Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பொன்மான், பொய்மான், பெண்மான்…
 
பக்தி கதைகள்
பொன்மான், பொய்மான், பெண்மான்…


தான் அவமானமுற்றதைவிட, தன் இழிநிலைக்குப் பழிவாங்க வந்த தன் சகோதரர்கள் அழிந்தொழிந்ததைவிட, தனக்கு ராமனோ, லட்சுமணனோ கிடைக்காமல் போய்விட்டானே என்ற ஆற்றாமை சூர்ப்பணகை மனதில் பெரிதும் மண்டியிருந்தது. அவள் ஒரு திட்டம் தீட்டினாள். அண்ணனான ராவணனிடம் சீதையின் பேரழகை விவரித்துச் சொல்லி அவனை மோகம் கொள்ளச் செய்வது, பிறகு அவன் எளிதாக ராம, லட்சுமணரை ஒடுக்கி, சீதையைக் கைப்பற்றிக் கொள்ள, தான் ராம, லட்சுமணரை தன் நாயகர்களாக வரித்துக் கொள்வது…
காம உணர்வுதான் கற்பனைகளை எத்தனை விதமாக, எத்தனை வேகமாக வளர்க்கிறது, மோசமான பின் விளைவுகளைக் கொஞ்சமும் சிந்திக்க வைக்காததாக இருக்கிறது.
சூர்ப்பணகை விவரிக்க, விவரிக்க ராவணன் விகார மனம் கொண்டவனானான். ‘‘சீதை பஞ்சு போலும் மெல்லடிகள் கொண்டவள், விரல்கள் பவளம் போன்றவை, அவள் முகமோ துாய தங்கமயமான பவுர்ணமி நிலவு போன்றது, கடலைவிடப் பெரியவை அவளுடைய கண்கள். அவற்றிலும் வாள் வீச்சு போன்று இங்குமங்கும் பாயும் கண்மணிகள், செழுமையான தோள்கள் எனக்கு சரியாக விவரிக்கத் தெரியவில்லை. நாளைக்கு நீயே சென்று நேரில் பார்த்தால் பிரமித்துப் போவாய். அந்த அழகுப் பதுமை சீதையை நீ அடைவதுதான் சரியானதாக இருக்கும். உன் பராக்கிரமத்துக்கும், ராஜ்ய பரிபாலனப் பெருமைக்கும் சீதை போன்ற ஒருத்தி துணைவியானால், உன் பெயரும், புகழும் மேலோங்கும். அந்தக் கீர்த்தியால் நீ இந்த பிரபஞ்சத்துக்கே கடவுளாவாய்’’
விழிகள் விரிய, வாய் பிளக்கக் கேட்டுக் கொண்டிருந்தான் ராவணன். சீதையைப் பார்க்காமலேயே அவள் மீது தீராக் காமம் மேலிட, அவளை அடைந்தே தீருவது என்று உறுதி கொண்டான். இது நேரடியாகப் போய் கைபிடித்து இழுத்து வந்துவிடும் அளவுக்கு சுலபமல்ல என்பது சூர்ப்பணகை பட்ட அவமானத்தாலும், கரன் முதலான அரக்கர்களின் அழிவாலும் அவனுக்குப் புரிந்தது. தந்திரமாய் ஏமாற்றி வெல்ல வேண்டும்…
அவனுக்கு உடனே தன் மாமன் மாரீசன்தான் நினைவுக்கு வந்தான். மாயக்கலையில் வல்லவனான மாரீசன், ராம லட்சுமணரை திசை திருப்பி விட்டானானால் தான் எளிதாக சீதையைக் கவர்ந்து விடலாம்…
ராவணனுடைய எண்ணத்தை அறிந்து திடுக்கிட்டான் மாரீசன். ‘‘என்ன விபரீத புத்தி உனக்கு. ராமனின் மனைவி சீதையைக் கவரப் போகிறாயா? பத்து தலை இருந்தும் ஒரு தலைக்கான புத்திகூட உனக்கு இல்லையே…’’ என்று கேலி பேசினான்.
‘‘முட்டாள் மாதிரி உளறாதே! உன் தாயார் தாடகையைக் கொன்றவன் அந்த ராமன். அவன் மீது உனக்கு ஏன் இத்தனை மரியாதை?’’
‘‘உண்மைதான். என் தாயார் தன் அரக்க சுபாவம் காரணமாக ராமனால் வதைக்கப்பட்டாள். அதேபோல என் சகோதரன் சுபாகுவும் மரணமடைந்தான். ஆனால் என்னை மட்டும் கடலுக்குள் அமிழ்த்தி, ‘உன் குடும்பத்தில் நீ ஒருவனாவது பிழைத்திரு. இனிமேலாவது அசுர குணத்தை விட்டு திருந்தி வாழ்வாயாக. பிற அரக்கர்களுக்கு நீ ஒரு முன்மாதிரியாக இருந்து அவர்களையும் நல்வழிப்படுத்து’ என்று அறிவுறுத்தும் வகையில் என்னைத் தப்பிக்க வைத்தான். அவன் அத்தனை நல்லவன். அவனை ஏமாற்ற, அல்லது ஏமாற்றத் துடிக்கும் உனக்கு உதவ நான் முன்வர மாட்டேன்’’
‘‘மரீசா’’ கர்ஜித்தான் ராவணன். ‘‘எனக்கு அறிவுரை சொல்லுமளவுக்கு நீ துணிந்து விட்டாயா? என் செயலை நான் முடிக்க நீ உதவாவிட்டால், உன்னை வெட்டிக் கொன்று, சீதையை அடையும் என் எண்ணத்தை நான் நிறைவேற்றத்தான் செய்வேன்’’
மாரீசன் சற்று யோசித்தான். இந்தக் கேடு கெட்டவன் கையால் மாய்வதைவிட, புண்ணியன் ராமனின் பாணத்தால் மரிப்பதே சிறந்தது என்று நினைத்தான். அன்றே என்னை ராமன் வதைத்திருக்க வேண்டும். ஆனால் என்னால் அசுர குலத்தை மனம் திருந்த வைக்க முடியுமா என்று அவன் பெருந்தன்மையோடு சிந்தித்திருக்கிறான். ஆனால் அது இயலாது என்பது இதோ இந்த ராவணன் மூலமாகவே நிரூபணமாகிவிட்டது. சரி, இனி சந்தோஷமாக ராமன் கையாலேயே சாகலாம். ஆனால், எனக்கு இதுநாள்வரை உப்பிட்டவன் என்ற முறையில் ராவணன் சொல்லும் யோசனைகளை, அவன் திட்டப்படியே நிறைவேற்றிவிட்டு இரு பக்கமும் எந்தக் கடனும் பாக்கி இல்லாத வகையில் நிம்மதியாக சாகலாம்…
பர்ணசாலை வாசல் திண்ணையில் அமர்ந்தபடி மலர்களைத் தொடுத்துக் கொண்டிருந்த சீதை தற்செயலாக ஒரு ஒளி தன் முன்னே நிற்பதைக் கண்டாள். அது ஒரு மான். அடடா, என்ன அழகு, என்ன அழகு… அதை அப்படியே கட்டி அணைத்துக் கொள்ள அதை நோக்கி ஓடினாள். ஆனால் அதுவோ அவள் கைக்கு எட்டாதபடி எட்டிச் சென்று அவளை ஏங்க வைத்தது. பார்த்ததும் மனதை ஈர்த்த அந்த மானை அடைய வேண்டும் என்ற வேட்கை சீதையின் உள்ளத்தில் கிளர்ந்தது.
உடனே ராமனிடம் சென்று, ‘ஆணிப் பொன்னால் ஆனதும், வெகு துாரம் பிரகாசிக்கும் பேரொளி மேனி கொண்டதும், மாணிக்கக் கல்லோ என்று வியக்கும் வகையில் தீர்க்கமான செவிகளும், உறுதியான கால்களும் கொண்ட ஒரு அற்புத மான் அதோ நிற்கிறது. அதைப் பிடித்து எனக்குத் தாருங்கள்’’  என்று ஒரு குழந்தைபோல கெஞ்சினாள்.  
ராமனும் அந்த மானைப் பார்த்தான். வித்தியாசமானதாகத்தான் இருந்தது. ராமனின் விழிகள் வியப்பால் விரிவதைக் கண்ட லட்சுமணன், பதறினான். சந்தேகத்திற்குரிய இந்த மானை அண்ணனும் நம்புகிறாரே என்று கவலை கொண்டான். உடனே, ‘‘அண்ணா, இது இயற்கையான மான் அன்று. புனையப்பட்டதாகத் தெரிகிறது.  பொன்னாலான மேனி, மாணிக்கமயமான கால்கள் கொண்ட இந்த மானின் பார்வையில் மருட்சி இல்லை, பாய்ந்தோடித் தப்பிக்கும் பயந்த குணம் கொண்டதாகவும் தெரியவில்லை. ஆகவே இதைக் கைப்பற்றும் எண்ணத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்’’  என்று மனம் பதைபதைக்கச் சொன்னான்.
சீதைக்கு ஏமாற்றமாக அமைந்தது மைத்துனனின் விளக்கம். இந்த மானைப் பிடித்துப் போய், அயோத்தியில் தன் சகோதரிகளிடம் காட்டி பெருமை பேச வேண்டும் என்று அவள்தான் குழந்தைத்தனமாக, எத்தனை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தாள்! இளவல் எதிர்மறையாகப் பேசுகிறாரே!
சீதையின் தாமரை முகம் வாடுவதைக் கண்டு ராமன் மனம் கலங்கினான். தன் மனைவி தன்னிடம் இதுவரை எதுவும் வேண்டும் என்று கேட்டதேயில்லை. அயோத்தியில் அவள் எதையும் கேட்குமுன் எல்லாமே அவள் முன் நின்றிருக்கும்.  அங்கே அவளுக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால் கானகத்தில் அவள் விரும்பிக் கேட்ட ஒரே ஒரு பொருள் – இந்தப் பொன்மான்.  இதைக்கூட  நிறைவேற்றாவிட்டால் பிறகு கணவன் என்ற பொறுப்புக்கு என்னதான் மரியாதை? உடனே அவன், ‘‘லட்சுமணா... இயற்கை விநோதமானது. எத்தனையோ ஜீவராசிகள் இவ்வுலகில் உண்டு. நாம் காணாத எத்தனையோ பிராணிகள் இவ்வுலகில் எங்கும் இருக்கலாம். ஆகவே இந்தப் பொன்மான் இயற்கைக்குப் புறம்பானது என்று கருத வேண்டிய அவசியமில்லை. பரத்வாஜ முனிவரின் ஏழு புத்திரர்களும் தாம் விரும்பிக் கேட்டு பொன்னிற அன்னங்களாக மாறிய தகவல் உனக்குத் தெரியாதா? பொதுவாக இவ்வுலகப் பிராணிகளுக்கு இப்படித்தான் தோன்றவேண்டும் என்ற முறைமையும் இல்லை, இவ்வாறுதான் அழிய வேண்டும் என்ற முடிவும் இல்லை. ஆகவே வீண் கற்பனை செய்து கொள்ளாதே’’ என்று மனைவிக்கு ஆதரவாகப் பேசினான் ராமன்.
‘‘நீங்கள் இப்படி பேசி நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தால் அந்த மான் நம்மை விட்டு எங்கோ போய்விடும்’’ என்று கைகளை உதறியபடி சீதை பரபரத்தாள்.
உடனே ராமன் தன் வில், அம்பை எடுத்துக் கொண்டான். லட்சுமணனிடம், ‘‘உனக்கு நம்பிக்கை இல்லாத ஒரு விஷயத்தில் நீ இறங்க வேண்டாம். இங்கேயே சீதைக்குக் காவலாக இரு, நான் போய் அந்தப் பொன்மானைப் பிடித்து வருகிறேன்’’ என்று சொல்லிவிட்டு மான் சென்ற திசை நோக்கி விரைந்தான். சீதை குதுாகலத்துடன் காத்திருந்தாள்.
(தொடரும்) 


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar