Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பார்வதி கல்யாணம்
 
பக்தி கதைகள்
பார்வதி கல்யாணம்


‘‘ஆதவன் போல் தாங்கள் அனைவரும் ஹிமாலயத்தில் இறங்கி நிற்பதால் தங்களின் ஒளி நான்கு திசைகளிலும் பரவி குகைகளிலும் இருட்டைப் போக்கி விட்டது. அதற்கு மேலாக தங்களைக் கண்டதால் என் மனதிலுள்ள இருளும் அகன்று விட்டது.  
அனைத்தையும் பெறக்கூடிய சக்தி உள்ள தங்களுக்கு என்னால் ஆக வேண்டிய காரியம் ஏதும் இருக்க முடியாது. ஆகையால் தங்களின் விஜயம் எண்னைப் புனிதப்படுத்தவே என்று கருதுகிறேன். ஆனாலும் ஏதாவது ஒரு காரியத்தை செய்யும்படி எனக்கு உத்தரவிட வேண்டும். நல்ல வேலைக்காரர்கள், எஜமானரின் கட்டளையைத்தான் அவர் தமக்கு செய்யும் அருளாக நினைப்பர். எனக்கும் அத்தகைய அருளையே தாங்கள் வழங்க வேண்டும்.  
இதோ தங்கள் எதிரில் நான் இருக்கிறேன். அவள் என் மனைவி, இவள் என் குலத்தின் உயிரான மகள். எங்கள் மூவரில் யாரால் என்ன காரியம் ஆக வேண்டுமோ அதனைக் கூறுங்கள்.  நாங்கள் அதனைச் செய்ய சித்தமாக இருக்கிறோம்’’ என்றான் ஹிமான்.
அவனது பேச்சு வெளியிலிருந்த குகைகளின் வாயில்களில் எதிரொலித்தது. அதனால் அவன் எதையுமே வலியுறுத்துவதற்காக இருமுறை கூறியது போல அமைந்தது.  
ஹிமவான் கூறியதைக் கேட்ட மகரிஷிகள், திறமை வாய்ந்த அங்கிரஸ முனிவரை பதிலளிக்கும்படி பணித்தனர்.  
உடனே அங்கிரஸர், ‘‘ஹிமவானே! நீ கூறியவை அனைத்தும் நற்குடியில் பிறந்து துாய மனம் பெற்றுள்ள உனக்கு பொருத்தமானதே. இதில் எந்த அதிசயமும் இல்லை. உன் சிகரம் போல் உன் மனமும் உயர்ந்து நிற்கிறது. பெருந்தன்மை வாய்ந்தது.
உன் மலை வடிவத்தை விஷ்ணுவாகக் கூறுகின்றனர். இது பொருத்தம்தான். ஏனெனில் விஷ்ணுவிடம்  இந்த பிரபஞ்சமே இருப்பதாகக் கூறுவார்கள். அதுபோல் உன்னுடைய பிரதேசத்தில் எல்லாவகையான ஜீவராசிகளும் உள்ளன.  உன்னுடைய உதவியினால்தான் ஆதிசேஷனே இந்த பூமியை தாங்கி நிற்கிறான். உன்னிடம் தோன்றிய கங்கை முதலிய நதிகளும், உனது கீர்த்தியும், இயற்கையிலேயே பரிசுத்தமானவை. அவை இவ்வுலக மக்களை துாயவர்களாக்குகின்றன. கங்கை மஹாவிஷ்ணுவின் பாதத்தில் இருந்து முதலில் தோன்றிய காரணத்தினால் அது கொண்டாடப்படுகிறது. அதேபோல் கங்கை பூமிக்கு வந்த பொழுது உன்னிடம் தோன்றியது. எனவே தோற்றத்திற்கு இரண்டாவது காரணமாக நீ இருந்ததால் கங்கைக்கு ஒரு கவுரவம் கிடைத்தது.  
மகாமேரு மலை முழுவதும் தங்கம். இருந்தாலும் யாகங்களில் அவிர்பாகம் பெரும் உரிமை அதற்கு கிடையாது. அது ஹிமாலயத்திற்கே உண்டு. ஹிமவான் மற்ற தேவர்களுக்கு சமமாக யாகங்களில் அவிர்பாகம் பெறுவான்.  
உனது கடின தன்மை முழுவதும் உன் மலைவடிவில் ஐக்கியமாகிவிட்டது.  இப்போது நாங்கள் காணும் தேவ வடிவு, கடினத்தன்மை சிறிதும் இன்றி, பெரியோர்களை பூஜித்து மிகவும் அடக்கமாய் உள்ளது. ஆகையால் நாங்கள் இங்கு வந்ததன் காரணத்தை நீ அறிய ஆவலாய் இருக்கிறாய் என்பதையும் அறிவோம். முக்கியமாக எங்கள் வருகையின் நோக்கம் உனக்கு நன்மை செய்யவே! அது மட்டுமே இந்த காரியத்தில் எங்கள் பங்கு வேறு எதுவும் இல்லை.
ஈசுவரன் என்ற சொல்லுக்கே எட்டு சித்திகளை உடையவர் என்று பொருள்.  இந்த சொல் சிவபெருமான் ஒருவரை மட்டுமே குறிக்கும். அவர் சரீரத்தில் ஆத்மாவிற்கும் ஆத்மாவாக இருக்கிறார். சுவர்க்கம் முதலிய இடங்களுக்கு சென்றவர்கள், தங்கள் புண்ணியம் செலவழிந்தவுடன் திரும்பவும் இவ்வுலகிற்கு வருகின்றனர். ஆனால் சிவபெருமானின் இடத்திற்கு சென்றவர்களுக்கு இந்த பயம் கிடையாது.  அவர்கள் திரும்புவதில்லை.  
சிவபெருமான் மக்களின் செயல்களை நேரில் கண்டு அதற்குரிய பலாபலன்களை தருபவர். வேதங்களில் பேசப்படும் பெருமை உடையவர். அப்படிப்பட்ட பரமேஸ்வரன் உன்னுடைய மகளைத் தனக்கு மனைவியாக தரவேண்டும் என வேண்டுகிறார்.  
ஒவ்வொரு சொல்லும் அதன் பொருளுடன் இணைகிறது. சொல் போன்ற உன் மகளை பொருள் போன்ற சிவபெருமானுடன் நீ சேர்க்க வேண்டும். நல்ல மணமகனுக்கு மகள் திருமணம் முடிக்கப்பட்டால் அந்த மகளைப் பற்றி பிறகு தந்தை கவலையுற வேண்டியிருக்காது. உலகிற்கே தந்தையாக விளங்கும் சிவபெருமானை பார்வதி மணந்தால், இவ்வுலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் இவளை தாயாகக் கருதும். அதை நீ செய்ய வேண்டும்’’ என்றார் அங்கிரஸர்.
மேலும் அவர், ‘‘எல்லா நற்குணங்களும் நிறைந்த பார்வதி இந்த திருமணத்தில் மணப்பெண். இந்த பார்வதியை கன்னிகா தானம் செய்யும் பெருமை பெற்ற நீ சிரத்தை, பக்தி, விநயம் அனைத்து குணங்களும் நிறைந்தவன். இந்த திருமணத்திற்காக உன்னிடம் யாசிப்பவர்கள் நாங்கள். தன்னலமற்றவர்கள். மணமகனோ, எல்லா நன்மைகளையும் அளிக்கவல்ல சிவபெருமான்.  இந்த சம்பந்தம் உன் குலத்திற்கே பெருமை தரக் கூடியது.
சிவபெருமானுக்கு மேற்பட்டவர் எவரும் இல்லை. அவர் யாரையும் புகழவோ, வணங்கவோ வேண்டியதில்லை. இவ்வுலகமே அவரை வணங்குகிறது. இந்த திருமணத்தின் மூலம் உலகம் வணங்கும் சிவபெருமான் உன்னை வணங்குவார்.
சப்தரிஷிகளுக்கும் ஹிமவானுக்கும் இடையில் இந்த உரையாடல் நடக்கும் போது, பார்வதி அருகிலேயே நின்றிருந்தாள். கையில் ஒரு தாமரை மலரை வைத்துக்கொண்டு அதன் இதழ்களை எண்ணுவது போல பாவனை செய்து கொண்டிருந்தாள்.  
தன் மகளை சிவபெருமானுக்கு தர வேண்டும் என்பது ஹிமவானின் நெடுநாளைய எண்ணம். இப்பொழுது அந்த எண்ணம் நிறைவேறி விட்டது.  ஆனால் பார்வதியின் தாய் மேனா என்ன நினைக்கிறாளோ.. அவள் எண்ணத்தை அறியும் ஆவலில், அவள் முகத்தை ஏறிட்டு நோக்கினான் ஹிமவான்.  மகளின் திருமணம் போன்ற முக்கிய காரியங்களில் மனைவியின் கருத்தை அறிந்தே முடிவு செய்யவேண்டும்.  
மேனாவுக்கு தன் மகள் விரும்பியவனையே மணவாளனாக அடைகிறாள் என்பதில் பரம திருப்தி. கண் ஜாடையிலேயே கணவனிடம் சம்மதம் தெரிவித்தாள். மனைவியின் கருத்து தெரிந்தவுடன் ஹிமவான், மகளின் கையைப் பிடித்து, ‘‘குழந்தாய்! நீ விரும்பியபடியே உன்னை சிவபெருமானுக்கு கொடுப்பதாக நிச்சயிக்கப்பட்டுள்ளது. உன்னை மகளாக அடைந்ததன் மூலம் ஒரு தந்தை அடையக்கூடிய நற்பயனை நான் பெற்றுவிட்டேன்’’ என்று அவள் மட்டும் அறியும்படி சொல்லி அவளை சப்த ரிஷிகளுக்கு அருகில் அழைத்துச் சென்று, ‘‘இதோ இருக்கிற சிவபெருமானின் மணமகள் உங்களை வணங்குகிறாள்’’ என்று கூறினான். பார்வதி ரிஷிகளை வணங்கினாள். ரிஷிகள் ஹிமவானின் பெருந்தன்மையைப் புகழ்ந்து ஜகன்மாதாவான பார்வதி தேவியை ஆசீர்வதித்தார்கள்.  
தலையை தாழ்த்தும் பொழுது அவள் தலையில் அணிந்திருந்த ஆபரணம் சற்று நழுவியது. தான் மணக்கப்போகும் சிவபெருமானைச் சேர்ந்தவர்கள் எதிரில் இருந்ததால் அவள் கொஞ்சம் வெட்கமுற்றாள். அவள் நிலையைக் கண்ட அங்கிருந்த அருந்ததி பார்வதியை அணைத்து தன் மடிமீது இருத்திக் கொண்டாள். விவாகமானதும் மகள் தன்னை விட்டுப் பிரிந்து விடுவாள், புகுந்த வீட்டில் அவள் வாழ்வு எப்படி இருக்குமோ என்று சற்று மனம் கலங்கினாள் மேனா.  அதைப் பார்த்த அருந்ததி, மெதுவாக மேனா அருகில் வந்து அவளை சற்று தள்ளி அழைத்துப்போய் உட்காரவைத்தாள்.  தானும் அருகில் அமர்ந்து சிவபெருமானின் உயர்ந்த குணங்களை எடுத்துச் சொல்லி, பார்வதி பெருமானின் முழு அன்பையும் பெற்று சிறப்பாக வாழ்வாள் என்று மேனாவை தேற்றினாள்.

அதன் பிறகு ஹிமவானிடம் விடைபெற்று, சப்த ரிஷிகளும் சிவபெருமானிடம் வந்தனர். இவர்கள் வருகைக்காக ஆர்வமுடன் காத்திருந்த பெருமான், அந்த அருவிக்கரையில் ஒரு வசதியான இடத்தில் அவர்களை அமரச் செய்து, தானும் அருகில் அமர்ந்து நடந்த விஷயங்களை கூறுமாறு கேட்டார்.
ரிஷிகளும் பெருமானிடம், ஹிமவானை முதலில் பார்த்ததிலிருந்து கடைசியில் விடை பெற்றுக்கொண்டு வரும் வரை நடந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் கூறினர். அதைக் கேட்டு பரமேஸ்வரன் மகிழ்ச்சி அடைந்தார்.  
பிறகு சப்த ரிஷிகளுக்கும் விடை கொடுத்து அனுப்பினார்.
சிவபெருமான் புலன்களை அடக்கியவர்.  சகல ஜீவராசிகளுக்கும் தலைவர்.  அவர் உணர்ச்சி வசப்பட்டுள்ளார் என்பதை நம்புவது கடினம். ஆனால் உண்மையிலேயே பரமன் அந்த நிலையில் தான் இருந்தார். அன்றிலிருந்து நான்காம் நாள் திருமணம் நடக்க இருந்தது.  ‘இன்னும் மூன்று நாட்கள் போகவேண்டுமே’ என்று பரமன் சற்று ஏக்கமுடன் இருந்தார்.
சரி... பரமசிவன் அப்படியே சோகத்தில் இருக்கட்டும்.  நாம் கல்யாண வீட்டுக்கு வருவோம்.  
பார்வதிக்கு கல்யாணம் என்ற சேதி ஊரெங்கும் பரவியது.  நகரத்தில் உள்ள பெண்கள் எல்லோரும் பார்வதியிடம் வந்து விட்டனர்.  பார்வதியிடம் மக்களுக்கு அவ்வளவு பிரியம். ஏதோ தன் வீட்டு திருமணம் போன்று அனைவரும் கருதி, தோரணம் கட்டுதல், கோலமிடுதல், அலங்கரித்தல் போன்ற காரியங்களில் சுறுசுறுப்பாக இறங்கிவிட்டனர். இது ஹிமவான் வீடு, இது பிறர் வீடு என்ற பேதமே தெரியவில்லை. தெருவில் அனைத்து வீடுகளையும் சேர்த்து பிரமாண்டமான பந்தல் போடப்பட்டது. அனைத்து வீடுகளிலும் கல்யாணக் களை கட்டியது.  
தெருவெங்கும் மலர் துாவப்பட்டது. எல்லா இடங்களிலும் உயர்ந்த கம்பங்களில் பட்டுக்கொடி பறந்தன. நகரத்தின் வெளியே பொன்னால் நுழைவாயில் அமைக்கப்பட்டது.  நகரமே சொர்க்க லோகமாக காட்சியளித்தது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar