Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மனைவியின் மகிழ்ச்சியே கணவனின் பெருமை!
 
பக்தி கதைகள்
மனைவியின் மகிழ்ச்சியே கணவனின் பெருமை!


சுக்ரீவனின் உதவியைப் பெற்று சீதையை மீட்கலாம் என்று தனு என்ற கவந்தன் சொன்னதைக் கேட்டபோது லட்சுமணன் பெரிதும் சந்தேகம் கொண்டான். ஒரு வானரம் என்னதான் பெரும் படைக்குத் தலைவனாக இருந்தாலும், அண்ணியாரை மீட்பதில் எந்த வகையில் பெரிதாக உதவிட முடியும் என்று சிந்தித்தான், ஆனால் அதே சிபாரிசை சபரியும் செய்தபோது அது சாத்தியமாகும் என்று உறுதி கொண்டான். ராமனுக்கோ எந்த விதத்திலும் சந்தேகமே தோன்றவில்லை. ஜடாயு என்ற கழுகு தமக்கு உதவக்கூடுமானால் ஒரு குரங்காலும் முடியும் என்று அவன் தீர்மானமாக நம்பினான். இருவரும் பம்பை நதிக்கரையை அடைந்தனர்.
விரிந்து பரந்த அந்த பம்பை ஆற்றின் சீரான ஓட்டத்தைப் பார்த்த ராமனின் கண்களிலிருந்து வழிந்த நீர் அவனுக்கு ஒரு சம்பவத்தை நினைவுக்குக் கொண்டு வந்தது.
கானகப் பயணத்தில் ஒரு கட்டமாக மூவரும் கோதாவரி ஆற்றங்கரைக்கு வந்தார்கள். அப்போது சீதைக்குக் குறும்புத்தனமான ஓர் எண்ணம் வந்தது. அவள் ராமனிடம், ‘‘இந்த ஆற்றைக் குறுக்காக நீந்தி எதிர்க்கரைக்குச் சென்று மீண்டும் இக்கரைக்குத் திரும்ப வேண்டும். யார் முதலில் வருகிறார்கள், பார்க்கலாமா?’’ என்று கேட்டாள்.
ராமன் அவளை அதிசயமாகப் பார்த்தான். அந்தச் சிறு வயதுக்குள் அவள்தான் எத்தனை விஷயங்களைக் கற்றுக் கொண்டிருந்திருக்கிறாள்! திருமணம் முடித்தபோது அவளுக்கு ஆறு வயது! அதற்குள் அவள்தான் எத்தனை வகைப் பயிற்சிகளை முடித்து சகலகலா வல்லியாகத் திகழ்கிறாள்! அவற்றில் ஒன்றில் தன் திறமையை நிரூபிக்க அவள் இப்போது ஆவல் கொண்டிருக்கிறாள்! புன்சிரிப்புடன் அவளுடைய சவாலை ராமன் ஏற்றுக் கொண்டான்.
கரையில் ஒரு பாறை மீது லட்சுமணன் அமர்ந்திருப்பது என்றும் அவனே நடுவர் என்றும் முடிவாகியது. ஒரே நேரத்தில் ராமன், சீதை இருவரும் ஆற்றினுள் பாய்ந்தார்கள். வேகமாக முன்னேறிய சீதை, எதிர்க்கரையைத் தொடும் சமயத்தில் சற்றே திரும்பிப் பார்க்க, பின்னால், சற்றுத் தொலைவில் ராமன் நீந்தி வந்து கொண்டிருப்பதைக் கண்டாள். மிகுந்த உற்சாகத்துடன் அக்கரையைத் தொட்டுவிட்டு, மீண்டும் இக்கரைக்குத் திரும்பினாள். ராமனும் அவ்வாறே தொட்டுத் திரும்பி, வேகமாக நீந்தி சீதையை முந்தினான். அதைப் பார்த்த சீதை, தன் வேகத்தை அதிகரித்தாள். ஒரு கட்டத்தில் ராமனை நெருங்கிய அவள், வெற்றிச் சிரிப்புடன் அவனைக் கடந்தாள். கொஞ்சம், கொஞ்சமாக வேகம் குறைய ராமன் பின்தங்கினான்.
கரையேறிய சீதை, வெற்றிக் களிப்புடன் குதித்தாள். ஆற்றைத் திரும்பிப் பார்த்தாள். சில நொடிகளுக்குப் பிறகு ராமன் கரையேறினான். அவனைப் பார்த்து கேலியாக கைகொட்டிச் சிரித்தாள் சீதை. அவனைத் தான் வென்று விட்டதாகக் கூறி பெரிதும் மகிழ்ந்தாள்.
ராமன் வியப்புடன் அவளைப் பார்த்தான். ‘அடேயப்பா எத்தனை திறமைசாலி நீ!‘ என்று வாயாரப் பாராட்டினான். இதை கவனித்த லட்சுமணன் மனசுக்குள் சிரித்துக் கொண்டான்.
ஆமாம், திறமை இருந்தும், எளிதாக வெல்லக்கூடிய ஆற்றல் இருந்தும் மனைவியிடம் தோற்பது என்பது ராமனைப் பொறுத்தவரை மகிழ்ச்சிதான், பெருமைதான்! அவளுக்குதான் எத்தனை குதுாகலம், கொண்டாட்டம், கணவனையே வெற்றி கண்டுவிட்ட குழந்தைத்தனமான சந்தோஷம்!
அவளுடைய ஆனந்தமே தன் மனநிறைவு என்பதால் வேண்டுமென்றே அன்று தோற்ற ராமன், அதேபோல அவளை மகிழ்விக்க வேண்டும் என்று பொன்மானைப் பிடிக்கப் போய் அவளையே இழந்து நிற்கும் இப்போதைய அவலத்தை எண்ணி எண்ணிக் குமைந்தான்.
சகோதரர்கள் இருவரும் ருசியமுகம் மலையை நோக்கிச் சென்றார்கள்.  இந்த மலை சுக்ரீவனுடைய இருப்பிடம் அல்ல, ஒளிவிடம். ஆமாம், தன்னை பரம விரோதியாக பாவிக்கும் அண்ணன் வாலி, தன்னைக் கொன்று விடுவானோ என்ற பயத்தில், இந்த மலையில் மறைந்து வாழ்ந்து வந்தான் சுக்ரீவன். மதங்க முனிவரால் சபிக்கப்பட்டதால், வாலியால் இந்த மலைக்கு வரமுடியாது என்ற விபரம் சுக்ரீவனுக்குத் தெரியும். ஆனால் சற்றுத் தொலைவில் ராம, லட்சுமணர் இம்மலை நோக்கி வருவதைக் கண்ட சுக்ரீவன், அவ்விருவரும் வாலியால் அனுப்பப்பட்டவர்களோ என்று சந்தேகித்தான். தன்னால் நுழைய முடியாத இப்பகுதிக்குள் தான் அனுப்பி வைக்கும் நபர்களை வைத்து என் கதையை முடித்துவிட வாலி திட்டமிட்டிருக்கிறானோ!
உடனே தன் பக்கத்தில் இருந்த தன் உறுதுணை தளபதி அனுமனிடம் தன் பயத்தைத் தெரிவித்தான். அவர்கள் யார் என்று அறிந்துவருமாறு அனுப்பி வைத்தான்.
ஆற்றல் பல மிக்க அனுமன் ஓர் இளம் துறவியாக உருமாறி ராம, லட்சுமணர் முன் போய் நின்றான். அவர்களில் ராமனைப் பார்த்தவுடனேயே அப்படியே நெகிழ்ந்து போய்விட்டான் அவன். ஆமாம், தன் பால்ய வயதில் கருக்கல் நேரத்தில் வானில் மறைய ஆரம்பித்த சூரியனை ஒரு செம்பழம் என்று கருதி, அதைப் பிடிக்க விண் நோக்கித் தாவினானே, அதே சூரியனின் பிரகாசம் இந்த ராமன் முகத்தில் கண்டான். அந்தக் கண்களில் ஒளிர்ந்த கருணை, சாந்தம் எல்லாம் காந்தமாக அவனை ஈர்த்தன. அந்தப் பார்வையில் கொஞ்சம்கூட சினம், விரோதம் போன்ற துர்க்குணங்களின் சாயல் இல்லவே இல்லை. அப்போதே அவன் காலடியில் விழுந்து நமஸ்கரிக்க வேண்டும் போலிருந்தது அனுமனுக்கு. அதோடு அவ்விருவரும் ஏதோ துன்பத்தில் உழன்றிருப்பதையும் அவனால் ஊகிக்க முடிந்தது.
ஆகவே, உண்மையைக் கண்டறியும் ஆவலில் அவர்களை நெருங்கி அன்புடன் வரவேற்றான். அந்தப் பணிவான வரவேற்பு, சகோதரர்களைப் பெரிதும் கவர்ந்தது. இவன் நல்லொழுக்கம் மட்டுமே பூண்டிருக்கக் கூடியவன் என்ற நம்பிக்கை உருவானது. ‘‘அன்பனே, நீ யார், இப்பகுதியைச் சேர்ந்தவனா?’’ என்று ராமன் அன்பொழுகக் கேட்டபோது அந்தக் குரலில் வெளிப்பட்ட பரிவு அனுமனைக் குளிர்வித்தது.
‘‘ஆம், அன்பர்களே, நான் இப்பகுதியைச் சேர்ந்தவன் தான். என்னை அனுமன் என்பர். எங்கள் மன்னர் சுக்ரீவனின் தளபதியாகப் பொறுப்பு வகிக்கிறேன். தன் அண்ணன் வாலியின் கொடுங்கோன்மைக்கு பயந்து இங்கே ஒளிந்து வாழ்கிறார் சுக்ரீவன்‘‘ என்றான் அனுமன்.
‘என்னது? அண்ணனுக்கு பயந்தா? அப்படியும் ஓர் அண்ணன் இருக்க முடியுமா? இது என்ன கொடுமை! தம்பி ஒளிந்து வாழும் அளவுக்கா அவன் கொடுங்கோலனாக இருக்க முடியும்?’ என்று அதிர்ச்சியடைந்தார்கள் ராம, லட்சுமணர்.
கூடவே, ‘‘உங்களைப் பார்த்தால் நீதிக்கும், தர்மத்துக்கும் காவலர்கள் போலத் தெரிகிறது. உங்களால் எங்கள் மன்னருக்கு நல்வினை நிகழும் என்று என் உள்ளம் தெரிவிக்கிறது. அதற்கு முன் உங்களைப் பற்றிய விவரங்கள் சொல்கிறீர்களா, என் தலைவனிடம் போய் நான் தெரிவிக்க வேண்டும்’’ என்றான் அனுமன்.
உடனே ராமன், ‘‘இவன் எளியவனாகத் தோன்றினாலும், வலியவன் என்றே கருதுகிறேன். பணிவு மிக்கவனானாலும், அசகாய பலசாலி. ஆகவே இவனிடம் நம் கதையைச் சொல்வாயாக’’ என்று லட்சுமணனைப் பணித்தான்.
லட்சுமணன் சொல்லச் சொல்ல அனுமன் மிகுந்த வருத்தமடைந்தான். எல்லாவற்றையும் விட சீதையை ராமன் பறிகொடுத்த கொடுமையை எண்ணிப் பெரிதும் கலங்கினான். ‘‘அடடா, தங்களுக்கும், சுக்ரீவனுக்கும்தான் இந்த விஷயத்தில் எத்தனை ஒற்றுமை! இவனுடைய மனைவி உருமையையும் வாலி கவர்ந்து சென்றுவிட்டான்’’ என்று பளிச்சென்று சொன்னான்.
அதைக் கேட்ட மாத்திரத்திலேயே சுக்ரீவனுக்கு எவ்வகையிலாவது உதவிட வேண்டும் என்ற உத்வேகம் ராமனுக்குள் எழுந்தது. தம்பியைப் பார்த்தான். அவனும் ராமனின் உணர்வைப் புரிந்து கொண்டு சம்மதமாகத் தலையசைத்தான்.
அதே சமயம் அனுமன் தன் சுய உருக்கொண்டான். திடகாத்திரனனாக, பராக்கிரமசாலியாக, கேடயமாகச் சுழலும் வால் கொண்ட மாவீரனாக நிமிர்ந்து நின்ற அவனைப் பார்த்த சகோதரர்கள் வியந்தார்கள். அப்போதே அவர்களுக்கு சுக்ரீவன் உதவியால் சீதையை மீட்டு விடும் நம்பிக்கையும் துளிர் விட்டது.
மூவருமாகச் சென்று சுக்ரீவன் இருப்பிடம் அடைந்தார்கள். மலர்ந்த முகத்துடன் வந்த அனுமனையும், வெறும் தோற்றத்தாலேயே அனைவரையும் வசீகரிக்கும் ராம லட்சுமணரையும் பார்த்த அவன் மனதில் நம்பிக்கை மின்னல் ஒளியிட்டது. வாலியுடனான பகைக்கு ஒரு முடிவைக் கொண்டுவர முடியும் என்றே கருதினான்.
அந்த சந்தோஷத்தில் ராமன் பாதத்தில் விழுந்து சரணாகதி அடைந்தான். ராமன் அன்புடன் அவனைப் பற்றி, மெல்லத் துாக்கி நிறுத்தினான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar