Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பரிகாரம் பலிக்கவில்லை
 
பக்தி கதைகள்
பரிகாரம் பலிக்கவில்லை


முன்னால் அமர்ந்திருந்த ஐம்பது வயதுப் பெண்ணின் செல்வச் செழிப்பு அப்பட்டமாகத் தெரிந்தது -  பட்டுப்புடவை, வைர அட்டிகை, வைர மூக்குத்தி.
“நான் சுஜாதா. தொழிலதிபர் குமாரின் மனைவி”
குமார் ரியல் எஸ்டேட் தொழிலில் சில வருடங்களில் பல கோடிகளைக் குவித்தவர்.
“எங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க ஐயா. ஒருத்தி இஞ்ஜினியரிங் முடிச்சிட்டா. இன்னொருத்தி எம் பி பி எஸ் சேர்ந்திருக்கா. மூத்தவளுக்கு மாப்பிள்ளை பாத்துக்கிட்டிருக்கோம். அது விஷயமா சென்னைக்குப் போன போது எங்க வீட்டு ஜாதகங்களை குடும்ப ஜோசியர்கிட்ட காமிச்சேன். அவரு பெரிய குண்டத் துாக்கிப் போட்டாரு.
என் கழுத்துல தாலி ரொம்ப நாளைக்கு நிக்காதுன்னு சொல்லிட்டாரு. சொத்து சுகமெல்லாம் போய் தெருவுல நிக்கப்போறோமாம். பரிகாரம் சொல்லுங்கன்னு அவர் காலப் பிடிச்சிக்கிட்டு அழுதேன். பரிகாரமே இல்லன்னு சொல்லிட்டாருங்கய்யா”
அதற்கு  நான் என்ன செய்ய முடியும்?
“பச்சைப்புடவைக்காரிகிட்டப் பேசி...’’
“அவளா பேசினாத்தான் உண்டு. நான் அவளோட கொத்தடிமை. எதையும் கேக்கற உரிமை எனக்கு இல்ல”
“நீங்களா ஏதாவது பரிகாரம் சொன்னீங்கன்னா...’’
“அந்தளவுக்கு சக்தி எனக்கு இல்லம்மா. அவ ஏதாவது சொன்னா உங்ககிட்ட உடனே சொல்றேன்”
சுஜாதாவிற்காக நோன்பிருந்து பார்த்தேன். தினமும் கோயிலுக்குச் சென்று பார்த்தேன். பச்சைப்புடவைக்காரி தோன்றவும் இல்லை.  வழிகாட்டவும் இல்லை.
சுஜாதாவால் அதற்குமேல் பொறுக்கமுடியவில்லை.
“ஜோசியர் சொன்ன கெடு முடிய இன்னும் நாலு நாள்தான்யா இருக்கு. ஏதாவது சொல்லுங்கய்யா”
பச்சைப்புடவைக்காரியின் படத்தைப் பார்த்தபடியே பேச ஆரம்பித்தேன்.
“உங்க புருஷனுக்கு ஏதாவது வியாதி இருக்கா?”
“ரத்தக் கொதிப்பு. நெஞ்சுவலி…”
“அதே வியாதி இருக்கற பத்து ஏழைங்களுக்கு மருந்து வாங்கிக்கொடுங்க. சிகிச்சைக்கான செலவ ஏத்துக்கங்க. நம்பிக்கையோட இருங்க. நல்லதே நடக்கும்”
“அத எப்படி...யார் மூலமா...’’
“நான் ஏற்பாடு செஞ்சு தரேம்மா.”
“நீங்க சொல்றமாதிரி செஞ்சிட்டா என் தாலி நிலைக்கும்ல...’’
“அந்த உத்தரவாதத்த உமா மகேஸ்வரிதாம்மா தரணும்”
எனக்குத் தெரிந்த அறக்கட்டளை மூலம்  இதய நோய் உள்ள ஐம்பது ஏழைகளின் சிகிச்சை செலவையும் சுஜாதா ஏற்றுக்கொண்டாள். பயன் பெற்றவர்களின் மனைவிகள் தங்கள் தாலிகளைக் கண்ணில் ஒற்றிக்கொண்டதைப் பார்த்தபோது எனக்கு நம்பிக்கை வந்தது.
பத்து நாட்கள் அமைதியாகக் கழிந்தன. அன்று என் வேலை முடிய இரவு ஒன்பது மணியாகிவிட்டது.  கிளம்பலாமா என யோசித்துக்கொண்டிருந்தபோது திடீரென சுஜாதா தலைவிரிகோலமாக என் அறைக்குள் நுழைந்தாள்.
 “பச்சைப்புடவைக்காரி தலையில இடியப் போட்டுட்டாயா.  நம்பி செஞ்சேனே!  இப்படி நட்டாத்துல  விட்டுட்டாளே’’
“என்னம்மா ஆச்சு?”
“இன்னும் என்ன ஆகணும்? என் புருஷன் திடீர்னு செத்துட்டாரு. ஜோசியம் பலிச்சிருச்சு. இன்னிக்குச் சாப்பிட்டவுடன வயிறு ஒரு மாதிரியா இருக்குன்னு சொன்னாரு. அப்படியே சரிஞ்சிட்டாரு. ஆஸ்பத்திரிக்கு ஓடினோம். அவங்களும் என்னல்லாமோ செஞ்சி பாத்தாங்க.  எல்லாம் முடிஞ்சி போச்சுன்னு எட்டுமணிக்குத்தான்யா சொன்னாங்க. அம்பத்தாறு வயசுல சாகறது பெரிய கொடுமைய்யா. பரிகாரம் சொன்னீங்களே! அப்படியே செஞ்சேனே! இப்போ நானும் என் ரெண்டு மகள்களும் அனாதையா நிக்கறோமே. பச்சைபுடவைக்காரியோட உருவம் மட்டும் இல்ல அவ மனசும் கல்லுதான். ராட்சசி. வஞ்சகி. நம்ப வச்சிக் கழுத்தறுத்துட்டாளே! என் புருஷன் பொணத்த வீட்டுல போட்டுட்டு உங்ககிட்ட நியாயம் கேக்க வந்திருக்கேன்யா”
முன்னால் இருந்த பச்சைப்புடவைக்காரியின் படத்தைப் பார்த்தேன். கண்ணீர்தான் வந்தது. வார்த்தை வரவில்லை.
“நம்பினவள இப்படி நடுத்தெருவுல நாதியில்லாம விட்டுட்டாளே பச்சைப்புடவைக்காரி”
மீண்டும் மீண்டும் இதே வார்த்தைகளைச்  சொல்லிப் புலம்பினாள் அந்தப் பெண். மூடியிருந்த அறைக்கதவு லேசாக அசைவதுபோல் தோன்றியது. சட்டென நிமிர்ந்து பார்த்தேன். அது லேசாகத் திறந்தது. அங்கே பச்சைப்புடவைக்காரி பத்ரகாளியாகக் காட்சியளித்தாள். அவள் சிரித்தாள். நான் சிலிர்த்தேன். அந்தக் கணத்தில் நடந்தது அனைத்தும் புரிந்தது.
“நம்பினவள இப்படி நடுத்தெருவுல நாதியில்லாம விட்டுட்டாளே”
“வாயை  மூடு”
நான் போட்ட சத்தத்தில் கட்டிடமே அதிர்ந்தது. சுஜாதாவின் வாய் அடைத்துக்கொண்டது.
“உன் புருஷன் மட்டும் சாகலேன்னா நீயும் உன் பொண்ணுகளும் நெஜமாவே நடுத்தெருவுக்கு வந்திருப்பீங்க. இல்ல, துாக்குப் போட்டு செத்திருப்பீங்க”
“என்னய்யா இப்படி குண்டத் துாக்கிப் போடறீங்க?”
“உங்க புருஷன் அப்படி ஒண்ணும் உத்தமன் இல்லம்மா. அவர் கம்பெனில வேலை பாக்கற ஒரு 32 வயசுப் பொண்ணோட அவருக்குத் தொடர்பு இருக்கு. அந்தப் பொண்ண தனியா வீடு பாத்து வச்சிருக்காரு. அவளோட பத்து வருஷமா குடும்பம் நடத்திக்கிட்டிருக்காரு. சாகறதுக்கு முத நாள்கூட அந்தப் பொண்ணோடதான் இருந்தாரு. அன்னிக்குத்தான் அவங்க ஒரு பெரிய டீல் பேசியிருக்காங்க. நீங்க குடியிருக்கற வீட்டை மட்டும் உங்களுக்குக் கொடுத்துட்டு பாக்கிச் சொத்தை எல்லாம் அந்தப் பொம்பளை பேருக்கு மாத்த முடிவு செஞ்சிருக்காரு. உங்ககிட்ட சட்டரீதியா விவாகரத்து வாங்கவும் ஏற்பாடு செஞ்சிட்டாங்க. விவாகரத்துப் பத்திரத்துல கையெழுத்து போட மறுத்தா அந்த வீடுகூடக் கெடையாதுன்னு உங்கள மிரட்ட திட்டமிட்டாங்க.
வக்கீல் பத்திரங்களை தயார் செஞ்சிட்டாரு. உங்க கணவர் மட்டும் இன்னும் ஒரே ஒரு வாரம் உயிரோட இருந்திருந்தார்னா நீங்க நெஜமாகவே நடுத்தெருவுக்கு வந்திருப்பீங்க. திடீர்னு உங்க புருஷன் இறந்ததால அந்தப் பொண்ணுக்கு உரிமை இல்லாமப் போயிருச்சி. இனிமே 100 கோடி ரூபாய்ச் சொத்தும் உங்களுக்கும் உங்க குழந்தைங்களுக்கும்தான். பச்சைப்புடவைக்காரி உங்களக் காப்பாத்திட்டாம்மா’’
பல நிமிடங்கள் அறையில் அமைதி நிலவியது. பலவீனமான குரலில் சுஜாதா கேட்டாள்.
“இப்ப நான் என்னங்கய்யா செய்யறது?”
“வீட்டுக்குப் போங்க. கணவருடைய இறுதிச் சடங்க ஊரே மெச்சற மாதிரிச் செய்யுங்க. உங்க வக்கீல் ரொம்ப நல்லவரு. அவர் உங்க புருஷனுக்கு எவ்வளவோ அறிவுரை சொல்லிப் பாத்தாரு. அவருதான் கேக்கல. காரியம் முடிஞ்சப்பறம் உங்க வக்கீலக் கலந்துக்கிட்டு உங்க கணவர் செஞ்சிக்கிட்டு வந்த தொழில நீங்க செய்யுங்க. அமோகமா வருவீங்க. ஒரு முக்கியமான விஷயம்”
“என்ன?”
“உங்க கணவர் விஷயத்த யார்கிட்டயும் சொல்லாதீங்க. அப்புறம் உங்க பொண்ணுங்களுக்கு நல்ல சம்பந்தம் கெடைக்காது”
“நீங்க சொல்லாத ஒண்ணையும் நான் செய்யப் போறேங்கய்யா. என் புருஷன் தொடர்பு வச்சிக்கிட்டிருந்த பொண்ணுக்குத் தேவையான வாழ்வாதாரங்கள வச்சிக் கொடுப்பேங்கய்யா. பாவம், அவ இப்போ நெஜமாவே நடுத்தெருவுக்கு வந்துட்டால்ல?”
சுஜாதா போய்விட்டாள். பச்சைப்புடவைக்காரியின் படத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தேன். சட்டென கதவு திறந்தது. உள்ளை நுழைந்தவளைப் பார்த்ததும் அவள்முன் விழுந்து வணங்கினேன்.
“என்னால் சுஜாதாவைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. கணவன் இறந்துவிட்டான் என தெரிந்ததும் உங்களைத் திட்டினாள். உண்மை புரிந்ததும் தனக்குத் துரோகம் செய்தவளுக்கே வாழ்வாதாரம் தரப்போகிறேன் என்கிறாளே அது எப்படியம்மா நடந்தது?”
“நீ சொன்ன பரிகாரத்தின் விளைவாக அவள் மனதில் அன்பு ஊற்றெடுத்தது. அவளிடம் மருத்துவ உதவி பெற்றவர்கள் அவளை நெஞ்சார வாழ்த்தியது அவளை இன்னும் பக்குவப்படுத்தியது. கணவர் இறந்த அதிர்ச்சியில் திட்டினாள். புரிதல் வந்ததும் அன்பு இன்னும் அதிகமாகிவிட்டது”
“பரிகாரமும் இல்லை, பரங்கிக்காயும் இல்லை. அன்பே வடிவான நீங்கள் நிகழ்த்திய அன்பின் அற்புதம் அது”
புன்னகையை உதிர்த்துவிட்டு மறைந்தாள் புவனேஸ்வரி.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar