Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அனுமன் என்ற ஆபத்பாந்தவன்
 
பக்தி கதைகள்
அனுமன் என்ற ஆபத்பாந்தவன்


அனுமனின் வாசகம் ராமனுக்கு, திருவாசகமாக நெஞ்சை நெகிழ்வித்தது. ‘கண்டேன்’ என்ற போதிலேயே பெரிதும் உவந்தான் ராமன். கூடவே ‘கற்பினுக்கு அணியை’ என்ற போது, சீதை எந்த பாதிப்பும் இல்லாமல் பத்திரமாக இருக்கிறாள் என்ற உண்மையையும் உணர்ந்து நிம்மதி கொண்டான். அதோடு சீதை சிகையில் சூடும் சூளாமணியை அனுமன் அளிக்க, அதைக் கண்டு, களிப்பெய்தி, சீதையின் பாதுகாப்பான இருப்பை உணர்ந்து நிம்மதியடைந்தான்.
கண்களில் நீர் பனிக்க அப்படியே அனுமனை ஆரத் தழுவிக் கொண்டான். அந்த அரவணைப்பில் தன்னை இழந்தான் அனுமன்.
‘தாங்கள் வந்து மீட்டுச் செல்வீர்கள் என்று அன்னையார் பெரும் நம்பிக்கை கொண்டிருக்கிறார், ஐயனே. யாருக்கும் தெரியாத வகையில் அசோகவனத்து சிம்சுபா மரத்தின் மேல் ஒளிந்து கொண்டிருந்த போது என் கண் முன்னாலேயே ராவணன் வந்தான். காம வார்த்தைகளாலும், மிரட்டலாலும், கெஞ்சலாலும் அன்னையை அடிபணிய வைக்க முயன்றான். அதற்கு அசைந்து கொடுக்காத அன்னையாரின் திட மனதை எண்ணி வியந்தேன், மகிழ்ந்தேன்.
இதற்கு முன் எப்படியெல்லாம் அவமானப்பட்டார்களோ பாவம், அதனால் இப்போது ராவணன் போன பிறகு, மனம் வெதும்பி, இனி தன்னைக் காப்பாரில்லை என்ற விரக்தியில் தன் புடவை முந்தானையை, மரத்தின் கிளையில் முடிச்சிட்டு தற்கொலைக்கும் முயன்றார்’’
அதைக் கேட்டு ‘ஐயோ...’ என கதறினான் ராமன். என்னக் கொடுமை இது!
‘அதைக் கண்டு பதறிய நான், அதே கணம், மரத்தின் மீதிருந்து குதித்து ராமதுாதன் என்று  அடையாளம் காட்டிக் கொண்டேன். அதனால் அவர்களுடைய எதிர்பார்ப்பு நம்பிக்கை உரம் பெற்றது. தங்கள் கணையாழியை அவர்களிடம் சமர்ப்பித்தேன். அதைப் பார்த்ததும் புதுத்தெம்பு பெற்று விட்டதை என்னால் அறிய முடிந்தது. தாங்கள் என்னிடம் தெரிவித்திருந்த சில அந்தரங்க சம்பவங்களை அன்னையாரிடம் சொல்லி, நான் ராமதுாதன் தான் என்பதை நிரூபித்தேன். அவற்றைக் கேட்டு அவர்கள் பெரிதும் நாணமுற்றார்கள்’  
அனுமனின் பேச்சால் ராமன் பரவசமுற்றான்.
‘அந்தத் தருணத்தில் அவர்கள் கண்களில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை என்னால் உணர முடிந்தது. அவரது கருத்திலும் நீங்கள் மட்டுமே. அவர் பேசிய ஒவ்வொரு சொல்லிலும் நீங்கள். அவரது எல்லா அணுக்களிலும் நீங்கள் மட்டுமே வியாபித்திருக்கிறீர்கள். அவர் கண்களில் தெரிந்த புத்தொளி அப்போதே அவர்கள் தங்களைக் கண்டுவிட்ட ஆனந்தத்தை வெளிப்படுத்தியது. என்னிடமிருந்து கணையாழியைப் பெற்றுக் கொண்ட அவர்கள் தன்னிடமிருந்த சூளாமணியை என்னிடம் கொடுத்தபோது அவர்கள் அடைந்த நெகிழ்ச்சியை வர்ணிக்க இயலாது’ என்று அனுமன் உருகினான்.  
‘அதேசமயம் அவர்கள் உங்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எதனால் சொல்கிறேன் என்றால், ‘என் தோள் மீது அமர்ந்து கொள்ளுங்கள் தாயே, இப்போதே நான் தங்களை ஸ்ரீராமனிடம் கொண்டு சேர்ப்பித்து விடுகிறேன்’ என கேட்டுக் கொண்டபோது, அதைக் கேட்டு பேரிடி தாக்கியதுபோல நடுங்கினார்கள். பிறகு சினம் மிகுந்து, ‘என் கணவரின் பராக்கிரமத்தை இந்த உலகே அறிய வேண்டும். அவர் ராவணனை அடிமை செய்து அல்லது வதைத்து என்னை மீட்க வேண்டும். அதுதான் முறை, நியாயம். அதை விடுத்து நான் உன் தோளில் அமர்ந்து அவரிடம் போய்ச் சேர்ந்துவிட்டேனென்றால் இதுநாள்வரை நான் பட்ட துன்பத்துக்கும், ஆற்றாமைக்கும், அவலத்துக்கும், அவமானத்துக்கும் அது நீதி செய்ததாக ஆகுமா? அல்லது அது ராம பராக்கிரமத்துக்குதான் அணி செய்ததாக ஆகுமா? தன்னால் இயலாது என்பதால் ஒரு குரங்கை அனுப்பி சீதையை மீட்டான் என்று எல்லோரும் அவர்மீது அவச்சொல் பேச இது காரணமாகி விடாதா?’ என்று கேட்டு என் சிறுமதிக்கு ஒளியூட்டினார்கள்’
மனைவி தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை எண்ணி நெஞ்சு விம்மியது ராமனுக்கு. உண்மைதானே! மாய சூழ்ச்சியால் மனைவியைப் பறிகொடுத்த தான் எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல் வாளாவிருக்க, ஒரு குரங்கால் அவள் காப்பாற்றிக் கொண்டு வரப்பட்டாள் என்ற அபவாதம் பிரபஞ்சமெங்கும் பரவுமே! ‘நன்று செய்தாய் சீதா, நானே வருகிறேன், உன்னை மீட்கிறேன்’  என்று மனதில் உறுதி கொண்டான் ராமன்.
‘அது மட்டுமல்ல ஐயனே, அவர்கள் தங்களுக்கு ஒரு நிபந்தனையும் விதித்திருக்கிறார்கள்’  என்று ஆரம்பித்து, தொடர்ந்து சொல்லத் தயங்கினான்.  
ராமன் அவனை ஏறிட்டு நோக்கினான். ‘நிபந்தனையா, எனக்கா, என்ன அது?’ என்று குழப்பத்துடன் கேட்டான்.
‘ஆம் ஐயனே, இன்னும் ஒரு மாத காலத்திற்குள் தாங்கள் அவரை மீட்கவில்லை என்றால், தான் உயிர் நீப்பது உறுதி என்று சொல்லச் சொன்னார்கள்’
இதைக் கேட்டு மனம் நொறுங்கிப் போனான் ராமன்.
‘ஆனால், ‘தங்கள் இருப்பிடம் அறிய மேற்கொண்ட பலநாள் முயற்சிகளுக்கு பலனாகத்தான் நான் தங்களைக் இன்று கண்டேன் அன்னையே. இந்த விஷயத்தை ஸ்ரீராமனிடம் நான் தெரிவிப்பேனானால், ஒரு மாதம் என்ன, ஒருசில நாட்களிலேயே தங்களை மீட்க அவரால் இயலும். ஆகவே அவரை விட்டு நிரந்தரமாகப் பிரிவதாகிய உங்களுடைய எண்ணத்தைக் கைவிடுங்கள்’ என்று ஆறுதல் கூறினேன். அவர்கள் சாந்தமானார்கள். ஆகவே நம் நடவடிக்கைகளை நாம் துரிதப்படுத்த வேண்டியது அவசியம், அதற்கு தங்களது உபாயங்களைக் கூறுங்கள்’ என்றான் அனுமன்.
‘என்ன கொடுமையான உலகம் இது! நீ பார்த்தவரையில் அந்த இலங்கையில் ஒரு நற்குண ஜீவனையும் காணவில்லையா?’ என்று மிகுந்த ஏக்கத்துடன் கேட்டான் ராமன்.
‘இருந்தார்கள் அண்ணலே, சேற்றில் மலரும் செந்தாமரை போல அங்கும் நல்லோர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் விபீஷணன் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவன். ஆரவாரத்துடன் அரக்கர்கள் என்னைக் கட்டி இழுத்து ராவணன் முன் நிறுத்தியபோது எனக்காகப் பரிதாபப்பட்ட ஒரே ஜீவன் விபீஷணன்தான். ‘ராமனின் துாதுவனாக வந்திருக்கும் ஒருவனை இப்படி இழிவாக நடத்துவது தகாது’  என்று தன் அண்ணன் ராவணனிடம் வாதாடினான். இதை வைத்து, அவன் பலமுறை ராவணனுக்கு நீதிபோதனை நடத்தியிருக்க வேண்டும் என ஊகிக்க முடிந்தது. ஆனால் காமத்தால் அறிவை இழணணந்த ராவணன் அவனையும் அவனுடைய அறிவுரைகளையும் துச்சமாகத்தான் மதித்திருப்பான் என்பதையும் என்னால் அறிய முடிந்தது.
‘ஒரு கட்டத்தில் என்னைக் கொன்றுவிடும்படி தன் வீரர்களுக்கு ராவணன் உத்தரவிட்டபோது, விபீஷணன்தான் தடுத்தான். தூதுவனைக் கொல்வது ராஜ நாகரிகமல்ல என்று சொல்லி, வேண்டுமானால், என்னைக் காயப்படுத்தி அனுப்பிவிடலாம் என்று ராவணனுடைய ஆத்திரம் அடங்கும் வகையில் யோசனையும் சொன்னான். இந்த யோசனையின் பேரில் என் வாலில் எண்ணெய்ப் பந்தம் கட்டி அதில் தீ மூட்டி விட்டார்கள். உடனே ராம அடியவனான நான் அந்த ராம பலம் எத்தகையதாக இருக்கும் என்பதை அவர்கள் அனைவருக்கும் உணர்த்த விரும்பி அந்த நகரையே தீக்கிரையாக்கினேன். இதைப் பார்த்து பயந்தாவது ராவணன் தங்களைச் சரணடைவான் என்று எதிர்பார்த்தேன்’
அனுமன் சொல்லச் சொல்ல ராமனுக்கு மனமும், தோள்களும் விண்ணென்று பூரித்தன. அருகில் நின்றிருந்த லட்சுமணனும் பரவசமனான். உடனே பரபரத்தான். அண்ணியார் இருக்கும் இடம் தெரிந்துவிட்டது. அவரை மீட்கும் பணியைத் தொடங்க வேண்டும். எப்படித் திட்டமிடுவது, எவ்வாறு இலங்கையை நெருங்குவது, கடத்திய கயவனான ராவணனை எவ்வாறு எதிர்கொள்வது? போராலா அல்லது சரணாகதி சமரச பேரத்தாலா? அண்ணன் இப்போது உத்வேகம் அடைந்திருப்பதை உணர முடிகிறது. சிந்தனையை நேர்முகப்படுத்தினால் நோக்கத்தை எளிதாக எட்டிவிடலாம் என்று லட்சுமணனும் புத்துணர்வு கொண்டான்.
அனுமன் தன் பேராற்றலால் இப்பெருங்கடலைக் கடந்துவிட்டான். இப்போது அண்ணன் மற்றும் தான் உட்பட வானர சேனைகள் மொத்தமும் கடல் கடந்து செல்ல வேண்டுமே! இப்போது இங்கே குகன் இருந்தானானால் அவனிடம் சொல்லி ஆயிரக்கணக்கான நாவாய்களை வரவழைத்து அனைவரும் கடல் கடந்து செல்ல முடியும். ஆனால் கடலைக் கடப்பது என்பது ஒரு நதியைக் கடப்பது போன்ற எளிதான வழி அல்லவே... என்ன செய்யலாம்?


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar