Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சீதையின் பிரிவும், ராமனின் குழப்பமும்
 
பக்தி கதைகள்
சீதையின் பிரிவும், ராமனின் குழப்பமும்


அடுத்த நாள் வானில் பறந்து சென்று கொண்டிருந்த ஒரு தேரிலிருந்து விழுந்தது என்று தன் வானரப் படையினர் தன்னிடம் கொண்டு வந்து கொடுத்த ஒரு மூட்டை நகைகளை ராமனிடம் காட்டினான் சுக்ரீவன்.
அந்த நகைகளைப் பார்த்த ராமன் மூர்ச்சித்து விழாத குறைதான். ஆமாம்... அவை சீதை அணிந்திருந்த நகைகள். அனுசூயா அணிவித்து அழகு பார்த்த நகைகள். சீதையின் உடலை அலங்கரிக்கும் பெருமையால் ஒளிர்ந்த நகைகள். அவளுடைய புன்னகைக்கு ஈடாகாது என்று தான் ஒப்பிட்ட நகைகள்.. லட்சுமணனும் கண்களில் நீர் பெருக அந்நகைகளை வேதனையுடன் பார்த்தான்.
தலையை சிலுப்பிக் கொண்ட ராமன், அக்கணமே சீதை மீட்பின் முதல் கட்டமாக வாலியை வீழ்த்துவது பற்றி பேச ஆரம்பித்தான். வாலியுடன் நேருக்கு நேர் நின்று தன் சார்பாக ராமன் போரிடலாமா என்று சற்றே தயக்கத்துடன் கேட்டான் சுக்ரீவன்.
உடனே அதை மறுத்தான் ராமன். ‘‘உன் சார்பாகவோ அல்லது உன்னுடன் சேர்ந்தோ நான் வாலியை எதிர்ப்பது முறையான செயலல்ல. ஆனால் நீ என்னிடம் அடைக்கலம் என்று வந்துவிட்டதால், என்னாலான உதவியை நான் உனக்குச் செய்ய முடியும். ஆகவே நான் வாலியுடன் நேரடியாகப் போரிட முடியாது’’ என்றான்.
‘‘வாலியை சிறிது நேரம் கூட என்னால் எதிர் கொள்ள முடியாது என்பது எனக்குத் தெரியும். அதனால் நாங்கள் சண்டையிடும்போது நீங்கள் மறைந்திருந்தாவது அவனைத் தாக்கி அழிக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டான் சுக்ரீவன்.
அதைக் கேட்டுப் பெரிதும் குழம்பினான் ராமன். என்ன தர்மசங்கடம் இது! தன் வீரத்தையே பிறர் எள்ளி நகையாடும் வகையில் மறைந்திருந்து தாக்குவதா!
அவனுடைய குழப்பத்தைப் புரிந்துகொண்ட லட்சுமணன், ‘‘அண்ணா, சுக்ரீவனின் யோசனைதான் சரியென்று எனக்கும் படுகிறது. ஒருவேளை நீங்கள் வாலி முன் நின்று சண்டையிட்டீர்களென்றால், உங்கள் பலத்தில் பாதி வாலியைச் சென்றடைந்து விடுமானால், தொடர்ந்து அண்ணியாரைத் தேடும் பணியில் பெரிய தேக்கம் ஏற்பட்டுவிடும். இப்போதே அவர்கள் பிரிவால் நீங்கள் பெரிதும் மனம் கலங்கியிருக்கிறீர்கள். இதோடு உங்கள் வன்மையிலும் பாதியை இழந்து விட்டீர்களானால் உங்கள் நிலைமை இன்னும் மோசமாகிவிடுமோ என்று அஞ்சுகிறேன். இப்போதைக்கு அண்ணியாரைத் தேடுவதில் நமக்கு சுக்ரீவன் மற்றும் அவனுடைய படையின் உதவி பெரிதும் தேவை. வாலி தனியன். அது மட்டுமல்ல, நீங்கள் அவனை எதிர்கொண்டீர்களென்றால், உங்களுடைய நிலைமையைப் புரிந்து கொண்டு, ‘நான் ராவணனை என் வாலால் கட்டிப் புரட்டிப் போட்டு அடிமையாக்கியவன். நான் உத்தரவிட்டால் ராவணன் உடனே உன் சீதையை உன்னிடம் ஒப்படைத்து விடுவான்’ என்று சொல்வானானால் அதுதான் உங்கள் வீரத்துக்கு எப்பேற்பட்ட இழுக்கு! உங்களிடமிருந்து அண்ணியாரைக் கவர்ந்து சென்றவனை நீங்களே அழித்து அவரை மீட்பதுதானே முறை?
‘‘அல்லது வாலி உங்களிடம் சரணடைந்து விடுவானானால், அவனை எதிர்க்கவே முடியாதே! அப்போது நீங்கள் சுக்ரீவனுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னாவது? அண்ணியாரைப் பிரிந்ததால் நீங்கள் மிகவும் நொந்து போயிருக்கிறீர்கள். சற்று அமைதியாக சிந்தித்துப் பாருங்கள். சுக்ரீவனுக்காக வாலியை மறைந்திருந்து தாக்கி அழிப்பது தவறில்லை என்றே தோன்றும். நமக்கு காலம் மிகவும் குறுகி இருக்கிறது. அண்ணியாரை மீட்பது மட்டுமல்லாமல், அங்கே அயோத்தியில் தீப்புகத் தயாராக இருக்கும் பரதனையும் நீங்கள் காக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறீர்கள்’’
தம்பி சொல்வதில் உள்ள யதார்த்தத்தைப் புரிந்து கொண்டான் ராமன். ஏற்கனவே மாயமானைப் பற்றி அவன் எச்சரித்தும் தான் அவனை அலட்சியப்படுத்தியதை இப்போது ராமன் நினைத்துப் பார்த்தான். தம்பி சொல்வதுதான் சரி என்ற முடிவுக்கு வந்தான். அதையே சுக்ரீவனிடம் சொல்ல, அப்போதே வாலியை வென்றுவிட்டதாகக் கருதி அவன் துள்ளி குதித்தான். உடனிருந்த அனுமனும் இந்த ஏற்பாட்டைத் தன் புன்னகையால் ஆதரித்தான்.
பிறகு திட்டமிட்டபடி வாலியை சண்டைக்கு அழைத்தான். வாலி அவனைப் பார்த்து இளக்காரமாகச் சிரித்தான். ‘பெற்ற தண்டனை போதாதா, என் கையால் அடிபட்டே சாகப் போகிறாயா?’ என்று ஆணவத்துடன் கேட்டான்.
‘இனியும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. நாளை நான் உன்னுடன் மோதுகிறேன்’  என்று பதிலுக்கு, அதே ஆணவத்துடன் பதிலளித்தான் சுக்ரீவன்.
வாலிக்கு சந்தேகமே வரவில்லை. தன்னை நிமிர்ந்து பார்க்கவும் திராணியற்ற தம்பி, இப்போது தன்னையே எதிர்க்கத் தயாராகியிருக்கிறான். யார் கொடுத்த தைரியம் இது என்றெல்லாம் அவனுக்கு யோசிக்கத் தெரியவில்லை. அதைவிட தனக்கு சவால் விடுபவனை சல்லடையாக்கி சாகடிக்க வேண்டும் என்ற குரோதம் மட்டும் அவன் மனதில் மண்டியிருந்தது.
ஆனால், வாலியின் மனைவி தாரை அவனைத் தடுத்தாள். ‘மிகுந்த கீர்த்தி வாய்ந்த ராமன், சுக்ரீவனுக்குத் துணையாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன். ஆகவே தம்பியுடன் இணக்கமாகப் போய்விடுங்கள். ராம பாணம் உங்களை என்னிடமிருந்து நிரந்தரமாகப் பிரித்து விடக்கூடாது’  என்று கெஞ்சி மன்றாடினாள்.
‘ராமனா, எனக்கு எதிராகவா? அதெப்படி இருக்க முடியும்? அவனைப் பற்றி நான் எத்தனை உயர்வாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்! அவன் எங்கள் இருவருக்கிடையே சமாதானத்துக்குதான் முயற்சிப்பானே தவிர, சுக்ரீவனுடன் சேர்ந்து கொண்டு என்னை எதிர்க்கவே மாட்டான்’  என்று திட்டவட்டமாகக் கூறினான்.
‘உங்களுடைய தாக்குதலைத் தாக்கு பிடிக்க முடியாமல் ருசிய முக மலையில் ஒளிந்துகொண்டிருந்த சுக்ரீவன் இப்போது தானாக வந்து உங்களை சண்டைக்கு அழைக்கிறான் என்றால் அது அவனுக்குச் சரியான துணையும், பக்க பலமும் இருப்பதால்தானே? அது ராமனாகவே இருப்பதால்தான் எனக்குக் கலக்கமாக இருக்கிறது..‘ என்று கதறினாள் தாரை.
‘ராமன் அவ்வளவு கேவலமானவன் அல்ல. அப்படிச் செய்ய மாட்டான். அதைவிட என் போராற்றலைக் குறைவாக மதிப்பிடாமல், அதன் மேல் நம்பிக்கை வை. நான் சுக்ரீவனை சுக்கு நுாறாக்கி விட்டுத் திரும்புவேன்’ என்று கூறிவிட்டு சண்டை களத்துக்குச் சென்றான் வாலி.
அங்கே தனக்கு முன் தொடை தட்டி நின்ற தம்பியைப் பார்த்து கேலியாகச் சிரித்தான். ‘இத்தனை உற்சாகத்துடன் உயிரிழக்கத் தயாராக இருக்கும் ஒருவனை இப்போதுதான் பார்க்கிறேன்’ என்று கிண்டலாகக் கூறிய அவன் அப்படியே சுக்ரீவன் மீது பாய்ந்தான்.
தனக்கு ராம ஆதரவு இருக்கும் தைரியத்தில் கிட்டத்தட்ட வாலிக்கு சமமாகவே அவனுடன் சண்டையிட்டான் சுக்ரீவன். கூடவே ராமன் மறைந்திருக்கும் பகுதியை அவ்வப்போது பார்த்துக் கொண்டான்.
ஆனால் பெரியதொரு மரத்துக்குப் பின்னால் மறைவாக நின்றிருந்த ராமன், வாலியைத் தன் கணையால் வதைத்து சுக்ரீவனைக் காப்பான் என்று எதிர்பார்த்திருந்தது போக, இவன் வாளாவிருப்பதை லட்சுமணனும் திகைப்புடன் கவனித்தான். ‘அண்ணா, ஏன் இப்படி கல்லாக இறுகிவிட்டீர்கள்? சுக்ரீவனுக்குத் தாங்கள் கொடுத்த உறுதிமொழியைக் காற்றில் பறக்க விட்டுவிடாதீர்கள். உடனே அவனைக் காப்பாற்றுங்கள்’ என்று பதறினான்.
ராமன் குழம்பித்தான் போயிருந்தான். தன் செயல் நியாயமானதுதானா, நல்லோர் விமரிசனத்துக்கு ஆளாகாமல் இருக்குமா, என்றெல்லாம் எண்ணி எண்ணித் தவித்தான். அதைப் புரிந்து கொண்ட லட்சுமணன், ‘இனி அதைப் பற்றியெல்லாம் யோசித்துக் காலம் தாழ்த்துவதில் அர்த்தமில்லை. உடனே செயல்படுங்கள்’ என்று பரிதவிப்புடன் கேட்டுக் கொண்டான்.
மிகக் குறுகிய நேரத்திலேயே வாலியின் அடிதாங்க முடியாத சுக்ரீவன் ராமனிடம் ஓடோடி வந்தான். ‘என்ன ஆயிற்று, ராமா? ஏன் இப்படி சிலையாக நிற்கிறாய், இன்னும் இரண்டொரு அடிகள் வாலியிடமிருந்து வாங்கினால் என் உயிர் என்னை விட்டு நீங்கிவிடும், காப்பாற்று, ராமா, காப்பாற்று’ என்று கதறினான்.
உடனே ராமன் அவனை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தான். ‘உங்களிருவரில் உன்னை என்னால் அடையாளம் காண இயலாததால் நான் கொஞ்சம் தயங்கி நின்றுவிட்டேன், நீ கொடிப்பூவைச் சூடிச் செல். நான் உன் எண்ணத்தை நிறைவேற்றி வைக்கிறேன்’ என்று சொல்லி அனுப்பி வைத்தான்.
ஓடிப்போன சுக்ரீவன் மீண்டும் திரும்பியது கண்டு திகைத்த வாலி, யாரோ இவனுக்கு உதவுகிறார்கள் என்று சந்தேகம் கொண்டான். அதே சமயம், ஒரே போடாகத் தரையில் வீசிக் கொல்ல அவன் சுக்ரீவனைத் துாக்கியபோது எங்கிருந்தோ மின்னலாய் வந்த ஒரு கணை அவனைத் தாக்கிச் சாய்த்தது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar