.தகப்பனா, தெய்வமா நெனச்சிக்கிட்டிருந்த அண்ணன் இப்படி துரோகம் பண்ணிட்டாரேங்கற கவலையில  செத்திட்டாருங்கய்யா”
“ஐயையோ! இப்ப நீங்க...’’
“எங்கப்பா சீதனமா கொடுத்த பிளாட் என் பேர்ல இருக்கறதுனால நானும் பொண்ணும் நல்ல வேளையா தெருவுல நிக்கல. நகையும், பணமும் இருக்கு. அத வச்சி எப்படியாவது சமாளிச்சிருவேன். ஆனா என் புருஷனுக்குச் சேர வேண்டிய அம்பது கோடி ரூபாய்ச் சொத்த அநியாயமாப் பறிச்சிக்கிட்ட  அண்ணண்காரன் சாகணும்யா. கை, கால் இழுத்துக்கிட்டு, கண்முண் சோறு இருந்தாலும் சாப்பிட முடியாம பசியாலத் தவிச்சி  சாகணும்யா’’
பார்கவியின் பேச்சை காதுகொடுத்துக் கேட்க முடியவில்லை. ஆனாலும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தேன்.
அன்று இரவு துாக்கம் வரவில்லை. விதவைக் கோலத்தில் இருந்த பார்கவி பேசிய வார்த்தைகள்  என் மனத்திரையில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தன.
மறுநாள் அதிகாலையிலேயே மீனாட்சி கோயிலை நோக்கிக் கிளம்பினேன். வழியில் தெருவைக் கூட்டிக் கொண்டிருந்த பெண். குப்பையை என் காலில் போட்டாள். நான் முறைத்தேன்.“பார்கவி தன் மனதில் இருந்த குப்பைகளை உன் மீது கொட்டியபோது பரிதாபப்பட்டாய்.  நான் குப்பை கொட்டினால் முறைக்கிறாய்?”
பச்சைப்புடவைக்காரியின் கால்களில் விழுந்து வணங்கினேன்.
“பார்கவி பாவம் தாயே! இந்த வயதில்...’’
“தப்பான வழியில் செல்கிறாள். ஏற்கனவே அவள் மனதில் அன்பு குறைந்ததால்தான் இந்த நிலைமை வந்தது. இந்தக் கோபமும் சாபமும் அவள் மனதில் இருக்கும் அன்பை இன்னும் குறைத்துவிடும்...”
“அவள் கணவனை ஏமாற்றிய அண்ணனின் கதி?”
“பத்து வருடங்கள் கழித்து அவன் படும் பாட்டைப் பார்.”
காட்சி விரிந்தது. ஒரு மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சைப் பிரிவு. அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு மனிதன் மயக்க நிலையில் இருந்தான்.
மருத்துவர்கள் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது.
“இந்தக் கொடுமை யாருக்குமே வரக்கூடாது.  முகத்துல கேன்சர். வாயில முக்கால் வாசிய, மூக்குல பாதிய ஆப்பரேஷன் பண்ணி எடுத்தாகணும். அதுக்கப்பறம் எப்படிச் சாப்பிடுவாரு, எப்படி வாழ்வாருன்னு தெரியல.
“கிட்னியும் பழுதடைஞ்சிருச்சி. இதயத்துலயும் பிரச்சினை இருக்கு. இதவிட ஒரு மனுஷனுக்குக் கேடுகெட்ட நரகம் இருக்கவே முடியாது.”
காட்சி முடிந்தது.
“இந்தக் காட்சியை உடனே பார்கவியிடம் சொல்லி அவள் மனதுக்கு ஆறுதலைத் தருகிறேன்.”
“ இதை அவள் அறிந்தால் அவள் மனதில் வன்முறை இன்னும் அதிகமாகும். அன்பு இன்னும் குறையும். அதனால் துன்பம் இன்னும் அதிகமாகும். அதுபோக நான் உன்னிடம் பகிர்ந்துகொண்டது தேவ ரகசியம். அதை நீ வெளியில் சொன்னால் அதே துன்பத்தை நீயும் அனுபவிக்கவேண்டும்”
“தாயே! இப்போது என்னதான் செய்வது?”
“நான் இப்போது என்ன செய்கிறேன்?”
“தெருவைப் பெருக்கி சுத்தமாக்குகிறீர்கள்.”
“அதையே நீயும் செய். பார்கவியின் மனதில் உள்ள வெறுப்பு, கோபம்  போன்ற குப்பைகளை அகற்று.”
பார்கவிக்கு விடிவு காலம் பிறக்க வேண்டும் என்று தொடர்ந்து பிரார்த்தித்தேன்.
ஒரு வாரம் கழித்து வந்த பார்கவியைப் பார்த்தவுடனேயே அவள் மனதை சுத்தப்படுத்த வழி புலப்பட்டுவிட்டது..
“நான் செய்வது தவறுதான். வேறு வழி தெரியவில்லை, தாயே! “ –பச்சைப்புடவைக்காரியிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டேன்.
பார்கவி கோபத்துடன் சத்தமாகப் பேசத் தொடங்கினாள். நான் இன்னும் அதிகமாகக் கத்தினேன்.
“போட்டுத் தள்ளப்போறேன்.”
“என்னய்யா சொல்றீங்க?”
“உங்க புருஷனோட அண்ணனத் தூக்கப்போறேன்.”
“புரியலய்யா.” பார்கவியின் குரல் கம்மியிருந்தது.
“அந்தாளு செஞ்சது பச்சைத் துரோகம். பச்சைப்புடவைக்காரி அவனத் தண்டிப்பா. ஆனா அதுவரைக்கும் நாம ஏன் காத்திருக்கணும்? அதனால என் செல்வாக்கப் பயன்படுத்தி அந்தாளக் கொலை செய்ய ஏற்பாடு பண்ணிட்டேன். இன்னும் ஒரு வாரத்துல அவன் கதை முடிஞ்சிரும். அதுக்கப்பறம் நீங்க அந்தக் குடும்பத்துமேல மோசடி கேஸ் போட்டீங்கன்னா உங்க கணவர் சொத்துல பாதியாவது கெடைக்கும்ல? “
“என்ன பேத்தறீங்க? அந்தாளக் கொன்னா என் புருஷன் திரும்பி வந்திருவாரா?”
“இல்லம்மா. அம்பது கோடி சொத்தாச்சே! அதுல பாதி கெடைச்சாலும் போதுமே! உங்க பொண்ணு கல்யாணத்த  நல்லபடியா நடத்தலாமே!”
“அதுக்காக அவன் அளவுக்கு நானும் கீழ்த்தரமா நடந்துக்கணுமா?”
“என்னம்மா சொல்றீங்க?”
“அண்ணன்காரன்தான் வஞ்சகன். அண்ணி மனசுத் தங்கம். அவங்கதான் அண்ணன்காரனுக்குத் தெரியாம இப்போ என் பொண்ணு கல்யாணத்துக்கும் ஏற்பாடு பண்ணிக்கிட்டிருக்காங்க. அந்த நல்ல மனுஷி தாலிய அறுத்துத்தான் எனக்குச்  சொத்து வரணும்னா எனக்குச் சொத்தே வேண்டாம்யா.”
“அது வந்து..  “
“பச்சைப்புடவைக்காரியப் பத்தி எழுத உங்களுக்கு எந்தத் தகுதியும் இல்ல. மனசுல இவ்வளவு வன்முறைய வச்சிக்கிட்டு அன்பே வடிவானவளப் பத்தி எழுதறது பாவம்யா.”
நான் திகைத்தேன்.
“என் புருஷனோட அண்ணன் நல்லா இருக்கணும்னு பச்சைப்புடவைக்காரிகிட்ட வேண்டிக்கப்போறேன். நான் கஷ்டப்படவேண்டியது என் கர்மக் கணக்கு. அதுக்கு அந்தாளுமேல  பழிபோடுவானேன்? என்னைப் பச்சைப்புடவைக்காரி எப்படியாவது காப்பாத்திருவா. ஆனா மனசுல இவ்வளவு கொலைவெறிய வச்சிருக்கற உங்கள அவ போட்டேபாத்திருவா.”
வார்த்தைக் கங்குகளை அள்ளி வீசிவிட்டுப் போய்விட்டாள் பார்கவி.
பச்சைப்புடவைக்காரியின் படத்தைப் பார்த்தபடி சன்னமாக அழுதுகொண்டிருந்தேன்.
“நீ ஏனப்பா அழுகிறாய்?”
தெருக்கூட்டுபவள் வடிவில் நம் மனதில் இருக்கும் குப்பைகளையெல்லாம் கூட்டித் தள்ளும்  பச்சைப்புடவைக்காரி நின்றுகொண்டிருந்தாள்.
“உங்களைப் பற்றி எழுதத் தகுதியில்லாதவனாகிவிட்டேனே.  நான் ஏன் வாழவேண்டும்?”
“பார்கவியின் வார்த்தைகளை மறந்துவிடு. ஆனால் நீ பலே ஆளப்பா!  தீயை வைத்தே தீயை அணைத்துவிட்டாயே. “
“பார்கவியின் மனதில் கோபம் என்னும் தீ  எரிந்துகொண்டிருந்தது. அவளைவிட அதிகமாகக் கோபம் கொண்டவன்போல்  நடித்து அண்ணன்காரனைக் கொலை செய்யப்போகிறேன் என்று சொன்னாய்.  அந்த அதிர்ச்சியில் அவள் மனதில்  இருந்த கோபம் என்னும் குப்பை அகன்றுவிட்டது. தன் கணவனின் சாவுக்குக் காரணமாக இருந்தவன் நன்றாக இருக்கவேண்டும் என்று பிரார்த்திக்கும் அளவிற்கு அவள் மனதில் அன்பு பெருகிவிட்டது. இனி எந்தக் குறையும் இல்லாமல் வாழ்வாள். உனக்கு என்ன வேண்டும் என்று சொல்.”
“எனக்குத் தெரிந்த ஒருவன் கொடிய நோயால் அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறான். அவன் குணமாக வேண்டும்.”
“யார் அவன்? என்ன நோய்?”
“பார்கவியின் கணவனுடைய அண்ணன். அவனைத் தாக்கியிருக்கும் நோய் தீமை. அந்த நோய் விரைவில் குணமாக வேண்டும்.”
“பாவி. கொடியவன். சொத்திற்காக சொந்தத் தம்பிக்கே துரோகம் செய்தவன். அவனுக்கா வேண்டிக்கொள்கிறாய்?”
“என்றாலும் அவன் ஒரு நோயாளிதானே, தாயே?  தீமை என்னும் நோயை அவனிடமிருந்து விரட்ட என்ன சிகிச்சை தேவையோ அதைச் செய்யுங்கள். என் பிரார்த்தனை ஒன்றே ஒன்றுதான்.”
“என்ன அது?”
“அல்லல்படுவோர் நெஞ்சமெல்லாம் அன்பால் என்றும் நிறையட்டும்’ என்று நீங்களே சொல்லித்தந்த பிரார்த்தனைதான் தாயே!”


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar