Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நோய்க்கு இடம் கொடேல்
 
பக்தி கதைகள்
நோய்க்கு  இடம்  கொடேல்


காலை வாக்கிங்ல சந்திக்கிற நண்பர்கள் கேட்டுக்குற விஷயம் இது தான். உங்களுக்கு சுகர் எவ்வளவு இருக்கு... பி.பி. எவ்வளவு இருக்கு... கொலஸ்ட்ரால் இருக்கா... இது போன்றவை தான் சமீபத்திய கேள்விகள். நம் முன்னோர்கள் சாப்பிட்டவுடன் வெற்றிலை பாக்குப் பெட்டியை எடுத்து வைத்துக் கொண்டு வெற்றிலை போடுவது போல, இப்பொழுது ஒவ்வொருவரும் ஒரு மருந்து, மாத்திரைப் பெட்டியுடன் அலைந்து கொண்டிருக்கிறோம். இதில் வாட்ஸ் ஆப், பேஸ்புக் இவற்றைப் பார்த்து வேறு ஆளாளுக்கு மருத்துவம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இன்னும் சிலபேர் இருக்கிறார்கள்... டாக்டரிடம் போனவுடனேயே டாக்டர் ப்ளட்டெஸ்ட் எடுத்துப் பார்த்திடலாமா? ஒரு ஸ்கேன் போட்ருவோமா? என்று இவர்களே மருத்துவம் படித்தது போல ஆலோசனைகளை அள்ளி வீசுவார்கள். சிலர் மருந்துக்கடைக்குச் சென்று எனக்கு ரெண்டு நாளா முடியல. இந்த மாத்திரை எல்லாம் கொடுப்பா? என்று கேட்டு வாங்குவார்கள். பொதுமக்களுக்கு சமீபத்தில் அத்தனை மருத்துவ அறிவு வளர்ந்துள்ளது. ஆனால் ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் சமுதாயத்தில் நோய்களுக்குப் பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. ஆஸ்பத்திரிகளில் கூட்டம் அலைமோதுகிறது. எங்கு பார்த்தாலும் ரத்தப் பரிசோதனைக் கூடங்கள், எக்ஸ்ரே, ஸ்கேன் சென்டர்கள் எனப் பெருகி வழிகின்றன.
    ஆரோக்யமாக வாழ்ந்த மக்கள் இன்று  நோய்களை வாழ்வில் ஒரு அங்கமாகவே ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். ஏதேனும் சிறியவலி என்றால் கூட தமிழகத்திலேயே அந்தப் பாகத்தில் சிறந்த மருத்துவரை அணுகினேன் என்று சொல்வது சமுதாயப் பெருமையாகவே மாறி இருக்கிறது.     
    இதனால் தான் அவ்வை சொன்னால் “நோய்க்கு இடம் கொடேல்” என்று. இதனை சற்று ஆராய்ந்தால் நோய் வருவதற்கான வழிகளை நாம் தான் திறந்துவிடுகிறோம் என்பதே ஆகும். ஆம். இந்த உடல் என்பது கடவுளால் வழங்கப்பட்டிருக்கும் ஒரு அருமையான கருவி. இதனை சிறிய வயதிலிருந்தே நாம் முறையாகப் பேணினால் நோய் வருவதைத் தவிர்க்கலாம். நம் முன்னோர்கள் அப்படித் தான் வாழ்ந்தார்கள். உணவு, துாக்கம், தண்ணீர் குடித்தல், உடலைத் துாய்மையாகப் பேணுதல், மனதை மகிழ்வாக வைத்திருத்தல் இவை எல்லாம் ஆரோக்ய வாழ்வின் ஆனந்தமான வழிமுறைகள். ஆனால் இவற்றை இன்று சிறிதளவும் சிந்திக்காமல் நாம் தான் பெரிய கெட்டிக்காரர்கள் என்ற நினைப்பில் ஓடிக் கொண்டிருக்கிறோம். நம் முன்னோர்கள் எல்லாம் ஏதோ அறிவு குறைந்தவர்கள் என்பது போலவும், அவர்கள் சொன்னவை பின்பற்றியவை எல்லாம் மூடத்தனம் என்றும் கடந்த அரை நுாற்றாண்டாக நாம் மூளைச்சலவை செய்யப்பட்டு வருகிறோம்.
    ஹிந்து சமயம் என்பது வெறும் வழிபாட்டுச் சமயம் மட்டுமல்ல. இது வாழ்வியல் முறை. இதில் பின்பற்றப்படும் ஒவ்வொரு செயலுக்கும் அறிவியல் பூர்வமான விளக்கங்கள் உண்டு. இன்னும் அறிவியல் வளர, வளர நமது ஒவ்வொரு சடங்குகளுக்கும் நாசா போன்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் வியந்து போய் விளக்கங்களைத் தந்து கொண்டேயிருப்பார்கள். வைகறைத் துயிலெழு என்பாள் அவ்வை. மின்சாரம் பெரிய கண்டுபிடிப்புத் தான்.       
    அதில் ஒரு துளி கூட மறுப்பதற்கில்லை. ஆயினும் மின்சார வெளிச்சம் வந்த பிறகு நாம் துாங்கி விழிக்கும் நேரம் மாற்றப்பட்டுவிட்டது. பெரும்பாலும் சென்ற தலைமுறையினர் இரவு பெரும்பாலும் எட்டு மணிக்குப் படுத்து, விடியற்காலம் நான்கு மணிக்கு எழும் பழக்கத்தைக் கொண்டு இருந்தார்கள். மனிதனைத் தவிர பறவைகள், விலங்குகள் எல்லாம் இவற்றைச் சரியாகக் கடைப்பிடித்து வருகின்றன. ஆனால் நாம் மட்டுமே நமது துாங்கும் நேரத்தினை மாற்றி விட்டோம். அதுவும் கம்ப்யூட்டர், செல்போன் வந்த பிறகு இரவு இரண்டு மணி, மூன்று மணி வரை கூடத் துாங்காமல் இருந்து விட்டுப் பிறகு பகல் பத்து மணி வரை துாங்கி வருகிறோம். நமது உடலில் உடல் கடிகாரம் என்று ஒன்று உண்டு. அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் இருள் சூழ்ந்த, ஆழ்ந்த உறக்கத்தில் ஒவ்வொரு உறுப்பிலும் ஒரு சுரப்பி சுரக்கிறது. ஆனால் விழித்திருந்தால் இவை சுரப்பதில் மிகக் குறைவாக, ஏன் சுரப்பதே இல்லை எனக் கூறி விடலாம். இவை நாற்பது வயது வரை நமக்குத் தெரிவது கிடையாது. பிறகு உணவு செரிமானப் பிரச்னையில் தொடங்கி நோய்க் கூட்டம் ஒவ்வொன்றாய் உள்ளே நுழையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
    சாதாரணமாக ஒரு மருத்துவரிடம் சென்றால் அவர் கேட்கும் அடிப்படைக் கேள்விகள் இவை தாம். இரவு ஒழுங்காகத் துாங்கினீர்களா, உணவு செரிமானம் ஆகிறதா, மலம், சிறுநீர் ஒழுங்காக வெளியேறுகிறதா என்பது தான். இந்த ஒழுங்குப்பாடு இருந்தாலே அடிப்படையில் உடல் ஆரோக்யமாக இருக்கிறது என்பது பொருளாகும்.
    உறக்கம் கெட்டுப் போனது போலவே உணவில் இருந்த ஒழுக்கமும் கடந்த காலங்களில் அதுவும் குறிப்பாக கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் திட்டமிட்டே சீரழிக்கப்பட்டிருக்கிறது. தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலமாக மூளைச்சலவை செய்யப்பட்டு வருகிறோம். கொரோனா காலங்களில் எந்த ஊட்டச்சத்து பானத்தையாவது திரும்பிப் பார்த்தாமோ இல்லையே? நிலவேம்புக் கஷாயம் மட்டும் தானே உயிர் காத்தது. அதுபோல பெரும்பாலான உணவாக மைதாவில் தயாரிக்கப்பட்ட பேக்கரி உணவுகள் இந்த வளரும் தலைமுறையை ஆக்ரமித்து விட்டது. இப்போது ஒரு ஊரின் எல்லையே பேக்கரியில் தான் தொடங்குகிறது.
    மருத்துவ உலகம் தொண்டை கிழியக்கத்திக் கொண்டிருப்பது என்னவென்றால் வெள்ளைப் பொருட்களைத் தவிருங்கள் என்று தான். அதுவும் குறிப்பாக ஜீனி, மைதா, சுத்திகரிக்கப்பட்ட உப்பு, பால் என்ற பெயரில் நாம் குடிக்கும் ஒரு திரவம் கட்டாயமாக நம்மை நோயாளிகளாக மாற்றுகின்றன. வெள்ளைப்புரட்சி என்ற பெயரில் கடந்த நுாறு ஆண்டுகளாக பால் திணிக்கப்பட்டு இருக்கிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதுவும் இன்று நாம் குடிக்கும் பாக்கெட் பால், பால் தானா என்பதே சந்தேகத்திற்குரிய ஒன்றாகும்.
    உடலுக்குப் பொருந்தாத உணவை நீக்கி உண்டால் எத்துன்பமும் இல்லை என்பது வள்ளுவம்.
    அடுத்து நீர் அருந்துதல். நாம் குடிக்கும் தண்ணீரில் கூட இப்போது வியாபாரத் தந்திரம் வந்துவிட்டது. மினரல் வாட்டர் தான் நல்லது என்றார்கள். இப்போது அதில் சத்து இல்லை என்கிறார்கள். கலர் கலராக புட்டிகளில் அடைக்கப்பட்ட பானம் உடலுக்குத் தீங்கானது என இயற்கை மருத்துவர்கள் கூறுவது விளம்பரச் சத்தத்தில் யார் காதுகளுக்கும் எட்டவேயில்லை. பி.எச. வேல்யூ எனும் ஹைட்ரஜன் சதவீதம் பற்றி எத்தனை பேர் அறிவார்கள். படித்தவர்களிடையே கூட இந்த விழிப்புணர்வு இல்லையே. நாம் காலம் காலமாகக் குடித்து வந்த நீர்மோர், பானகம், இளநீர், பதநீர் ஆகியன கேலிப் பொருட்களாகச் சித்தரிக்கப்பட்டு அனைவர் கைகளிலும் பாட்டில்கள் திணிக்கப்பட்டுவிட்டன.
    உணவு, குடிநீர் என இவை ஒரு புறம் இருந்தாலும் அனைவரும் பரபரப்பான ஒரு வாழ்வியல் முறைக்கு தள்ளப்பட்டு விட்டோம். ஸ்ட்ரெஸ், டென்ஷன் என்ற இரு ஆங்கிலச் சொற்கள் இன்று மனித உலகத்தை ஆட்டிப் படைக்கின்றன். பணம் ஒன்றே வாழ்வின் குறிக்கோள் என போதிக்கப்பட்டு மனித குலமோ அதனை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. பணத்தை சம்பாதிக்க ஆரோக்கியத்தை விற்று விட்டு பின்னர் ஆரோக்யத்தை மீட்டெடுக்கப் பணத்தை செலவு செய்து கொண்டிருக்கிறோம்.
    சற்று நம் முன்னோர் வாழ்வியலைத் திரும்பிப் பார்த்தால் அவர்கள் எவ்வளவு எளிமையாக அதே நேரத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்பது புரியும். கோயில்கள், திருவிழாக்கள், பண்டிகைகள் என்பது வெறும் வழிபாட்டு முறைகள் மட்டுமன்று. மனிதன் மனதை லேசாக்கி உறவினர்கள் நண்பர்களுடன் கலந்து பழகி மகிழ்ச்சியான வாழ்விற்கான மாபெரும் வடிகாலும் ஆகும்.
    ஆன்மிகம், ஆன்மிகம் சார்ந்த வாழ்க்கை கற்றுத் தருவது என்ன? அமைதி, பொறுமை, நிதானம், மகிழ்ச்சி, விட்டுக் கொடுத்தல், திருப்தி, பிறர்க்கு எதிர்பார்ப்பு இல்லாமல் உதவுதல் ஆகிய உயர்ந்த பண்புகள் ஆகும்.
    வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க என்பார் மாணிக்கவாசகர். தளர்வறியா மனம் தரும் என்பார் அபிராமிபட்டர். பக்தி உடையார் காரியத்தில் பதறார் என்பார் மகாகவி பாரதி. இப்படி மனத்தை ஊக்குவிக்கும் ஏராளமான ஆன்மிக வரிகள் உண்டு. எதற்கும் பயப்படாத நிலையை அப்பர் பெருமான் யாமார்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம் என்று அருளுவார். இவை எல்லாம் நம் மனதிற்கு அன்றாம் பெறும் பூஸ்ட்டர்கள். சும்மா சாமி பாட்டாப் பாடாதே எனச் சொல்லுபவர்கள் இந்த வைர வரிகளின் மூலமாக நாம் பெறும் மன ஊக்கத்தினை அறிய இயலுமா என்ன? எனவே தான் நோயைத் தவிர்க்க மருந்தோடு நம் பெரியவர்கள் ஆன்மிகத் தோத்திரங்களையும் இணைத்தார்கள். கந்தர் சஷ்டிக் கவசம் பாடும் போது ஒவ்வொரு உறுப்பையும் எண்ணி அதனை வேல் காக்கட்டும் என்று பாடும் போது நம் மனம் உறுப்புக்களை மனத்தில் கொண்டு வந்து அவை பலம் பெறட்டும் என்ற மனோ தத்துவ சிந்தனையைத் தருகிறது. இதன் மூலம் உடலும், மனமும் நலம் பெறுகிறது. பழைய நாட்களில் தேவார ஏடுகளில் கயிறு சார்த்திப் பார்த்தல் என்ற ஒரு பழக்கம் உண்டு. ஓலைச் சுவடிகளில் சுற்றியுள்ள கயிற்றினை சுவடிகளின் நடுவே விட்டு எந்தப் பகுதி வருகிறதோ அதில் உள்ள பாடலைப் பாடுவதன் மூலம் நோயும், பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையோடு பாராயணம் செய்தார்கள்.
    குணமடைந்து நலம் பெற்றார்கள். ஆயுர்வேத மருத்துவத்துடன் விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் செய்து இன்று நலம் பெறுபவர்கள் ஏராளம். பன்னிரு திருமுறைகளில் நோய் தீர்க்கும் பதிகங்கள் என்றே பெரியவர்கள் தொகுத்துத் தந்தவை இன்றும் நம்பிக்கையுடன் பாராயணம் செய்யப்பெற்றுப் பலன்களைத் தருகின்றன.
    நமது ஆன்மிக நெறிப்படியான வாழ்வியலை மேற்கொள்வோம். நமது முன்னோர்கள் சொன்ன வண்ணம் உணவு முறைகளைக் கடைப்பிடிப்போம். நாம் அனைவரும் உலகில் நோயின்றி சிறந்து வாழ்வோமாக.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar