Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பெண்ணின் பெருந்துயரம்
 
பக்தி கதைகள்
பெண்ணின் பெருந்துயரம்


சிவகங்கையில் இருந்த ஒரு முதியோர் இல்லத்தின் வரவேற்பறையில் அமர்ந்திருந்தேன். காரில் வரும்போது நண்பர் இந்த இல்லத்தில் இருக்கும் லட்சுமியின் கதையைச் சொன்னார். அந்தப் பெண்ணின் துயரம் என்னை கலங்கடித்தது.
லட்சுமி ஒரு கோடீஸ்வரனின் மகள். ஆள் பார்க்க சிகப்பாக, அழகாக இருப்பாள். பள்ளிப்படிப்பு முடிந்து ஓரிரு ஆண்டுகளில் திருமணமானது. கணவனும் பெரிய கோடீஸ்வரன் வீட்டுப் பிள்ளை. மகிழ்ச்சியுடன் மணவாழ்வைத் தொடங்கினாள் லட்சுமி. அந்த மகிழ்ச்சியில் அவள் வயிறு பூரித்தது. லட்சுமி நான்கு மாதம் கர்ப்பம் என மருத்துவர் உறுதி செய்தார். இருவீட்டாரும் அந்த நிகழ்வைத் திருவிழாவாகக் கொண்டாடினர்.
இந்த சமயத்தில்தான் லட்சுமியின் கணவனுக்கு புத்தி புரண்டது. ஒரு கல்லுாரிப் பேராசிரியையிடம் தொடர்பு ஏற்பட்டது. அடுத்த சில மாதங்களில் பேராசிரியை கர்ப்பமானாள். என்னைத் திருமணம் செய்து கொள்ளாவிட்டால் ஊர் முழுதும் நாறடித்துவிடுவேன் என மிரட்டினாள். லட்சுமியின் கணவன் அவளை அம்போ என விட்டுவிட்டு அந்தப் பேராசிரியையைத் திருமணம் செய்துகொண்டான்.
லட்சுமி நிலைகுலைந்து போனாள். தனக்கு நிகழ்ந்த சோகத்தை மறக்க தன் தாய் மடியை நாடினாள். ‘‘என்னல்லாமோ நடந்து போச்சிம்மா. நாம் நம்ம வீட்டுக்கு வந்துடறேம்மா’’ என்று தன் பெற்றோரிடம்  கதறினாள். அவர்கள் இருந்தது சிறிய கிராமத்தில். திருமணமாகிச் சென்றபின் வாழாமல் திரும்பி வந்தால் அதைப் பெரிய அவமானமாகக் கருதும் கூட்டம் அந்த கிராமத்தில் இருந்தது. லட்சுமி ஊருக்கு வந்தால் அவளது இரண்டு தங்கைகளுக்கு திருமணம் தடைப்படும் என இரக்கமில்லாமல் சொல்லிவிட்டனர் லட்சுமியின் பெற்றோர்.
லட்சுமியின் மாமனார்,  மாமியார் அவளுக்கு ஆதரவாக இருந்தனர். லட்சுமியின் கணவரை வீட்டைவிட்டு வெளியேற்றினர். உரிய காலத்தில் லட்சுமிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை அந்த வீட்டிலேயே வளர்ந்தது. ராசியில்லாதவள் என லட்சுமியை அவளது பெற்றோரே ஒதுக்கியே வைத்து விட்டனர்.
ஒரு சோகச் சிலையாக எதிலும் பற்றில்லாமல் வாழ்ந்தாள் லட்சுமி. அந்தத் துன்ப வேளையிலும் அவள் பச்சைப்புடவைக்காரியை மறக்கவில்லை. தினமும் பூஜை செய்வாள். அவளின் படத்திற்கு முன் அமர்ந்து நேரம் போவது தெரியாமல் அழுது கொண்டிருப்பாள்.
காலம் ஓடியது. லட்சுமியின் மகள் கல்லுாரிப் படிப்பை முடித்தாள். லட்சுமியின் மாமனார் தன் செல்வத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி லட்சுமியின் மகளை ஒரு மருத்துவருக்குத் திருமணம் செய்து வைத்தார். கணவனுடன் வாழ அவள் சிங்கப்பூர் சென்றுவிட்டாள்.
இதற்கிடையே லட்சுமியின் மாமனாரும் மாமியாரும் ஒருவர் பின் ஒருவராக இறந்தனர்.  அதற்கு மேலும்  அந்த வீட்டில் இருப்பது சரியாக இருக்காது என நினைத்தாள் லட்சுமி. அவளுக்கும் அறுபது வயதாகிவிட்டது. சர்க்கரை நோய்,  ரத்தக்கொதிப்பு வந்துவிட்டது. லட்சுமி தானாகவே விரும்பி சிவகங்கை முதியோர் இல்லத்தில் சேர்ந்துவிட்டாள். வாழ்நாள் முழுவதும் லட்சுமி தனிமையில்தான் வாடினாள். இப்போது அதே தனிமை இன்னும் கடுமையாக இருந்தது.
லட்சுமி யாரிடமும் பேச மாட்டாள். வேளா வேளைக்கு சாப்பாடும் மருந்து மாத்திரைகளையும்  உட்கொள்வாள். நாளெல்லாம் பச்சைப்புடவைக்காரியின் படத்திற்குமுன் அமர்ந்து கண்ணீர் சிந்துவாள். சிறிது காலம் முன்வரை லட்சுமியால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் இப்போது லட்சுமி அடிக்கடி கத்துகிறாளாம். இரவில் பித்துப் பிடித்தவளைப் போல் வீறிடுகிறாளாம். அந்த முதியோர் இல்லத்தில் இருந்த மற்றவர்கள் புகார் செய்து விட்டார்கள். இதனால் இப்போது லட்சுமியை அருகிலுள்ள  தனியறையில் வைத்திருக்கிறார்கள்.
‘‘அந்தப் பொண்ணு என்ன சார் பாவம் பண்ணிச்சி? பிறந்ததுலருந்து பச்சைப்புடவைக்காரியத்தான் கும்பிட்டுது. துரோகம் செஞ்ச புருஷன எதிர்த்து ஒரு வார்த்தை பேசல. தனக்கு இவ்வளவு கஷ்டத்த கொடுத்த கடவுளையும் தப்பா ஒரு வார்த்தை பேசல. லேசா கஷ்டம் வந்தாலே அவனவன் பச்சைப்புடவைக்காரிய திட்ட ஆரம்பிச்சிடறான். இந்தப் பொண்ணு எல்லாம் பொறுத்துக்கிட்டு அமைதியா இருக்கு’’
நண்பரையே பார்த்தபடி இருந்தேன்.
‘‘இதுக்கப்புறமும் பச்சைபுடவைக்காரிய அன்பரசி, கருணைக்கடல்னு உங்களால எழுத முடியுமா?’’
அழுகையை அடக்கியபடி சொன்னேன்.
‘‘லட்சுமிய மாதிரி ஆயிரம் பேரக் காமிங்க. அப்பவும் எனக்கு பச்சைப்புடவைக்காரி அன்பரசிதான். கருணைக்கடல்தான்’’
நண்பர் ஏதோ சொல்ல வாயெடுத்தபோது முதியோர் இல்லத்தின் நிர்வாகி வந்தார்.
‘‘இன்னிக்கு லட்சுமி ரொம்ப அமைதியில்லாம இருக்காங்க. உங்க ரெண்டு பேர்ல ஒருத்தர் போய்ப் பாருங்க’’
‘‘சார் போவாரு’’ நண்பர் என்னைக் கேட்காமேலேயே சொல்லிவிட்டார்.
என்னை அழைத்துப்போக அந்த இல்லத்தின் சமையல்காரி வந்தாள். பயத்தில் நடுங்கியபடி பின்தொடர்ந்தேன்.  வாசலில் நுழையும்போதே லட்சுமியின் அலறல் கேட்டது. படியேறி அவள் அறைக்குச் சென்றோம்.
அறுபது வயதான லட்சுமி எண்பது வயதானவளைப் போல் இருந்தாள்.
என்னைப் பார்த்ததும் லட்சுமி அமைதியாகிவிட்டாள். ஒரு கர்வத்துடன் கூட வந்த சமையல்காரியைப் பார்த்தேன். அவள் அழகாகச் சிரித்தாள்.
‘‘உன்னால் இவள் அமைதியானாள் என கர்வப்ப்டுகிறாயோ? நான் இருப்பதை மறந்துவிட்டாயே’’
பச்சைப்புடவைக்காரியை விழுந்து வணங்கினேன். லட்சுமி தரையில் அமர்ந்தபடி எங்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்.  இருவரும் லட்சுமியின்முன் அமர்ந்தோம்.
அங்கே ஒரு ஆழமான அமைதி  நிலவியது.
‘‘முற்பிறவியில் லட்சுமி கொடிய பாவங்கள் செய்திருக்கிறாளோ?’’
‘‘லட்சுமி ஒரு துாய பிறவி. பாவமே செய்தறியாதவள்’’
‘‘பின் ஏன் தாயே...’’
‘‘முற்பிறவியிலும் அவள் என் பக்தைதான். அடுத்த பிறவி முடிந்ததும்  நான் உங்களோடு ஒன்றிவிட வேண்டும் என பிரார்த்தித்தாள். உன் ஆன்மா பக்குவப்படவேண்டும், நிறைய துன்பப்படவேண்டும் என்று சொன்னேன். எது வந்தாலும் ஏற்கிறேன் என்றாள். இப்போது பாடுபடுகிறாள்’’
‘‘பாவமே செய்யாதவள் ஏன் துன்பப்பட வேண்டும்?’’
‘‘அவள் பட்டதைத் துன்பமாகப் பார்க்காதே. உளுந்தம்பருப்பை அப்படியே சாப்பிடமுடியாது. ஜீரணமாகாது. அதை ஊற வைத்து அரைத்து வடையாகத் தட்டினால் சாப்பிடவும் சுவையாக இருக்கும். ஜீரணமும் ஆகிவிடும். இந்த பிறவியில் லட்சுமி பயம் என்னும் உரலில் பருப்பாக அறைபட்டாள். துன்பம் என்னும் தீயில் வறுபட்டாள். இதோ இப்போது வடையாகி விட்டாள். இந்த பிறவி முடிந்ததும் என்னுடன் ஒன்றிவிடுவாள். அவளை நான் பார்த்துக்கொள்கிறேன். உனக்கு என்ன வேண்டுமோ கேள்’’
‘‘எனக்கு மூன்று வரங்கள் வேண்டும் தாயே’’
‘‘கேள்’’
‘‘கோயிலில் ஒரு மனிதப் பிறவியை வணங்குவது பாவம் என்று சாஸ்திரம் சொல்கிறது. இங்கே நீங்கள் இருப்பதால் இதுவும் கோயில்தான். என்றாலும் உங்கள் சன்னதியில் லட்சுமியை விழுந்து வணங்க உங்கள் அனுமதி வேண்டும்’’
‘‘செய்’’
அன்னையுடன் ஒன்றவேண்டும் என்பதற்காக தாங்கொணாத் துயரை அனுபவிக்கும் லட்சுமியை வணங்கினேன்.
‘‘இரண்டாவது’’
‘‘லட்சுமி பட்ட துன்பமெல்லாம் போதும் தாயே!  இவளை விரைவில் ஏற்றுக்கொள்ளுங்கள். கர்மக்கணக்கில் பிரச்னை இருந்தால் என் கணக்கில் இருக்கும் நற்செயல்களை அவள் கணக்கில் ஏற்றி இந்த நரகத்திலிருந்து லட்சுமியை விடுவியுங்கள்’’
‘‘மூன்றாவது வரம்’’
‘‘லட்சுமியைப் பற்றி இனி பயமில்லை. இவள் இந்தப் பிறவியில் கடைத்தேற வேண்டும் நீங்கள் ஏற்கனவே தீர்மானித்து விட்டீர்கள். என் பயமெல்லாம் இவளை இந்த நிலைக்கு ஆக்கிய இவள் கணவனைப் பற்றித்தான்.’’
‘‘அவன் கொடியவன். பெண் பித்து பிடித்தவன். நம்பிக்கைத் துரோகி’’
‘‘இவையெல்லாம் தீமை என்னும் நோயின் வெவ்வேறு படிவங்கள். அவனுக்காக உங்களிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறேன்’’
‘‘என்ன பிரார்த்தனை’’
‘‘அல்லல்படுவோர் நெஞ்சமெல்லாம் அன்பால் என்றும் நிறையட்டும்’’


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar