Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தாயின் கருணை
 
பக்தி கதைகள்
தாயின் கருணை

“நான் தாரிணி. வயசு 25. இன்ஜினியரிங் முடிச்சிட்டேன். உங்க பச்சைப்புடவைக்காரிய மாதிரி ஒரு இரக்கமில்லாத ராட்சசிய நான் பாத்ததேயில்ல, சார். ராட்சசிகூட தன்னோட எதிரியத்தான் கொடூரமாத் தாக்குவா. பச்சைப்புடவைக்காரி தன் ஆளுங்களையே மூர்க்கத்தனமாத் தாக்கறாளே!”
என்முன் அமர்ந்து பொருமியவள் மிக அழகாக இருந்தாள்.
“நடந்தது என்னன்னு மட்டும் சொல்லுங்க”
தொழிலதிபர் ராஜன் – கீதா தம்பதியின் ஒரே மகள்தான் தாரிணி. ஆறு ஆண்டுக்குமுன் ராஜன் ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார். அதன்பின் அவளுக்கு தாய்தான் எல்லாம். தாரிணியின் திருமணம் தடைப்பட்டுக் கொண்டேயிருந்தது.
“அந்தச் சமயத்துல எங்கம்மா நீங்க எழுதினதப் படிச்சிட்டு மனசுல அன்பு கூடினா கஷ்டம் போயிரும்னு சொன்னாங்க.  பணம் இல்லாம தவித்த பத்து நோயாளிங்கள ஆஸ்பத்திரில சேத்து ராஜ வைத்தியம் பார்த்தாங்க. அம்பது லட்ச ரூபாய் செலவாச்சு. இனி நல்லதே நடக்கும்ணு சொன்னாங்க. நாசமாப் போனதுதான் மிச்சம்”
“என்னாச்சு?”
“இன்னும் என்ன ஆகணும்? எங்கம்மாவுக்குத் தலைவலி வந்தது. டாக்டர்கிட்ட போனோம். ஸ்கேன் எடுத்துப் பாத்துட்டு தலைக்குள்ள கட்டியிருக்குன்னு சொன்னாங்க. புத்துநோய். அதுவும் கடைசி கட்டமாம். மூணு மாசம் உயிரோட இருந்தா ஜாஸ்திங்கறாங்க.
“தெனமும் பச்சைப்புடவைக்காரியக் கும்பிட்டுக்கிட்டு இருக்கற எங்கம்மாவுக்கு ஏன் இந்த நிலை? மனசுல அன்பு கூடினா துன்பம் போயிரும்னு நீங்க சொன்னது பொய்தானே? இப்போ உயிரே போகப்போவுது.”
“நிச்சயம் உங்கம்மாவுக்காக பிரார்த்தனை பண்றேன்”
என் அழுகையை தாரணி உதாசீனப்படுத்தினாள்..
“இப்பக்கூட ஜோக்கடிக்கற புத்தி போகலையே! உங்க பிரார்த்தனையினால பத்து காசுக்குப் பிரயோஜனம் இல்ல”
“உண்மையான பிரார்த்தனை மலையவே புரட்டிப் போட்டுடும்”
“இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படி ஊர ஏமாத்தப் போறீங்க?”
“இல்ல, நான் என்ன...’’
“நமக்குள்ள ஒரு பந்தயம். உங்க பிரார்த்தனையால எங்கம்மா குணமாயிட்டா நானும் எங்கம்மாவும் உங்க கால்ல விழறோம். உங்கள மாதிரியே பச்சைப்புடவைக்காரியோட கொத்தடிமையாயிடறோம். ஆனா அப்படி நடக்கலேன்னா...’’
எனக்கு தாரிணியைப் பார்க்கவே பயமாக இருந்தது.
“ஒரு நாள் நீங்க கோயிலுக்குப் போகும்போது மத்தவங்க முன்னால உங்க மூஞ்சில துப்புவேன். நான் சொன்னாச் சொன்னதுதான்”
விடுவிடுவென்று வெளியேறினாள் அவள்.
அன்று மாலை சொக்கநாதர் கோயிலுக்குச் சென்றேன். மீனாட்சி சந்நிதியை வலம்வரும் வழியில் ஒரு பெண் அமர்ந்திருந்தாள்.
“ஏம்மா இப்படி வழிய மறிச்சிக்கிட்டு உக்காந்து இருக்கீங்க?”
“என்னைவிட்டால் வேறுவழி இருக்கிறதா என்ன?”
அவள் காலில் விழுந்தேன்.
“இன்றிரவு பதினொரு மணிக்குமேல் நீ மருத்துவமனைக்குச் சென்று தாரிணியின் தாயைப் பார்க்கவேண்டும்’’
விவரங்கள் வாங்கிக்கொண்டேன்.
ஊர்க்கோடியில் இருந்த மருத்துவமனை பரப்ரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.  வெள்ளைச் சீருடை அணிந்த ஒரு நர்ஸ் என்னை நோக்கி ஓடிவந்தாள்.
“சீக்கிரம் வாங்க. ஒரு மணிநேரத்துல எல்லாம் முடிஞ்சிரும்’’ அவள் பின்னே ஓடினேன்.
படுக்கையில் துவண்டுபோய் கிடந்த கீதா அந்த நிலையிலும் பார்க்க அழகாக இருந்தாள். இளமையில் இவள் பேரழகியாக இருந்திருக்கவேண்டும்.
கீதாவின் படுக்கைக்கு அருகில் அமர்ந்துகொண்டு அவள் கையைப் பற்றியபடி என்னை அறிமுகப்படுத்தினேன். அவளது கண்கள் கண்ணீரைச் சொரிந்தன.
“சாகறதுக்குள்ள யார்கிட்டயாவது என் மனசுல இருக்கறதச் சொல்லணும்னு’’  இருமினாள் கீதா. தண்ணீர் எடுத்துக் கொடுத்தேன்.
சொல்ல ஆரம்பித்தாள்.
ராஜனின் மனைவி கர்ப்பமாக இருந்த போது உதவிக்காக கிராமத்திலிருந்து ஒரு பெண் வந்திருந்தாள். நல்லபடியாகப் பிரசவம் ஆனது. அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து மூன்று மாதம் ஆன நிலையில் ராஜனுக்கு உதவி செய்ய வந்த பெண்ணின்மேல் ஒரு கண் விழுந்தது.
ராஜன் ஆசை வார்த்தை பேசி அவளை மயக்கினான். இருவரும் நெருக்கமானார்கள். ஒருநாள் ராஜனின் மனைவி அவர்களை பார்க்கக்கூடாத நிலையில் பார்த்துவிட்டாள். அன்றிரவே அவள் துாக்கில் தொங்கினாள்.  
மறுநாள் ராஜனும் அந்தப் பெண்ணும் சேர்ந்து தற்கொலையை இயற்கையான சாவென்று ஜோடித்து விவகாரத்தை மூடி மறைத்தனர். சாதாரண வேலையில் இருந்த ராஜன் அந்தப் பெண்ணையும் தன் குழந்தையையும் கூட்டிக்கொண்டு வேறு ஊருக்குச் சென்று தொழில் ஆரம்பித்துப் பெரிய தொழிலதிபர் ஆகிவிட்டான்.
உதவிக்கு வந்த பெண்தான் கீதா.
“தாரிணி என் வயித்துல பொறக்கலய்யா. ஆனா அவள என் பொண்ணா நெனச்சித்தான் வளக்கறேன். அவளும் என்னை தன்னைப் பெத்த அம்மாவாத்தான் நெனச்சிக்கிட்டிருக்கா. தாரிணியப் பெத்தவளுக்கு நாங்க செஞ்ச துரோகம்தான்யா அவருக்கு விபத்தாகவும் எனக்கு புத்து நோயாவும் வந்திருக்கு. எனக்கு பச்சைப்புடவைக்காரிமேல கொஞ்சம்கூடக் கோபமில்லய்யா. பாவம், தாரிணிதான் புரியாம காச் மூச்சுன்னு கத்திக்கிட்டு இருக்கு”
கீதா களைத்துப் போய்விட்டாள். அவள் முகம் வெளிறிவிட்டிருந்தது. அவளிடமிருந்து சைகையாலேயே விடைபெற்றேன்.
வெளியே அந்த நர்ஸ் இருந்தாள்.
“தவறு செய்துவிட்டாள். தண்டனையும் அனுபவித்துவிட்டாள். அடுத்த பிறவி நன்றாக இருக்கும். நீ என்ன செய்யப் போகிறாய்?”
“தாரிணி என்னவெல்லாம் பேசினாள்? அவள் நாக்கைப் பிடுங்கிக்கொள்ளும் வகையில் கேள்வி கேட்கவேண்டும்’’
“இது என்ன வன்மம்? இல்லை...உன்னை அவள் பழி துாற்றுவாள் என்ற பயமோ?”
“அது வந்து...’’
“தாரிணிக்கு இன்று உலகில் இருக்கும் ஒரே துணை கீதாதான். அவளும் இப்போது இறந்துவிடுவாள். இந்த நிலையில் உண்மை தெரிந்தால் தாரிணி நொறுங்கிப்போவாள்”
“அதற்காக நீங்கள் ராட்சசிப் பட்டம் வாங்க வேண்டுமா...தாயே”
“அறியாத பெண் ஆற்றாமையில் சொல்லிவிட்டாள். விட்டு விடேன்”
“அவளுக்கு உண்மை தெரியவே வேண்டாமா?”
“ விரைவில் அவளுக்கு ஒரு நல்ல துணை கிடைக்கும். வாழ்க்கையில் அவளுக்கு ஒரு  பிடிப்பு வரும். அப்போது யாரையாவது விட்டு பக்குவமாக அவளிடம் உண்மையைச் சொல்ல வைக்கிறேன். கீதா இறந்த செய்திகேட்டு தாரிணி அழுது கொண்டே வருவாள். உன்னை இங்கு பார்த்தால் உன்னை பழி துாற்றுவாள்”
“துாற்றினால் என்ன தாயே! நீங்கள் ராட்சசிப் பட்டத்தையே வாங்கிக் கொண்டீர்களே’’
“இப்போது எந்த ரசாபாசமும் வேண்டாம். போய்விடு”
வெளியே ஓடினேன்.  
தாரிணியும் கீதாவும் என் மனதில் கனமான நினைவுகளாக உறைந்துபோனார்கள். ஆறு மாதம் தாரிணியைப் பற்றிய எந்த தகவலும் இல்லை.
அன்று சொக்கநாதர் கோயில் வாசலில் இருந்தேன். உள்ளே அம்மன் சந்நிதியில் இருந்த பெண் தாரிணியைப்போல தெரிந்தாள். அவளை விலகுவதற்குள் என்னைப் பார்த்துவிட்டு ஓடிவந்தாள். கூடவே ஒரு இளைஞனும். நடுத்தெரு என்றும் பாராமல் இருவரும் என் காலில் விழுந்தனர்.
“தாரிணி என்ன இதெல்லாம்...’’
“இது ராம். எங்களுக்குப் போன வாரம்தான் கல்யாணமாச்சு ராமோட பாட்டிக்கு எங்க குடும்ப வெவகாரம் எல்லாம் தெரியும். அவங்க எங்கிட்ட எல்லா உண்மையும் சொன்னாங்க. எல்லாருமே ஒரு வகையில சூழ்நிலைக்கைதிகள்தான். எனக்கு ஒரு அப்பா ரெண்டு அம்மான்னு எல்லாரையும் ஏத்துக்கிட்டேன்’’
“தப்பு தாரிணி. உனக்கு மூணு அம்மா. ஒண்ணு, உன்னைப் பெத்தவ. அடுத்தது உன்ன வளர்த்தவ. மூணாவது உன்மேல பாசத்தப் பொழிஞ்ச பச்சைப்புடவைக்காரி. உங்கம்மா இறந்த போதே எனக்கு எல்லாம் தெரியும். உண்மையத் தாங்கிக்கற சக்தி உனக்கு வரும் வரைக்கும்  உனக்கு எதுவும் தெரியக்கூடாதுன்னு சொன்ன அன்பரசி. உன் பாஷையில சொல்லணும்னா இரக்கமில்லாத ராட்சசி’’
தாரிணி பெரிதாக அழத் தொடங்கினாள். அழட்டுமே! அன்று என்னை எப்படி அழவைத்தாள்?


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar