Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பார்வதி கல்யாணம்
 
பக்தி கதைகள்
பார்வதி கல்யாணம்


வா. ஜானகிராமன்

பார்வதி, தவம் செய்யும் முறைப்படி, உடலின் மேல் பாகத்தை நேரே நிமிர்த்திவளாக, யோக சாஸ்திரத்தில் கூறிய முறைப்படி  அமர்ந்திருந்தாள். பார்வதி கண்களை பாதியளவே மூடியிருந்தாள். வீழ்ந்த மழைத் துளிகள் அவள் இமைகளில் பட்டு, உதட்டின் மேல் விழுந்து, பிறகு மார்பில் பட்டு சிதறின. சில துளிகள் அவளது வயிற்றின் மடிப்புகளில் இறங்கி இடையை அடைந்தன.  
மழைக்காலத்தில் பார்வதி, மழையில் திறந்த வெளியில் தவம் செய்தாள். குளிர்ந்த பாறைகளில் படுத்தாள். பனிக்காலங்களில் கழுத்தளவு நீரில் நின்று தவம் செய்தாள்.  
மரத்திலிருந்து தானே உதிரும் சருகுகளை மட்டுமே உண்டு தவம் செய்யும் முனிவர்கள்,  தபஸ்விகளில் சிறந்தவர்களாக கருதப்படுகின்றனர்.  ஆனால், பார்வதி சருகுகளைக்கூட சாப்பிடாமல் தவம் செய்தாள். சருகைக்கூட விட்டதானால், அபர்ணா என்ற பெயர் பார்வதிக்கு ஏற்பட்டது.
இப்படியிருக்கையில் ஒரு நாள் .....
கையில் ஒரு பலாச தண்டமும், மான்தோலும், தலையில் சடையும், அணிந்த ஒரு  பிரம்மச்சாரி, பார்வதியின் ஆசிரமத்தில் நுழைந்தார்.இவர் வேறு யாருமில்லை! சாட்சாத் சிவபெருமானே!  (ஆனால் அது பார்வதிக்கு தெரியாது).  
பார்வதி விருந்தினர்களை உபசரிப்பதில் விருப்பம் உடையவள்.  ஆகையால் அவள் விருந்தினரை உபசரிக்க கையில் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டுஅவரை மரியாதையுடன் வரவேற்றாள்.  
முறைப்படி செய்யப்பட்ட மரியாதையை ஏற்றுக்கொண்டு, சற்று சிரமம் நீங்கியதுபோல் பாவனை செய்தபின், தன் மனத்திலுள்ள எண்ணத்தை கொஞ்சமும் குழப்பமில்லாமல், அந்த பிரம்மச்சாரி சொல்ல ஆரம்பித்தார்.
சாதாரணமாக, தவம் செய்வோரை கேட்கும் கேள்விகளையே முறைப்படி அவர் கேட்க ஆரம்பித்தார்.  
"அம்மா உனக்கு இங்கு தவம் செய்ய தேவையான தர்ப்பை, சமித்து, சுத்தமான நீர் வசதிகள் போதுமான அளவு உள்ளதா?  உன் உடல் ஆரோக்கியம் தவம் செய்வதில் உள்ள சிரமங்களை தாங்கும்படி உள்ளதா? உன் கையில் உள்ள தர்ப்பங்களை சில சமயம் மான்கள் எதிர்பாராமல் அபகரித்து விடும். அப்படி நேரும் சமயங்களில் நீ அந்த மான்களிடம் கோபமடையாமல் இருக்கிறாயா?"
தபஸ்விகள் குற்றம் செய்தவர்களிடம் கோபம் கொள்ளமாட்டார்கள்.  கோபம் தவ வலிமையை குறைத்துவிடும்.  
"இங்கு நீ தவம் செய்யும் முறை, நடத்தை முதலியவை மிக சிறப்பாகவும், மற்ற மகரிஷிகளும் பின்பற்றும்படி உள்ளன என்று கேள்விப்பட்டேன். மகிழ்ச்சி".
"சிறந்த நிர்மலமான நடத்தை உடைய உன்னால் உன்தந்தை, கங்கை நீரிலும் பெறமுடியாத, தூய்மை பெற்று விளங்குகிறான்.    
"அறம், பொருள் இன்பம் என்ற இந்த மூன்றில் பொருளையும் இன்பத்தையும் உதறிவிட்டு, நீ அறத்தை மட்டுமே போற்றி அனுசரிப்பதை பார்த்து, நானும் அறமே உயர்ந்தது என்று அறிந்து கொண்டேன்.  
"பெரியோர்களின் நட்பு, அவர்களுடன் ஏழு வார்த்தைகள் பேசுவதால், அல்லது அவர்களுடன் ஏழு அடிகள் நடப்பதால் உண்டாகும் என்று ஞானிகள் கூறுவார்கள்.  நான் இப்பொழுது உன்னிடம் பலவார்த்தைகள் பேசியதால் உன் நட்பு எனக்கு கிடைப்பதில் எந்த ஒரு தடையும் இருப்பதாக தெரியவில்லை.  மேலும், நீ எனக்கு சிறந்த மரியாதையும் செய்திருக்கிறாய். என்னை உன் நண்பனாக ஏற்றுக்கொள்.  அந்நியனாக எண்ணாதே!"
"நாம் இப்பொழுது நண்பர்களாகிவிட்டதால், உன்னிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன்.  அது ரகசியமில்லை என்றால் பதில் சொல்.
"உனக்கு உயர்ந்த குடிப் பிறப்பு உள்ளது.  அழகு, செல்வம், இளமை அனைத்தும் ஏராளமாகவும் தாராளமாகவும் உள்ளன.  இவைகளை விரும்பி தவம் செய்பவர்கள் உண்டு.  ஆனால், உனக்கு இவைகள் முன்பே உள்ளன.  தாங்க முடியாத சிரமங்கள் வரும்பொழுது சில பெண்கள் தவம் செய்வது உண்டு.  நன்றாக ஆலோசித்துபார்த்தும், உனக்கு அப்படிப்பட்ட கஷ்டம் நேர்ந்திருக்குமென்று எனக்குத் தோன்றவில்லை.  
"உனக்கு ஒரு நாளும் துக்கமோ அவமானமோ நேராது.  உனக்கு யாராவது கெடுதி செய்ய முற்பட்டால், பலமுள்ள உன் தந்தையால் அவர்கள்  கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.  
"நல்ல ஆடையாபரணங்களை அணிந்து, உல்லாசமாக இருக்க வேண்டிய இந்த வயதில் நீ ஏன் அனைத்தையும் விட்டுவிட்டு, மரவுரி அணிந்து இந்த காட்டில் தவக்கோலத்தில் இருக்கிறாய்?  
"சுவர்க்கத்தை விரும்பி தவம் செய்கிறாயா என்று எண்ணிப்பார்த்தால், அதுவும் தேவையற்றது.  சுவர்க்கத்தில் உள்ள தேவர்களே விரும்பி வாசம் செய்யும் இடம் உன் நாடு. நல்ல கணவனை அடைய விரும்பியும் தவம் செய்யத் தேவை இல்லை.  உன் அழகுக்கு உன்னைத் தேடித்தான் அனைவரும் வருவார்.  ரத்தினம் தன்னை அணிபவனை தேடித் செல்லாது.  ரத்தினத்தைத்தான் மனிதர் தேடி திரிவர்.  
"கணவனைப் பற்றி நான் குறிப்பிட்டபொழுது, உன்னிடம் ஒரு பரவசமான மாறுதலை நான் கண்டேன்.  அதிலிருந்து நீ கணவனுக்காகத்தான் தவம் செய்கிறாய் என்று ஊகித்தேன்.ஆனால், என் மனம் அதை ஏற்க மறுக்கின்றது.  இவ்வளவு அழகுள்ள பார்வதிக்கு, தானே வலுவில் ஒரு கணவனை தேடும்படி நேருமா?  நீ போய் கேட்கும்படியான மனிதன் கூட இவ்வுலகில் இருக்கின்றானா? அல்லது நீ விரும்பியபின், உன்னை மறுக்கும் மனிதன் எவன்?"
"உன் உடல் மெலிந்திருக்கிறது.  ஆபரணங்கள் அணிந்திருந்த இடங்கள், வெயில் பட்டு நிறம் மாறியிருக்கிறது.  உன்னைப் பார்க்கும் எவருக்கும் உன்னிடம் அனுதாபம் வரும்.  உன்னைப்பார்த்து இரக்கப்படாத எந்த மனிதனும் கடின சித்தம் உடையவன்தான்.  உன்னால் விரும்படுவதாலேயே அவன் மிகவும் கர்வம் கொண்டுள்ளான்.  இந்த கர்வம் அவனுக்கு கெடுதலையே செய்திருக்கிறதாக நான் எண்ணுகிறேன்.  பேரழகு படைத்த உன்னால் பார்க்கப்படுகின்ற பேறு அவனுக்கு கிட்டவில்லை.  
"சரி போகட்டும்.  நீ இனி வெகு காலம் வருத்தப்படவேண்டாம்.  என் தவத்தின் பலனில் பாதியை உனக்குத் தருகிறேன்.  அதனால் நீ விரும்புகிறவனை உடனே அடையலாம். ஆனால், என் தவ பலனை உனக்கு கொடுப்பதற்கு முன், நீ விரும்புவது எவரை என்பதை எனக்கு தெரிவித்தால் நான் மகிழ்ச்சி அடைவேன்.
இதற்கு பார்வதி நேராக விடை சொல்லாமல், மையிடப்படாத தன் கண்களால் அருகிலிருந்த தன் தோழியை நோக்கினாள்.  
தோழி கூறுகிறாள்.  "அவள் உடலை வருத்தி இப்படி தவமிருப்பதின் காரணத்தை  நீர் அறிய விரும்புகிறீர்.  சொல்கிறேன்"
"பார்வதி தேவியின் அழகுக்கும், அந்தஸ்துக்கும், பல தேவர்கள் அவளை திருமணம் செய்ய போட்டி போடுவார்கள்.  ஆனால், பார்வதி அதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் தன் மனத்தில் சிவபெருமானையே கணவனாக வரித்து, அவரைத்தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற பிடிவாதமாக இருக்கிறார்.  ஆனால், பல முயற்சிகள் செய்து, பரமேஸ்வரனை அவ்வளவு எளிதாக அடையமுடியாது என்ற தெரிந்துகொண்டு, கடைசியாக தன் நோக்கம் நிறைவேற தவம் செய்வது ஒன்றே வழி என்று, தவக்கோலம் பூண்டு இங்குவந்து தவம் செய்கிறார்.
"பார்வதி தேவி சிவபெருமானுக்கு பணிவிடை செய்ய ஹிமவானால், அனுப்பப்பட்டு, பெருமானின் ஆசிரமத்தில் இருக்கும்பொழுது, மன்மதன் சிவபெருமானை நோக்கி மலரம்பை எய்ய, அவர் அதை ஒரு ஓங்காரத்தினால் தடுத்துவிட்டு மன்மதனையும் எரித்தார்.  அப்படி தடுக்கப்பட்ட அம்பு தேவியின் மீது வந்து விழுந்தது.  மன்மதனின் துணையில்லாமலேயே பரமேஸ்வரன் மீது காதல் கொண்டிருந்த பார்வதிக்கு, அம்பும் சேர்ந்துகொள்ளவே அவள் மிகவும் துன்பப்பட்டாள்”.
காதல் நோயினால் வருந்தும் பெண்களுக்கு பல நிலைகள் உண்டு.  சில துன்பங்களைத் தரும், சில மகிழ்ச்சியை கொடுக்கும்.  அவைகள் என்ன என்று பார்ப்போம்.  கண்களில் மகிழ்ச்சி தென்படும், வெட்கம் விடைபெறும், உடல் மெலியும், ஒரு வெறுப்புணர்ச்சி ஏற்படும், நினைவு தடுமாறும், அடிக்கடி காய்ச்சல் வரும், பிதற்றல் அதிகரிக்கும். இவைகளில் பல பார்வதியிடம் காணப்பட்டன.  
தோழி தொடர்கிறாள்:  "பரமசிவன் நடந்துகொண்ட விதம், அவருக்கு பார்வதிமீது விருப்பம் இல்லையோ என்ற சந்தேகத்தை உண்டாக்கியது.   அந்த சந்தேகமே பார்வதிக்கு  பரமசிவன் மீதுள்ள காதலை மேலும் அதிகப்படுத்தியது.   
"காதல் அவள் உடலில் ஒரு வெப்பத்தை உருவாக்கியுள்ளது.  நெற்றியில் பூசுகிற சந்தனம் உடனே உலர்ந்து பொடிப்பொடியாக உதிருகிறது. பனிப்பாறையின் மீது அமர்ந்தாலும், அவளுக்கு சுகம் உண்டாவதில்லை. தன் வருத்தத்தை மறக்க, அடிக்கடி பரமசிவனை வர்ணிக்கும் பாடல்களை பாடுவாள்.  அப்படி பாடும் பொழுது உணர்ச்சி மேலிட்டு, நாக்குழறல் ஏற்பட்டு, வார்த்தைகளின் உச்சரிப்பு தடுமாறும்.  அதைக்கண்டு, தோழிகளாகிய நாங்கள் வருந்துவோம். எங்களால் வேறு எதுவும் செய்ய முடிவதில்லை.  
"காதல் நோயினால் பீடிக்கப்பட்ட அவள், சரியாக துாங்குவது இல்லை.  சற்று அவளையும் மீறி உறங்கினாலும், சிவனை கனவில் கண்டு, அவர் எங்கோ போவது போல் கருதி, "எங்கே செல்கின்றீர்" என்று பிதற்றுவாள்.  
"பரமசிவனின் படத்தை வரைந்து வைத்துக்கொண்டு, அதைப்பார்த்து, தங்கள் எல்லா இடங்களிலும் பரவி இருப்பதாக கூறுகிறார்கள். அப்படியென்றால் என் மனத்திலும் இருக்க வேண்டுமே. எப்படி நான் கொண்டுள்ள காதலை அறியாமல் இருக்கின்றீர் என்று சொல்லி அவரிடம் தனிமையில் பேசுவாள்.
"இவள் உடல் மிகவும் இளைத்துவிட்டது.  அது தோழியராகிய எங்களுக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது.  எப்பொழுது பரமசிவன் வந்து இவளை ஆட்கொள்ளப்போகிறாரோ? தெரியவில்லை". 


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar