Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பார்வதி கல்யாணம்
 
பக்தி கதைகள்
பார்வதி கல்யாணம்


 ‘‘அப்பாவிடம் என்னை திருமணம் செய்ய விரும்புவதை தெரிவிக்கச் சொல்’’  என்று தன் தோழியை சிவபெருமானிடம் அனுப்பி வைத்தாள் பார்வதி. அவளுக்கு இருந்த வெட்கத்தினால் இப்படி தோழி மூலம் சொல்கிறாள். ஒருவரை ஒருவர் நேசித்து இணையும் திருமணம் என்றாலும் பெற்றோரின் சம்மதத்துடன் மணப்பதே சிறந்தது என்னும் நீதி உலகிற்கு சொல்லப்படுகிறது.
இதைச் சொல்லி விட்டு சிவபெருமானின் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தாள் பார்வதி.   

பார்வதியின் விருப்பத்தின்படியே செயல்படுவதாக தோழியை சிவபெருமானும் அனுப்பி வைத்தார். உடனே சப்தரிஷிகள் தன் முன்னே வரவேண்டும் என்று நினைத்தார். அதற்கு காரணம், தனக்கு பெண் கேட்டு ஹிமவானிடம் செல்ல சப்தரிஷிகளே தகுதியானவர்கள் என அவர் நினைத்ததே.  

சிவபெருமானுக்கு தொண்டு செய்யும் பாக்கியம் கிடைத்ததே நாம் செய்த தவத்தின் பலன் என்று எண்ணி மகிழ்ந்த சப்தரிஷிகள், வசிஷ்டரின் மனைவி அருந்ததியுடன் ஆகாச கங்கையில் நீராடி தங்களை புனிதப்படுத்திக் கொண்டு சிவபெருமான் முன் தோன்றினார்கள். சிவபெருமான் தங்களை அழைத்த காரணம் அந்த ரிஷிகளுக்கு தெரியும். திருமணம் பேச போகும் போது பெண்ணும் உடனிருப்பது சிறப்பு என்று அருந்ததியை சேர்த்துக் கொண்டார்கள்.   

ரிஷிகள் என்ற பெயர் இருந்தாலும் இவர்கள் சந்நியாசிகள் அல்லர். மனைவியுடன் வசிப்பவர்கள்.  இவர்களை வானப்ரஸ்தர் என்று சொல்வதுண்டு.  

சாதாரணமாக திருமணம் முடிந்தபின் அருந்ததியையும், சப்த ரிஷிகளையும் நட்சத்திர உருவில் மணமக்கள் காண்பது மரபு. ஆனால் இங்கு திருமணத்திற்கு முன்பே காண்கிறார்கள். தவிர அவர்களே திருமண ஏற்பாடுகளை செய்வது சிறப்பானது.   

தவம் செய்வதும் அதற்கான பலனை அனுபவிப்பதும் ஒரே காலத்தில் நிகழக்கூடியது அல்ல. தவம் முதலில் செய்வர், பிறகு அதன் பலன் கிட்டும். சிலர் பலன் கிடைத்ததும் தவத்தை நிறுத்திவிடுவார்.  ஆனால் சப்த ரிஷிகள், முன்பு தாம் செய்துள்ள தவத்தின் பலனை அனுபவிக்கும் இந்த சமயத்தில் கூட தவம் செய்கின்றனர்.  

சிவபெருமான் சப்த ரிஷிகளையும் அருந்ததியையும் சமமான மரியாதையுடன் வரவேற்றார். பெண் என்று கருதி அருந்ததிக்கு குறைவான மரியாதை செய்தவர் அல்லர். ஆண் பெண் என்ற பாகுபாடு பெரியோர்களிடம் கிடையாது.  

அருந்ததியையும் வசிஷ்டரையும் சேர்த்து கண்ட சிவபெருமான்,  தான் மணம் செய்துகொள்ள முடிவெடுத்தது சரியானதே என்று எண்ணினார். ஏனென்றால் தவம், யாகம், முதலிய எந்த சுபகாரியங்களுக்கு மனைவி நல்ல உறுதுணையாவார் என்று அறிந்துகொண்டார்.  

முன்பு சிவபெருமானை பார்வதியின் மீது காதல் கொள்ள மன்மதன் துாண்டினான். அதனால் அவன் அழிந்தான். பார்வதியின் தவத்தின் பலனாய் அவளை மணக்க சிவபெருமான் இப்பொழுது சம்மதித்துள்ளார். சப்த ரிஷிகளை அழைத்து அவர்கள் மூலம் திருமணத்தை முடிக்க முயல்கிறார்.  இதையெல்லாம் கண்ட மன்மதன், திருமணம் முடிந்த பின் தான் முன்பு செய்ததை பிழையாக எண்ணாமல் மன்னித்து, தனக்கும் சிவபெருமான் அருள்புரிவார் என்ற நம்பிக்கை அவனுக்கு ஏற்பட்டது.

மன்மதனின் உடல்தான் அழிந்ததே தவிர, அவன் உயிருடன்தான் இருக்கிறான். அசரீரி தேவதையும் அதை ரதிக்கு சொல்லி ஆறுதல் அளித்தது.

சிவபெருமானிடம் வந்துள்ள சப்த ரிஷிகள், அவரை நேரில் கண்டதால் ஏற்பட்ட மகிழ்ச்சியால் சிவபூஜை செய்து விட்டு, ‘‘எவன் தங்களை நினைக்கிறானோ அவன் சிறந்த பக்தன் என்று உலகம் கொண்டாடுகிறது.  அப்படியிருக்கையில், தங்களாலேயே நினைக்கப்படும் பாக்கியம் பெற்ற மனிதனின் பெருமையை சொல்லவும் வேண்டுமோ?
தங்களால் நினைக்கப்பட்ட காரணத்தால், நாங்கள் எங்களைப் பற்றி பெருமை கொள்கிறோம்.  தங்களை தரிசனம் செய்வதால் உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எங்களை நினைத்ததில் இருந்து, நாங்கள் செய்ய வேண்டிய காரியம் ஒன்று உண்டென்று தெரிகிறது.  தயவு செய்து அது என்ன எனக் கூறும்படி வேண்டுகிறோம்’’  என்றனர்.

இதைக் கேட்ட சிவபெருமான், ‘‘முனிவர்களே! என் முயற்சிகள் அனைத்தும், சுயநலக் கலப்பு இல்லாமல், பிறர் நன்மைக்காகவே என்பதை அறிவீர்கள்.  தாரகனால் துன்புறுத்தப்படும் தேவர்கள், நான் ஒரு மகனைப் பெற்று அவனை அவர்களின் சேனைக்குத் தலைவனாக அளிக்க, சாதகப் பட்சி மேகத்திடம் வேண்டுவதுபோல் என்னிடம் வேண்டிக்கொண்டனர்.  அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, நான் ஒரு மகனை அடைய விரும்பி, பார்வதியை மணக்க விரும்புகிறேன்’’ என்றார்.   
சாதகப் பட்சி மேகத்திலிருந்து விழும் நீரை நேரடியாக குடிக்கும். தரையில் விழுந்த நீரை குடிக்காது என்பர்.
‘‘எனக்காக நீங்கள் ஹிமவானிடம் சென்று, பார்வதியைத் தர வேண்டுமென கேட்டுக் கொள்ள வேண்டும். உங்களைப் போல பெரியோர்களால் செய்து வைக்கப்படும் எந்த காரியமும் நன்மையை உண்டாக்கும்’’

‘‘ஹிமவான் நன்னடத்தை உள்ளவன்.  உயர்ந்த அந்தஸ்து உடையவன். ஆகையால் அவனுடன் நீங்கள் எனக்குச் செய்து வைக்கும் இந்த சம்பந்தம் நிச்சயமாய் எனக்கு பெருமை தரும் என்பதை நீங்கள் உணரவேண்டும்’’   

உலகினுக்கே தலைவராகிய சிவபெருமானுக்கு ஹிமவானின் சம்பந்தம் தகுமோ என்ற கேள்விக்கு பதிலளிப்பது போல இந்த கருத்து அமைகிறது.

பெண் விஷயமாக நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது நான் உங்களுக்கு சொல்லித் தர வேண்டியதில்லை. அதுபற்றி நீங்களே நூல்கள் எழுதியுள்ளீர்கள். அருந்ததியும் இது விஷயத்தில் உங்களுக்கு உறுதுணையாக இருப்பாள்.

ஆகையால் நீங்கள் இப்பொழுதே ஹிமவானின் இருப்பிடமான ஓஷதிப்ரஸ்தம் செல்லுங்கள்.  காரியம் முடிந்ததும் இங்கே பக்கத்தில் உள்ள மஹாகோசீ அருவிக்கரையில் என்னை சந்திக்கலாம்’’ என்றார்.  

சப்தரிஷிகளும் வனப்பிரஸ்தர்களாக, கொஞ்சமேனும் உலகப்பற்று உள்ளவராக இருப்பவர்கள்.  மனைவியுடன் இருப்பதே இதற்கு சான்று. ஆகையால் பற்றற்ற சிவபெருமானை பார்க்க வரும் பொழுது, தங்களுடைய பற்றுடைய தன்மையை எண்ணி கொஞ்சம் வெட்கத்துடன் வந்தனர்.  ஆனால் இங்கு வந்து சிவபெருமானின் கோரிக்கையை கேட்டவுடன் அவர்களின் வெட்கம் நீங்கியது.  

அந்த முனிவர்கள் சிவபெருமானின் கட்டளைப்படி செய்வதாக கூறிவிட்டு புறப்பட்டனர்.  சிவபெருமானும் அருவிக்கரையை நோக்கி சென்றார்.  ரிஷிகள் ஆகாய மார்க்கமாக விரைந்து ஓஷதிப்ரஸ்தம் அடைந்தார்கள்.  

அந்த நகரம் மிகவும் ரம்யமாக, செல்வச் செழிப்புடன் விளங்கியது.  அங்குள்ள மக்களும் பார்க்க மிக நல்ல பொலிவுடன் இருந்தனர். செல்வத்தில் சிறந்தது குபேரனின் அளகாபுரி. அந்நாட்டின் மக்களாகிய யட்சர்களை விட பொலிவு மிக்கவர்கள் தேவர்கள். அளகாபுரியில் தேவர்களை குடியேறச் செய்தது போல இருந்தது ஹிமவானின் தலைநகரம்.  நகரைச் சுற்றி அகழி அமைந்தது போல கங்கை ஓடிக் கொண்டிருந்தது. ரத்னப் பாறைகளால் கோட்டை மதில்கள் அமைக்கப்பட்டு மனங்கவரும்படி இருந்தது.  ஹிமவானின் நல்லாட்சியால் யானைகள் சிங்கங்களுடன் உறவாடிக் கொண்டிருந்தன.  அங்குள்ள பெண்கள் வனதேவதைகளைப் போல அழகு மிக்கவர்களாக இருந்தனர்.

ஹிமவானின் நகரில் மாளிகைகள் வானளாவி இருந்தன. அம்மாளிகைகளிலிருந்து எந்நேரமும் இனிய சங்கீதம் கேட்டுக்கொண்டிருந்தது.  அத்துடன் மிருதங்கங்களின் சப்தமும் வந்து கொண்டிருந்தது.  வீடு தோறும் கற்பக மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தன.  அதன் உச்சியில் வண்ண வண்ணமாய் பட்டுத்துணிகள் கொடி போல அசைந்தாடின. மாளிகைகளின் மேல் தளத்திற்கு செல்லும் படிகள் வீட்டிற்கு புறத்தே அமைந்திருந்தன. அவைகள் ஸ்படிக கற்களால் ஆனவை. அந்த படிகளில் வானத்திலிருந்த நட்சத்திரங்கள் பூவைத் துாவினாற்போல பிரதிபலித்தன.  

நகர மாந்தர்கள் தேவர்களாகையால் அவர்கள் எப்பொழுதும் இளமையாகவே இருந்தனர்.  வயோதிகமும் மரணமும் அவர்களுக்கில்லை.

நகருக்கு வெளியே கந்தமாதானம் என்னும் குன்று இருந்தது.  அந்த குன்றே நந்தவனமாக அமைந்திருந்தது. அங்கு நகர மக்கள் சென்று பொழுதை இனிமையாக கழித்தனர். அத்துடன் வழிப்போக்கர்களும் அங்கு தங்கி இளைப்பாறி சென்றனர்.  மக்களுக்கு அச்சமென்பதே ஹிமவானின் ஆட்சியில் இல்லை.  

இப்படி இருந்த ஹிமவானின் தலைநகரில் சப்த ரிஷிகளும் ஆகாயத்திலிருந்து இறங்கினார்கள்.   இதுவரை சுவர்க்கமே சகல சுகபோகங்களுக்கும் இருப்பிடம் என நினைத்திருந்த அவர்கள், இப்பொழுது ஓஷதிப்ரஸ்தம் அதை விட உயர்ந்தது என தெரிந்துகொண்டார்கள்.  

அந்த ரிஷிகள் ஹிமவானின் மாளிகை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.  அவர்கள் வருவதை தொலைவிலேயே கண்ட ஹிமவான் அவர்களை வரவேற்க எண்ணி தன் மந்திரிகளுடன் உபசார பொருட்களுடன் சென்றான்.  

வரவேற்பினால் மகிழ்ச்சி அடைந்த ரிஷிகளை, அவன் தன் மாளிகைக்கு வழிகாட்டி அழைத்துச் சென்றான்.  அரண்மனையில் தக்க ஆசனத்தில் அமரச் செய்து, தானும் ஒரு ஆசனத்தில் அமர்ந்து ரிஷிகளை நோக்கி கூறத் தொடங்கினான்.

‘‘மஹரிஷிகளே! தங்களின் தரிசனம் எனக்கு கிடைத்தது மேகமூட்டமே இல்லாமல் மழை வந்தது போல எதிர்பாராத ஒன்று.  எனது மலைவடிவான சரீரத்தில், தங்கள் அடிகள் வைத்து வந்து அமர்ந்திருப்பதால் இன்று முதல் ஒரு புனித தலமாக மாறிவிட்டேன்.  சிவபெருமானது முடியினின்று எனது சிகரத்தில் விழும் கங்கையாலும், தங்களுடைய பாதங்கள் பட்ட மகிமையாலும் எனது இரண்டு வடிவங்களும் துாய்மை பெற்றுவிட்டன.  ஹிமவானுக்கு தேவ வடிவம், மலை வடிவம் என இரண்டு வடிவங்கள் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar