Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஸ்ரீனிவாச கல்யாணம் 4
 
பக்தி கதைகள்
ஸ்ரீனிவாச கல்யாணம் 4


திருமணத்திற்கு நாள் குறிப்பிடப்பட்டது. சாதாரண திருமணங்களை விட, ராஜ குடும்ப திருமணம் மிக  சிறப்பாகவும் ஆடம்பரமாகவும் நடக்கும்.  இதுவோ தெய்வத் திருமணம்.  கேட்க வேண்டுமா?  அனைத்து தேவர்களும் வந்து கூடிவிட்டார்கள்.  
நாராயணன் கேட்குமுன்பே ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் முன்வந்து ஒவ்வொரு காரியத்தை எடுத்துக்கொண்டார்கள்.  

இந்திரன் : முழு நிர்வாகம், மேற்பார்வை
வாயு : பந்தல், தோரணம் ஏற்பாடு
அக்னி : சமையல், சாப்பாடு
முருகப் பெருமான்: பத்திரிக்கை விநியோகம், விருந்தினர் உபசரிப்பு
எமன் : கட்டுப்பாடு, ஒழுங்கு
மன்மதன் : வெற்றிலைபாக்கு, தாம்பூலம்
வருணன் : தண்ணீர், பானங்கள் விநியோகம்

இப்படி ஆளுக்கு ஒரு பொறுப்பை ஏற்றார்கள்.  ஆனால் முக்கியமான ஒரு விஷயம் பாக்கி நின்றது.  நாராயணன் எங்கிருந்தோ அங்கு வந்தவன். அவனுக்கு என்று எந்தவிதமான ஆஸ்தி, பூஸ்தி எதுவும் கிடையாது.  

மகாலட்சுமியை விட்டுப் பிரிந்து சென்று விட்டதால், பெருமானிடம் இருந்த ஐஸ்வர்யங்கள் அனைத்தும் அவனை விட்டுப்போய் ஏழையாகி விட்டான்.   இப்பொழுது இந்த திருமண செலவுகளை எப்படி சமாளிப்பது?  இவ்வளவு பெரிய திருமணம் நடக்க நிறைய பொருள் செலவாகும்! அதற்கு வேண்டிய பணத்திற்கு  எங்கே போவான்?

அப்பொழுது குபேரன் அங்கே வந்தான். ஸ்ரீனிவாசனிடம், ‘‘பிரபு! கவலைப்படாதீர்கள். எவ்வளவு பணம் வேண்டும் சொல்லுங்கள்.  நான் குறைந்த வட்டியில் கடன் தருகிறேன்’’ என்றான்.  

உடனே பெருமாள் குபேரனிடம், “குபேரா! தக்க சமயத்தில் வந்து, என் கஷ்டத்தை புரிந்து கொண்டு, எனக்கு மகிழ்ச்சி தரும் வார்த்தைகளை சொல்கிறாய்.  மிக்க நன்றி’’ என்றார்.  

‘‘ஒரு விஷயம் இடிக்கிறது.  நீ இப்பொழுது கடன் கொடுத்து விடுகிறாய், நானும் வாங்கி செலவு செய்து திருமணத்தை நடத்தி விடுகிறேன். எப்படி உன் கடனை தீர்ப்பது வழி தெரியவில்லையே’’

‘‘அந்தக் கவலை தங்களுக்கு ஏற்படாது என்று நினைக்கிறேன்.  நான் இந்த கடனை மிக குறைந்த வட்டியில்தான் கொடுக்கிறேன்.  மேலும் இது நீண்ட நாள் கடன்.  தங்களுக்கு சுமையோ சிரமமோ இருக்காது.  தங்களுடன் மகாலட்சுமியும் சேர்ந்துவிட்டால் அவர்கள் அருளால் காணிக்கை கொட்டும். கவலை வேண்டாம் பிரபு’’

‘‘தேவி என்னுடன் சீக்கிரம் சேர்ந்து விடுவாள். நீ சொல்கிறபடி அவள் வந்து விட்டால் எனக்கு பிரச்னை இல்லை. சரி, நீ சொல்கிறபடியே செய்வோம்.  செலவு எவ்வளவு ஆகும் என்று தெரியவில்லை.  இந்திரனிடம் கேட்டு சொல்கிறேன்’’ என்றார் பெருமாள்.
இந்திரனை அழைத்து, இந்த திருமணத்திற்கு தோராயமாக எவ்வளவு தொகை தேவைப்படும் என்று கணக்கிட்டு சொல்லும்படி கேட்டார்.  

உடனே இந்திரன் மற்ற நிர்வாகஸ்தர்களையும் அழைத்து திருமணத்திற்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்று ஒரு பட்டியல் இட்டார்.  பிறகு அனைவரையும் கலந்து  ஒரு கோடியே பதினான்கு லட்சம் வராகன். (வராகன் என்பது 4 கிராமுக்கு கொஞ்சம் அதிகம்) தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டது.  

குபேரன் உடனே அந்த தொகையை கொண்டு வந்து இந்திரனிடம் கொடுத்துவிட்டான்.
பணம் வந்துவிட்டது.  அப்புறம் என்ன?  ஜாம் ஜாம் என்று கல்யாணம் நடத்த வேண்டியதுதானே!

ஸ்ரீநிவாசன் தாய் வகுளமாலிகாவுடன் விநாயகரை வணங்கி எந்தவித தடையும் இல்லாமல் திருமணம் நடக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு, ஆதி வராகரையும் தரிசனம் செய்து கொண்டு, மணப்பெண்ணின் இருப்பிடமான நாராயணபுரத்துக்கு புறப்பட்டார்.  அவனுடன் பிரம்மா சரஸ்வதியுடன் அன்ன வாகனத்திலும், தேவேந்திரன் இந்திராணி ஐராவதத்திலும் புறப்பட்டனர்.  சிவபெருமான், உமாதேவி, வள்ளி தெய்வானையுடன் முருகனும், முதற்கடவுளான விநாயகரும் தத்தம் வாகனங்களில் புறப்பட்டனர்.  

அவர்களுடன் சப்த ரிஷிகளும், அஷ்டதிக்கு பாலகர்களும், தேவர்கள் அனைவரும் சென்றனர்.இப்படி புறப்பட்ட விருந்தினர் அனைவரையும், வரவேற்று அவர்களை நாராயணபுரத்துக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் அழைத்துவர முருகப்பெருமானை பெருமான் கேட்டுக்கொண்டார்.  

அங்கே பத்மாவதியின் தந்தை ஆகாசராஜன் உறவினர்களுடன் சென்று மாப்பிள்ளையை அழைத்து வந்து புதிய ஆடை, ஆபரணங்கள் அளித்து வரபூஜை செய்து மணமேடைக்கு அழைத்துச் சென்றான்.

முப்பது முக்கோடி தேவர்களும் சூழ்ந்து நிற்க, ஸ்ரீனிவாசனும் பத்மாவதியும் ஊஞ்சலில் ஆடி, பாலாலே கால் அலம்பி  பட்டாலே துடைத்து, பால் பழம் அருந்தி, வண்ண உருண்டைகளால் திருஷ்டி கழித்து, பத்மாவதியின் குவிந்த கையை ஸ்ரீனிவாசப் பெருமான் பற்றி அழைத்துச் சென்று மணமேடையில் விரித்திருந்த பட்டுப்பாயில் அமர்ந்தார். பிறகு வசிஷ்டர் மந்திரம் ஓத, ஆகாச ராஜன் மாப்பிள்ளையின் திருப்பாதங்களை அலம்பி,  தாரிணிதேவி கங்கை நீரை விட்டு பத்மாவதியை தாரை வார்த்து கொடுத்தார்கள்.  

அதன்பின், வேத கோஷங்கள் ஒலிக்க, மங்கள வாத்தியங்கள் முழங்க, கெட்டி மேளம் கொட்டிட, அனைவரும் அட்சதை புஷ்பங்கள் துாவ, ஸ்ரீனிவாச பெருமான் பத்மாவதி தாயாருக்கு திருமாங்கல்யம் அணிவித்தார்.  பிறகு பாணி கிரகணம், சப்தபதி, அம்மி மிதிப்பது அனைத்தும் முறைப்படி வேத வழிகாட்டுதல்படி பெருமாள் செய்தார்.
இந்த காட்சியை பார்த்தவர்கள் என்ன புண்ணியம் செய்தனரோ!

அக்னி பகவான் சமையல் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தான்.  சமையல் அறையில் ஏராளமான காய்கறிகளும், பலவிதமான பட்சணங்களும் மலைபோல் குவிக்கப்பட்டிருந்தன.  பிரம்மா மாப்பிள்ளை ஸ்ரீனிவாசனிடம் வந்து, சமையலை யாருக்கு முதலில் நிவேதனம் செய்வது என்று ரகசியமாய் கேட்டார்.  

அதற்கு பெருமாள், ‘‘அகோபிலத்தில் இருக்கும் லட்சுமி நரசிம்மனுக்கு நிவேதனம் செய்யப்பட்டு, பிறகு அனைவரும் உணவருந்தட்டும்’’ என்றான்..
அப்படியே பிரம்மா நரசிம்மனுக்கு நிவேதனம் செய்தார்.  நிவேதனம் செய்யப்பட்ட அன்னத்தை, நரசிம்மன் தன் திருக்கரங்களில் எடுத்து சாப்பிட்டான். அந்தசமயம்  மாப்பிள்ளை கோலத்தில், மணமகள் பத்மாவதியுடன் பெருமாள் ஸ்ரீநிவாசன் நரசிம்மனை வணங்கினார்.  
சரியாகப் பார்த்தால், இங்கே ஆராதிப்பவன், ஆராதிக்கப்படுபவன் எல்லாம் ஒருவனே.  தன்னைத்தானே ஆராதித்துக்கொண்டான் பெருமாள்.
மாங்கல்ய பலத்தை கொடுப்பவன் நரசிம்மன்.  அவனை கல்யாணக் கோலத்தில் சென்று வணங்கினால் அவர்கள் நீண்ட ஆயுளுடன், சகல போகங்களுடன் நிறைவான வாழ்க்கை பெறுவார்கள்.  
நரசிம்மனின் நட்சத்திரம் சுவாதி.  இந்த சுவாதி நட்சத்திரத்தில் திருமணம் செய்தால் மணப்பெண் புகுந்த வீட்டில் ஏகபோகமாக மகிழ்ச்சியாக வாழ்வாள்.
பத்மாவதி கல்யாணத்தில் நிச்சயமாக தெரிந்து கொள்ள வேண்டிய உயர்ந்த விஷயம் நரசிம்மன் ஆராதனையே.  
இன்னொன்றும் தெரிந்துகொள்ள வேண்டும்.  பெருமாள் ஸ்ரீனிவாசன் மணந்து கொள்வது திருமகள் மகாலட்சுமியை அல்ல.  அவள் எங்கோ கரவீரபுரத்தில் தவம் செய்து கொண்டிருக்கிறாள். பத்மாவதி மானிடப்பெண்.
இது இப்படி நடந்து கொண்டிருக்கும் பொழுது, சூரிய பகவான் கரவீரபுரத்தில் இருக்கும் திருமகள் மகாலட்சுமியை திருமலைக்கு அழைத்து வந்தான். ஆனால், மகாலட்சுமி பெருமான் ஸ்ரீனிவாசன் பத்மாவதியை மணந்ததால்  கோபத்தில் இருந்தாள்.  
திருமகள் வந்ததில் மகிழ்ச்சியடைந்த ஸ்ரீனிவாசன், அவளிடம் ராமாவதாரத்தில் ராவணன் அழிய காரணமாக அமைந்தது  இவள் சாபம்தான் என்று சொல்லி, பத்மாவதியின் பூர்வ ஜென்ம வரலாறறை கூறினான்.  திருமகளும் சமாதானமானாள்.
தொடர்ந்து, ‘‘தேவி, பிருகு முனிவர் என் மார்பில் உதைத்ததால் என் மார்பு புனிதமாயிற்று.  ஆகையால், நீ உன் இடமாகிய வலதுமார்பில் இருந்துகொள்.  பத்மாவதி என் இடது மார்பில் வசிக்கட்டும்’’ என்றார். அதை மகிழ்ச்சியுடன் இருவரும் ஏற்றனர்.  
பிறகு மகாலட்சுமியிடம், அவள் வைகுண்டத்தை விட்டு சென்ற பிறகு நடந்த அனைத்தையும் சொன்னான்.  அத்துடன் தான் குபேரனிடம் கடன் பெற்றதையும் கூறினான். அதற்கு மகாலட்சுமி, ‘‘தங்களுக்கு இதெல்லாம் ஒரு கடனா? தாங்கள் நினைத்தால் பொன்மழை பொழியுமே‘‘ என்றாள்.
‘‘நான் நினைப்பது இருக்கட்டும். செல்வத்திற்கு அதிபதியான நீ என்னுடன் இருக்கும்பொழுது இந்த கடன் பெரிதல்ல”,
இப்படி ஸ்ரீநிவாசன் - பத்மாவதியின் திருமணம் முடிந்து அந்தக் கோலத்தில் அவர்களை கண்ட பக்தர்கள் இப்படியே இவர்கள் எப்பொழுதும் இருந்து நமக்கு காட்சி தந்து அருள்புரிய  பிரார்தித்தனர்.  
 பக்தர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய வெங்கடேச பெருமாள் ஆகாசராஜனை அழைத்து, ‘‘நாங்கள் இனி இங்கே சிலை உருவத்தில் இருக்கப்போகிறோம்.  எங்களுக்காக ஒரு கோயிலை கட்ட வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.
அதன்படியே ஆகாசராஜன் அழகிய கோயிலை அங்கே திருமலையில் நிர்மாணித்தான். திருவேங்கடத்தான் அங்கே சிலை ரூபமாக நின்று கொண்டான்.  
இப்பொழுது நாம் சென்று கொண்டிருப்பது அந்தக் கோயிலுக்குத்தான்.
மகாலட்சுமி, அலர்மேல் மங்கைத் தாயாராக கீழ்த்திருப்பதியில், திருச்சானுாரில் விக்கிரக உருவாக தனிகோயிலில் குடிகொண்டாள்.
திருவேங்கடத்தானை தரிசிக்க வரும் பக்தர்கள், கீழேயுள்ள தாயாரை தரிசித்து மேலே செல்ல வேண்டும். தாயாரும் கருணையுடன் மேலே வருபவர்களை பற்றி அவர்கள் போவதற்குள், நாராயணனிடம் சொல்லி அவர்களுக்கு அருள்புரிய கேட்டுக்கொள்வாள்.  பெருமானும் அப்படியே பக்தர்களுக்கு அருள்புரிவான்.  
ஸ்ரீனிவாசப் பெருமான் குபேரனிடம் கல்யாணத்திற்காக வாங்கிய கடனுக்கு இன்னுமும் வட்டி மட்டுமே கட்டிக்கொண்டிருக்கிறார்.  இவ்வளவு வருமானம் உனக்கு வருகிறதே அசலை கொடுத்து கடனை அடைத்து விடலாமே என்று கேட்டதற்கு, பரந்தாமன், ‘‘நேர்மையாக சம்பாதித்து அதில் இருந்து எனக்கு செலுத்தும் காணிக்கையை மட்டுமே நான் உபயோகித்து கொள்கிறேன். நேர்மையற்ற வழியில் பெற்று எனக்கு செலுத்தினால் அதை நான் உபயோகிப்பது இல்லை. அதனால் என்னுடைய உண்மையான வருமானம் வெளிப்பார்வைக்கு தோன்றுவதை விட மிகக் குறைவு’’ என்றார்.  
ஸ்ரீநிவாசன் பத்மாவதி தாயார் கல்யாண வைபோகத்தை கேட்பவர்களின் குடும்பம் தழைக்கும். அவர்கள் இல்லத்தில் திருமணங்கள் நிறைய நடக்கும்.
கோவிந்தா! கோவிந்தா!!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar