Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பார்வதி கல்யாணம்
 
பக்தி கதைகள்
பார்வதி கல்யாணம்


இந்திரன், ‘‘நீ தேவர்கள் விரும்புவதை வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும். பார்வதியின் வடிவழகே சிவபெருமானின் மனத்தை அவளிடம் திருப்ப போதுமானதாக இருந்தாலும், அதற்கு உன் உதவியும் முக்கியம். மண்ணுடன் இருக்கும் விதைக்கு தண்ணீரும் தேவை. அப்போதுதான் அது முளைவிடும்.  
ஆகையால் உன் பாணம் ஒன்றுதான் இப்போது முக்கியம். பிறர் செய்ய முடியாத காரியம் மிக அல்பமானதாக இருந்தாலும், அதை செய்பவர் மிகுந்த புகழை அடைவர்.  அதுபோலவே தேவர்களால் செய்ய முடியாத இந்த காரியத்தை நீ செய்து, அவர்களை மகிழ்வித்து, நீயும் பெரும் புகழை அடைய வேண்டும்.  
‘‘நீ செய்யப் போகிற இந்த காரியம் தேவர்களுக்கு மட்டும் பயனளிக்கப் போகிறதென்று எண்ணாதே.  மூவுலகும் இதனால் நன்மை அடையும்.
‘‘வசந்தன் உன்னுடன் எப்பொழுதும் இருப்பவன். நான் சொல்லாவிட்டாலும் அவன் உனக்கு உறுதுணையாக இருப்பான். அக்னிக்கு உதவி செய் என்று காற்றுக்கு யாரும் கட்டளை இடுவதில்லை. அதுபோல் யாரும் கூறாமலே உனக்கு வசந்தன் உதவியாக இருக்கப்போகிறான்.  வெற்றி பெற வாழ்த்துகிறேன்’’ என்று சொல்லி மன்மதனை அன்பின் அடையாளமாக தன் கையால் தடவிக் கொடுத்தான். மன்மதன் புறப்பட்டான் சிவபெருமானின் ஆசிரமம் நோக்கி.

ஏதேனும் தீங்கு நேருமோ என்ற அச்சத்துடன் நண்பன் வசந்தனும், மனைவி ரதியும் உடன் சென்றனர். ஏன் அச்சம்? எடுத்துக் கொண்ட காரியம் அப்படி! சாட்சாத் சர்வேஸ்வரனின் தவத்தை நிலைகுலைய வைக்க செல்கிறான் மன்மதன். விளைவு எப்படி வேண்டுமானாலும் இருக்கும்.  சிவபெருமானின் கோபத்தை தாங்கும் சக்தி எவருக்கும் கிடையாது. பெண்களுக்கே உரிய ஒரு உள்ளுணர்வினால் ஏதோ விபரீதம் நிகழப் போகிறது என்று ரதி எண்ணுகிறாள்.

வசந்தன் மன்மதனின் உற்ற நண்பன்.  வசந்தனுக்கு இரண்டு அம்சங்கள் உண்டு. ஒன்று பருவ நிலை, மற்றொன்று தேவ வடிவு.  தேவ வடிவோடு மன்மதனுடன்  சென்ற வசந்தன், சிவபெருமான் தவம் செய்யும் இடத்திற்கு அருகில் வந்ததும், தன் பருவ காலத்தை அவ்விடத்தில் தோன்றச் செய்தான்.  உடனே மரங்கள் தளிர் விட்டன.  செடிகளில் அரும்பும் பூக்களும் ஏராளமாகத் தோன்றின. தென்றல் வீசத் தொடங்கியது.  எங்கும் ஒரு ரம்மியமான சூழல் உருவாகி மனத்தில் ஒரு இன்ப உணர்வு ஏற்பட்டது.  
ஒரு குறிப்பு: சாதாரணமாக தளிரும் அரும்பும் உருவாகி பின்புதான் அவைகள் மலர்களாக மாறும்.  ஆனால், இது காலமில்லாத காலத்தில், வசந்தனின் வருகையால் ஏற்பட்ட பருவ மாறுதல்.  அதனாலேயே இப்படி இயற்கைக்கு மாறாக நிகழ்கின்றன.  
அழகிய பெண்களின் பாதம் படாமலேயே அசோக மரங்களில் தளிர்களை மலர்களும் ஏராளமாக தோன்றின.  
(ஒரு விளக்கம்: மரங்களுக்கும் செடிகளுக்கும் சில வினோதகுணாதிசயங்கள் உண்டு.  அசோக மரம் பூக்காவிட்டால், அழகிய பெண்கள் காலில் சிலம்பணிந்து மரத்தை உதைக்க வேண்டும்.  பெண்கள் தொட்டு தடவினால் ப்ரியங்கு என்ற மரமும், மதுவை வாயில் வைத்து துப்பினால் மகிழ மரமும், கண் பார்வையால் திலகமும், அணைத்துக்கொள்வதால்மருதோன்றியும், பரிகாசமாக அருகில் இருந்து பேசுவதால் மந்தாரையும், மெல்ல சிரிப்பதால்
சம்பகமும், மெதுவாக வாயால் ஊதுவதால் மாமரமும், பாடுவதால் நமேருவும், நடனமாடுவதால் கர்ணிகாரமும் பூக்கும்).
மாமரங்களில் பூக்கள் தோன்றின.  வசீகரிக்கும் நிறம் கொண்டிருந்தாலும், வாசனை இல்லாத கர்ணிகார மலர்கள் பூத்தன. பிறைபோல் வளைந்திருக்கும் பலாச மொட்டுக்கள் தோன்றின.  வீசிய காற்றினால் களிப்புற்று மான்கள் ஓடி விளையாடின.  
திடீரென தோன்றிய வசந்தருதுவினால் ஏற்பட்ட மன சலனங்களை அடக்க சிவபெருமான் வசிக்கும் அந்த காட்டில் உள்ள ஏனைய தவ முனிவர்கள் மிகவும்  சிரமப்பட்டனர். பிராணிகளும் செடி கொடிகளும் கூட காதலுணர்வு பெற்றன.  
தேவ மாதர்கள் பாடிக் கொண்டிருந்தனர்.  ஆனால் அந்த இனிய பாடல்களை கேட்டும், சிவபெருமான் மனம் கலையாமல் தியானத்தில் இருந்தார்.  சிவபெருமானை காவல் புரிந்து கொண்டிருந்த சிவசேவகர்களை  எந்தவித சலனத்திற்கும் ஆட்படாமல் இருக்கும்படி, கையில் ஒரு பிரம்பை வைத்துக்கொண்டு நந்திகேஸ்வரன் அடக்கிக் கொண்டிருந்தான். அவனுடைய ஆணையினால் சிவ சேவகர்கள் மட்டுமில்லாமல், அந்த காட்டிலிருந்து அனைத்து ஜீவராசிகளும் அடங்கியிருந்தன.
முடிவு காலம் நெருங்கிவிட்ட மன்மதன், புலித்தோல் ஆசனத்தில் தேவதாரு மரத்தடியில் புலனை அடக்கி அமர்ந்திருக்கும் சிவபெருமானைக் கண்டான்.
பாம்பினால் துாக்கிக் கட்டப்பட்ட சடைகள், வலது காதில் இரண்டாக மடித்து மாட்டப்பட்டிருந்த  ருத்ராட்சம், கழுத்தில் மான்தோல், இத்தகைய கோலத்தில் வீராசனத்தில் தியானத்தில் இருந்தார் சிவபெருமான்.  அவரது கண்கள் கீழ்நோக்கி நாசியின் நுனியை உற்று நோக்கிநிலையில் எந்தவித அசைவும் இன்றி இருந்தார்.  

உடலுக்குள் இருக்கும் பிராண, அபான, வியான, உதான, சமான என்னும் ஐந்து வாயுக்களையும் அடக்கி இருந்தார்.  அதனால் எந்தவித சலனம் இல்லாமல் அவர் உடல் தோற்றமளித்தது.  
யோகநிலையில் இருந்த சிவனை, மிக அருகில் கண்ட மன்மதனுக்கு தோல்வி பயம் ஏற்பட்டது.  இவரை வெல்ல முடியாது என்ற எண்ணம் அவன் மனதில் ஒரு அச்சத்தை உருவாக்கியது.  அதன் காரணமாக சோர்வு ஏற்பட்டு, கைகள் பலமிழந்தன. அந்த சோர்வான ஒரு நிலையில்அவன் இருக்கும் போது பார்வதி தன் தோழிகள் இருவருடன் அங்கே தோன்றினாள். அவளை பார்த்ததும், மன்மதனுக்கு உற்சாகம் வந்தது.அவள் நகைகள் ஏதும் அணியாமல், வசந்த ருதுவில் தோன்றிய மலர்களையே அணிந்திருந்தாள்.  ஸ்தன பாரத்தினால் மேனி துவள, பூக்களும் தளிர்களும் நிறைந்த ஒரு கொடிபோல நடந்து வந்தாள்.  
இப்படி பார்வதி வந்ததை தமிழ் கவிஞர் ஒருவர் அழகாகச் சொல்கிறார்.
‘‘காலைக் கதிர் வண்ணம் காட்டுகின்ற செஞ்செவிய
சேலை உடுத்தி செறிந்த தன பாரம்
தள்ளத் துவண்டு, தழைத்த மலர்க்கொத்தின்
கொள்ளையிலே முன்னோக்கிக் குழைந்து நடந்து வரும்
வள்ளியென வந்தாள் வரைமகளும் ஈசன் முன்’’
பார்வதி தனது இடையில் மகிழம்பூவாலான ஒரு மாலையை மேகலையாய் அணிந்திருந்தாள்.  அவள் நடக்க நடக்க அந்த மாலை அடிக்கடி நழுவிக்கொண்டிருந்தது.  அதனால் அதை தன் கையால் தாங்கி கொண்டு நடக்க வேண்டியிருந்தது.  அவள் மூச்சுக்காற்று நறுமணம் கொண்டதாக இருந்ததால் வண்டுகள் அடிக்கடி அவள் முகத்தை சுற்றி சுற்றி வந்து தொந்தரவு செய்தன.  அதற்காக அவள் கையில் வைத்திருந்த தாமரை மொக்கினால் வண்டுகளை விரட்டிக்கொண்டிருந்தாள்.

பார்வதி மிகவும் அழகுடையவள்.  அவளுடைய அழகும், நடையும், மற்ற செயல்களும், அழகில் சிறந்தவள் என்ற பெயர் பெற்ற ரதியையே வெட்கமுற செய்தன.  
பார்வதியைக் கண்ட மன்மதனுக்கு, இவளுடைய அழகைக் கொண்டு சிவபெருமானை வசீகரிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.  
பார்வதி சிவபெருமானின் ஆசிரமத்தை அடைந்தாள்.  அதே நேரம் பரமனும் தியானத்திலிருந்து திரும்பினார். நந்திகேஸ்வரன் உள்ளே சென்று வணங்கி, பணிவிடை செய்ய பார்வதி வந்திருப்பதாக சிவபெருமானிடம் கூறினான்.  கண்ணசைவாலேயே அனுமதி கொடுத்தார் பரமேஸ்வரன்.  நந்திகேஸ்வரன், வெளியே வந்து பார்வதியை உள்ளே அனுப்பினான்.  
உத்தரவு கிடைத்ததும், பார்வதின் உடன் வந்த தோழிகள் விஜயா, மாலினி என்ற இருவரும், தங்கள் கைகளில் ஏந்தி வந்த பல வண்ண  மலர்களை பரமனின் பாதத்தில் வைத்து வணங்கினர்.  தோழிகள் வணங்கியபின், பார்வதியும் சென்று பெருமானை நமஸ்கரித்தாள். அப்பொழுது அவள் காதுகளின் மேல் வைத்திருந்த மலர்களும், கூந்தலில் செருகியிருந்த மலரும் நழுவி விழுந்தன.  அவள் அப்படி நமஸ்கரித்ததும், பெருமான் ‘‘உன்னைத் தவிர வேறு ஒரு பெண்ணை மனைவியாக ஏற்காத ஒருவனை நீ கணவனாய் அடைய வேண்டும்’’ என ஆசியளித்தார்.  
அது உண்மைதான்.பெரியோர் வாக்கு பொய்ப்பதில்லை. பார்வதியை மணந்தபின், சிவபெருமான் வேறு எந்த பெண்ணையும் விரும்பியதுமில்லை, மணந்ததும் இல்லை.  
மன்மதனும் சிவபெருமான் மீது பாணத்தை பிரயோகிக்க தக்க சமயத்தை எதிர்பார்த்துக்கொண்டு, அவரையே குறி பார்த்துக்கொண்டு, நாணை வருடிக்கொண்டு, அம்பை தொடுக்க ஆயத்தம் செய்து கொண்டிருந்தான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar