Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சீதை கடத்தப்பட்டாள்
 
பக்தி கதைகள்
சீதை கடத்தப்பட்டாள்


மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவதே ஒரு கணவனுக்குப் பெருமை என கருதிய ராமன் பொன்மானை வேகமாகப் பின் தொடர்ந்தான்.
பர்ணசாலைக்குள் சீதை தவித்து மறுகிக் கொண்டிருந்தாள். ராமனுக்கு ஏதும் ஆகிவிடக் கூடாதே என்று. அதே சமயம் மனசுக்குள் எதிர்பார்ப்பு – எப்படியும் ராமன் அந்தப் பொன்மானைப் பிடித்து வந்து விடுவான்!
பர்ணசாலைக்கு வெளியே காவல் இருந்த லட்சுமணன் தவித்துக் கொண்டிருந்தான். ராமனுக்கு ஏன் கொஞ்சம்கூட சந்தேகம் வரவில்லை. அது இயற்கையான மானல்ல என வற்புறுத்தியும் அதன் பின் ஓடியிருக்கிறாரே. என்னையும் வரவேண்டாம் என சொல்லிவிட்டார். என்னவெல்லாம் நிகழப் போகிறதோ தெரியவில்லையே. ராமன் சிந்திக்காமல் செயலாற்றுவது இதுவே முதல் முறை, ஏன் இப்படி நடந்து கொண்டார்.
பொன்மான் விண்ணில் பாய்வதும், மண்ணில் குதித்தோடுவதும், மாயமாய் மறைவதும், மீண்டும் தோன்றுவதுமாக விளையாட்டு காட்டியது. இப்போதுதான் ராமன் யோசிக்க ஆரம்பித்தான். தம்பி சொன்னதை புறக்கணித்துவிட்டு வந்ததுதான் எவ்வளவு தவறாகப் போய்விட்டது. அவனுடன் இந்த மான் குறித்து விவாதித்திருந்தால் உண்மை புரிந்திருக்கும். பின்பு அதைப் பிடிக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கலாம். சீதை விரும்பிக் கேட்டாள்தான், அவளது விருப்பத்தை ஒரு கணவனாகத் தான் நிறைவேற்ற வேண்டியதுதான். ஆனால் அந்த விருப்பம் அவசியமானதா, ஆபத்தில்லாததா என்றெல்லாம் அவளிடம் பேசவும் முன்வரவில்லையே… உடனே வந்து விட்டேனே… எனக் குழம்பினான்.
அதே சமயம் பலவாறாக அலைக்கழித்த மானான மாரீசன், தான் ராவணனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய தர்மத்தை உணர்ந்தான். இதுவும் ராம தரிசனத்தின் பலன்தானோ! உடனே ராவணனுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், ‘சீதா… லட்சுமணா…‘ என்று ராமன் குரலிலேயே தீனமாகக் கத்தினான். சட்டென சூழ்நிலையின் பேராபத்தை உணர்ந்த ராமன், அம்பு எய்து மாரீசனைக் வதைத்தான்.

ராமனின் குரலைக் கேட்டு சீதை பதறினாள். ‘‘தம்பி, நான் தவறுதலாக ஆசைப்பட்டு விட்டேன் போலிருக்கிறது. அவருக்கு ஏதோ ஆபத்து நேர்ந்திருக்கிறது. அவரது குரல் வித்தியாசமாக இருக்கிறது. அந்தப் பொன்மானால் துன்பப்பட்டிருக்கிறாரோ, உடனே போய் அவருக்கு உதவு’’  என லட்சுமணனைப் பார்த்து கதறினாள்.
லட்சுமணன் சாந்தமுடன், ‘‘அம்மா...பதட்டம் கொள்ளாதீர்கள். அண்ணா அப்படியெல்லாம் இறங்கக் கூடியவர் அல்லர். நம்மை திசை திருப்ப அந்தப் பொய்மான் ஏதோ தந்திரம் செய்கிறது. நம்பாதீர்கள், அண்ணா விரைவில் அந்த மானுடனோ அல்லது அதைக் கொன்றுவிட்டோ வருவார்’’
‘‘இல்லை, எனக்கு இருப்பு கொள்ளவில்லை. அவருக்கு ஏதோ ஆகிவிட்டது. நீ உடனே அவரைக் காப்பாற்றச் செல்லவில்லை என்றால் நெருப்பிலே வீழ்வேன்’’ என கோபமாகப் பேசினாள் சீதை.
லட்சுமணன் இருதலைக் கொள்ளி எறும்பானான். அண்ணன் மீது அவனுக்கு இருக்கும் நம்பிக்கை, கணவன் மீது மனைவி கொண்ட அன்புக்கும் இடையே தவித்து மறுகிய அவன், வேறு வழியின்றி சீதையை சமாதானப்படுத்தும் நோக்கில் புறப்பட்டான். ராமனை அழைத்து வருவான் லட்சுமணன் என்ற உணர்வில் சீதையும் ஆறுதல் அடைந்தாள்.
வெளியில் காத்திருந்த ராவணன், தன் திட்டத்தை நிறைவேற்ற தயாரானான். அக்கணமே தவமுனிவர் போல மாயத் தோற்றம் கொண்டான். பர்ணசாலையை அடைந்தான், குரல் கொடுத்தான்.
வெளியே எட்டிப் பார்த்த சீதை நின்றிருந்த முனிவரைக் கண்டாள். பஞ்சவடியிலுள்ள முனிவர்களில் ஒருவர் போலிருக்கிறது எனக் கருதினாள். அவர் தனக்கு ஆறுதலளிக்கக் கூடும் என நம்பினாள். பொன்மானை விரட்டிச் சென்ற ராமன், அவனைத் தேடிச் சென்ற லட்சுமணன், இருவரும் இல்லாத தனிமையில் பெருங்கவலையும், என்னாகுமோ என்ற பயமும், இதைவிட ஒரு மானுக்காக ஆசைப்பட்டு கணவரைத் துன்புறுத்திவிட்டோமே என்ற அவமான உணர்வும் ஒருசேர, அவளுக்கு இப்போது ஆறுதல் கூற ஒருவர் வேண்டியிருந்தது. அவர் ஒரு முனிவராகவே அமைந்துவிட, அதைவிட வேறு என்ன பாக்கியம் இருக்கப் போகிறது! முனிவரை உள்ளே வரவேற்று இருக்கை காட்டி உபசரித்தாள்.
அவன் அமர்ந்ததும் திடீரென காற்றும் அடங்கியது. தாவரங்கள் அசையவில்லை. விலங்குகள், பறவைகள் ஒலிக்க மறந்தன. சூழ்நிலையின் அந்த திடீர் அமைதி சீதையை அச்சுறுத்தின. அதே சமயம், முனிவன், அவளைப் பற்றிய விபரங்களைக் கேட்ட போது அவனது கண்கள் கொடூரமான வேட்கையுடன் பளபளத்ததை கவனித்தாள். ஆனாலும் மருட்சியுடன், தான் ஜனகரின் புத்திரி என்றும், தசரதனின் மருமகள் என்றும், ராமனின் மனைவி என்றும் தெரிவித்தாள்.

‘‘நான் சமீபத்தில் இலங்கை மன்னரான ராவணனின் உபசாரங்களைப் பெற்றவன். அவன் மிகுந்த பராக்கிரமம் உடையவன். கோள்கள் எல்லாம் அவனுக்கு அடிமை’’ என முனிவன் ஆரம்பித்த போது சீதை குறுக்கிட்டாள்: ‘‘இல்லை, அவன் கெடுமனம் கொண்ட அரக்கன் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். எல்லோரையும் அடிமைப்படுத்தி யதேச்சாதிகாரம் புரிபவன். சாதுவான தாங்கள் எப்படி அந்த கொடியவனின் ஆதரவில் ஆதாயம் பெற்றிருக்கிறீர்கள்? இது தகாதே. தங்களைப் போன்றோரின் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் அவன் தகுதியானவன் அல்லவே...’’
இனியும் காத்திருக்க அந்த காமுகனுக்கு பொறுமையில்லை. சட்டென சுயஉருவை வெளிப்படுத்தினான். ‘‘உன் விமர்சனத்துக்கு ஆளான ராவணன் நான்தான். எனக்கு உன்னைவிட பொருத்தமான இணை யாரும் இருக்க முடியாது. ஆகவே என்னுடன் வந்துவிடு. நான் அனுப்பிய மாரீசனைப் பின்தொடர்ந்து சென்ற ராமனும் சரி, அவனைத் தேடிச் சென்ற லட்சுமணனும் சரி, இனி வரப் போவதில்லை…’’ என்று சொல்லி விகாரமாகச் சிரித்தான்.
ஆபத்தை அப்போதுதான் உணர்ந்தாள் சீதை. ‘இன்னும் ஒரு ஆண்டில் அயோத்தி திரும்பி ஆனந்தம் கொண்டாடலாம் என கனவு கண்டு கொண்டிருந்த சமயத்தில் இப்படி பொன்மான் ஆசையால் அனைத்தும் அழியப் பெற்றேனே’  என மனதிற்குள் கதறினாள். ஆனாலும், ‘‘நீ சொல்வது நடக்காது. நீ அனுப்பிய மாயமானை வீழ்த்தி விட்டு சகோதரர்கள் இருவரும் நலமாக திரும்புவார்கள்’’ என உறுதியாகச் சொன்னாள்.
இனிமேலும் நேரத்தை வீணாக்க விரும்பாத ராவணன், காமவெறியுடன் அவளைப் பற்றக் கைநீட்டினான். ஆனால் ஒரு பெண்ணின் விருப்பமின்றி அவளை தொட்டால் அவன் தலைகள் வெடித்துச் சிதறும் என்று பிரம்மன் இட்ட சாபம் நினைவுக்கு வந்தது. உடனே அந்த பர்ணசாலையை பூமியோடு அகழ்ந்து எடுத்தான். பிறகு தன் தேரை அழைக்க, பெரிய அரண்மனை போலிருந்த தேர் அங்கு வந்து நின்றது. பர்ணசாலையைத் தன் தோள் மீது தாங்கியபடி தேரில் விண்ணேகிப் பயணித்தான் ராவணன்.
சீதை மன்றாடியும் அவன் மனமிரங்கவில்லை. இனி தன் கணவனை மானசீகமாக மன்றாடுவது தவிர வேறு கதி இல்லை என்ற முடிவுக்கு வந்த அவள், அவனே வந்து தன்னைக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் தான் அணிந்திருந்த நகைகளைக் கீழே வீசியெறிந்தாள். இவற்றைப் பார்த்து அடையாளம் கண்டு, தான் கடத்தப்படும் திசையை ஊகித்த ராமன் தன்னை மீட்பான் என எதிர்பார்த்தாள்.
ஆனால் திக்கற்றவரைக் காக்க சில நல்ல மனங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவர்களில் ஒருவர் ஜடாயு. தசரதரின் நண்பனும், ராம, லட்சுமணருக்குத் தந்தை போன்றவருமான அவர் சீதையைக் கடத்திச் செல்வதைக் கண்டு வெகுண்டார். பலம் மிகுந்த தன் சிறகுகளாலும், கூரிய நகங்களாலும், அலகாலும் ராவணனைக் கொத்தி தடுக்க முயன்றார். ஆனால் அவனோ தன் வாளால் அவருடைய சிறகுகளை வெட்டியெறிந்து நிலைகுலையச் செய்தான். குற்றுயிரும், குலையுயிருமாக பூமியில் கிடந்த ஜடாயு, நடந்தவற்றை ராமனுக்கு எப்படியாவது தெரிவித்துவிட வேண்டும் என்ற மனோவேகத்தில் உயிர் பிரிந்து விடாமல் காத்திருந்தார்.
(தொடரும்


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar