Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அனுமனின் ஆக்ரோஷம்
 
பக்தி கதைகள்
அனுமனின் ஆக்ரோஷம்


பெரிய உருவில், குரங்கு வடிவில் கைகளை கூப்பியபடி தன்முன் நிற்கும் அனுமனைப் பார்த்து சீதை பயந்து போனாள். இதுவும் ராவண உத்தியாக இருக்குமோ என நடுங்கினாள். இன்னும் எத்தனை எத்தனை வடிவில் ராவணன் வருவானோ, எத்தனை தொல்லைகள் தருவானோ என வெதும்பினாள். ஆனால் மனசுக்குள் ராம ஜோதி ஒளிர்ந்து அவளை ஆசுவாசப்படுத்தியதால் அவள் அமைதியானாள்.
இந்தப் பெண்ணே சீதை என்பதை அனுமனால் எளிதாக அனுமானிக்க முடிந்தது. இவளைப் போல எளிய தோற்றத்தில், சோகம் கப்பிய மனதின் பிரதிபலிப்பான வாடிய முகத்துடன், நலிந்த உடலுடன், அந்த நகரில் அவன் பார்த்தவரை வேறு எந்தப் பெண்ணும் இல்லை. ஆகவே இவள்தான் ராமன் தேடும் சீதை.
‘‘ராம துாதன் நானம்மா..‘‘ என்று ஆரம்பித்தான் அனுமன்.
ராம என்ற பெயரைக் கேட்டதுமே அப்படியே உருகினாள் சீதை. அனுமன் கண்களில் தெரிந்த கனிவு, ராமபக்தி எல்லாம் அவளுக்கு அவன்மீது நம்பிக்கையை வளர்த்தன.
‘‘நான் அவர் அனுப்பிய துாதன்தான் என்பதை மேலும் நிரூபிக்க இதோ இந்தக் கணையாழியைப் பெற்றுக் கொள்ளுங்கள்’’
சீதை வியப்புடன் கண்களை விரித்தாள். திருமணத்தின்போது தன் தந்தை ராமனுக்கு அணிவித்த மோதிரம் அது! அப்படியே பாச அணை உடைந்து கண்கள் என்ற மதகு வழியாக ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது. மோதிரத்தை நடுங்கும் கரங்களால் ஏந்தி கண்களில் ஒற்றிக் கொண்டாள், பரவசமானாள். கூடவே தான் ராவணனால் கடத்தப்பட்டபோது  பெரிய கடல் பரப்பைக் கடக்க வேண்டியிருந்ததே, அதை இந்த அனுமன் எப்படி கடந்தான் என்பதை அறிய விரும்பி, அது பற்றிக் கேட்டாள்.
தன் பணிவுக்குள் தன் பராக்கிரமத்தை எல்லாம் ஒளித்துக் கொள்ளும் ஞானி அனுமன். பிரமாண்ட உருவம் எடுத்து கடலைக் கடந்ததையோ, அதுவரை கடலுக்குள் மூழ்கியிருந்து, பெரும் பொறுப்பை மேற்கொண்டிருக்கும் அனுமன் சற்று களைப்பாறிச் செல்ல ஏதுவாய் மேலெழுந்த மைந்நாக மலையின் இடையூறையோ, வானுக்கும், கடலுக்குமாக உயர்ந்து நின்று, தன்னைக் கடந்து செல்லுமாறு சவால் விட்ட, சுரசை என்ற அரக்க உருகொண்ட பெண்ணிடமிருந்து சமயோசிதத்தால் தப்பித்ததையோ, சிம்ஹிகை (அங்காரதாரை என்றும் சொல்வர்) என்ற கோரரூப அரக்கியை, உடல் பிளந்து வதம் செய்ததையோ, இலங்கையை அடைந்து அதன் பேரெழிலில் மனம் பறிகொடுத்தபடி நடந்து சென்றதையோ, அப்போது தன்னைத் தடுத்த இலங்கை காவல் தெய்வமான லங்காதேவியைத் தாக்க, நிலைகுலைந்து கீழே விழுந்த அவள், ‘ஒரு வானர வீரனிடம் நான் தோற்பேனானால், அதுவே இலங்கை அழிவின் ஆரம்ப கட்டம்’ என்று பிரம்மன் கூறியிருக்கிறார். ஆகவே அது நிகழப் போகிறது. உன் வெற்றிக்கு என் வாழ்த்துகள்’ என்று சொல்லி விட்டு சாய்ந்ததையோ, இலங்கை நகரின் மாளிகைகள், அரண்மனைகள், தெருக்கள், வீடுகள் என்று எல்லாப் பகுதிகளிலும் சீதையை தேடியதையோ,  இறுதியில் இந்த அசோக வனத்தை வந்தடைந்ததையோ அவன் விளக்கிக் கொண்டிருக்கவில்லை. மாறாக, ‘‘நான் ராமநாமம் ஜபித்துக் கொண்டே எளிதாக கடலைக் கடந்தேன்’’ என அடக்கமுடன் தெரிவித்தான்.
சீதை பிரமித்தாள். இவ்வாறு கடல் தாண்டி வருவதொன்றும் சுலபமான செயலல்ல என ஊகித்திருந்தாள். ஆனாலும் தன் பதி ராமனின் நாமம் எத்தகைய ஆற்றலை அனுமனுக்குத் தந்திருக்கிறது என்பதை அறிந்து அவள் பெருமிதம் கொண்டாள்.
தன் மீதான சீதையின் நம்பிக்கை மேலும் வலுப்பெறும் வகையில், ராமன் தன்னிடம் சொல்லியிருந்த அவனது சொந்த அனுபவங்களில் ஒன்றை அவளிடம் தெரிவித்தான். ‘கோதாவரி நதியில் நீச்சல் போட்டி வைத்து அதில் நீங்கள் ராமபிரானை வென்றீர்களாமே’ என்று கேட்டான்.
உடனே வெட்கத்தால் முகம் சிவந்தாள் சீதை. ‘‘நான் எங்கே வென்றேன்? அவர்தான்  விட்டுக் கொடுத்தார்’’ என்றாள் நாணத்துடன்.‘‘ஆனால் என்னை மூன்றாவது நபர் யாராவது தீண்டினார் என்றால் அவரால் பொறுத்துக் கொள்ள முடியாது. அப்படித்தான் இந்திரனின் மகனான ஜெயந்தன் என்மீது காமம் கொண்டு, காக்கை உருவில் வந்து என்னைத் துன்புறுத்தினான். அதைக் கண்டு வெகுண்ட என் கணவர் கீழிருந்து ஒரு புல்லைப் பறித்து அதை மந்திராஸ்திரமாகப் பிரயோகித்து அவன் மீது வீசினார். அது அவனை பல தேசங்களுக்கும் விரட்டிச் சென்றது. அதனிடமிருந்து தப்ப அவன் என் கணவரிடமே அடைக்கலமாக வந்தான். ஏவிய அஸ்திரத்தின் மதிப்பைக் குறைக்க முடியாது என்பதால் அது அவனது ஒரு கண்ணைப் பறித்தது. ‘மாற்றான் மனைவியை பார்க்காதே’ என பாடம் புகட்டியது அந்த நிகழ்ச்சி. இப்போது அதைவிட கொடிய தண்டனையை ராவணனுக்குத் தர என் ராமன் எப்போதுதான் வருவாரோ’ என்று ஒரு சம்பவத்தை விவரிக்கும் வகையில் தன் ஆதங்கத்தையும் வெளியிட்டாள் சீதை.
அந்தச் சம்பவமும் ராமனால் தனக்குச் சொல்லப்பட்டது என மனதிற்குள் சொல்லிக் கொண்டான் அனுமன்.
சீதை, தான் தன் இடையில் முடிந்து வைத்திருந்த சூளாமணியை எடுத்து அனுமனிடம் கொடுத்து, ‘இது கூந்தலை அலங்கரிக்கும் சிறப்பான ஆபரணம். ஆனால் கயவன் ஒருவனிடம் அடிமைப்பட்டிருக்கும் இதை அணிவது முறையல்ல. என் ராமன் எப்போது அரக்கனை வதைத்து, என்னை மீட்கிறாரோ, அப்போது அதே கரங்களால்  சூளாமணியை அவரே என் தலையில் சூடட்டும்’ என நெகிழ்ச்சியுடன் கூறினாள்.
பணிவுடன் பெற்றுக் கொண்ட அனுமன், சீதையிடமிருந்து விடைபெற்றான். ‘விரைவில் ராமனைச் சென்றடைந்து விபரம் கூறுவேன். தாமதமின்றி தங்களை அவர் மீட்பார்’  என உறுதியளித்தான்.
புறப்படும் முன் சற்று சிந்தித்தான். தான் அங்கு வந்து சீதையை சந்தித்த சம்பவத்தைப் பதிவு செய்ய விரும்பினான். அதோடு ராம துாதனாக, ராம மாண்புப்படி, ராவணனிடம் பேசி அவனை ராமனிடம் சரணடைய வைக்க வேண்டும் என்றும் விரும்பினான். ஆகவே அசோக வனத்திலிருந்து புறப்பட்டு, கண்ணில் பட்ட மிகப் பெரிய மரங்களை வெறும் கைகளாலேயே அடித்துச் சாய்த்தான். சீதை இருந்த பகுதியை மட்டும் விட்டுவிட்டு சுற்றுப்புறமிருந்த எல்லா இயற்கை வளங்களையும் வீழ்த்தினான். இதைக் கண்ட ராவணனின் வீரர்கள் அனுமனைத் தாக்க முற்பட அவர்களையும் உருக்குலைத்தான்.
ராவணனுக்குத் தகவல் போயிற்று. வெகுண்ட அவன், ‘ஓர் அற்பக் குரங்குக்கு இத்தனை ஆணவமா’ என கர்ஜித்து, தன் தளபதிகளில் ஒருவனான சம்புமாலியை அழைத்து அனுமனைக் கொன்று வருமாறு பணித்தான். உடனே புறப்பட்டு அனுமனை எதிர்த்தான் சம்புமாலி. தாக்குதல் சற்று உக்கிரமாக இருக்கவே, அனுமன் பெருங்கோபம் கொண்டு, அவன் எய்த ஆயுதங்கள் எல்லாவற்றையும் பொடிப்பொடியாக்கி, இறுதியில் அவனையும் கிழித்துப் போட்டான். சம்புமாலியுடன் சேர்ந்து அனுமனுடன் போரிட்ட மந்திரிகளின் மைந்தர்கள் அனைவரும் பலியானார்கள். கேள்விப்பட்ட ராவணன் கொதித்தான். அனுமன் சீதையை சந்தித்தான் என்பதும் அவன் கோபத்தீக்கு நெய் வார்த்தது.
அடுத்து விருபாட்சன், யூபாட்சன், துர்த்தரன், பிரகசன், பாசகர்ணன் என்ற பஞ்ச சேனாதிபதிகளை, அனுப்பினான் ராவணன். அவர்களை நிர்மூலமாக்கினான் அனுமன். ராவணனுக்குக் கலக்கம் மூண்டது. இந்த அழிவுகளைக் கண்டு பொறுக்காத ராவணனின் மகனான இந்திரஜித், அனுமனை எதிர்கொண்டான். அவனது அசாதாரணமான வலுவைக் கண்ட இந்திரஜித் அவன் மீது பிரம்மாஸ்திரத்தை ஏவினான். அப்படியே கட்டுண்டான் அனுமன். அவன் பிடிபட்ட உற்சாகத்தில் பிற அசுரர்கள், அனுமனை மேலும் சில கயிறுகளாலும், கொடிகளாலும் பிணைத்தார்கள், இழுத்துச் சென்றார்கள்.
ஆனால் அதுதான் தவறாகப் போய்விட்டது. பிற கொடிகளாலும் கட்டப்பட்டதால் பிரம்மாஸ்திரம் தன் வலுவை இழந்தது. இதைப் புரிந்து கொண்டான், நவ வியாகரண பண்டிதனான அனுமன். தன்னால் அந்தத் தளைகளிலிருந்து சுலபமாக விடுபட முடியும் என்றாலும், அவர்கள் தன்னை எங்கே அழைத்துச் செல்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காகப் பொறுமை காத்தான்.
(தொடரும்)


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar