Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சுக்ரீவனின் நியாயம்
 
பக்தி கதைகள்
சுக்ரீவனின் நியாயம்


விபீஷணன் என்றால் அச்சம் விளைவிக்காதவன் என்று பொருள். வீடணன் என்று கம்பர் இவனை அழைக்கிறார். அந்த விபீஷணன் தன் அண்ணன் ராவணனின் அதர்ம செயலால் வெறுப்புற்று அவனை விட்டு நீங்கி, ராமனிடம் தஞ்சமடைய வந்துள்ளான். உண்மையாகவே ராமனின் பராக்கிரமம் அவனுக்குத் தெரியாது என்றாலும், ராவணனை எதிர்ப்பதில் அவனுக்குத் தான் உதவலாம் என்று கருதித்தான் வந்தான். மாயங்கள் புரிவதில் வல்லவர்களான ராவண குடும்பத்தாரில் ஒருவன் என்பதால், அவனால் அந்த சக்தியால் வானில் பறந்து, எளிதாகக் கடலைக் கடந்து ராமன் இருப்பிடம் வந்து சேர முடிந்தது. விபீஷணனின் விருப்பம் நிறைவேற அவனுக்கு உறுதுணையாக இருக்க அவனோடு நான்கு அமைச்சர்களும் உடன் வந்தனர்.
கடற்கரையில் இறங்கிய அவர்களைப் பார்த்து வானரப் படைகள் கூச்சலிட்டனர். அவர்கள் வந்த திசையை வைத்து அவர்கள் ராவணனின் ஆட்கள் என ஊகித்து தாக்க முனைந்தனர். அப்போது அனுமன் அங்கு ஓடோடி வந்தான். விபீஷணனை அடையாளம் கண்டு கொண்டான். தனக்கு ஆதரவாக ராவண சபையில் வாதாடியவன் அல்லவோ இவன்! சீதையைக் கடத்தியது முறையற்றது என தன் அண்ணனுக்கே போதித்தவன் அல்லவா! இப்போது இங்கே எதற்காக வந்திருக்கிறான்?
வானரர்களை விலக்கி விட்டு விபீஷணனுக்கு வணக்கம் தெரிவித்தான் அனுமன். அவனைக் கண்டதும் நட்பு பொங்க மலர்ந்தான் விபீஷணன். ‘‘நான் ஸ்ரீராமனிடம் தஞ்சமடைய வந்திருக்கிறேன். சீதையை மீட்க சில உபாயங்களை அவருக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். அவர் என்னை ஏற்பாரா’’ என கண்களில் நீர் பனிக்கக் கேட்டான்.
‘நிச்சயமாக’ என பதிலளித்தான் அனுமன். ‘நீதியும், நேர்மையும் எவரிடத்தில் உள்ளதோ அவர்கள் அனைவரும் ஸ்ரீராமனின் அரவணைப்புக்கு உட்பட்டவர்கள்தான். கவலைப்படாதீர்கள். வாருங்கள், உங்களை அழைத்துச் செல்கிறேன்’’ என ஆதரவாகக் கூறினான்.
அதன்படி ராமனிடம் சென்று விபீஷணனின் வருகையையும் அவனது நோக்கத்தையும் தெரிவித்தான். சொல்லின் செல்வன் சொன்ன பிறகு மாற்றுக் கருத்துக்கு இடமேது? ராமன் உடனே விபீஷணனை அழைத்து வரச் சொன்னான்.
அப்போது சுக்ரீவன், ‘ராமா, அனுமனின் அனுமானப்படி இவன் நல்லவனே ஆனாலும், அரக்கன் என்பதை மறக்க வேண்டாம். ராவணனின் தம்பி எந்த வகையிலும் அரக்க குணத்தைத் துறக்காதவனாகவே இருப்பான். ஆகவே அவசரப்பட்டு முடிவு எடுக்காதீர்கள்’ என கேட்டுக் கொண்டான்.
‘பதட்டப்பட வேண்டாம் சுக்ரீவா. அவன் வரட்டும். அவனது பேச்சிலும், முகம், உடல் பாவங்களிலும் எத்தகையவன் என்பது அவனே அறியாமல் வெளிப்பட்டு விடும். அப்போது முடிவு செய்து கொள்ளலாம். இவன் ராவணனின் துாதுவனாகக் கூட இருக்கலாம், அவன் ஏதேனும் செய்தி சொல்லி அனுப்பியிருக்கலாம், அது பரஸ்பர நன்மை தருவதாகவும் அமையலாம் இல்லையா?’ என்றான் ராமன்.
‘இருந்தாலும் அண்ணனுக்கு துரோகம் இழைத்து விட்டு நம்முடன் சேர்ந்து கொள்வதும், அவ்வாறு சேர்ந்து கொண்டு அவனுக்கு எதிராகவே செயல்படுவதும்… எனக்கு ஏற்புடையதாக இல்லை ராமா’
உடனே பக்கத்தில் இருந்த லட்சுமணன் சற்று சப்தமிட்டு சிரித்தான். வாலி என்ற அண்ணனைக் கொலை செய்த தம்பி சுக்ரீவன், ‘அண்ணனுக்கு துரோகம்’ என்று சொல்கிறான்’ என்ற கேலி அந்த சிரிப்பில் இருந்தது.  
‘உன் மனம் எனக்குப் புரிகிறது லட்சுமணா. எனக்கும் வாலிக்கும் இருந்தது, எங்கள் இருவருக்குமான கருத்து வேறுபாடு. இதனால் சமுதாய பாதிப்பு எதுவும் இல்லை. எங்களுக்கு சம்பந்தம் இல்லாத மூன்றாம் குடும்பத்தில் நாங்கள் எந்தக் குழப்பமும் விளைவிக்கவில்லை. உண்மையை உணர்ந்து கொள்ளாமல், தன் கற்பனைதான் சரி என்ற அகம்பாவத்தில் என்னை புரிந்து கொள்ளாதிருந்தான் என் அண்ணன் வாலி. மாயாவியுடன் அவன் மேற்கொண்ட போரில் குகைக்குள் அவனை விரட்டிச் சென்ற வாலி, இருபத்தெட்டு மாதங்களாக குகையிலிருந்து வெளியே வராததால் அவன் மாயாவியால் கொல்லப்பட்டிருப்பான் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால் வாலியின் வலிமை தெரிந்த நான் அவ்வாறு நினைக்கவில்லை. வாலி வெற்றிவாகை சூடி வருவான் என்று நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால் நாள் மாதங்களாகக் கடந்ததால், பிற அனைவரும் வாலியின் ஆற்றலைக் குறைவாகவும், மாயாவியின் பலத்தைப் பெரிதாகவும் கருதியதோடு, வாலியை வீழ்த்திவிட்டு அந்த மாயாவி குகையிலிருந்து வெளியே வருவானானால் பெருந்துன்பம் நேரும் என்றும் கற்பனை செய்து கொண்டனர். அதனால் குகை வாயிலை பெரிய பாறை கொண்டு அடைத்தனர். அப்போதும் நான், ‘என் அண்ணன் வாலி வென்று வருவான்’ என்றேன். யாரும் கேட்கவில்லை; என்னை அரசனாகவும் அமர்த்தி விட்டார்கள்.
ஆனால் நான் எதிர்பார்த்ததுபோல குகையிலிருந்து வெளியே வந்த வாலி, நான்தான் அவனுக்கு துரோகம் இழைத்து விட்டதாகக் கருதி என்னை விரட்டி அடித்தான். நான் எவ்வளவோ சொல்லியும், நடந்தவற்றைப் பிறர் விளக்கியும் அவன் சமாதானம் அடைய வில்லை. என் மீது தீராப் பகை கொண்டு என் மனைவியையும் கவர்ந்து சென்றான். வேறு வழியில்லாமல் அவன் நுழைய முடியாத ருசிய முக மலையில் ஒளிந்து கொண்டேன்.
அப்போதுதான் உங்களை அனுமன் எனக்கு அறிமுகப்படுத்தினான். நான் மனைவியைப் பறி கொடுத்தது போலவே ராமனும் வேதனைக்குள்ளாகி இருக்கிறான் என தெரிந்து அனுதாபப்பட்டேன். ஆனால் ராவணனை அழித்து சீதையை மீட்க வேண்டும் என்றால், முதலில் அவனுக்கு ஆதரவளிக்கக் கூடியவர்களை வெட்டி விட்டுவிட்டால் அவனது பலம் குறையும் என்றும் ஊகித்தேன். அந்த வகையில் ராவணனின் நண்பனும், ஆபத்து காலத்தில் பரஸ்பரம் உதவுவதாக ஒப்பந்தம் செய்து கொண்டவனுமான வாலி, சீதை மீட்பில் பெரும் தடையாக இருப்பான் என்று யோசித்தேன். ஆகவே ராவணனை எதிர்க்க வேண்டுமென்றால் முதலில் வாலி, வதம் செய்யப்பட வேண்டும், அப்படிச் செய்தால் அது ராமனுக்கு உதவும் ஓர் உத்தியாகவே இருக்கும் எனத் திட்டமிட்டேன். அதன்படி, தனக்கு எதிராகப் போரிடுபவரின் பலத்தில் பாதியை ஈர்த்துவிடும் வரம் பெற்ற வாலியை மறைந்திருந்து கொல்லுமாறு ராமனைக் கேட்டுக் கொண்டேன். அப்படியே ஆயிற்று.
‘உண்மையில், வாலியைக் கொல்வதில் என் சுயநலம் இருக்கிறது என்பதைவிட ராமனுக்கு ஆதரவு என்ற எண்ணத்தில்தான் நான் செயல்பட்டிருக்கிறேன். இப்படி இருக்கையில் ராவணனின் தம்பியாகிய விபீஷணனை நான் மறுப்பதில் என்ன தவறு இருக்கிறது? இவனால் ராமனுக்கு எந்தத் துன்பமும் நேர்ந்துவிடக் கூடாது அல்லவா?’
சுக்ரீவனின் பேச்சு எல்லோரையும் கண்கலங்க வைத்தது. வாலி மீது அவனுக்குப் பகைதான் என்றாலும், அவன் இறப்பு ராமனுக்கு உதவும் என்ற இன்னொரு கோணமும் இருந்திருக்கிறது!
அப்போது அனுமன், ‘சுக்ரீவா, இலங்கையில் நான் பார்த்த ஒரே பரிசுத்த ஆத்மா இந்த விபீஷணன்தான். தர்மத்துக்காகப் போராடும் ஒரே குரல் இவனுடையது மட்டுமே. அநீதிக்கு எதிராக உயரும் ஒரே கை இவனுடையது. இவன் பண்பாளன், அதனால் ஸ்ரீராமனின் மனதுக்கும் நெருக்கமாவான்’ என்று தான் பார்த்ததையும், அதன் அபிப்ராயத்தையும் தெரிவித்தான்.
இவர்கள் பேசுவதைக் கேட்ட விபீஷணன், ‘என் மீது சந்தேகம் எழுவதில் நியாயம் இருக்கிறது. ‘குலத்தளவே ஆகுமாம் குணம்‘ என்பது போல என் பாரம்பரியம் அவ்வளவு மோசமானது. குறிப்பாக ராவணனுக்குத் தம்பியாக வாழும் இந்த காலகட்டத்தில். என் இளைய அண்ணன் கும்பகர்ணனும் உத்தமமானவனே! ராவணன் சீதையைக் கடத்தி வந்த போது அதைக் கடுமையாக எதிர்த்தான் கும்பகர்ணன். ஆனால் அவனே சீதையைத் திருப்பி அனுப்புவது மானக்கேடானது என்று தன் கருத்தை மாற்றிக் கொண்டான். ‘ஒரு நாட்டின் மீது போர் தொடுத்து பொருட்களைக் கைப்பற்றி வருகிறோம், அந்தப் பொருட்களை மீண்டும் அந்த நாட்டிற்கே திருப்பிக் கொடுப்போமா?’ என்றும் கேட்டான்.
ஆகவே இவனும் தர்மம் பிறழ்ந்து விட்டான் என்று கருதி நானாவது உங்களுக்கு எந்த வகையிலாவது உபயோகமாக இருக்க வேண்டும் என்ற ஆவலில்தான் சரணாகதி அடைய வந்திருக்கிறேன்’ என்றான் விபீஷணன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar