Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அவள் செய்த அறுவை சிகிச்சை
 
பக்தி கதைகள்
அவள் செய்த அறுவை சிகிச்சை


“நான் ராம்குமார். சென்னையில ஆர்கிடெக்ட்டா இருக்கேன். வருமானவரியே வருஷத்துக்கு ஒரு கோடி கட்டறேன். கல்யாணமாகி விவாகரத்தும் ஆயிருச்சி. குழந்தை இல்ல. எனக்குத் தொழில்ல நல்ல பேரு. நாட்டுல இருக்கற பல பெரிய கட்டடங்கள வடிவமைச்சிக் கொடுத்தது நான்தான்”
பேசியவருக்கு வயது ஐம்பது. பார்க்க அழகாக இருந்தார். சென்னையில் ஒரு உணவகத்தில் அமர்ந்திருந்தோம்.
“சமீபத்தில ஒரு ஜோசியரோட வீட்டக் கட்டிக்கொடுத்தேன். ரெண்டு கோடி ரூபாய் பிராஜக்ட். ஜோசியருக்கு வீடு ரொம்ப பிடிச்சிப் போச்சு. என் ஜாதகத்த கேட்டாரு. கொடுத்தேன். கொஞ்ச நேரம் அதையே வெறிச்சி பாத்தாரு. கம்ப்யூட்டர்ல கணக்கு போட்டாரு. ‘ரெண்டு மாசத்துக்குள்ள உங்க உயிருக்கு ஆபத்து வரப்போகுது. பிழைக்கறது கஷ்டம்.’ னு சொல்லிட்டாரு. அதான்...’’
நான் என்ன செய்யலாம்ம்? எனக்கு கிரகங்களைப் பற்றி ஆனா ஆவன்னா கூடத் தெரியாதே!
“அதனால என்ன, அந்த கிரகங்கள ஆட்டிப் படைக்கற பச்சைப்புடவைக்காரியப் பத்தி தெரியுமே”
ராம்குமாரையே பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.
“பச்சைப்புடவைக்காரிகிட்ட வேண்டிக்கறேன். ஏதாவது தெரிஞ்சா கூப்பிட்டுச் சொல்றேன்”
“நான் செத்திருவேனா...சார்”
விடைபெறும் போது ராம்குமார் கேட்டது என் நெஞ்சைப் பிசைந்தது. அவர் தோளில் தட்டிவிட்டுக் கிளம்பினேன்.
அன்று மதியம் விமானத்தில் மதுரை திரும்பினேன். உணவு வழங்கிய விமானப் பணிப்பெண் என்னிடம் குனிந்து மென்மையாக “ராம்குமார் உயிருக்கு ஆபத்து வரத்தான் போகிறது. விரைவில் அவன் ஆயுள் முடியும் என்றாலும் அவனுக்கு இன்னொரு வாய்ப்புத் தரப் போகிறேன். அடுத்த மாதம் பத்தாம் தேதி நீ சென்னை வர வேண்டியிருக்கும்.”
நாட்கள் ஓடின. ராம்குமாரை மறந்தே போனேன். ஒரு வெள்ளிக்கிழமை காலையில் அலைபேசி ஒலித்தது. “ஆர்க்கிடெக்ட் ராம்குமாரோட பி.ஏ., பேசறேன். போன வாரம் சாருக்கு ஹார்ட் அட்டாக். இதயத்துக்கு ரத்தம் போற குழாயில 95 சதம் அடைப்புன்னு சொன்னாங்க. ஆபத்தான நிலையில பைபாஸ் சர்ஜரி பண்ண வேண்டியதாப் போச்சு. நேத்துத்தான் ஐசியூவுலருந்து வார்டுக்கு மாத்தினாங்க.  உங்களப் பாக்கணும்னு சொன்னாரு”
தேதியைப் பார்த்தேன். பத்து.
“உங்க பயண ஏற்பாட்டை நான் பாத்துக்கறேன் சார். இன்னிக்கு சாயங்காலமே நீங்க ராம்குமார் சாரப் பாத்தீங்கன்னா...’’
பயணத்தின்போது முன்பு பார்த்த அதே பணிப்பெண் வேடத்தில் பச்சைப்புடவைக்காரி வந்தாள்.
“அவனுக்கு வந்த ஆபத்து இன்னும் அகலவில்லை. இன்னொரு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பான் என்பதுதான் விதி.  அவன் மனதில் அன்பு அதிகமானால் உயிர் பிழைப்பான்”
“அதற்கு.. நான்...’’
“உன் மனதில் உள்ள அன்பு குறையாமல் அவனிடம் பேசு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்”
சென்னை மருத்துவமனையில் தனியறையில் நான் ராம்குமாரைப் பார்த்தபோது மாலை மணி ஆறு இருக்கும்.
“ஜோசியர் சொன்னது நெஜமாயிருச்சி.  பெரிய கண்டம்...’’
“வந்தது பெரிய கண்டமில்லை. மெல்லிய நினைவூட்டல்”
“என்ன சொல்றீங்க?”
“இதுவரை நீங்கள் வாழ்வில் மூளையை மட்டுமே பயன்படுத்தினீர்கள். உங்களுக்கு இதயமும் இருக்கிறது என்பதை நினைவூட்டவே இந்த மாரடைப்பு வந்தது’’
“இனி என்ன செய்வது?”
“உங்களுக்கு பைபாஸ் சிகிச்சை செய்த மருத்துவர் என்ன செய்தார்? இதயத்திற்கு ரத்தம் வழக்கமாகச் செல்லும் வழியில் அடைப்பு ஏற்பட்டதால் மாற்று வழியை உண்டாக்கி பிழைக்கவைத்தார். அதேபோல் நீங்களும் மாற்று வழியில் வாழத் தொடங்கினால் பிழைக்கலாம்”
“எப்படி”
“இதுவரை உங்கள் மூளையை விற்றுக் காசாக்கினீர்கள். இனிமேல் இதயம் காட்டும் வழியில் நடங்கள்”
“கோவையைச் சேர்ந்த ஒரு அறக்கட்டளை ஆதரவற்ற ஏழை முதியோருக்காக பிரமாண்டமான முதியோர் இல்லம் கட்டுகிறது. அவர்களுக்கு உங்கள் திறமையை இலவசமாக வழங்குங்கள். அதற்கு ஏராளமான பணம் தேவைப்படுகிறது. நிதி திரட்ட உதவுங்கள்”
சில நிமிடம்  மவுனம் நிலவியது. ராம்குமாரின் முகம் பிரகாசமானது.
“எனக்குப் புரிந்துவிட்டது.  நான் இன்னும் ஒரு படி மேலே செல்கிறேன். இனிமேல் வாரத்தில்  இரண்டு நாள் காசுக்காக வேலை செய்வேன். பாக்கி ஐந்து நாட்கள் சேவை மனப்பான்மையுடன் என் அறிவு, ஆற்றலை நல்லவர்களுக்காக அர்ப்பணிப்பேன்’’
“உங்களுக்கு வந்திருக்கும் கண்டம் இன்னும் முழுவதுமாக அகலவில்லை”
“பச்சைப்புடவைக்காரி என்ன இன்னும் ரெண்டு மாசம் வாழ வச்சாப் போதும். என்னால முடிஞ்ச நல்ல காரியத்தச் செஞ்சிட்டு என் சொத்த தர்ம காரியங்களுக்கு எழுதி வச்சிட்டுச் செத்திருவேன். அடுத்த ஜென்மத்துலயாவது மக்களுக்காக உழைக்கற பாக்கியத்தை பச்சைப்புடவைக்காரி கொடுக்கணும்னு பிரார்த்தனை செஞ்சிக்கங்க சார் போதும்”
ராம்குமாரை வணங்கினேன். சிறிது நேரம் அவர் கையைப் பிடித்தபடி மவுனமாக அமர்ந்துவிட்டு  சைகையால் விடைபெற்றேன்.
“சார் உங்களப் பெரிய டாக்டர் கூப்பிடறாங்க” ஒரு நர்ஸ் பதைபதைப்பாகச் சொன்னாள்.
“பேஷண்ட் ராம்குமார் சம்பந்தமா ஏதோ பேசணுமாம்”
“நான் சும்மா பாக்க வந்தவம்மா’’
“உங்களத்தான் பாக்கணும்னாங்க” என் பெயரையும் விபரங்களையும் சரியாகச் சொன்னாள். நான் ஓடினேன்.
பெரிய அறையில் நடுநாயகமாக இருந்தவளைப் பார்த்ததுமே அவள் மகா மருத்துவச்சி என்பதை உணர்ந்து  வணங்கினேன்.
“ராம்குமாரின் இதயத்தில் அறுவை சிகிச்சை செய்து அன்பை உள்ளே வைத்துக் கச்சிதமாகத் தைத்துவிட்டாயே!”
“மருத்துவம் செய்தவர்  நீங்கள். உங்கள் கையில் உள்ள மருத்துவ உபகரணம் நான். நீங்கள் நினைத்தது நடந்தது”
“அது இருக்கட்டும் உனக்கு என்ன வேண்டும் என்று சொல்”
“இரண்டு வரங்கள் வேண்டும் தாயே”
“கேள்”
“என் ஆயுளை இன்னும் இருபது வருடங்கள் அதிகமாக்குங்கள்”
“அதிகமாக்கி…”
“அந்த ஆயுளையும் ஏற்கனவே எனக்கு விதிக்கப்பட்டிருக்கும் ஆயுளையும் ராம்குமாருக்குக் கொடுங்கள். அவர் இப்போதுதான் நல்லது செய்யத் தொடங்கியிருக்கிறார். அவருக்கு நீண்ட ஆயுளைக் கொடுங்கள்”
“உன் ஆயுளைக் குறைக்காமலேயே அவனுக்கு நீண்ட ஆயுளைத் தருகிறேன். நீ கேட்காத வரத்தையும் தருகிறேன். விரைவில் அன்புள்ளம் கொண்ட ஒரு பெண்ணை சந்திப்பான். இருவரும் திருமணம் செய்து கொள்வர். இருவருக்கும் உறவு அர்த்தமுள்ளதாக இருக்கும். பல நல்ல காரியங்களைச் செய்து நிறைவாக வாழ்ந்து முடிவில் என்னை அடைவர். சரி, இரண்டாவது வரமாக என்ன வேண்டும்?”
“தாயே! இன்று ஏதோ உங்கள் புண்ணியத்தில் அன்பைப் பற்றி பேசினாலும் நான் ஒரு சாதாரண, ஆசாபாசம் நிறைந்த, பலவீனம் அதிகம் கொண்ட மனித மிருகம்தான். என் மனதில் அன்பை ஆழமாக விதைத்து அன்பின் வழியிலிருந்து நான் விலகிச் செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்“
“அன்பை வரமாகத் தர முடியாது. அதை ஒரு தவமாகத்தான் செய்ய வேண்டும்”
“அந்த தவத்தைச் செய்ய உங்கள் அருள் எப்போதும் பக்கபலமாக இருக்க வேண்டும் என்ற வரத்தைக் கொடுங்கள் தாயே!”
வெள்ளிக்காசுகளைக் கொட்டியதுபோல் கலகலவென சிரித்தபடி மறைந்தாள் மகா மருத்துவச்சி.. அவளது அன்பின் தாக்கத்தைத் தாளாமல் நான் அழுது கொண்டிருந்தேன்.
தொடரும்
..............


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar