Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஸ்ரீனிவாச கல்யாணம்
 
பக்தி கதைகள்
ஸ்ரீனிவாச கல்யாணம்


இப்படி ஒரு பெரிய காரியம் செய்து முடித்த பிறகு அந்த ஆதிவராகர் சற்று ஓய்வெடுத்து இளைப்பாற நினைத்தார். அவர் அப்பொழுது அமர்ந்திருந்த இடம் ஏழுமலை. இந்த இடமே வசதியாக இருக்கிறதே என்று எண்ணி அங்கேயே தங்கி விட்டார்.  

இந்த விதமாக திருமலை ஆதிவராக பெருமாளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.  அவரைத்தான் அனைவரும் வணங்கி வந்தனர். வேறு எந்த தெய்வமும் அங்கே இல்லை.  

திருமலை வந்த நாராயணன் முறைப்படி ஆதிவராக பெருமாளை சேவித்து, அங்கே தவம் செய்ய அனுமதி வேண்டும் என்று கேட்டார். ஆதி வராகருக்கு தெரிந்து விட்டது. ‘இவர் இப்பொழுது தவம் செய்ய இடம் கேட்கிறார்.  இனி முழுமையாக இவர் இங்கே ஆக்கிரமித்துக் கொண்டு விடப் போகிறார். இனி இவர் ஆட்சிதான் மலரப் போகிறது.  நாம் பின்னுக்கு தள்ளப்படுவோம்’ என்று ஆதிவராகருக்கு நன்கு விளங்கி விட்டது.    ‘சரி பரவாயில்லை போகட்டும். அவர்தான் கோலோச்சட்டும். நாம் விட்டுக்கொடுத்து விடுவோம்’ என்று தீர்மானித்து விட்டார். இருந்தாலும் இவ்வளவு நாள் ஏகபோகமாக ஆட்சி செலுத்திவிட்டு முழுமையாக ஒதுங்கிக்கொள்ளவும் மனமில்லை. கொஞ்சமாகவேனும் ஒரு பிடிப்பு வைத்துக் கொள்ளவேண்டும் என்று எண்ணினார்.

‘‘அப்பா! உன் விருப்பப்படியே இங்கே தவம் செய்து கொள். இனிமேல் உன் செல்வாக்கு இங்கே கொடிகட்டிப் பறக்கப்போகிறது. உன் ராஜ்யம் ஆரம்பமாகி விட்டது. அது எனக்கு மகிழ்ச்சிதான். நான் ஒதுங்கிக்கொள்கிறேன். ஒரு நிபந்தனையுடன் நான் என் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க சம்மதிக்கிறேன்’’  

‘‘என்ன சொல்லுங்கள்’’

‘‘இங்கே உன் சன்னதிக்கு வரும் அனைவரும் முதலில் என்னை சேவித்துவிட்டுதான் உன்னை தரிசிக்க வேண்டும். எந்த பிரசாதமும் எனக்கு படைக்கப்பட்டு, பிறகுதான் உனக்குப்  படைக்கப்பட வேண்டும்’’

மகிழ்ச்சியுடன் சம்மதித்தான் நாராயணன்.  

அதன்படியே இன்றும் திருமலையில் உள்ள புஷ்கரணியில் நீராடிவிட்டு, ஆதிவராகரை தரிசித்த பின்தான் திருவேங்கடமுடையானை வணங்க வேண்டும். ஆதிவராகரின் நிபந்தனையை ஒப்புக்கொண்டு, அப்படியே சுற்றும் முற்றும் பார்த்தார் நாராயணன்.  சற்று தொலைவில் ஒரு புளியமரம் தென்பட்டது.  அதன் அடியில் ஒரு புற்றும் இருந்தது. அதுவே தான் அமைதியாக தவம் செய்ய சரியான இடம் என்று என்று தீர்மானித்து, அங்கே சென்று அந்த புற்றுக்கு அருகில் அமர்ந்து தவம் செய்ய ஆரம்பித்தான் நாராயணன்.  

மிக கடுமையான தவம்.  புற்று கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, நாரயணனை மூடிக்கொண்டு விட்டது. உணவு, தண்ணீர் ஏதுமின்றி மிகவும் உக்கிரமான தவம்.  இதைக் கண்ட சிவனும் பிரம்மாவும், நாராயணன் இப்படி காற்றை மட்டுமே சுவாசித்துக் கொண்டு தவம் செய்கிறாரே எதாவது உதவி செய்வோம் என்று முடிவெடுத்து, கரவீரபுரத்தில் தவம் செய்துகொண்டிருக்கும் மகாலட்சுமி தாயாரிடம் சென்று, ‘‘அம்மா, உங்களுடைய நாராயணன் திருமலையில்,  உணவு, தண்ணீர் எதுவுமின்றி கடுமையாக தவம் செய்கிறார். அவருக்கு தாங்கள் ஏதாவது செய்ய வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார்கள். உடனே திருமகள் பிரம்மனையும், சிவனையும் கண்டு நீங்கள் இருவரும் பசுவும் கன்றுமாக ஆகி விடுங்கள். நான் ஒரு வியாபாரி வேடத்தில் வந்து, உங்களை அரசனிடம் விற்று விடுகிறேன். அவன் உங்களை தினமும் மேய்ச்சலுக்கு அனுப்பும் பொழுது, நீங்கள் புற்றுக்கு சென்று பாலை சொரிந்து நாராயணனை அருந்த வையுங்கள் என்றாள். அப்படியே பிரமனும் சிவனும் தினமும் நாராயணனுக்கு பால் கொடுத்து வந்தார்கள். மாலை மாடுகள் தொழுவத்திற்கு வந்ததும், அரண்மனை வேலைக்காரர்கள் பால் கறப்பது வழக்கம்.  ஆனால், இந்த ஒரு பசுவிடம் மட்டும் பால் கிடைக்காது.  ஏன் என்று ஒரு புதிராகவே இருந்தது.  இதற்கான காரணத்தை கண்டறிய, மேய்ப்பவர்கள் அந்த பசுவை கண்காணித்தார்கள். அப்பொழுது அந்த பசு புற்றிற்கு சென்று பால் சொரிவதை கண்டார்கள்.  கோபம் கொண்ட மேய்ப்பவன், தன் கையிலிருந்த ஒரு கோலால் அந்த மாட்டை ஓங்கி அடிக்கப் போகையில், நாராயணன் புற்றிலிருந்து மேலே வந்து அந்த அடியை தன் தலைமீது வாங்கி கொண்டான். ரத்தம் கொட்டியது அது கண்டு அந்த மேய்ப்பவன் மயங்கி விழுந்தான். அரசன் இதைக் கேள்விப்பட்டு அந்த புற்றுக்கு வந்தான். அங்கே மேய்ப்பவன் வீழ்ந்து கிடக்கிறான். பசுவின் மேலேயும் ரத்தம்.  ஒரு கருத்த ஆள் அங்கே நின்று கொண்டிருந்தான். அது பரந்தாமன் என்று அரசன் அறியான். அவன்தான் மேய்ப்பவனையும், பசுவையும் அடித்து விட்டான் என்று நினைத்து, உடன் வந்த சேவகர்களை விட்டு அவனை பிடித்து கட்டச் சொன்னான்.  நாராயணன் கோபம் அடைந்து அரசனை நீ பேயாக பிறக்க கடவது என்று சாபம் இட்டார்.  உண்மை அறிந்த அரசன், நாராயணன் காலில் விழுந்து சாபத்திற்கு விமோசனம் கேட்டான். அதற்கு திருமால், ‘‘உன் பேய் ஜென்மம் முடிந்ததும், அடுத்த பிறவி ஒரு அரசனாக பிறப்பாய்.  அப்பொழுது உன் மகளை நான் மணந்து கொள்வேன்‘‘ என்றார்.  

திருமலைக்கு அருகில் நாராயணபுரம் என்ற ஊரை தலைநகராக கொண்டு தொண்டை மண்டலத்தை சுதாமர் என்ற சோழ அரசன் ஆண்டு வந்தான்.  சாபத்தால் ஏற்பட்ட பேய் பிறவி முடிந்து, சுதாமருக்கு மூத்த மகனாக அவன் பிறந்தான். ஆகாசராஜன் என்ற பெயருடன் வளர்ந்து வந்தான். அவனுக்கு ஒரு தம்பி உண்டு அவன் பெயர் தொண்டைமான் சக்கரவர்த்தி.  

சுதாமருக்குப் பிறகு, ஆகாசராஜன் அரசனனான். பட்டமகிஷி தாருணிதேவி. வெகு நாட்களாக அவனுக்கு மக்கட்பேறு இல்லை. அதற்காக ஒரு யாகம் செய்ய நினைத்து, யாகபூமியை உழும்பொழுது ஆயிரம் இதழ்களைக் கொண்ட ஒரு தாமரை மலரில் ஒரு குழந்தை தோன்றியது. அதை ஆசையுடன் எடுத்து, பத்மாவதி என்று பெயரிட்டு, ஆகாசராஜனும் தாருணிதேவியும் சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தார்கள்.

இதற்கிடையில் ஆதிவராகர், தவம் செய்து கொண்டிருக்கும் நாராயணனுக்கு ஏதாவது உதவி செய்ய நினைத்து, வகுளமாலிகா என்ற ஒரு பெண்மணியை அவனை கவனித்துக் கொள்ள அனுப்பிவைத்தார். அவளும் நாராயணனுக்கு தாயாக இருந்து, அவனை நன்றாக கவனித்துக் கொண்டிருந்தாள்.  

கொஞ்சம் பின்னோக்கிச் சென்று பத்மாவதி, வகுளமாலிகா என்னும் பெண்களின்  முற்பிறவி கதையைக் காண்போம்.

பத்மாவதி: இமயமலையில் தவம் செய்து கொண்டிருந்த ஒரு முனிவருக்கு வேதவதி என்ற ஒரு மகள் இருந்தாள். அவள் சிறு வயதிலிருந்தே பெருமாள் மகாவிஷ்ணுவையே பக்தியுடன் பூஜித்து வந்தாள். அவளுடைய பக்தி நாளடைவில் காதலாக அவள் மனதில் பரிணமித்தது. அதன் விளைவாக, ‘விஷ்ணுதான் தன் கணவன், எப்பாடுபட்டாகிலும் அவனையே திருமணம் செய்ய வேண்டும்’ என்ற முடிவுக்கு வந்தாள்.
வேதவதியின் அழகைப்பற்றி கேள்விப்பட்ட ராவணன், அவளை அடையவேண்டும் என்ற எண்ணத்துடன் அவளை அணுகி தன் விருப்பதைத் தெரிவித்தான். வேதவதி, தான் ஹரியை விரும்புவதாகவும், அவனையே மணக்க இருப்பதாகவும் தெரிவித்தாள். அதை ஏற்காத ராவணன், அவளை பலாத்காரமாக அடைய விரும்பி, அவளை பிடித்து இழுத்தான். கோபம் கொண்ட வேதவதி, ‘‘மடையனே, நான் ஹரியை விரும்புவதாக சொன்ன பிறகும் நீ என்னை தொட்டாய். என்னைப் போன்ற ஒரு பெண்ணால்தான் உனக்கு அழிவுண்டாகும்’’ என்று சாபமிட்டுவிட்டு அக்னியை மூட்டி அதில் விழுந்தாள். ஆனால் அக்னி பகவான் அவளை சாக விடாமல் தன் பாதுகாப்பில் வைத்து போஷித்து வந்தான். அவள் இட்ட சாபம் நிறைவேறியது.  சீதை என்னும் பெண்ணால் ராவணனுக்கு அழிவு வந்தது. ராம ராவண போர் முடிந்ததும், இலங்கை போர்க்களத்தில் ராமன் பேசிய பேச்சால் கோபம் கொண்டு, அவன் எதிரிலேயே சீதை தீப்புகுந்தாள். அப்பொழுது அக்னி பகவான் சீதையை சாக விடாமல், முன்பு தீயில் விழுந்து தன்னால் பாதுகாக்கப்பட்டு வந்த வேதவதியையும் சேர்த்து கொண்டு வந்து இருவரையும் ராமனிடம் விட்டான்.  வேதவதி தன் வரலாறை சொல்லி ராமனை மணக்க விரும்பினாள். ஆனால் ராமன் அவளிடம்,  “நான் இந்த பிறவியில் ஒரு மனைவியுடன் மட்டுமே வாழ்வதாக ஒரு விரதம் உண்டு.  அதனால் நான் உன்னை மணம் செய்து கொள்ள முடியாது.  ஆனால் கலியுகத்தில் நான் திருமலையில் வெங்கடேசனாக அவதரிப்பேன். அந்த சமயம் நீ பத்மாவதி என்ற பெயருடன் ஆகாச ராஜனின் மகளாக இருப்பாய். அப்போது உன்னை நான் திருமணம் செய்து கொள்வேன் என்றான்.  

வகுளமாலிகா: துவாபர யுகத்தில் கண்ணன் தேவகிக்கு மகனாக பிறந்து, கோகுலத்தில் யசோதையிடம் வளர்ந்து வந்தான்.  வளர்ந்து வாலிபப் பருவம் அடைந்ததும், கண்ணன் யசோதையை  விட்டு விட்டு மதுரா, துவாரகை, அஸ்தினாபுரம், குருக்ஷேத்ரம் என்று சென்று விட்டான்.  கோகுலம் பக்கமே வரவில்லை. வளர்த்த பாசம் யசோதைக்கு. கண்ணனின் பிரிவை அவளால் தாங்க முடியவில்லை.  மிகவும் மனம் வருந்தினாள்.  கண்ணனின் திருமணத்தைக் கூட அவள் பார்க்க கொடுத்து வைக்கவில்லை. அந்த யசோதைதான் வகுளமாலிகாவாக பிறந்து திருமலையில் ஆதிவராகரின் பாதுகாப்பில்  வாழ்ந்து வந்தாள்.  ஆதிவராகருக்கு வகுளமாலிகாவின் முற்பிறவி  பற்றி தெரியும். அதனால், வகுளமாலிகாவிடம் கிருஷ்ணனாக இருந்து இப்பொழுது ஸ்ரீனிவாசனாக இந்த மலையில் தவம் செய்யும் ஸ்ரீநிவாசனுக்கு தாயாக இருந்து அவனை கவனித்துக் கொள்ள ஏற்பாடு செய்தார். வகுளமாலிகாவும் மிக்க மகிழ்ச்சியுடன், ஆதிவராகரின் கட்டளையை ஏற்று, ஸ்ரீநிவாசனை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar