Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பச்சைப்புடவைக்காரி சொன்ன பொய்
 
பக்தி கதைகள்
பச்சைப்புடவைக்காரி சொன்ன பொய்

‘‘ஒரு பெரிய சிக்கல்ல மாட்டிக்கிட்டிருக்கேன். உடனே வர  முடியுமா? எனக்காக’’
தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் சந்தியாதான் பேசினாள். தெரிந்தவரின் மகள். தேவையில்லாமல் கூப்பிடமாட்டாள். அடுத்த அரை மணி நேரத்தில் அங்கே இருந்தேன்.
‘‘மாலதி டீச்சர் எங்க வீட்டுக்கு அடுத்த வீட்டுல இருக்காங்க. ரிட்டயர் ஆகிட்டாங்க. ரெண்டு பசங்க அமெரிக்காவுல இருக்காங்க. அம்மாவ இருக்கியா செத்தியான்னுக்கூடப் பாக்கறது கெடையாது. நேத்து ராத்திரி நெஞ்சு வலின்னு சொன்னாங்க. உடனே என் செல்வாக்கப் பயன்படுத்தி எங்க ஆஸ்பத்திரிலேயே சேத்துட்டேன்.  உடனடியா பைபாஸ் சர்ஜரி செய்யணுமாம்’’
‘‘செஞ்சிர வேண்டியதுதானே”
‘‘ரெண்டு லட்ச ரூபாயக் கட்டச் சொல்றாங்க. அவ்வளவு பணத்துக்கு எங்க சார் போவேன்? மாலதி டீச்சரோட பசங்க போனையே எடுக்க மாட்டேங்கறாங்க.  மாலதி டீச்சர் தெனமும் பச்சைப்புடவைக்காரியக் கும்பிடறவங்க. எத்தனையோ பசங்களுக்குக் காசு வாங்காம பாடம் நடத்திருக்காங்க. இப்ப கையில காசு இல்லங்கற ஒரே காரணத்துக்காக அவங்க அனாதையா சாகணுமா? உங்க பச்சைப்புடவைக்காரி ஏன் வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கான்னுதான் புரியல’’
‘‘எனக்கு ரெண்டு நாள் அவகாசம் கொடுத்தா பணத்த எப்படியாவது புரட்டிக் கொடுத்துரலாம்’’
‘‘ஆனா சர்ஜரி நாளைக்குள்ள செஞ்சாகணுமே! சீப் டாக்டர் பாத்துக் கேளுங்க”
தலைமை மருத்துவர் அறையின் வாசலில் ஒரு மணி நேரம் காத்திருந்தேன். கடைசியில் அவரது உதவியாளரைப் போல் தோன்றிய ஒரு பெண் என்னிடம் வந்தாள்.
‘‘சீப் டாக்டர் வெளிநாடு போயிருக்காரு. வர நாளாகும்’’
‘‘ஐயையோ”
‘‘அவரிடம் சொல்வதை என்னிடம் சொல்லலாமே. நான் பிரச்னையைத் தீர்க்கிறேன்”
‘‘என்ன பிரச்னை என்று தெரியுமா?”
‘‘மாலதி டீச்சருக்கு நடக்க போற இதய அறுவை சிகிச்சைதானே”
‘‘தாயே” அன்னையை இனம் கண்டு வணங்கினேன்.
‘‘சரியான நேரத்தில் சிகிச்சை நடக்கும். நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்’’
‘‘புரியவில்லையே”
‘‘அடுத்து என்ன நடக்கிறது எனக் காட்டுகிறேன்’’
சிகிச்சைக்கான பணத்தைக் கட்ட முடியவில்லை என்பதால் மருத்துவமனை நிர்வாகம் டீச்சரை வெளியேற்றியது. சந்தியா கெஞ்சிப் பார்த்தும் பயனில்லை.
மாலதி டீச்சர் அமந்திருந்த வீல் சேரை சந்தியா தொய்வாகத் தள்ளிக்கொண்டு போனாள். சந்தியாவின் கண்களில் கண்ணீர் பெருகிக் கொண்டேயிருந்தது. அந்த வார்டின் வாசலை அடைந்தபோது இதய அறுவை சிகிச்சை நிபுணரான அர்ச்சனா டாக்டர்கள் புடைசூழ வந்து கொண்டிருந்தாள்.
நோயாளிக்காக நர்ஸ் சீருடையில் இருந்த சந்தியா அழுவதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது அர்ச்சனாவிற்கு.
‘‘ஏம்மா அழற?” என சந்தியாவின் தோளைத் தொட்டு கேட்டாள் அர்ச்சனா.
‘‘பணம் இல்லேங்கற ஒரே காரணத்துக்காக ஒரு நல்ல மனுஷிய சாகடிக்கப் போறாங்க மேடம். இது நியாயமா? மாலதி டீச்சர்..’’
அதன்பின் சந்தியா சொன்னது எதுவும் அர்ச்சனாவிற்குக் கேட்கவில்லை. டீச்சரையே உற்றுப் பார்த்தாள் அவள். பின் டீச்சரைப் பற்றிய விவரங்களைக் கேட்ட்டாள்.
அர்ச்சனா சட்டென மாலதியின் முன் மண்டியிட்டு அமர்ந்துகொண்டாள்.
‘‘மிஸ் என்னத் தெரியலியா? நான் தான் அர்ச்சனா. ப்ளஸ் டூவுல உங்க ஸ்டூடண்ட். மிஸ், நீங்க போட்ட பிச்சையாலதான் இன்னிக்கு டாக்டரா இருக்கேன்’’
அனைவரும் திகைத்தனர்.  சந்தியா இன்னும் பெரிதாக அழுதாள்.
‘‘ஹாஸ்பிடல் மேனேஜர வரச் சொல்லுங்க”  தன்னுடன் வந்த டாக்டர்களில் ஒருவரைப் பார்த்து உறுமினாள் அர்ச்சனா.
மேனேஜர் பயந்துகொண்டே வந்தார்.
‘‘இவங்கள விஐபி வார்டுல அட்மிட் பண்ணுங்க. நாளை காலை பைபாஸ் சர்ஜரி.  நானே பண்றேன். இவங்ககிட்ட ஒரு பைசா கேக்கக்கூடாது.  என்னுடைய அம்மா மாதிரி இவங்கள நடத்தணும். ராஜ வைத்தியம் பாக்கணும். நானே அவங்கள வார்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போறேன். எந்த வார்டுன்னு சொல்லுங்க’’
சந்தியா உறைந்து போயிருந்தாள்.
மருத்துவமனையின் விஐபிக்களுக்கான சிறப்பு அறையில் மாலதி டீச்சர் துாங்கிக்கொண்டிருந்தாள்.  அறைக்கு வெளியே  சந்தியாவிடம் மென்குரலில் பேசிக்கொண்டிருந்தாள் அர்ச்சனா.
‘‘ப்ளஸ் டூ படிக்கும்போது எப்படியாவது டாக்டராகணும்னு வெறியில இருந்தேன். எங்க வீட்டுல எனக்குக் கல்யாணம் பேசிக்கிட்டிருந்தாங்க. மேலே படிக்கக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அழுதேன் கதறினேன். கேக்கல. தற்கொலை பண்ணிக்கலாம்னு திட்டமிட்டேன்.  மாலதி டீச்சர் முகத்தப் பாத்தே என்ன பிரச்னைன்னு கண்டுபிடிச்சிட்டாங்க. ரெண்டு மணிநேரம் பேசினாங்க. அப்புறம் எங்கப்பாகிட்ட பேசினாங்க. தொடர்ந்து எனக்கு டியூஷன் எடுத்து என்ன பிளஸ் டூவுல நல்ல மார்க் வாங்க வச்சாங்க. மெரிட்ல மெடிக்கல் சீட் கெடச்சது.
டாக்டருக்குப் படிக்கவைக்க பணமில்லன்னு அப்பா சொல்லிட்டாரு. எனக்காக பேங்க்ல லோனுக்கு ஏற்பாடு செஞ்சாங்க. மாலதி டீச்சரே கேரண்டி கையெழுத்துப் போட்டாங்க. நான் டாக்டராயிட்டேன். ரொம்ப நாள் தொடர்புல இருந்தேன். அப்புறம் கல்யாணமாகி வடக்கே போயிட்டேன். அவங்க ரிட்டயராகி இங்க வந்துட்டாங்கன்னு தெரியாது’’
நர்ஸ் சந்தியா அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
‘‘சிஸ்டர், நீங்க பக்கத்து வீடுங்கறீங்க. டீச்சருக்கு உதவியா யாரு இருக்காங்க? அவங்க பையன், பொண்ணு...’’
மாலதியின் இரண்டு மகன்களும் அவளைக் கைவிட்ட கதையைச் சுருக்கமாகச் சொன்னாள் சந்தியா.
ஆவேசம் வந்தவளாக கத்தினாள் டாக்டர் அர்ச்சனா.
‘‘ சர்ஜரி முடிஞ்சதும் மாலதி டீச்சர எங்க வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போயிடறேன். அவங்க வாழறவரைக்கும் ராணி மாதிரி, இல்ல, இல்ல, என்ன பெத்த தாய் மாதிரிப் பாத்துப்பேன். இது பச்சைப்புடவைக்காரி மீது சத்தியம்’’
காட்சி முடிந்த போது கண்ணீருடன் அன்னையைப் பார்த்துக் கைகூப்பினேன்.
‘‘நான் கஷ்டத்தையும் கொடுப்பேன். காப்பாற்றவும் செய்வேன். நடந்ததைப் பார்த்தாய் அல்லவா?”
‘‘பொய் சொல்வது அழகல்ல தாயே”
‘‘என்னடா பிதற்றுகிறாய்?”
‘‘பிதற்றவில்லை. நீங்கள் சொன்னது பச்சைப் பொய்’’
‘‘பின்?”
‘‘எங்களைக் காப்பாற்றத்தான் நீங்கள் கஷ்டத்தையே கொடுக்கிறீர்கள். கஷ்டம் கொடுப்பதுபோல் பாவலா செய்கிறீர்கள். உங்களால் எங்களுக்குக் கஷ்டத்தைக் கொடுக்க முடியாது, தாயே! மாலதி டீச்சரை அவளது குழந்தைகள் கைவிட்டு விட்டார்கள். முதுமையில் துணையில்லாமல் வாழ்வது கஷ்டம். முதியோர் இல்லத்தில் சேரும் அளவிற்கு வசதியில்லை. அதனால் மாலதிக்கு நெஞ்சு வலியைக் கொடுத்து அவள் மாணவி அர்ச்சனா வேலை செய்யும் மருத்துவமனைக்கே அவளை இழுத்து வந்து அர்ச்சனாவைச் சந்திக்க வைத்து... இப்போது பாருங்கள், மாலதி அர்ச்சனாவின் அன்பில் திளைக்கப் போகிறாள். அவளுக்கு நெஞ்சு வலி வந்தது என்பதே மறந்து போய்விடும்’’
அன்னை அழகாகச் சிரித்தாள்.
‘‘அவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன். உனக்கு என்ன வேண்டுமெனச் சொல். கொடுக்கிறேன்’’
‘‘தாயே பலமுறை உங்களைக் கோயிலில் தரிசித்திருக்கிறேன். எத்தனையோ முறை  நீங்கள் மனித வடிவத்தில் காட்சி தந்து அன்பையும் ஞானத்தையும் தந்திருக்கிறீர்கள். இப்போது உங்களிடம் பெரிய ஆன்மிக ஞானத்தைப் பிச்சையாகக் கேட்கப் போகிறேன்’’
‘‘என்ன ஞானம்?”
‘‘மாலதி டீச்சரைப் போல் தன்னலம் கருதாமல் அன்பு காட்டுவோரிடமும், டாக்டர் அர்ச்சனாவைப் போல் நன்றி மறவாத நல்லவர்களிடமும் உங்களைக் காணும் பக்குவமான ஞானம் வேண்டும் தாயே!”
பெரிதாகச் சிரித்துவிட்டு காற்றோடு கலந்தாள் என்னைக் கொத்தடிமையாகக் கொண்டவள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar