Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நன்மை கடைப்பிடி
 
பக்தி கதைகள்
நன்மை கடைப்பிடி


    இவ்வுலகம் நன்மை, தீமை என இரண்டும் கலந்தது தான். சில பேர் சொல்வார்கள் உலகம் ரொம்பக் கெட்டுப் போச்சு. அட அநியாயம் பெருகிப் போச்சு என்று. ஆனால் எல்லாக் காலத்திலும் இது போன்று நடைபெற்றுக் கொண்டு தான் இருந்தது. என்ன அப்போது இது போன்று சமூக வலை தளங்கள் இல்லை. எனவே தெரிய ஒருநாள் ஆகும். ஆனால் இப்போது உலகில் எந்த மூலையில் எது நடந்தாலும் உடனேயே பரவி விடுகின்றது. என்ன மாதிரியான செய்தி பரவுகிறது. உங்களுக்கே தெரியும் நல்ல செய்திகள் அல்ல. மற்ற செய்திகளே பரவுகின்றன. முன்பு ஒரு சில செய்தித்தாள்கள் இது போன்றவற்றை வெளியிடுவார்கள். இப்போது பெரும்பாலான செய்திகள் இது போன்ற அல்லாத செய்திகளே நிறைந்துள்ளன. எனவே மனித மனங்களில் ஒரு விதமான அச்சம் குடிகொண்டு விடுகிறது.
    மனிதன் நம்பிக்கையில் தான் வாழ்கிறான். எல்லா இடங்களிலும் எத்தனையோ நன்மைகள் நடக்கின்றன. அவற்றைப் பெரிதாகச் சொன்னால் மனிதனுக்கும் இத்தனை நல்லவர்களும் உலகில் இருக்கிறார்கள். நாமும் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று தோன்றும். நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையே தோன்ற விடாமல் அல்லனவற்றைப் பரப்பிக்கொண்டு இருக்கின்றனர். எனவே எல்லோரும் ஒரே கோரஸாக நல்லதெல்லாம் இந்தக் காலத்து செஞ்சா எடுபடாது. அதோ பாரு! அநியாயம் பண்றவன் ஆடி கார்ல போறான். நல்லவன் நடந்து போறான்னு சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் உண்மை என்ன? நல்லவனிடம் உள்ள நிம்மதி ஆடி காரில் போகிறவனிடம் இருக்கிறதா? என்பது ஐயமே.
    இன்றைய சமுதாயம் வாழ்க்கை என்றாலே பொருளாதார வசதி என்ற போக்கில் போய்க் கொண்டிருக்கிறது. ஒருவன் நன்றாக இருக்கிறானா என்பதை அவனின் பொருளாதார வசதிகளைக் கொண்டே அளவிடுகிறார்கள். அந்தப் பொருள் எப்படி வந்தாலும் சரி என்கிறார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பு கூட தவறாகப் பொருளை ஒருவன் சேர்த்தால் அவன் காசு என்ன நல்ல காசா என்று சொல்லும் வழக்கம் இருந்தது. ஆனால் இப்போது எப்படியோ அவன் என்ன பண்ணியோ சம்பாதிச்சிட்டான். உனக்கு கெட்டிக்காரத்தனம் இருந்தா நீயும் சம்பாதி.... எனப் பேசத் தொடங்கிவிட்டார்கள்.
    ஈதல் அறம், தீவினை விட்டு ஈட்டல் பொருள் என்பாள் ஒளவை. எனவே பொருள் செய்வதற்கு நல்வழியையே பயன்படுத்த வேண்டும். ஏதோ சிலர் கூறுவதை வைத்து நன்மை வெற்றி பெறாது, தீமை தான் உலகாளும் என்ற செய்தியை நாம் கட்டாயமாக ஏற்கக் கூடாது. கவிச்சக்ரவர்த்தி கம்பர், சுந்தர காண்டத்தில் இலங்கிணி மூலமாக அனுமனிடம் உறுதிபடக் கூறுகின்றார். அறம் வெல்லும், பாவம் தோற்கும் என்று அவள் மேலும் கூறுகின்றாள். ஐயனே! பிரம்ம தேவன் சொன்னபடியே நடந்துவிட்டது.
    அறம் வெல்லும், பாவம் தோற்கும் என்பதை இன்னமும் சொல்ல வேண்டுமோ? நீ நினைப்பன யாவும் நிறைவேறும். உன்னால் செய்து முடிக்க முடியாதது எதுவும் இல்லை. பொன்னான இந்நகருக்குள் செல்க என அனுமனை வாழ்த்தி விட்டுப் போனாள்.
    இதையே தான் மகாகவி பாரதி பாஞ்சாலி சபதத்திலே தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும், மீண்டும் தர்மம் வெல்லும் என்று சொன்னார். நன்மை என்பது தான் அறம். தீமை என்பது பாவம். எனவே இவ்வுலகில் நாம் நன்மையை விதைத்துக் கொண்டே போக வேண்டும். நன்மை செய்வதற்குப் பணம் தான் வேண்டும் என்பதில்லை. வாய் வார்த்தையால் கூட நன்மை செய்யலாம். பஸ் ஸ்டாப்பில் வயதான பெரியவர் தட்டுத் தடுமாறி பெயர்ப்பலகையை வாசிக்க முற்படும் போது இந்த ஊருக்குத் தான் பஸ் போகிறது என அவரிடம் தெரிவித்து உதவலாம். இது போன்று நிறைய உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
    அந்தக் காலப் புத்தகங்களில் இது போன்ற செயல்கள் நன்மை செய்ய வேண்டும் என்னும் அடிப்படையில் நிறைய வந்து கொண்டேயிருந்தன. அழகாக ஓடுகிற ஆறு அதனருகில் குளிர் தரும் சோலையாய் அழகிய மரங்கள். இந்த மரத்தில் நிறைய எறும்புகள் இருந்தன. மேலும் கீழுமாய் ஊர்ந்து கொண்டேயிருந்தன. அதில் ஒரு எறும்பு தவறிப் போய் ஆற்று நீரில் விழுந்து தத்தளித்தது. உடனே அருகில் இருந்த மரக்கிளையிருந்த புறா ஒன்று வேகமாகப் பறந்து சிறிது துாரத்திலிருந்த மரத்தில் அமர்ந்து சில இலைகளைப் பறித்துப் போட்டது. அதில் ஒரு இலை மேலே ஏறி எறும்பு பத்திரமாக கரை வந்து சேர்ந்தது. நன்றியுடன் புறாவைப் பார்த்தது. அதே சமயம் இந்த எறும்பின் அருகில் இருந்த வேடன் ஒருவன் புறாவை நோக்கி அம்பெய்தத் தயாரானான். உடனே எறும்பு இதனைப் பார்த்தது. அவன் காலைக் கடிக்கவே அம்பு இலக்கு மாறி ஆற்றுக்குள் வீழ்ந்தது. புறா பறந்தோடி விட்டது. புறாவின் நல்ல எண்ணம், நல்ல செயல் அதன் உயிரைக் காப்பாற்றிவிட்டது. புறா எதிர்பார்த்து எறும்புக்கு அந்த உதவியைச் செய்யவில்லை. ஆயினும் அந்த நன்மை அதன் உயிரையே காத்துவிட்டது.
    எனவே நாம் நன்மைகளையே விதைத்து வர வேண்டும். குறிப்பாகப் பெற்றோர்கள் குழந்தைகளிடம் பிறருக்கு உதவும் குணத்தை மேம்படுத்த வேண்டும். பேருந்துகளில் பெரியவர்கள் வந்தால் இடம் தருதல், சாலைகளை வயதானவர்கள் கடக்க உதவுதல், பொது இடங்களில் வயதான பெரியவர்கள் வந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குதல், உடற்குறை உள்ளவர்களுக்கு இயன்ற அளவில் உதவிகளைச் செய்தல், விலங்குள், பறவைகளுக்கு இடையூறு செய்யாமல் இருத்தல் போன்றவற்றை அடிக்கடி அவர்களிடம் அன்பானவர்களாகவும், இதயம் கசிந்தவர்களாகவும் அவசியம் வளர்த்தாலே போதும். அவர்களே வலியச் சென்று நன்மை செய்வார்கள்.
    பரபரப்பான ஒரு நெடுஞ்சாலை, ஒரு மிகுந்த வசதியுள்ள பெண்மணி. காரை ஓட்டி வருகிறாள். திடீரெனக் கார் நின்றுவிடுகிறது. கதவைத் திறந்து வெளியே வந்து நிற்கிறாள். நெடுஞ்சாலை என்பதால் யாரும் நிற்காமல் கண் இமைக்கும் நேரத்தில் கடந்து போய்விடுகிறார்கள். உடல் சோர்வு, மனச்சோர்வாய் மாறிடத் தவித்து நிற்கிறாள். சிறிது தூரத்தில் ஒருவர் நடந்து வருகிறார். அழுக்கான உடையும், மேனியும். ஒரு புறம் பயமாக இருக்கிறது இவளுக்கு. ஆயினும் தைரியத்தை வரவழைத்து கொண்டு நிற்கிறார்.
    அருகில் வந்தவர் அம்மா ஏதேனும் உதவ வேண்டுமா? எனக் கேட்கிறார். தயங்கியவாறே கார் நின்று போனதைச் சொல்கிறார். உடனே அவர் காரின் முன் பகுதியைத் திறந்து, சில நிமிடங்களில் காரை மீண்டும் இயங்கச் செய்கிறார். பணக்காரப் பெண்ணுக்கு மிகுந்த மகிழ்ச்சி. உடனே அவரது பையிலிருந்து ஒரு பெரிய தொகையை எடுத்து, அந்தப் பணிக்குப் பரிசாக மகிழ்வுடன் தருகிறார். அவர் வாங்க மறுத்து விடுகிறார். காரணம் கேட்கிறார் பணக்காரப் பெண். அவர் சொன்னார். உதவி தேவைப்படும் சூழலில் இருந்த உங்களுக்கு உதவுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் எனக்கு அளிக்க நினைத்த இந்தத் தொகையை அடுத்து நீங்கள் சந்திக்கும், உதவி தேவைப்படும் இடத்தில் உள்ள ஒருவருக்கு என் பெயரான ராஜேஷ் அன்புக்காக எனக்கூறி அளியுங்கள். அது போதும் என்கிறார். பணக்காரப் பெண்ணும் மகிழ்ச்சியுடன் நன்றி கூறி விடைபெறுகிறார்.
    சிறிது துாரம் சென்றவுடன் அருகில் உள்ள ஓட்டலுக்குச் செல்கிறாள். அங்கு இவள் டேபிளில் உணவு பரிமாறப்படும் இடத்திற்கு ஒரு பெண் வருகிறாள். அவள் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறாள். இருப்பினும் அவளது உபசரிப்பு, உணவு பரிமாறிய விதம், தள்ளாத சூழலிலும் அவளிடம் உள்ள சுறுசுறுப்பு ஆகியன இவளை வியக்கச் செய்கின்றன.
    இப்போது இவள் ராஜேஷ் தனக்கு உதவியதை மனத்தில் கொண்டு அன்புத் தோழியே! எனது இக்கட்டான சூழலில் ஒருவர் உதவினார். அவரின் அன்பு என்னை வியக்க வைத்தது. எனவே அவரின் அன்பு அடையாளமாக இதனை ஏற்றுக் கொள்ளவும் எனக் கூறி ராஜேஷ்க்குத் தான் அளிக்க நினைத்த தொகையை டிப்ஸ் ஆக அந்த மறைக்கப்பட்ட அட்டையில் சிறிய துண்டுச்சீட்டுடன் வைத்து விட்டுச் செல்கிறாள். கர்ப்பிணி மகிழ்ந்து கடவுளுக்கு நன்றி கூறி இரவில் வீட்டிற்குச் சென்றாள். தனது கணவரிடம் ராஜேஷ்! கவலைப்படாதீங்க! பிரசவச் செலவிற்கு கடவுளாகப் பார்த்து ஒரு பெண்மணி மூலம் நமக்குத் தேவையான பணத்தைக் கொடுத்திருக்கிறார் எனக்கூறி மகிழ்ந்தாள். தான் சாலையோரம் உதவிய பெண்மணி தான் என ராஜேஷிக்கும் தெரியாது எனினும் நன்மை எங்கு எப்போது விதைத்தாலும் நம்மை வந்து சரியான நேரத்தில் சேரும்.
    காலையில் பிறருக்குத் துன்பம் செய்தால், அத்துன்பம் திரும்பி மாலையில் வந்து சேரும் என்ற வள்ளுவத்தை பிறருக்கு நம்மை செய்தாலும் வந்து சேரும் எனப் பொருத்திப் பார்க்கலாம் அல்லவா!
    மனிதத்தின் அடையாளம் நன்மை செய்வது, விலங்குகள் கூட தங்களால் ஆன உதவிகளைச் செய்கிறது. அறம் வெல்லும் என்ற உறுதியுடன் பயணப்படுவோம். மறுப்பவர்கள் இன்று வரை தாங்கள் எடுக்கும் திரைப்படங்களில் ஏன் கடைசியில் கதாநாயகனே வெல்வதாகக் காட்டுகிறார்கள்? அறத்தில் நம்பிக்கையில்லை எனில் வில்லவன் வெல்வது போல் காட்டிடலாமே! முடியாது. ஏனெனில் ஒவ்வொரு தனிமனிதன் உள்ளத்திலும் ஆழப்பதிந்து உள்ள செய்தி தர்மம் தலை காக்கும் என்பது தான். நன்மை செய்வதே மனிதநேயப் பண்பாகும். நன்மை கடைப்பிடிப்போம். நலம் யாவும் பெறுவோம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar