Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கணையும், கட்டை விரலும்!
 
பக்தி கதைகள்
கணையும், கட்டை விரலும்!


வாலிக்கும், சுக்ரீவனுக்கும் என்னதான் பிரச்னை? அது சூழ்நிலையால் உருவானது, அவர்கள் இருவருமே குற்றவாளிகள் அல்ல. ஆமாம், சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அவர்கள் மனதுக்குள் சந்தேகத்தை விதைக்க அதுவே ஒருவருக்கொருவர் பகை என்ற ஆலமரமாக வளர்ந்தது.
மாயாவி என்ற அரக்கன், தானே வலியவன் என்பதை பறைசாற்றுவதற்காக, வாலியை வம்புக்கிழுத்து சண்டையிட்டான். ஏற்கனவே பத்துத்தலை ராவணனைப் பந்தாடியவன் வாலி என்பதாலும் அவனுக்குள் வாலி மீது தீராக் கோபம் இருந்தது. ஏனென்றால் இவன் ராவணனின் மனைவியான மண்டோதரியின் சகோதரன். வாலியால் தன் மாமன் அவமானப்படுத்தப்பட்டதை அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தன்னுடன் சண்டையிட வருபவரின் பலத்தில் பாதியைத் தான் ஈர்த்துவிடும் வரம் பெற்றிருந்த வாலியை யாராலும் வெல்வது சுலபமல்ல என்பதுதான் உண்மை என்றாலும், அவனை பழி வாங்கும் முயற்சியாக அவனுடன் போரிடத் துணிந்தான்.
‘கந்தவேள் வேல் செலாது அவன் மார்பில்‘ என்ற வகையில் முருகப் பெருமானும் வாலியின் பராக்கிரமம் கண்டு வியப்பார் என்ற உண்மை தெரிந்தும், அவனை எதிர்க்கத் துணிந்தான் மாயாவி.  சவால் விடுத்த மாயாவியை இளக்காரமாகப் பார்த்தான் வாலி. சண்டை ஆரம்பித்த உடனேயே தன் பலவீனம் புரிந்த மாயாவி தப்பிக்கும் எண்ணத்தில் நீண்டதொரு குகைக்குள் ஓடினான். ஆனால் வாலியோ அதிகரித்த கோபத்துடனும், ஆவேசத்துடனும் குகைக்குள் அவனைப் பின் தொடர்ந்தான். அதற்கு முன்னால் தன் தம்பி சுக்ரீவனை அழைத்து, ‘வெற்றியுடன் திரும்பும் எனக்கு மாலையிட இந்த குகை வாசலில் காத்திரு’ என்று உத்தரவிட்டான்.
அண்ணனின் சொல்லுக்கு அடிபணிந்து அவ்வாறே காத்திருந்தான் சுக்ரீவன். குகைக்கு அந்தப் பக்கம் வேறு வாசல் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே அந்த வழியாக மாயாவி தப்பிப்பதும், அவனை வாலி மேலும் தொடர்வதும் நிகழ்ந்திருக்க முடியாது. சண்டை குகைக்குள்ளேயேதான் நடக்க வேண்டும். இப்படியே இருபத்தெட்டு மாதங்கள் ஓடிவிட்டன.  சுக்ரீவன் திகைத்தான். இத்தனை நாள் கழித்தும் வெற்றி மாலை சூடிக்கொள்ள வாலி வராததிலிருந்து அண்ணனின் வீரத்தின் மீது லேசாக சந்தேகம் எழத் தொடங்கியது அவனுக்கு.
கிஷ்கிந்தை ராஜ்யத்தின் அமைச்சர்களும், ஆலோசகர்களும் சுக்ரீவனை சமாதானப்படுத்தினர். அரண்மனைக்குத் திரும்பலாம் என யோசனை தெரிவித்தனர். சுக்ரீவன் மறுத்தான். அண்ணன் எப்படியும் வெற்றி வீரனாகத் திரும்புவான், அவனை நான் களிப்புடன் வரவேற்பேன் என வற்புறுத்தினான். ஆனால் மற்றவர்களுக்கு அதில் உடன்பாடில்லை. வாலியின் சாதனைகளை அவர்களும் அறிவார்கள் என்றாலும், ஏதேனும் ஒரு கட்டத்தில் ஆனைக்கும் அடி சறுக்குமல்லவா? ஆகவே இந்த சந்தர்ப்பத்தில் வாலி அழிக்கப்பட்டிருப்பான் என்றே அவர்கள் பெரிதும் நம்பினர்.
அப்படி வாலி மரணமடைந்திருப்பானானால் அவனைக் கொன்ற மாயாவி மிகப் பெரிய பலசாலியாகத்தான் இருப்பான். ஆகவே அவன் குகையை விட்டு வெளியே வந்து தங்களையும் தாக்கி அழிக்கக் கூடும் என பயந்தனர். இந்த சமயத்தில்தான் சுக்ரீவன் லேசாக அசைந்து கொடுத்தான். அவர்கள் கூற்றில் உண்மை இருக்கக் கூடும் என நம்பத் தொடங்கினான். அதனாலேயே அவர்கள் மிகப் பெரியதொரு மலையைப் பெயர்த்தெடுத்து குகை வாசலில் நிறுத்தி, மாயாவி வெளியே வர இயலாத நிலையை உருவாக்கியபோது அவன் மவுனமாகவே இருந்தான்.
அடுத்தது? சுக்ரீவனை கிஷ்கிந்தைக்கு மன்னர் ஆக்கினார்கள். அந்த பீடத்தில் அமர தனக்கு வாலிக்கு ஈடான தகுதி இல்லை என்றாலும், அவர்களின் வற்புறுத்தலும் இனி வாலி வரப்போவதில்லை என்ற நம்பிக்கையும் அவனைச் சம்மதிக்க வைத்தன.
ஆனால் நிலைமை அப்படியே தலைகீழாகி விட்டது. குகைக்குள் தனக்குச் சமமாகவே, வெகு நீண்ட நாட்களுக்குப் போரிட்ட மாயாவியை இறுதியாக அழித்து குகை வாயிலை நோக்கி நடந்தான் வாலி. ஆனால் வாசல் அடைபட்டிருப்பதைக் கண்டு கோபம் கொண்டான். வெற்றிமாலை சூடித் தன்னை வரவேற்க வேண்டிய தம்பி துரோகம் செய்துவிட்டான் என கருதினான். பெருங்குரலெழுப்பியும் யாரும் அடைப்பை விலக்க முயற்சிக்காதது கண்டு, ‘நான் வரவே மாட்டேன்’ என்று தானாக கற்பனை செய்து கொண்டு, தான் அரசனாகும் வேட்கைக்கு சுக்ரீவன் அடிமையாகி விட்டான்’ என்றே கருதினான் வாலி. முழு வலிமையை பயன்படுத்தி அந்த மலையை உதைத்து, தகர்த்து துாள் துாளாக்கினான். அதே வேகத்தில் சுக்ரீவனைத் தேடி வந்தான்.
வாலியைக் கண்ட அனைவரும் அலறினர். அவன் உடலெங்கும் ரத்தக் கீறல்களைப் பார்த்தவர்கள், தம் அனைவரையும் அவன் கிழித்துப் போட்டு விடுவான் என்றே பயந்தார்கள். மாயாவியை வெற்றி கொண்டு வந்திருக்கும் அண்ணனைக் கண்ட சுக்ரீவன் முதலில் சந்தோஷமடைந்தாலும், அவனுடைய ஆக்ரோஷம் அவனை கதிகலங்க வைத்தது. ஓடோடிப் போய் அவன் கால்களில் விழுந்து, தான் சூழ்நிலைக் கைதியாக மாற வேண்டிய கட்டாயத்தை விளக்கினான். கதறி அழுதான்.
ஆனால் வாலி கேட்பதாக இல்லை. மாயாவியைக் கொன்ற வெறி தணியாமல், அதைத் தம்பி மீதான தீராக் கோபமாகக் கொண்டான். அவனைத் துரத்தித் துரத்தி அடித்தான். சுக்ரீவனுக்கு யோசனை சொன்ன அரசுப் பிரமுகர்கள் என்ன செய்வதென அறியாமல் தடுமாறினர், அனாவசியமாக சுக்ரீவனை இந்நிலைக்கு ஆளாக்கி விட்டோமே என தங்களையே நொந்தனர். அப்போதுதான் அவர்களில் ஒருவருக்கு ருசியமுக மலை பற்றி நினைவுக்கு வந்தது.
ஒருசமயம் தலையில் இரண்டு கொம்புகள் கொண்ட, துந்துபி என்ற அரக்கன் தனக்கு நிகராகப் போரிட யாரும் இல்லை என்ற மமதை கொண்டிருந்தான். திருமாலையும், சிவனையும், பிரம்மனையும்  வம்புக்கு இழுத்தான். அவர்கள் உனக்கு நிகராகப் போரிடக் கூடியவன் வாலிதான், அவனுடன் சண்டையிடு என்று கைகாட்டி விட்டனர். அதேபோல அவன் வாலியை எதிர்க்க, எளிதாக அவனை வதம் செய்தான் வாலி. துந்துபியின் கொம்புகளைப் பிய்த்து, அவற்றினாலேயே அவனது உடல் முழுவதையும் கீறி, அவனை ஒரு மாமிசப் பிண்டமாக்கி அதையும் அப்படியே துாக்கி எறிந்தான். அது மதங்க முனிவரின் ஆசிரமம் அமைந்திருந்த ருசியமுக மலையில் வந்து விழுந்தது. அதைக் கண்டு பெருங்கோபம் கொண்ட முனிவர், இவ்வாறு வீசியவன் இந்த எல்லைக்குள் வந்தானானால் மாள்வான் என சபித்தார். அதனாலேயே வாலியால் அந்த மலைப் பிரதேசத்துக்குள் போக இயலவில்லை. ஆக இந்தப் பகுதியே அரசப் பிரமுகர்கள் யோசனைப்படி சுக்ரீவனின் புகலிடமாயிற்று.
இங்குதான் ராமனையும், லட்சுமணனையும் அழைத்து வந்தான் அனுமன். தாடகையில் ஆரம்பித்து கவந்தன் வரையில் ராமனின் பராக்கிரமத்தை அறிந்த சுக்ரீவன், தன்னைக் காக்க வல்லவன் ராமனே என்பதைப் புரிந்து கொண்டான். ஆனாலும் வாலியின் பேராண்மையை உணர்ந்திருந்த அவனுக்கு ராமன், வாலியைத் தாக்குப் பிடிப்பானா என்ற சந்தேகம் எழுந்தது. அதை சோதித்துப் பார்க்கவும்  விரும்பினான். இதைக் கேட்டு லட்சுமணன் பெருங்கோபம் கொண்டான் என்றாலும், ராமன், ‘நமக்கு இவனால் காரியம் ஆக வேண்டியிருக்கிறது, அதோடு, இவன் பயப்படுவதிலும், சந்தேகப்படுவதிலும் நியாயம் இருக்கிறது’ என்று சொல்லி தம்பியை சமாதானப்படுத்தினான். அனுமனோ மவுனமாக  நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான்
ஆகவே சுக்ரீவன் சுட்டிக் காட்டிய, வெவ்வேறு கோணங்களில் ஒன்றுக்கொன்று வெவ்வேறு தொலைவுகளில் வளர்ந்திருந்த மரா மரங்களைத் தன் கணையால் துளைத்தெடுத்துத் தன் வீரத்தை நிரூபித்தான் ராமன். அப்படியே பிரமித்துப் போனான் சுக்ரீவன்.
பிறகு ராமன், அந்தப் பிரதேசத்தில் சற்றுத் தொலைவில் பெருமலையாகக் குவிந்திருந்த எலும்புத் தொகுதியைப் பார்த்து அது குறித்து சுக்ரீவனிடம் விசாரித்தான். அதுதான் வாலியால் கொல்லப்பட்டுத் துாக்கியெறியப்பட்ட துந்துபியின் எலும்புக்கூடு என்று சொன்னான் சுக்ரீவன். உடனே தன் தம்பியின் பராக்கிரமத்தை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில், ‘லட்சுமணா... இந்த எலும்புக் கூட்டினை உடனே அப்புறப்படுத்து’ என ஆணையிட்டான்.
அந்தக் கணமே அதனருகில் சென்ற லட்சுமணன், தன் கால் கட்டை விரலால் நிமிண்டினான். அவ்வளவுதான், வானுயரப் பறந்து சென்ற அந்த எலும்புத் தொகுதி எங்கோ போய் விழுந்தது.
இதையும் பார்த்து, வியப்பின் உச்சிக்கே சென்றான் சுக்ரீவன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar