Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பார்வதி கல்யாணம்
 
பக்தி கதைகள்
பார்வதி கல்யாணம்


வா. ஜானகிராமன்
ஹிமவானுக்கு பல மக்கள் உண்டு.  ஆனால் பார்வதிக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்ததால் அவளிடம் பெற்றோர் மிகவும் அன்பு செலுத்தினர். எங்கேயோ வெகு நாட்கள் அவளை பிரிந்து இப்பொழுது தான் காண்பது போல எண்ணி மகிழ்ந்தனர். உறவினர்கள் அனைவரும் அவளை சீராட்டி பூச்சூட்டி நகைகள் அணிவித்து திருஷ்டி கழித்து கொஞ்சினர்.
சுமங்கலி பெண்கள் அவளுக்கு உத்திர நட்சத்திரம் கூடிய மித்ர முகூர்த்த நேரத்தில் திருமணத்திற்கான அலங்காரங்கள் செய்ய தொடங்கினர் மித்ர என்னும் தேவதையின் காலம் 48 நிமிஷங்கள் என்பர்.
பார்வதிக்கு மங்கள ஸ்நானம் செய்விப்பதற்கு முன் உறவினர்கள்  வெண் கடுகுடன் கூடிய அருகம்புல்லை அவள் தலையில் முதலில் வைத்தனர். பட்டு வஸ்திரத்தை அணிவித்தனர். க்ஷத்திரிய பெண்கள் திருமண காலத்தில் கையில் ஒரு பாணத்தை வைத்திருக்க வேண்டும் என்னும் மரபு உண்டு.  அதன்படியே பார்வதியும் கையில் ஒரு பாணத்தை பிடித்திருந்தாள். இந்த அலங்காரங்களினால் அவள் அழகு பொலிவு பெற்று விளங்கியது. கையிலே பாணம் ஏந்திய பார்வதி வளர்பிறை நிலவாக விளங்கினாள்.  பிறகு நீராடல் செய்வதற்கு ஏகாந்தமான ஒரு இடத்திற்கு பெண்கள் அவளை அழைத்துச் சென்றார்கள்.  

வைடூர்ய ரத்தினம் பதித்த முத்து சரங்களால் அலங்கரிக்கப்பட்ட அழகான ஒரு மண்டபத்தில் மங்கள வாத்யம் முழங்க, தங்கக் குடங்களில் கொண்டு வரப்பட்ட புண்ணிய தீர்த்தங்களினால் அவளுக்கு மங்கள ஸ்நானம் செய்வித்தார்கள்.  அவளது உடலில் தடவிய எண்ணையை லோத்ரம் பட்டையின் பொடியினால் தேய்த்து நீராட்டினார்கள். லோத்ரம் பட்டையின் பொடி என்பது சீயக்காய் பொடியைப் போன்றது.  கஸ்துாரி மஞ்சள் பொடி அவள் உடலில் பூசினார்கள்.
பிறகு வெண்மையான அவள் பட்டு வஸ்திரத்தை தரித்தாள். இந்நிலையில் பார்வதி மழையில் நனைந்த நாணல் புஷ்பங்கள் நிறைந்த பூமாதேவி போல் காணப்பட்டாள். பிறகு பெண்கள் பார்வதியை அலங்கார மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். ரத்தினம் பதித்த துாண்களும், பட்டினால் விதானமும் கொண்டு விளங்கியது அந்த மண்டபம்.  மண்டபத்தின் மத்தியில் பார்வதி அமர்வதற்கு ஆசனம் போடப்பட்டிருந்தது.
 
பார்வதியை அந்த ஆசனத்தில் கிழக்கு முகமாக அமரச் செய்தார்கள்.  அலங்காரப் பொருள்கள் எல்லாம் தயாராக அங்கே இருந்தன. அலங்காரம் செய்ய வந்த பெண்கள் பார்வதியின் அழகைக் கண்டு ‘இவளுக்கு எதற்கு அலங்காரம்’ என்ற எண்ணத்துடன் கொஞ்சநேரம் அனைத்தையும் மறந்து அப்படியே நின்றிருந்தனர். உடனே சுதாரித்துக் கொண்டு சுறுசுறுப்பாக காரியத்தில் இறங்கினர். தலைக்கு அகில் புகை காட்டி ஈரத்தை போக்கினர். அருகம்புல்லும், இலுப்பைப்பூவும் சேர்ந்த சரத்தைக் கொண்டு அவள் தலையை முடிந்தனர். உடலில் வெண் அகில் சந்தனத்தைப் பூசி, கோரோசனை திரவத்தினால் அவள் உடலில் கொடி, இலை, பூ போன்றவைகளை எழுதி அலங்கரித்தனர்  
பார்வதி வெண்மை நிறம் உடையவள். அவள் மேல் தீட்டப்பபட்ட சித்திரங்கள் பொன்னிறம். பொன்னிறமுடைய சக்ரவாகப் பட்சிகள் வெண்மையான கங்கை மண்ணில் அமர்ந்திருப்பது போல தோற்றமளித்தாள். அழகிய அவளுடைய கருங்கூந்தல் நெற்றியில் புரளும் போது பார்வதியின் முகம் வண்டுகள் அமர்ந்த தாமரை, மேகத்திலிருக்கும் நிலவு, இவைகளைக் காட்டிலும் மிக அழகாக இருந்தது. எனவே அவை இரண்டையும் அவள் முகத்திற்கு உவமையாக கூறுவதற்கு இடமில்லாமல் போய்விட்டது.

லோத்ரம் பொடியை உபயோகித்து பார்வதிக்கு எண்ணெய் நீராட்டியதால் அவள் கன்னங்கள் பிரகாசமாய் விளங்கின.  இயற்கையாகவே சிவந்த உதடுகளுக்கு செம்பஞ்சு ரசம் பூசி தேன் மெழுகினால் மெருகிட்டனர். பெண்கள் பெற்றுள்ள அழகின் பயனே கணவன் ரசித்து  பாராட்டுதல்.  பார்வதியின் அழகு அப்படி பார்க்கப்படும் நேரம் வெகு சமீபத்தில் உள்ளதால் அந்த எண்ணமே அவள் முகத்துக்கு ஒரு கூடுதல் சோபையை கொடுத்தது. கருத்து நீண்டு இருந்த பார்வதியின் கண்களுக்கு மையிட்டது, மை ஒரு மங்கலப் பொருள் என்பதற்காக மட்டுமே. அவள் கண்களுக்கு மை அழகு செய்யும் என்ற கருத்தினால் அல்ல.

அலங்காரம் செய்து ஆபரணங்கள் பூண்ட பின் பணிப்பெண்கள் பார்வதியின் முன் ஒரு நிலைக்கண்ணாடியை வைத்தனர். கண்ணாடியில் தன் அழகைக் கண்டு ஆச்சரியத்தினால் பார்வதியின் கண்கள் அப்படியே நிலையாய் நின்றன. இந்த அழகை சிவபெருமான் காண வேண்டும் என்ற விருப்பத்தினால் சீக்கிரமே அவரிடம் செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இத்துடன் பணிப்பெண்களின் பங்கு முடிந்துவிட்டது.  இனி தாய் செய்ய வேண்டிய சில காரியங்கள் உள்ளன. அழகே வடிவெடுத்து வந்து நிற்பதுபோல அலங்காரம் செய்யப்பட்ட பார்வதியைக் காண தாய் வந்தாள்.  கட்டி அணைத்து கன்னத்தை வருடி திருஷ்டி கழித்தாள். யானைத் தந்தத்தினால் செய்யப்பட்ட வெண்ணிறமான காதணியை அணிவித்தாள். கையில் மஞ்சளும் மனச்சிலை என்ற சிவப்பு நிறமான ஒரு பொடியையும் குழைத்து விரலில் எடுத்துக்கொண்டு இடது கையினால் முகவாயை பிடித்து பார்வதியின் முகத்தை நிமிர்த்தினாள். தாய் திலகமிடும் சடங்கே திருமணத்தின் தொடக்கத்தைக் குறிக்கும்.

மேனா மகிழ்ச்சியினால் வடியும் கண்ணீர் பார்வையை மறைக்க மிகுந்த சிரமத்துடன் பார்வதியின் நெற்றியில் தன் ஆசையையே திரட்டி இடுவதுபோல திலகத்தை இட்டாள்.  பிறகு ஆட்டு ரோமத்தினால் ஆன மங்கல நுாலை பார்வதியின் கையில் கட்டினாள். மேனா செய்ய வேண்டிய சடங்குகள் அனைத்தையும் அறிந்தவள். பார்வதியை அழைத்து திருமணத்திற்கு பூஜிக்கப்பட வேண்டிய குலதெய்வங்களை வணங்கும்படி செய்தாள்.  வந்திருந்த சுற்றத்தாரில் வயது முதிர்ந்த சுமங்கலி பெண்களையும் வந்தனம் செய்யும்படி கூறினாள். பார்வதி தாயின் சொற்படி அனைவரையும் வணங்கினாள்.  ‘கணவருடைய அன்பை முழுவதும் நீயே பெறுவாயாக’ என்று அனைவரும் பார்வதியை வாழ்த்தினர். ஹிமவான் கடமைகளை குறைவில்லாமல் செய்து முடிப்பதில் மிகவும் திறமைசாலி. அவன் பெண்ணிற்கு செய்ய வேண்டிய சடங்குகள் அனைத்தையும் மிகுந்த விருப்பத்துடன் செய்து முடித்துவிட்டு மாப்பிள்ளையின் வருகைக்காக காத்திருந்தான்.  

அங்கே கைலாயத்தில் சிவபெருமான் நீராடி வந்தார். மணமகன் அணிய வேண்டிய அலங்கார பொருட்களை  பணிப்பெண்கள் மரியாதையுடன் சிவபெருமான் எதிரில் வைத்தனர். அவருக்கு பணிவிடை செய்யும் தேவதைகள்: ப்ராஹ்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி என எழுவர். இந்த ஏழு தேவதைகள் கொண்டு வந்து வைத்த மங்கலப் பொருட்களை அவர்களிடம் உள்ள மரியாதையால் அங்கீகரித்ததற்கு அடையாளமாக தொட்டார். ஆனால் எடுத்துக் கொள்ளவில்லை. சிவபெருமானின் உடல் மேல் உள்ள விபூதி, கபாலம், யானைத்தோல், பாம்பு முதலியன மணமகன் அணிவதற்கு ஏற்ற பொருள்களாக பெருமானின் விருப்பப்படி மாறிவிட்டன.
விபூதி சந்தனமாயிற்று, கபாலம் தலையின் அணிகலனாயிற்று, யானைத்தோல் அழகு செய்யப்பட்ட கரையை உடைய வெண்பட்டாக மாறியது.  நெற்றியில் உள்ள மூன்றாவது கண் அழகிய திலகமாயிற்று. கழுத்து, கை, தோள், இடுப்பு, முதலிய இடங்களில் இருந்த பாம்புகள் அந்தந்த அங்கங்களில் அணியும் ஆபரணமாக மாறிவிட்டன. இப்படி தன் சக்தியால் அணி செய்து கொண்ட சிவபெருமான் தன் வாகனமான எருதின் மீதேறி புறப்பட்டார். சிவபெருமானுக்கு பின்னால் ஏழு தேவதைகளும் அவரவர்களுக்கு உரிய வாகனங்களில் ஏறி உடன் புறப்பட்டனர். அந்த தேவதைகளுக்கு பின்னால் கபாலத்தை அணிந்து பத்ரகாளி தொடர்ந்தாள். பெருமானுக்கு முன்னர் சேவகர்கள் மங்கள வாத்தியங்களை இசைத்தபடி சென்றனர்.  
விஸ்வகர்மா சிவனுக்கு திருமணத்திற்கென்றே ஒரு அழகிய வெண்பட்டுக்குடையை தயார் செய்திருந்தான். அந்த குடையை சூரிய பகவான் சிவபெருமானுக்கு பிடித்துச் சென்றான். கங்கையும் யமுனையும் தங்கள் நதி வடிவை விட்டு விட்டு, தேவ வடிவத்துடன் சிவபெருமானின் இரண்டு புறமும் சாமரம் வீசி வந்தனர். பிரம்ம தேவரும், மகாவிஷ்ணுவும் ஜய கோஷத்துடன் சேர்ந்து கொண்டனர்.  
இந்திரன் முதலிய அஷ்ட திக்கு பாலகர்கள் தங்களது அதிகார சின்னங்கள் எதுவுமின்றி சாதாரண உடையுடன் வந்து கலந்து கொண்டனர்.  சிவபெருமான் பிரம்மதேவரை தலையை அசைத்து வரவேற்றார், விஷ்ணுவிடம் குசலம் விசாரித்தார். இந்திரனைப் பார்த்து ஒரு புன்னகை, மற்ற தேவர்கள் கண் நோக்கினாலேயே கவுரவிக்கப்பட்டார்கள்.
முன்பே மணம் பேசி முடித்த சப்தரிஷிகள் வந்து ஆசிர்வதித்தனர். சிவபெருமான் அவர்களிடம் திருமணத்தையும் எந்த குறைவும் இல்லாமல் அவர்களே நடத்தி தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  
கந்தர்வர்கள் சிவபெருமானின் பெருமையை பாடிக் கொண்டே உடன் வந்தார்கள். சிவபெருமானை ஏற்றிக்கொண்டு சென்ற ரிஷப வாகனம், எதிரிகள் எவரும் இல்லாத ஓஷதி பிரஸ்தம் நகரில் திருமணத்திற்காகவே அலங்கரிக்கப்பட்ட தோரண வாயிலை அடைந்தது. மாப்பிள்ளை சிவபெருமானை எதிர்கொண்டு அழைக்க ஹிமவான் நெருங்கிய பந்துக்களுடன் சென்றான். அதே நேரம் சிவபெருமானும் தன்னுடன் வந்து கொண்டிருந்த இந்திராதி தேவர்களுடன்  சென்றார். இரண்டு ஜனத்திரளும் ஒன்று கலந்து ஒரு பேரொலி எழும்பியது.  


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar