Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பாசம்தான் வேண்டும், பகை அல்ல!
 
பக்தி கதைகள்
பாசம்தான் வேண்டும், பகை அல்ல!


எதிர்பாராமல் தாக்கப்பட்டு நிலைகுலைந்து கீழே விழுந்த வாலி, தனக்கும் இப்படி நேருமா என்ற ஆச்சரிய சந்தேகத்துடன் தன் மார்பைத் துளைத்த அம்பைப் பார்த்தான். அதில் ‘ராம‘ என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டிருப்பது கண்டு பேரதிர்ச்சிக்குள்ளானான். ‘சூரியன் மேற்கில் உதித்து விட்டதா? மலைகளையெல்லாம் கடல் உட்கொண்டதா? அப்படியெல்லாம் இயற்கை முரண்பட்டால்தானே இப்படி ராமனின் பாணம் என்னைத் தாக்கியிருக்க முடியும்?‘ என்று அரற்ற ஆரம்பித்தான்.
அம்பெய்திவிட்ட குற்ற உணர்வுடனேயே ராமன் அவன் முன்னே வந்து நின்றான். உடன் லட்சுமணன். அவர்களைக் கண்டதும் விரக்தியால் விம்மினான் வாலி. ‘என்ன காரியம் செய்தாய், ராமா! உன்னுடன் கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத என்னை, எந்த வகையிலும் உன் வாழ்க்கையில் குறுக்கிடாத என்னை, ஏன் உனக்கு நிகரான மானிடனாகவும் இல்லாத என்னை, இப்படி வீழ்த்த உனக்கு எப்படி மனம் வந்தது?‘ என்று கேட்டுக் குமுறினான்.
‘‘ஒரு சகோதரனின் வலியை என் வலியாகவே உணர்ந்தவன் நான். சகோதரரிடையே பாசம்தான் நிலவ வேண்டும், பகை அல்ல என்பதை பரிபூரணமாக ஆதரிப்பவன் நான். ஆனால், உனக்காகவே காத்திருந்து, உன் அடிமையாக வாழவும் தயாராக இருந்த தம்பி மீது நீ கொண்டிருந்த சந்தேகம், கோபம், வெறுப்பு, காழ்ப்புணர்வு எல்லாம் நியாயமானதா என்பதை நீயே உணர்ந்து சொல்,‘ என்று ராமன் அவனுக்கு பதிலளித்தான்.
‘இது எங்கள் கோட்பாடு, எங்கள் வாழ்க்கை முறை. இதில் உங்கள் பண்பாட்டையும், பாசத்தையும், மானுடனான நீ எதிர்பார்ப்பது முறையே அல்ல.  என் தம்பி உன்னிடம் குறைபட்டுக் கொண்டானென்றால், ‘அது உன் பாடு, உன் அண்ணன் பாடு‘ என்று சொல்லி நீ விலகியிருந்திருக்க வேண்டும். அதோடு உங்களுக்குள்ளான விவகாரத்தில் தலையிட எனக்குக் கொஞ்சமும் அதிகாரமில்லை என்று கூறி ஒதுங்கியிருந்திருக்க வேண்டும். ஆனால்.. ‘ராமன் தர்மம் பிழன்றான்‘ என்ற அபவாதம் உண்டாக என்னைக் காரணமாக்கி விட்டாயே, ராமா! உன் மனைவியை ராவணன் கவர்ந்தான் என்று அறிந்தேன். என்னிடம் சொல்லியிருந்தால் அடுத்த கணமே ராவணனைப் பந்தாடிவிட்டு சீதையை உன்னிடம் சேர்ப்பித்திருந்திருப்பேனே! நல்ல வாய்ப்பைப் போக்கிக் கொண்டாயே..‘ என்று புலம்பினான் வாலி.
அப்போது லட்சுமணன் முன்வந்து, ‘தன்னைக் காக்க வந்தவராகக் கருதியதால்தான் சுக்ரீவன் ஸ்ரீராமரை சரணடைந்தான். அவனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை நீக்கும் முறையாகத்தான் அண்ணன் வாக்களித்தார். இதெல்லாம் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டு விட்ட விஷயங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் சந்தர்ப்பம் முதலில் உன்னைச் சந்திக்க வாய்ப்பளித்திருக்கும். அப்படியிருந்தால் தம்பிக்கு நீ இழைத்த கொடுமைகளை விளக்கிச் சொல்லி உன் முறைகேட்டையும், அறியாமையையும் விளக்கி, என் அண்ணன் உன்னை உன் தம்பியுடன் சுமுகமாக இணைத்து வைத்திருப்பார். ஆனால் அப்படி நிகழவில்லை. ஆனால், ஒரு வீரனாக நேருக்கு நேர் நின்று போரிடவில்லையே என்று நீ விமரிசிக்கலாம். அப்படி நேர்ந்திருக்குமானால் என் அண்ணனுடன் நீ அவருடனான நட்பைத்தான் விரும்பியிருப்பாயே தவிர, சண்டையை அல்ல. அப்போது சுக்ரீவனுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இயலாத தர்மசங்கடத்துக்குள் என் அண்ணன் சிக்கியிருப்பார். ஆகவே, இவர் தரப்பில் தவறேதுமில்லை,‘ என்று ராமன் சார்பாகப் பேசினான்.
அப்போதும் சமாதானமாகாமல் மெல்ல சிரித்தான் வாலி. ‘நொண்டி சாக்கு நூறு சொல்லலாம், லட்சுமணா. அவற்றையெல்லாம் கேட்டு சமரசம் செய்து கொள்ளும் அற்பப் பிறவி அல்ல நான். எங்கள் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் நீங்கள். சீதையைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய உங்களுடைய அவசியத்துக்காக சுக்ரீவன் தேவைப்பட்டான். அவனுடைய படைகள் அந்தப் பணியை செவ்வனே நிறைவேற்றும் என்ற நம்பிக்கையால், அவனுக்குப் பரஸ்பர ஆதரவு தந்திருக்கிறீர்கள். அதாவது மறைமுகமாக என் மீதான அவனுடைய பகைமையை வளர்த்திருக்கிறீர்கள். உங்களுடைய தர்ம நெறிப்படி அவனை சமாதானப்படுத்தி, என்னையும் அவனையும் இணைத்து வைத்திருக்கலாமே, ஏன் செய்யவில்லை? இந்த கையாலாகாதனத்துக்கு விதி மீது பழி போடுகிறீர்கள். ‘உன்னை முதலில் சந்தித்திருந்தால்..‘ என்றெல்லாம் பொருந்தாத காரணங்களைச் சொல்கிறீர்கள். மொத்தத்தில் மனைவியைப் பறி கொடுத்திருந்த சோகம் ராமனைப் பெரிதும் குழப்பிவிட்டிருக்கிறது என்றுதான் சொல்வேன். ஆனால் உடனே, ‘நீ சுக்ரீவனின் மனைவியைப் பறித்துக் கொண்டாயே?‘ என்று கேட்டு, உங்கள் செயலை நியாயப்படுத்த முயற்சிக்காதீர்கள். இது எங்கள் கலாசாரம். எங்கள் பழக்கம். ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் வாழ்வது எங்கள் வாழ்க்கை முறை. இது உங்களுக்கு ஒவ்வாததாக இருக்கலாம். ஆனால், எங்களுடைய வாழ்க்கை முறை மீதான தீர்ப்பைச் சொல்ல நீங்கள் யார்?‘ வாலி விரக்தியின் உச்சத்தில் பேசினான்.
பிறகு ஒருவாறு சமாதானமடைந்தவனாக, ‘உங்கள் முயற்சியால் சுக்ரீவன் மீது நான் கொண்டிருந்த சந்தேகம் தீர்க்கப்படுமானாலும், அதனால் எங்களுக்கிடையே சுமுகமான உறவு அமைவதானலும், என் ஆழ் மனதில் வேரூன்றியிருக்கும் அவன் இழைத்த ‘துரோகம்‘ என்ற சந்தேகம் முழுமையாக அகலுமா என்று சொல்ல முடியாது. ஏனென்றால் நான் சுக்ரீவனிடம் அத்தனை கொடூரமாக நடந்து கொண்டிருக்கிறேன். என்னுடைய ஏதாவது ஒரு பலவீன சந்தர்ப்பத்தில் அவன் என்னை வீழ்த்தித் தான் விஞ்சிவிடுவானோ என்ற அவநம்பிக்கை பயம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கும். அப்படியானால் சமாதானத்துக்குப் பிறகான எங்கள் வாழ்க்கை சீராகச் செல்லாதுதான். அதனால்தான் உன் மூலமாக எனக்கு இப்படி ஒரு கதி ஏற்பட்டிருக்கிறது போலிருக்கிறது. என் வாழ்க்கை இப்படித்தான் முடிய வேண்டும் என்றிருக்கும்போது யாரை நொந்து என்ன பயன்? ஆணவம் கொண்டு அலைபவர்கள் இப்படித்தான் ‘அநியாய‘ தீர்ப்பால் அழிவார்கள் என்பதை என்னுடைய இந்தத் தோல்வி அனைவருக்கும் உணர்த்தட்டும்,‘ என்று சொல்லி ராமனை நோக்கி இரு கரம் கூப்பினான் வாலி.
கணவன் ராமனால் கொல்லப்பட்டான் என்ற செய்தி கேட்டு பதறியபடி ஓடோடி வந்தாள் தாரை. வாலியின் மார்பில் விழுந்து அழுதாள். ‘நான் சொன்னேனே, போகாதீர்கள், உங்களுக்கு யமனாக ராமன் அங்கே காத்திருக்கிறான், என்று. ‘என்னை வெல்ல ஒருவன் இனிதான் பிறந்து வரவேண்டும்,‘ என்று இறுமாப்பாகச் சொல்லிவிட்டு இப்போது இறந்துபோய் என்னை நிர்க்கதியாக்கி விட்டீர்களே!‘ என்று ஆற்றாமையால் அரற்றினாள். கூடவே, கண்களில் வெறுப்புத் தீ உமிழ ராமனைப் பார்த்தாள். ‘என் கணவரை என்னிடமிருந்து பறித்து விட்டு, உன் மனைவியைப் பறித்தவனிடமிருந்து அவளை மீட்க முயற்சி மேற்கொள்ளப் போகிறாயா? எப்படி இருக்கிறது இந்த நியாயம்! இதுவும் கடந்து போகும் என்று என்னால் இனி வாளாவிருக்க முடியுமா? கடந்து போக வேண்டிய இந்தச் சம்பவம் என் நினைவிலிருந்து மறந்து போனால்தானே அது நிகழும்! நீள் பழி கொண்டாயே ராமா…‘ என்றெல்லாம் புலம்பினாள்.
வாலி அவளை அமைதிப்படுத்தினான். ‘நம் வாழ்க்கையின் பாதையை வகுத்தவன், நம் பயணம் முடிந்ததைத் தெரிவிப்பதுதான் இறப்பு என்ற நிகழ்ச்சி. இது அனைவருக்குமேயான பொது விதி. இப்போது நான் அந்த விதிக்கு இலக்காகிவிட்டேன். ஆகவே நீ யாரையும் நொந்துப் பயனில்லை. இனி சுக்ரீவன் உன் தம்பி. அவனை நல்வழிப்படுத்த வேண்டியது உன் பொறுப்பு,‘ என்று சொல்லி ஆற்றுப்படுத்தினான்.
பிறகு மகன் அங்கதனை அழைத்து, ‘நீ வீணாக விரோதத்தை நெஞ்சில் சுமக்க வேண்டாம். பழிக்குப் பழி என்று தொடர்ந்து கொண்டே போனால் அதற்கு ஒரு முடிவே இருக்காது. ஆகவே என் மரண துக்கத்தை உன் நெஞ்சில் நிறுத்தாதே. அதற்கு பதில் ராமனுக்குக் கைங்கரியம் செய்து புண்ணியம் தேடிக்கொள். ஒரு தகப்பனைப் பார்த்து எப்படி வாழக்கூடாது என்ற படிப்பினையைக் கற்றுக் கொண்டதாக என்னுடன் வாழ்ந்த காலத்தை எடுத்துக் கொள்’ என்றான். பிறகு ராமனிடம் அங்கதனை கைபிடித்துக் கொடுத்து ‘உன் இளவலாய் இவனை வழி நடத்துவாயாக’ என்று கேட்டுக் கொண்டான்.
அடுத்து சுக்ரீவனைப் பார்த்து, ‘இனி உனக்குதான் பொறுப்பு மிகுதி. கிஷ்கிந்தையை சீராக பரிபாலனம் செய்வாயாக. அதற்கு முன் வாக்குக் கொடுத்தபடி சீதை இருக்குமிடம் கண்டுபிடித்து, ராமன் அவளை மீட்கும் வழிகளை மேற்கொள்வாயாக’ என்று கூறிவிட்டு நிரந்தரமாக விழி மூடினான் வாலி.
(தொடரும்)


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar