Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஊர் வாயை மூடும் வழி
 
பக்தி கதைகள்
ஊர் வாயை மூடும் வழி


லட்சுமணனுக்கு ஒன்றும் புரியவில்லை. தன் காதல் மனைவியைப் பழிப்பது போல அவளை ஏன் அக்னி பிரவேசம் செய்ய வைத்தான் ராமன்? ஒரு கயவனின் பாதுகாப்பில் அவனிடம் சிறைப்பட்டிருந்த சீதை ‘கற்பினுக்கு அணியாய்‘ இருந்திருப்பாளா என்ற சந்தேகமா? இத்தனைக்கும் அவனுடைய பேரபிமானத்தைப் பெற்ற அனுமன் அவளுடைய கற்புக்குச் சான்று உரைத்ததோடு, தன் தோள் மீது அமர்ந்து வரவும் மறுத்துவிட்ட அவளது கற்பின் திறத்தை விவரித்தானே!
ஊரார் சந்தேகத்துக்குதான் அளவேது? வாய் இருப்பதால் எதையும் பேசலாம் என்று உரிமை எடுத்துக் கொண்டு இல்லாததையும், பொல்லாததையும்தானே அது பேசும்? அதற்குப் போய் ராமன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா? காதல் மனைவியே ஆனாலும் அவளையும் சோதனைக்குட்படுத்தியவன் என உலகோர் புகழ்வர் என்று எதிர்பார்க்கிறானா? அல்லது ஊர்ப்பழி ஏற்க வேண்டாம் என்று கருதுகிறானா? அதனால்தான் இந்தப் பொய்க் கோபமா? அதோடு சீதையின் கற்பைப் பற்றி நன்கு அறிந்தவன் என்ற முறையில் அவளைத் தீயும்  தீண்டாது என்ற பூரண நம்பிக்கையில்தான் இந்த பரீட்சையை வைத்தானா? மனம் ஒப்பும் வகையில் பதில் கிடைக்காவிட்டாலும், வழக்கம் போல லட்சுமணன் அமைதி காத்தான்.
தன் அரண்மனையில் விபீஷணன் அனைவரையும் உபசரித்தான். காயம் பட்டிருந்த வீரர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தான். தானே தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரிடமும் சென்று அவர்களுடைய தேவைகளை கேட்டறிந்து அதற்கேற்ப வசதிகள் செய்ய உத்தரவிட்டான்.
இதற்கிடையில் சீதையும் அமைதியானாள். தன்னை கணவன் சந்தேகித்து விட்டானே, அத்தனை பேர் முன்னிலையில் அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் சோதனையில், தன்னை உட்படுத்திவிட்டானே என்ற ஆதங்கம் அவளுடைய அடி மனதில் தேங்கித்தான் இருந்தது. ஆனாலும் இந்த ஒரு நிலைக்குக் காரணம், தான் பொன்மான் மீது ஆசைப்பட்டதுதான் என்றும், தன் விருப்பத்தை நிறைவேற்ற உடனே துடித்தெழுந்த கணவனை இத்தனை துன்பங்களுக்கு உள்ளாக்கினேனே எனக்கு இந்த தண்டனை சரியானதுதான் என்றும் சமாதானம் சொல்லிக் கொண்டாள்.
ராமன் சீதையை நெருங்கினான். அவளது கரங்களை மென்மையாகப் பற்றிக் கொண்டான்.  ‘உன்னை நான் முழுமையாக நம்புகிறேன் சீதா. நீ கொஞ்சமும் குற்றமற்றவள் என்பதை அனுமனும், விபீஷணனும் எனக்குத் தெரிவித்திருந்ததோடு, இதோ, இப்போது இந்த அக்னியும் அந்த அங்கீகாரத்தை வழங்கி விட்டான். உனக்கு என் மீது கோபம் இருக்கலாம், அது நியாயமானதுதான் என்பதையும் அறிவேன். ஆனால் ராமனின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவள் என்று நிரூபிக்கப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தில்தான் இந்த அக்னி பிரவேச சோதனையை வைத்தேன். நீ புரிந்து கொண்டிருப்பாய் என்று நம்புகிறேன்...’ என்று தழுதழுத்த குரலில் சொன்னான்.
சீதை விரக்தி கலந்த புன்னகையுடன், ‘உங்களைப் பற்றி எனக்குத் தெரியாதா? நான் உங்களைக் கரம் பிடித்ததால் ராஜ குடும்ப நிர்ப்பந்தங்களுக்கு உட்பட்டுதான் வாழ்ந்தாக வேண்டும். எனக்கென தனி விருப்பமோ, மோகமோ இருக்கக் கூடாது. ஆனாலும் நான் மாயமானை மோகித்தேன். அதன் பலனாக பத்து மாதங்கள் ராவணனின் அடிமையாக வாழ நேர்ந்தது. முற்றிலும் ஒழுக்கம் கெட்ட ஒருவனுடைய கட்டுப்பாட்டில் வாழவேண்டிய நான் அவனது மிரட்டல்களுக்குப் பணிந்திருப்பேன் என உலகம் நினைக்கலாம். அந்த வீணான கற்பனையை வெட்டி எறியும் வகையில் எனக்கு இந்த தீச் சோதனையைத் தாங்கள் கொடுத்தீர்கள். இதில் நான் பொசுங்கிப் போகாமல் புடம் போட்ட பொன்னாக மாறினேன் என்பதை அனைவரும் பார்த்தார்கள். ஆகவே உலக சந்தேகம் நீங்கியது என்றே எடுத்துக் கொள்ளலாமா?’ என்று தழுதழுக்கக் கேட்டாள்.
‘என்னை மன்னித்துவிடு சீதா. இத்தனை நாள் ஒரு கயவனின் கட்டுப்பாட்டில் உன்னைத் தவிக்க விட்டுவிட்ட என் கையாலாகத்தனத்தின் விளைவுதான் இது. உன்னை என் அவசர புத்திதான் பறி கொடுத்தது. அப்படிப்பட்ட எனக்கு உன்னை சந்தேகப்பட என்ன தகுதி இருக்கிறது? ஆனால் துரதிருஷ்டவசமாக இது உலகப் பார்வை என்ற போர்வையில் நிகழ்த்தப்பட்ட சோதனைதான் இது’ ராமனின் கண்களில் நீர் தளும்பியது.
அதைப் பார்த்து பதறிப் போனாள் சீதை. ‘இருக்கட்டும். இப்போதுதான் உண்மை தெரிந்து விட்டதே…’  என்று ஆறுதல்படுத்த முயன்றாள்.
ராமன் நிதானத்துக்கு வந்தான். ‘சரி சீதா, அயோத்தி திரும்பும் முன் இந்த இலங்கையைப் பொறுத்தவரை நீ ஆற்ற வேண்டிய கடமை ஒன்று இருக்கிறது’ என்று சொன்னான்.
சீதை குழப்பத்துடன் பார்த்தாள். அடுத்து என்ன சோதனையோ!
‘நீ  இந்த இலங்கை நகர் முழுவதையும் ஒருமுறை சுற்றிப் பார்த்துவிட்டு வா சீதா, உன் பார்வை எல்லா இடங்களிலும் படட்டும்,’’ என ஆணையிட்டான். மனசுக்குள் ஏதோ புரிந்துகொண்ட சீதை உடனே அவன் சொன்னபடி புறப்பட்டாள்.
உடனிருந்தவர்கள் அனைவரும் திகைத்தனர். இது என்ன புதிய சம்பிரதாயம்? பல மாதங்களுக்குப் பிறகு மீட்ட மனைவியை அவள் சிறை பிடிக்கப்பட்டிருந்த நகரையே சுற்றிப் பார்த்துவிட்டு வரச் சொல்கிறானே ராமன்!
அவர்களுடைய கண்களையும், மனங்களையும் படித்த ராமன், மனசு விம்மச் சொன்னான்: ‘‘சீதையை நான் மகாலட்சுமியின் அம்சமாகவே கருதுகிறேன். இவள் பார்வை பட்டாலே அந்த இடம் கருகியே போயிருந்தாலும், உடனே சுபிட்சம் பெறும். ராவணனுடன் நான் மேற்கொண்டிருந்த போரினால் இலங்கை மிகவும் மோசமாக சேதமுற்றிருக்கிறது. புதிதாகப் பதவியேற்றிருக்கும் விபீஷணனுக்கு நிறைய சவால்கள் காத்திருக்கின்றன. அவனுக்கு உதவும் வகையில் இலங்கை வளம் பெறும். அதற்கு சீதையின் அருட்பார்வை வழிவகுக்கும்’’ என விளக்கினான். தன் பெருமையை கணவன் நிலைநாட்டிய விதம் கண்டு சீதை சந்தோஷத்தால் மனம் விம்மினாள்.
சீதை அவ்வாறு சுற்றிப் பார்த்துவிட்டு வந்த பிறகு, அயோத்திக்குப் புறப்பட அனைவரும் ஆயத்தமானார்கள். ராமன் விபீஷணனிடம், தாங்கள் பயணிக்க ஒரு புஷ்பக விமானத்தை தந்து உதவுமாறு கேட்டுக் கொண்டான். முன்பு ஒருமுறை குபேரன், ராவணனுக்குப் பரிசளித்திருந்த பிரமாண்டமான புஷ்பக விமானத்தை ராமன் முன் கொண்டு வந்து நிறுத்தினான் விபீஷணன். ‘ராவணனின் மறைவுக்குப் பிறகு இதை குபேரனிடமே திருப்பிக் கொடுத்துவிட நினைத்திருந்தேன். இப்போது இதற்கு இப்படி ஒரு உபயோகம் இருப்பதும் நல்லதுதான். இதனாலும் ராவணனின் ஆன்மா சாந்தியடையலாம்’ என்றான்.
ராமனைச் சார்ந்த அனைவரும் அதில் ஏறிக் கொண்டார்கள். விபீஷணனிடம் விடை பெற்று, விண்ணை நோக்கிப் பறந்தார்கள். போகும் வழியில், இலங்கை மாநகரின் அழகையும், தானும் லட்சக்கணக்கான தன் படை வீரர்களும் கடல் மீது பாலம் அமைத்து வந்ததையும் சீதைக்கு ராமன் விளக்கினான்.
ஏற்கனவே வாக்களித்திருந்தபடி வழியில், பரத்வஜ முனிவர் ஆசிரமத்தில் இறங்கி அவர் ஆசி பெற்று பயணத்தைத் தொடர விரும்பினான் ராமன். அதன்படி புஷ்பக விமானம் ஆசிரம வளாகத்தில் இறங்கியது.
ராமனையும் அவனைச் சார்ந்த பிற அனைவரையும் கண்டு மகிழ்வு கொண்டார் பரத்வாஜர். வாக்களித்தபடியே ராமன் நடந்து கொண்டதில் அவருக்கு சந்தோஷம். அவர்கள் அனைவரையும் உபசரித்தார். உடனிருந்த பிற முனிவர்கள், சீடர்களையும்  உபசரிக்கும்படி உத்தரவிட்டார்.  
ராமனிடம் பரிவுடன் பேசினார் பரத்வாஜர். ‘ராவணனை வதைத்து சீதையை மீட்ட நற்செய்தியை கேள்விப்பட்டு நிம்மதி அடைந்தேன். அதேபோல அயோத்தியில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். ஏனெனில் நிச்சயம் உரிய காலத்தில் நீ திரும்பி வருவாய் என்பதில் அனைவருக்கும் நம்பிக்கை உள்ளது. ஆனால் பரதனோ ஜடாமுடியுடன், மரவுரி தரித்து, மேனி கறுத்து, இளைத்து உன்னையே எதிர்பார்த்துக் காத்திருக்கிறான். உன் தாயார்களும் அதேபோல நீ சென்ற திக்கையே உன் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்’
ராமன் பெருமூச்செறிந்தான். ஆமாம், பரதன் கொடுத்த கால தவணை இன்றோடு முடிகிறது. நாளை நான் அயோத்தியில் இல்லையெனில் மிகுந்த வைராக்கியம் கொண்ட அவன் தீக்குண்டத்தில் இறங்கவும் தயங்க மாட்டான்.
உடனே அனுமனை அழைத்தான் ராமன். ‘இப்போதே அயோத்தி செல்லும் வழியிலுள்ள நந்தி கிராமத்துக்குப் போய் அங்கே தவம் புரியும் பரதனிடம் நான் வரும் விபரத்தைச் சொல்’ என அனுப்பி வைத்தான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar