Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பகைவனுக்கும் அருளும் பண்பாளன்
 
பக்தி கதைகள்
பகைவனுக்கும் அருளும் பண்பாளன்


விபீஷணன், தங்களில் ஒருவனாக ஏற்றுக் கொள்ளத் தக்கவன் என்பதை ராமன் பரிபூரணமாக உணர்ந்தான். அதையே அவனிடம், ‘உன்னை என் ஏழாவது சகோதரனாகக் கருதுகிறேன். குகன் ஐந்தாமவன், இதோ இந்த சுக்ரீவன் ஆறாமவன், நீ ஏழாம் சகோதரன்’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டான்.
கண்களில் நீர் பெருக, தன் பணிவான வணக்கத்தைத் தெரிவித்த விபீஷணன், ‘ராவணனின் பலமும், பலவீனமும் எனக்குத் தெரியும். அவனுடைய படைபலமும் அதன் வீரியமும், வீச்சும் பிரமாண்டமானது. அவ்வளவு சுலபமாக அவனை வெற்றி கொண்டுவிட முடியாது. அவனுக்கு முன்னே அணிவகுத்து நிற்கும் அரக்கர் படையினர் எண்ணிக்கை அளப்பறியது. அவனுடைய தளபதியரும் நுாற்றுக் கணக்கானோர். ஆனால் அங்கே எல்லா சைன்ய பலமும் இருந்தும், தர்ம பலம் இல்லாததால் அதெல்லாம் வீணாகப் போகின்றன’ என்று வருத்தத்துடன் சொன்னான்.
விபீஷணனின் வழிகாட்டலில் அடுத்தடுத்து செயலாற்ற ராமன் தீர்மானித்தான். ஏற்கனவே சுக்ரீவன் லட்சக்கணக்கில் தன் வானரப் படையினரைத் திரட்டிவிட்டான். எதிர்க்கும் ஆயுதங்களும், தற்காப்பு சாதனங்களும் பெருமளவில் குவிக்கப்பட்டு விட்டன. அடுத்தது போய்த் தாக்க வேண்டியதுதான்.
ஆனால் அனுமனாலும், விபீஷணனாலும் கடலைக் கடக்க முடிந்ததுபோல ராமன் உட்பட பிற அனைவராலும் அது சாத்தியமாகுமா?
இச்சமயத்தில் விபீஷணன் முன்வந்தான்.  ‘இந்தக் கடலரசன் உதவி கிட்டினால் அது எளிதாகும். அதோடு இவன் தங்களுக்கு ஒருவகையில் உறவினன்கூட. ஆமாம், பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய உங்களுடைய மூதாதையரான சகரன் என்பவரின் மகன்கள் உருவாக்கியதுதான் இந்தக் கடல். ஆகவே கடலரசனைக் கேட்டுக்கொண்டால் அனைவரும் கடலைக் கடப்பது சாத்தியமாகும்’  என்றான்.
ராமன் பெருமகிழ்ச்சி கொண்டான். ‘இந்த அளவிலேயே நான் ராவணனை வெற்றி கொண்டுவிட்டதாக உணர்கிறேன். இப்படி ஒரு உதவியைச் செய்த விபீஷணனுக்கு பிரதி உதவியையும் இப்போதே செய்ய நான் கடமைப்பட்டிருக்கிறேன்’ என்று நினைத்து கொண்டான். பிறகு லட்சுமணனை அழைத்து, ‘இப்போதே விபீஷணனுக்கு இலங்கை மன்னனாக இங்கேயே மகுடம் சூட்டி மகிழ்வோம்’ என்றான்.
அதைக் கேட்டு அனைவரும் திகைத்தார்கள். இன்னும் ராவணனுடன் போர் புரியவில்லை, அவனை வீழ்த்தவில்லை, இலங்கையை அடிமைப்படுத்தவில்லை. விபீஷணனுக்கு எப்படி பட்டாபிஷேகம் செய்து வைப்பது? ஆனால் லட்சுமணன், ராமனின் உள்ளக் கிடக்கையைப் புரிந்து கொண்டான். அதனால் அப்போதே கடல் நீரால் விபீஷணனை நீராட்டி, பச்சிலை கிரீடம் சூட்டி ராமனின் விருப்பத்தை நிறைவேற்றினான். எதிர்பாராத இந்தப் பெருமையை உடல் சிலிர்க்க ஏற்றுக்கொண்ட விபீஷணன் ராமன் கால்களில் வீழ்ந்து நன்றியறிதலைத் தெரிவித்துக் கொண்டான்.  
பிறகு ராமன் கடற்கரையில் தர்ப்பைப் புல் விரித்து அதில் அமர்ந்து கடலரசனை நோக்கி தியானம் புரிந்தான். மூன்று நாளாகியும் கடல் அலைகூட தனக்கு சாதகமாக வீசாமல் அமைதியாகத் தன்னைப் புறக்கணிப்பதைக் கண்டு வெகுண்டான் ராமன். ‘என்னுடைய மூதாதையர் உருவாக்கியது இந்தக் கடல் என்பதால் தியானத்தில் ஆழ்ந்து உதவி கோருகிறேன். ஆனால் இப்படி அமைதியாக இருந்து என் பொறுமையை சோதிப்பதை தாங்கிக் கொள்ள முடியாது’ என்று சினம் கொண்ட ராமன் உடனே தன் வில்லை எடுத்து அம்பு விடுத்தான்.
அவ்வளவுதான், கடலுக்குள் எரிமலை வெடித்துச் சிதறியதுபோல கடல் ஆரவாரமிட்டுக் கொந்தளித்தது. பதறிப்போய் ஓடி வந்தான் கடலரசன். ‘வேண்டாம், நிறுத்துங்கள், ராமா. நீங்கள் தியானத்தில் மூழ்கியிருந்தபோதே உங்கள் கோரிக்கை என்னவென்று தெரிந்து கொண்டேன். ஆனால் எந்தவகையில் கடல் மீது வழி அமைத்து உங்கள் பயணத்துக்கு உதவ முடியும் என யோசித்துக் கொண்டிருந்தேன். அவ்வாறு செய்வதானால் என்னுள் வாழும் ஆயிரக்கணக்கான ஜீவராசிகள் பாதிக்கப்படுமே என கவலை கொண்டேன். துாயவனான உங்கள் பயணத்தால் அவற்றுக்கு அவ்வாறு துன்பம் நேருமானால் அது உங்கள் கருணை உள்ளத்துக்கு இழுக்கல்லவா? என்னை மன்னியுங்கள். இதோ இப்போதே நீங்கள் பாலம் அமைக்கலாம். உங்கள் வானர சேனையில் நளன் என்பவன் கட்டிடக்கலை வல்லுனன். அவனது திட்டப்படி என் மீது கற்களால் ஆன வீதியை உருவாக்குங்கள். அந்தப் பாறைகள் மூழ்கிவிடாதபடி, கடல்வாழ் ஜீவராசி எதுவும் பாதிக்கப்படாதபடி நான் தாங்கிக் கொள்கிறேன்.  நீங்கள் அத்தனை பேரும் என்னைக் கடந்து இலங்கைக் கரைக்குப் போகும் வரையிலும், சீதையை மீட்டு வெற்றியுடன் திரும்பும் வரையிலும், ஏன் அதற்குப் பிறகும் இந்தப் பாலம் நிரந்தரமாக நிலைத்திட நான் உறுதி தருகிறேன். அடுத்தடுத்து யுகங்கள் கடந்தாலும்,  பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்தப் பாலம் இருந்த தடத்தை பிறரும் அறியுமாறும் செய்கிறேன்’ என்று பணிந்து வேண்டிக் கொண்டான்.
ராமன் முகத்தில் புன்னகை மலர்ந்தது. உடனே நளனை அழைத்து பணிகளை மேற்கொள்ளச் சொன்னான். அவ்வளவுதான், ஆயிரக்கணக்கான வானரர்கள் ஆளாளுக்கு பொறுப்பு மேற்கொண்டு அந்தப் பணி நிறைவேற ஒத்துழைத்தனர். அந்தப் பகுதியில் ஓடியாடிக் கொண்டிருந்த அணில்களும் தம் முதுகில் மணல் சுமந்துவந்து உதிர்த்து, தம்மாலான கைங்கர்யத்தை அர்ப்பணித்தன.
விரைவில் பாலம் உருவாயிற்று. ராமன் கடலரசனுக்கு நன்றி சொல்லிவிட்டு லட்சுமணன், சுக்ரீவன், அனுமன் மற்றும் பிற லட்சக்கணக்கான வானரர்களுடன் தன் போர்ப் பயணத்தை துவங்கினான். பெருத்த ஆரவாரத்துடன் படையினர் இலங்கைக் கரையை அடைந்தனர்.
இங்கேயும் நளன் தன் கைவண்ணத்தைக் காட்டி, ராமன், சுக்ரீவன் முதலானோர் மற்றும் படையினர் தங்க உரிய பாசறைகளை உருவாக்கினான். அங்கிருந்தபடி தாக்குதலுக்குத் திட்டமிட்டனர்.
இதற்கிடையில் தன்னை ராமன் நெருங்கிவிட்டான் என்ற தகவல் ராவணனுக்குக் கிடைத்தது. ராமனுடைய மாபெரும் படை பெருங்கடலைக் கடந்து வந்துவிட்டது எப்படி என்று அவன் பெரிதும் வியப்பும், கலக்கமும் கொண்டான். கடல் மீது கற்பாலம் அமைத்து வந்தார்கள் என கேள்விப்பட்டதும் அவனுக்கு அடிவயிற்றில் அமிலம் சுரந்தது. முதல் முறையாக பயத்தை உணர ஆரம்பித்தான் அவன்.
ராமனது படைபலத்தைத் தெரிந்து கொள்ளத் துடித்தான். உடனே சுகன், சாரன் என்ற இரு அரக்கர்களை அழைத்து அவர்களிடம் வானர ரூபத்தில் செல்லுமாறும் ராமனின் படையினருடன் கலந்து ஒற்றறிந்து வருமாறும் ஆணையிட்டான். அப்படியே அவர்கள் வந்தார்கள்.
ஆனால் அவர்கள் வானர இயல்பின்றி வித்தியாசமாக நடந்து கொள்வதை விபீஷணன் கவனித்து விட்டான். அவர்கள் ராவணனின் ஏவலாட்கள் என்பதைப் புரிந்து கொண்டான். உடனே பளிச்சென்று அவர்களை எட்டிப் பிடித்து ராமன் முன் கொண்டுவந்து நிறுத்தினான். தங்கள் சுயரூபம் வெளிப்பட்டதைக் கண்டு அவர்கள் திகைத்தாலும், ராவண விசுவாசத்தால், ‘ராமா, இந்த விபீஷணனை நம்பாதே. இவன் உங்களுடன் இருந்து கொண்டே உங்களை ஒவ்வொருவராகக் கொல்லும் நோக்கத்தோடுதான், அதாவது ராவணனின் யோசனையின் பேரில்தான் வந்திருக்கிறான். இதை சொல்லி எச்சரிக்கவே நாங்கள் வந்திருக்கிறோம்’ என்று சூழ்நிலையை திசை திருப்பப் பார்த்தனர்.  
ஆனால் ராமன் புன்முறுவலுடன், ‘எனக்கு விபீஷணனைப் பற்றித் தெரியும், ராவணனைப் பற்றியும் தெரியும். அதைப் பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். நீங்கள் இங்கே வந்தது எதற்காக? என் தரப்பில் யாரெல்லாம் இருக்கிறார்கள், எங்களிடம் உள்ள ஆயுதங்கள் என்னென்ன, எங்களை எப்படித் தாக்கினால் நாங்கள் வீழ்வோம் என்றெல்லாம் விவரம் அறியத்தானே வந்தீர்கள். தாராளமாக இந்தப் பகுதியைச் சுற்றிப் பார்க்கலாம், தேவையான தகவல்களை சேகரிக்கலாம், பாதுகாப்பாகத் திரும்பச் சென்று ராவணனை அடையலாம்’ என்று பெருந்தன்மையுடன் கூறினான். அதோடு சுக்ரீவனையும், லட்சுமணனையும் அழைத்து இவர்கள் நம்மிடையே சுதந்திரமாகச் சுற்றிவர அனுமதியுங்கள். வேண்டிய விஷயங்களைத் தெரிந்து கொண்டு செல்லட்டும்’ என்றும் ஆணையிட்டான்.
அந்த அரக்கர் மனமும் கசிந்தது. இப்படி ஒரு குணவான் இருக்க முடியுமா? எத்தனை விசாலமான மனம் கொண்டவன் இவன்! இவனுடைய மனைவியைக் கவர்ந்ததுமில்லாமல், அவள் தன்னைச் சிறிதும் விரும்பவில்லை என்று தெரிந்தும் விடுவிக்காமல் போர் என்ற நிலைக்கு ராவணன் வந்துவிட்டானே என்று மனதிற்குள் குமைந்தனர். ஆனாலும் அவன் தங்கள் மன்னன் என்பதால், அவன் இட்ட கட்டளையை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் இருவரும் ராவணனிடம் சென்று நடந்ததையெல்லாம் விவரித்தனர்.
(தொடரும்)   


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar