Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சூழ்நிலைக் கைதி
 
பக்தி கதைகள்
சூழ்நிலைக் கைதி


  கோபப்படவே தெரியாதவன் ராமன். அவனை யாராலும் எளிதாக கோபம் கொள்ளச் செய்யவே முடியாது. அந்தளவுக்கு சமநிலை மனதுடையவன் அவன். சந்தோஷத்தை பெருஞ் சிரிப்பாக வெளிப்படுத்துவதோ, சோகத்தை முகம் சுருக்கி, கண்ணீர் பெருக்கித் தெரிவிப்பதோ அவனுக்குத் தெரியாது - சீதை அவனை விட்டுப் பிரியும்வரை!
  ராவணனால் சீதை அபகரிக்கப்பட்ட பிறகுதான் அவன் சில விஷயங்களில் குழப்பம் கொண்டான். சில சமயம் கோபமும் கொண்டான். ஒரு பொய்மானால் இந்நிலை ஏற்பட்டதுதான் எத்தனை கேவலமானது என்ற குற்ற உணர்வுதான் அவனை வாலியை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் தவிர்த்ததோ? அந்தக் குழப்பத்தில்தான், தான் என்ன செய்கிறோம் என்பதைச் சரியாக ஆராயாமல் வாலியை மறைந்திருந்து கொன்றானோ?
    சுக்ரீவனாலும் அவனுடைய படைகளாலும்தான் சீதையைத் தேடும் தன் பணிக்குப் பெரிதும் உதவ முடியும் என்றே கணக்கிட்டு அவனுடைய நட்புக்குக் கரம் நீட்டினான் ராமன். இப்படி முடிவெடுத்தது தவறோ என்று இப்போது எண்ணத் தலைப்பட்டான் அவன். ஏன்?
   தான் ஏற்கனவே வாக்குக் கொடுத்தபடி சுக்ரீவன் நடந்துகொள்ளாததால்தான்! வாலியை வதம் செய்து கிஷ்கிந்தா ஆட்சியைத் தனக்கு மீட்டுத் தர முடியுமானால், ராவணனிடமிருந்து சீதையை மீட்டுத் தரும் முயற்சிக்கு எல்லா உதவிகளையும் செய்யத் தயார் என்று அவன் கொடுத்திருந்த வாக்குதான். அது மாரிக்காலம். பெருமழை பெய்து கொண்டிருக்கும்போது தேடுதல் முயற்சிகளில் தொய்வு ஏற்படலாம். ஆகவே மாரிக்காலம் முடிந்ததும் புத்துணர்ச்சியுடன், புது வேகத்துடன், திட்டங்கள் தீட்டி நடவடிக்கைகளை முடுக்கிவிட்டால் சீதை எளிதாகவும், விரைவாகவும் மீட்கப்படுவாள் என்றே சுக்ரீவன் தெரிவித்திருந்தான்.
  ஆனால் மாரிக்காலமும் முடிந்துவிட்டது. சுக்ரீவன் பக்கத்திலிருந்து எந்த அறிகுறியையும் காணோமே! தேவையில்லாமல் அந்த சகோதரர்கள் குடும்பத்து பிரச்னையில் தலையிட்டு விட்டேனோ? என் சுயநலத்துக்காக நியாய, அநியாயத்தைப் புரிந்துகொள்ளாமல் அவசரப்பட்டு விட்டேனோ அல்லது அனுமனும் சரி, சுக்ரீவனும் சரி, வெறும் பார்வைக்குதான் நல்லவர்கள் போலத் தெரிந்தார்களா என்னுடைய ஆற்றலைப் பயன்படுத்திக்கொண்ட அவர்கள், இப்போது என்னைப் புறக்கணிக்கிறார்களா? இவர்கள் தயவை நாடாமல் தன்னிச்சையாக முயற்சித்திருந்தாலேயே நான் சீதையை நெருங்கியிருப்பேனோ?
ராமன் முகத்தில் ஓடிய கவலை ரேகைகள், லட்சுமணன் அதுவரை பார்த்தறியாதது. அண்ணியாரை மீட்பதில் ஏற்படும் தாமதம்தான் அண்ணனைக் கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. தன்னுடைய அரசையும், அதிகாரத்தையும், சுகபோகங்களையும் மீட்டுத் தந்த ராமனுக்கு, சுக்ரீவன் காட்டும் நன்றிக் கடனா இது?
அவனை நோக்கித் திரும்பினான் ராமன். ‘‘லட்சுமணா’’ என்றழைத்த அந்தக் குரல்தான் எவ்வளவு உடைந்து போயிருந்தது! ‘‘நாள் கடந்துகொண்டே போகிறதே. சுக்ரீவனிடமிருந்து தகவல் ஏதுமில்லையே’’
லட்சுமணனும் துயர் மண்டிய குரலில்,‘‘நான் அவனைப் போய்ப் பார்த்துவிட்டு வரட்டுமா’’
உடனே தலையசைத்தான் ராமன்.
அவ்வளவுதான். புயலெனப் புறப்பட்டான் லட்சுமணன். அவன் சுக்ரீவன் மாளிகை முன் நின்றபோது அவனுடைய வேகம், கோபம், ஏமாற்றப்பட்டு விட்டோமோ என்ற ஆத்திரம் எல்லாம் சேர்ந்து பெரும் புழுதியைக் கிளப்பி அந்த மாளிகையையே மறைத்தது.
வாயில் காப்போன் அலறி அடித்துக்கொண்டு வந்து தகவல் சொன்னபோது அரண்டுதான் போனான் சுக்ரீவன். லட்சுமணனின் கோபத்திற்கான காரணத்தை அவனால் எளிதாக ஊகிக்க முடிந்தது. தான் வாக்களித்திருந்தது, இந்த விடாத மழை காரணமாக நிறைவேற்ற முடியாமல் தள்ளிப் போய்க்கொண்டே இருப்பதை, இந்தத் தாமதத்தை, தான் நேரடியாக ராமனிடமே போய் சொல்லி இருந்திருக்கலாம். அதுதான் தவறாகிவிட்டது. இப்போது லட்சுமணன் சினத்தை மூட்டை கட்டிக்கொண்டு வந்திருக்கிறான். இந்தச் சூழ்நிலையை சமாளிப்பது எப்படி?
அண்ணியார் தாரை! அவர் போய் லட்சுமணனை சமாதானம் செய்தால் ஒருவேளை அவன் மனமிரங்கக் கூடும். இந்த யோசனையை உடனேயே செயல்படுத்தினான் சுக்ரீவன்.
தன்னை நோக்கி தாரை வருவதை லட்சுமணன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. சுக்ரீவன் வருவான், அவனிடம் உண்டு, இல்லை என்று கேட்டு அவன் கழுத்தைப் பிடிக்க வேண்டும் என்று காத்திருந்தால், தாரை வருகிறாளே! வாலியை மறைந்திருந்து ராமன் கொன்ற போது வாலியைவிட கொடுஞ்சொல்லால் ராமனைத் தாக்கியவள்தானே இவள். பிறகு சமாதானமடைந்து விட்டாள் என்றாலும், மனசுக்குள் அந்தக் கனல், உஷ்ணத்தை வீசிக் கொண்டிருக்கிறதோ? அந்தத் தாரை சுக்ரீவனைத் தடுக்கிறாளா? ராம, லட்சுமணருக்கு சாவகாசமாக உதவிக் கொள்ளலாம், அவர்கள் காத்திருக்கட்டும் என்று ஏதாவது சதி செய்கிறாளா? ஆனால் இவளைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே. இந்த முகத்தில் வெகுளித்தனத்தைத் தவிர வேறு எந்த சூழ்ச்சியையும் காண இயலவில்லையே...
‘‘ஐயா, ஏன் இவ்வளவு கோபமாகத் தெரிகிறீர்கள்’’ என்று அவனிடம் மென்மையாகக் கேட்டாள் தாரை.
‘‘நான் விளக்கம் வேறு சொல்ல வேண்டுமா’’ மீண்டும் கோப மரத்தின் உச்சாணிக் கொம்புக்குச் சென்றான் லட்சுமணன். ‘‘கொடுத்த வாக்கை மீறுவதுதான் உங்கள் பண்பாடா? நீங்கள் குரங்கினம் என்பதை நிரூபித்து விட்டீர்கள். மது போதையும், காமமும்தான் உங்கள் வாழ்க்கை நியதியா? கொடுத்த வாக்கை மறந்து எப்படி சுகபோகத்தில் உங்களால் ஈடுபட முடிகிறது’’ என்று கடுமையாக கேட்டான்.
‘‘இல்லை’’ அவசரமாக மறுத்தாள் தாரை. ‘‘வானர சேனை சேகரிப்பில் ஏற்பட்ட காலக் கணக்குத் தவறுதான் இது. நீங்கள் கவலைப்படாமல் திரும்பச் செல்லுங்கள். இயற்கையின் இந்த இடையூறுக்கு எந்த கற்பனையையும் விளக்கமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்’’ என்று மன்றாடும் குரலில் கெஞ்சினாள் தாரை.
மிகுந்த தயக்கத்துடன் ராமனிடம் திரும்பினான் லட்சுமணன். தன்னை தாரை சமாதானப்படுத்தியதையும், சுக்ரீவன் சார்பில் அவள் வாக்கு கொடுத்ததையும் தெரிவித்தான். குற்ற உணர்வால் தன்னை சுக்ரீவன் சந்திக்க முற்படவில்லை என்றும் தன் ஊகத்தைச் சொன்னான்.
ஆனாலும் ராமனின் சந்தேகம் தீராதது அவனுடைய சற்றே வாடிய முகத்திலிருந்து புரிந்தது. சீதையைத் தேடுவதில் ஒரு முக்கியமான கட்டத்திற்கு வந்துவிட்ட பிறகு, இப்போது ஏற்படும் கால விரயம், பிரிவாற்றாமையை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
அப்போது ஓட்டமும் நடையுமாக ஓடோடி வந்தான் சுக்ரீவன். அவனைப் பார்த்ததும் சற்றே வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டான் ராமன். தயங்கியபடி அவனருகே வந்தான் சுக்ரீவன். நடுங்கும் குரலில், ‘‘உங்கள் கோபம் நியாயமானதுதான் ராமா. தங்கள் நோக்கம் நிறைவேறுவதற்கான பணிகளில்தான் முற்றிலுமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். நான் செய்த ஒரே தவறு, தங்களிடம் அவ்வப்போது என் முயற்சிகள் பற்றி விவரம் தெரிவிக்காததுதான்’’
உடனே லட்சுமணன், ‘‘நீ எங்களுக்கு உதவும் முயற்சியில்தான் ஈடுபட்டிருந்தாய், சுகபோகத்தில் ஆழ்ந்துவிடவில்லை என்பதற்கு என்ன ஆதாரம்’’ என்று கடுமையாகக் கேட்டான் லட்சுமணன்.
கண்களில் நீர் பெருகியது சுக்ரீவனுக்கு. ‘‘ஐயனே’’ என்று ராமனைப் பார்த்து மென்மையாக அழைத்தான். ‘‘பெருமழை காரணமாக கிஷ்கிந்தையில் உள்ள வானரங்களை முழுமையாக சேகரிக்க முடியாமல் நான் தவித்துக் கொண்டிருந்தேன். உண்மையைச் சொல்லப்போனால் வாலி இறந்ததுகூட பல வானரங்களுக்குத் தெரியவில்லை. நடந்த சம்பவங்களை விளக்கிச் சொல்லி எனக்கு உதவிய உங்களைப் பற்றியும் சொல்லி அவர்களுக்கு நிலைமையைப் புரிய வைத்தேன். தங்கள் பராக்கிரமத்தை உடனிருந்தே பார்த்த வானரங்கள், தங்களைப் பற்றித் தெரியாதவர்களுக்கு சொன்ன மாத்திரத்திலேயே அவர்கள் உங்கள் மீது பெரிதாக அபிமானம் கொண்டார்கள். வந்து சேரும் வானரங்கள் எண்ணிக்கை பல்லாயிரமாகப் பெருகிக் கொண்டிருக்கிறது’’ என்று விளக்கம் சொன்னான்.
தொடர்ந்து, ‘‘ஐயனே, தங்கள் பார்வை என்மீது பதிந்தது. தங்கள் கரங்கள் என்னைத் தொட்டன. உங்கள் பார்வையும், ஸ்பரிசமும் என்னிடமிருந்த கீழ்த்தரமான எண்ணங்களை விரட்டத்தான் செய்யுமே தவிர, வளர்க்குமா ஐயா? வாக்குத் தவறக் கூடாதது மட்டுமல்ல, எந்த சுக அனுபவத்திலும் நான் ஆழ்ந்து மூழ்கிவிடவில்லை. தங்களால் புது வாழ்வு அளிக்கப்பட்டவன் நான். என் நிலையை உயர்த்தி சிறப்பித்தீர்கள். அப்படிப்பட்ட என்மீது தாங்களும் கோபம் கொள்ளக்கூடிய நிலைமைக்கு, நான் தங்களுக்கு தகவல் தெரிவிக்காததுதான் காரணம். மன்னித்து விடுங்கள் ஐயனே’’ என்று சொல்லி காலில் விழுந்தான்
சுக்ரீவனை அள்ளி எடுத்தான் ராமன். ‘‘நான் சூழ்நிலைக் கைதியாகிவிட்டேன் சுக்ரீவா. உன் உண்மையான் நிலைமையை நான்தான் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. புறப்படு. சீதையைத் தேடும் முயற்சியில் தீவிரமாக இறங்குவோம்’’ என்று மனநிறைவுடன் சொன்னான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar