Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மருத்துவரின் மகள்
 
பக்தி கதைகள்
மருத்துவரின் மகள்


“உங்கள அப்பான்னு கூப்பிடலாமா?”
பாசத்துடன் கேட்டவளைப் பார்த்தேன். 28 வயது. மாநிறம். அழகி. ஆனால் முகத்தில் சோக மேகம் கவிந்திருந்தது.
“தாராளமா”
“நான் டாக்டர் சரண்யா. டாக்டர் ஜெகனோட ஒரே பொண்ணு. அம்மா இல்ல. அப்பாதான் எல்லாம்”
டாக்டர் ஜெகன் புகழ்பெற்ற இதயநோய் நிபுணர்.
“எனக்குப் பச்சைப்புடவைக்காரிதான் எல்லாம். அவ என்னைக் கொன்னே போட்டாலும் ஏன்னு கேக்கமாட்டேன். ஆனா இப்போ ஒரு கொடுமை நடந்திருக்கு.”
சரண்யா சொல்லத் தொடங்கினாள். உறவினரின் திருமணத்திற்காக வெளியூருக்குச் சென்றிருக்கிறார்கள். காலை ஆறு மணிக்கு ரயில் அந்த ஊரை அடைந்தது. அங்கே இரண்டே நிமிடம் தான் நிற்குமாம். பெட்டி படுக்கைகளைத் தயாராகக் கட்டி வைத்திருந்தவர்கள் சில நொடிகளில் கீழே இறங்கிவிட்டனர். அவர்களை அழைத்துச் செல்ல வரும் உறவினருக்காகக் காத்திருந்தார்கள். சரண்யாவின் தந்தை எதேச்சையாக ரயிலிற்குள் எட்டிப் பார்த்த போது அங்கே அவருடைய அலைபேசி இருந்திருக்கிறது. அதன் விலை ஐம்பதினாயிரம். கொஞ்சம்கூட யோசிக்காமல் உடனே குதித்து ரயிலில் ஏறிவிட்டார் ஜெகன். அலைபேசியை எடுத்துக்கொண்டார். அதற்குள் ரயில் கிளம்பிவிட்டது. இறங்கிவிடலாம் என்று நினைத்து பிளாட்பாரத்தில் குதித்திருக்கிறார் மருத்துவர்.
கால் வழுக்கி ரயிலுக்கும், நடைமேடைக்கும் அருகே மாட்டிக்கொண்டார் ஜெகன். பார்த்தவர்கள் அலறி ரயிலை நிறுத்துவதற்குள் நிலைமை கையை மீறிப் போய்விட்டது. ஜெகனின் இரண்டு கால்களையும் எடுக்க வேண்டிய நிலை வந்துவிட்டது.
அதுவரை ஓய்வின்றி ஓடிக் கொண்டிருந்த மனிதர் எப்படி கால்கள் இல்லாமல் மீதி காலத்தை கழிக்கப் போகிறார்? வசதி இருக்கிறது. ஆள் போடலாம். மருத்துவச் செலவைப் பற்றிக் கவலையில்லை. என்றாலும் அத்துன்பத்தை ஜெகனால் தாங்க முடியவில்லை.
“முதல்ல என் மனசுல கோபமும் வன்மமும்தான் இருந்துச்சிப்பா. அப்புறம் சமாதானமாச்சு. ஒரு பாவமும் அறியாத எங்கப்பாவுக்கு இப்படி நடக்குதுன்னா பச்சைப்புடவைக்காரி நுட்பமான கர்மக்கணக்கப் போட்டிருக்கான்னு புரிஞ்சிக்கிடேன்”
“இப்போ அந்தக் கணக்கு என்னன்னு தெரிஞ்சிக்கணுமாக்கும்”
“இல்லப்பா. அன்பு குறைஞ்சாத் துன்பம் வரும்னு நீங்க அடிக்கடி சொல்வீங்க.  எங்கப்பாவுக்கு எப்படி அன்பு குறைஞ்சது அத எப்படி ஈடுகட்டறதுன்னு தெரிஞ்சிக்கலாம்னுதான் வந்தேன்”
“நான் பச்சைப்புடவைக்காரிகிட்ட கணக்குக் கேக்க முடியாது சரண்யா. பிரார்த்தனை மட்டும்தான் செய்ய முடியும். அவ மனசு இரங்கினா நமக்குக் கணக்குப் புரியும். ஏதாவது தெரிஞ்சா அவசியம் கூப்பிடறேம்மா”
சரண்யா சென்றுவிட்டாள்.
இரண்டு வாரம் ஒன்றும் நடக்கவில்லை. அன்றிரவு இரண்டு தெரு தள்ளி நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்தேன். திடீரென்று ஒரு நாய் எங்கிருந்தோ பாய்ந்து வந்தது. பயந்து நடுங்கிவிட்டேன்.
“பைரவா! நில்” என்ற அதட்டலான குரல் கேட்டு அந்த நாய் அப்படியே ஸ்தம்பித்து நின்றது.
“ பயந்து விட்டாயோ?” அவ்வளவு அழகுக்கும் கம்பீரத்துக்கும் சொந்தக்காரி என் பச்சைப்புடவைக்காரியாகத்தான் இருக்க முடியும். விழுந்து வணங்கினேன்.
“நாளை மாலை சரண்யாவை அழைத்துக்கொண்டு இனிப்புகள் விற்கும் இந்தக் கடைக்குப் போ”
அன்னை முகவரியைக் கொடுத்தாள்.
சரண்யாவை அலைபேசியில் அழைத்து விபரம் சொன்னேன்.
காரில் செல்லும்போது சரண்யா இடைவிடாமல் பேசினாள்.
விரைவில் பச்சைப்புடவைக்காரி அடையாளம் காட்டிய கடைக்கு வந்துவிட்டோம்.
“சுவீட்டும் காபியும் சாப்பிடலாமா?”
“இங்கேயாப்பா?  ஒரு மாதிரியா இருக்கே”, என்று சொன்னாளே தவிர வண்டி நின்றவுடன் இறங்கிவிட்டாள்.
ஜிலேபி, பக்கோடா, காபி  என ஆர்டர் கொடுத்துவிட்டுக் காத்திருந்தோம்..
திடீரென ஒரு கும்பல் எங்கிருந்தோ முளைத்தது. அதற்குத் தலைவியாக வந்த பெண் கடைக்காரரைப் பார்த்துக் கத்தினாள்.
“எப்பய்யா வட்டியக் கட்டப்போற?”
“ஒரு வாரத்துல எப்படியாவது கட்டிடறேங்க்கா. கஸ்டமருங்க இருக்காங்க. இப்போ வேணாம்க்கா.”
கடைக்காரன் நடுங்கினான். சரண்யா பயந்துவிட்டாள். என்னுடன் ஒட்டி நின்றுகொண்டாள்.
“வட்டியக் கட்டற வரைக்கும் அடமானமா உன் பொண்டாட்டிய எங்க வீட்டுல கொண்டு வந்து விட்டுரு”
பயந்து நடுங்கிய கடைக்காரன் கோபத்துடன் “என்னடி சொன்ன? என் பொண்டாட்டி உன்ன மாதிரி ஊர் மேயறவ இல்லடி. அவ பத்தினி”  என்றபடி அந்தப் பெண்ணின் தலைமுடியைப் பிடித்தான்.
அந்தப் பெண்ணின் ஆட்கள் அவன்மேல் பாய்ந்தனர். கைவலிக்கும்வரை அடித்துத் துவைத்துவிட்டு வந்த சுவடு தெரியாமல் போய் விட்டனர். கடைச் சாமான்கள் எல்லாம் வெளியில் இறைந்து கிடந்தன. கடைக்காரன் கீழே விழுந்து கிடந்தான். அவனால் எழக்கூட முடியவில்லை. அவனுடைய கால் எலும்பு முறிந்திருக்கவேண்டும் என்று தோன்றியது.
சரண்யாவின் கையைப் பிடித்து இழுத்தபடி காரை நோக்கி ஓடினேன். அந்தப் பகுதியைக் கடந்து செல்லும்வரை யாரும் பேசவில்லை.
ஆள் நடமாட்டமில்லாத ஓரிடத்தில் வண்டியை நிறுத்தினேன்.
“சரண்யா... உன் கேள்விக்குப் பதில் கெடைச்சிருச்சா?”
“என்ன உளறுறீங்க? எங்கப்பாவுக்கு ஏன் கால் உடைஞ்சதுன்னு கேட்டேன். அதுக்கு ஒரு கந்துவட்டிக் கும்பல் செஞ்ச அடாவடியக் காமிச்சீங்க. ரெண்டுக்கும் என்ன சம்பந்தம்?”
“உங்கப்பா ரொம்ப நல்லவரு. பீஸ் அதிகமா வாங்கினாலும் நேர்மையாத் தொழில் செய்யறவரு. தன்னை நம்பி வந்த நோயாளிங்களுக்குத் துரோகம் செஞ்சதேயில்ல. அவருடைய கெட்ட நேரம் சில கந்துவட்டிக்காரங்க அவருக்கு அறிமுகமானாங்க. அவங்க உங்கப்பாவுக்குப் பணத்தாசை காட்டினாங்க. “டாக்டர் உங்க பணத்த வெட்டியா பேங்க்ல போட்டு வச்சிருக்கீங்க. அரைவட்டிகூடக் கெடைக்காது. எங்ககிட்ட கொடுங்க. நாங்க உங்களுக்கு ரெண்டு வட்டிக்கு மேல கொடுக்கறோம்”னு சொன்னாங்க. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு உங்கப்பாவும் கொடுத்தாரு. கந்துவட்டிக்காரங்க நேர்மையா வட்டி கொடுத்தாங்க. அதனால உங்கப்பாவோட பணம் வேகமா வளர்ந்தது. அவரால நெறைய சொத்து வாங்க முடிஞ்சது”
“எங்கப்பா எந்தத் தப்பும் செய்யலையே?”
“கந்துவட்டிக்காரங்க பணத்த எப்படி வசூல் பண்றாங்கன்னு பாத்தேல்ல?  எத்தனையோ பேர அவமானப்படுத்தி, அவங்க கையக் கால உடைச்சித்தான் வட்டியச் சம்பாதிக்கறாங்க. அவங்க செய்யற பாவம் உங்கப்பாவையும் தாக்கிருச்சி. அவங்க தொழில்ல முதல்போட்ட கூட்டாளியாயிட்டாரே உங்கப்பா! அதனாலதான் அந்த விபத்து நடந்துச்சி”
“நான் என்ன செய்யட்டும்?”
“எப்படியாவது கந்துவட்டிக்காரங்ககிட்ட கொடுத்த பணத்தை எல்லாம் திரும்ப வாங்கச் சொல்லும்மா. அத வச்சிக்கிட்டு நல்ல காரியம் பண்ணச் சொல்லும்மா”
சரண்யாவின் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது.
“அதனால அப்பாவுக்குப் போன கால் வந்திருமா?”
“வராது. ஆனா நிலைமை இன்னும் மோசமாகாம பாத்துக்கலாமே! மிச்சமிருக்கற காலத்துல உங்கப்பாவ கஷ்டப்படறவங்களுக்கு உதவி செய்யச் சொல்லும்மா. ஏழைங்களுக்கு இலவசமா வைத்தியம் பாக்கலாம். ஏழைக் குழந்தைகளை படிக்க வைக்கலாம். அந்த அன்பு வெள்ளத்துல அப்பாவுக்குக் கால் இல்லாதது பெரிய குறையாத் தெரியாது. அடுத்த பிறப்பு நல்லா இருக்கும்”
வீட்டில் இறங்கும் வரை சரண்யா ஒன்றும் பேசவில்லை.
தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த போது கார் நிறுத்தப்பட்டது. நான் சுதாரிப்பதற்குள் பெண் போலீஸ் ஒருவர் வண்டியில் ஏறினார்.
“சரண்யாவிற்கு வழி காட்டிவிட்டாயே!”
“நான் ஒரு வரம் கேட்கலாமா?”
“தாராளமாக”
“ஒரு பெண் துன்பத்தில் இருக்கிறாள். ஒரு பிரார்த்தனை…’’
“யார்?”
“அந்த இனிப்புக் கடைக்காரரை கடுமையான வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தி அவன் கால்களையும் உடைக்கச் செய்தாளே.. கந்துவட்டி கூட்டத்தின் தலைவி. அவளுக்கும் அவள் குடும்பத்துக்கும்...’’
“தீயவள். வன்கொடுமை செய்வதையே வாழ்க்கையாகக் கொண்டவள். மனதில் கொஞ்சம்கூட அன்பில்லாதவள்”
“மகா மருத்துவச்சியான நீங்கள் தீமை என்னும் நோயின் அறிகுறிகளைத் தெளிவாகச் சொல்லி விட்டீர்களே...’’
அன்னை சிரித்தாள்.
“உன் பிரார்த்தனை என்ன?”
“அல்லல்படுவோர் நெஞ்சமெல்லாம் அன்பால் என்றும் நிறையட்டும்”


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar